சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை

இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி போன்ற துணைப்பாத்திரங்கள் வழியாகவும் பற்பல வாழ்வியல் அறங்கள் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. இவை தவிர துறவோர்கள், அறவாணர்கள் அறிவுறுத்தும் அறங்கள் வழியாகவும் வாழ்வியல் அறங்கள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்தளிப்பது இக்கட்டுரையின் செல்முறை ஆகின்றது.
வாழ்வியல் அறம்
வாழ்க்கையை அடிப்படையில் இல்லறம், துறவறம் என்று இருவகைப்படுத்திக் கொள்ளலாம். அன்பும் அறனும் உடையது இல்வாழ்க்கை. அதனால் பண்பும் பயனும் பெறத்தக்கதாக உள்ளது. துறவு வாழ்க்கை என்பது பற்றற்றான் பற்றினைப் பற்ற அனைத்துப் பற்றுகளையும் விட்டுவிடுவது ஆகும். இல்வாழ்க்கை சிறந்ததா, துறவு வாழ்க்கை சிறந்ததா என்று அறிவதைவிட அவரவர் எடுத்துக்கொண்ட வாழ்க்கை எவ்வாறு சிறப்புடன் அமைத்துக்கொள்வது, அவ்வாழ்க்கையில் எப்படி அறங்களைக் கடைபிடிப்பது என்று காண்பதே முன்னேற்றமுடைய பாதையாகும். அம்முன்னேற்ற மிக்க பாதையைச் சிலப்பதிகாரத்தில் வடிவமைத்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகி சுட்டும் வாழ்வியல் அறம்
கண்ணகி சிலம்பின் கதைத் தலைவி. கதைத்தலைவியான அவள் இன்பங்களைவிடவும் துன்பங்களையே அதிகமாகப் பெறுகிறாள். அந்நிலையிலும் தன்னிலை மாறாமல் பத்தினித் தெய்வமாக உயருகிறாள். கணவன் கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பதற்காகக் கலங்காமல், தன் வாழ்வை இயல்பாக அவள் நடத்துகிறாள்.
அவ்வாழ்வினைப் பற்றிக் கோவலன் அறியமுற்பட்டபோது தனித்து வாழ்ந்ததால் தான் பட்ட துயரங்களை அவள் எடுத்துரைக்கிறாள்.
~~அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை|| ( சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை, 71-73)
இந்தப் பாடலில் அமைந்துள்ள இந்நான்கு அறங்களைத் தன்னால் செய்ய இயலவில்லை என்று கண்ணகி கோவலன் பிரிந்த காலத்தில் வருத்தப்பட்டுள்ளாள்.

அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் ஆகிய அறங்களைக் கண்ணகி இழந்தாளாம். தனித்திருக்கிற இல்லறப் பெண் இந்த அறங்களைச் சிலப்பதிகாரக் காலத்தில் செய்ய இயலாது என்பது கருதத்தக்கது. கணவனும் மனைவியும் இணைந்து இல்லறம் பேணுவது என்பதே சிறப்பு. தனித்து உறைவது என்பது சிறப்பல்ல என்ற அடிப்படை இல்லற அறம் இங்கு காட்சிகளின் கோர்வையால் உருவாக்கப்பெற்றுள்ளது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (திருக்குறள். 41)
என்று திருக்குறள் காட்டும் வாழ்வியல் இலக்கணத்திற்குச் சிலப்பதிகாரத்தின் மேல் காட்சி இலக்கியமாக அமைந்திருக்கின்றது. இக்குறளில் காட்டப்படும் மூவர் யாரென்று வள்ளுவர் அடுத்த குறளில் அமைத்துக்காட்டுகின்றார். துறந்தார், துவ்வாதவர், இறந்தவர் என்ற மூவருக்கும் இல்வாழ்வான் உதவவேண்டும் என்பது வள்ளுவ நெறி. கண்ணகியும் அந்நெறிப்படியே துறவோர்க்குத் தன்னால் பணிகள் செய்ய இயலவில்லை என்று வருந்தியுள்ளாள். வறுமையால் வாடியவர்களுக்கும் அதாவது அறம் வேண்டுவோர்க்கும் ஆவன செய்ய இயலவில்லை என்று வருந்தியுள்ளாள். மேலும் பசியால் வாடியவர்கள் இறந்தவர்கள் எனப்படுவர். அவர்களை விருந்தினர் என்று கண்ணகி கருதியுள்ளாள். விருந்தினர்களுக்கும் யாதும் செய்ய இயலவில்லை என்பது இங்குக் கண்ணகியின் வருத்தம்.
இப்பாடலடிகளைத் n;தாடர்ந்து
~~நும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ்சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவிகந்தனனா
அற்புளஞ் சிறந்தாங்கு அருண்மொழிய அளைஇ
எற்பாரட்ட யானாகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாயல் முறவற்கவர் உள்ளகம் வருந்த||( சிலப்பதிகாரம் கொலைக்களக்காதை, 74-80)
என்று இல்லற வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கிறாள் கண்ணகி.
கண்ணகி தனியே இருக்கிறாள் என்பதை அறிந்த கோவலனின் தாயாரும், தந்தையும் அவளைக் காண அவ்வப்போது வருகின்றனர். அவ்வாறு வரும்போது கண்ணகி தன் கணவன் பிரிந்ததை மறைப்பதற்காக அவர்கள் முன் செல்லாமல் மறைந்து ஒழுகுகிறாள். அவ்வாறு அவள் மறைந்து ஒழுகுவதைக் கண்ட அப்பெரியோர்கள் கண்ணகியின் பொறுமையைப் பாராட்டுகின்றனர். இதன் காரணமாக ஏற்பட்ட வருத்தமிகுதியை கண்ணகி வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பொய் சிரிப்பினைச் சிரிக்கிறாள். இக்காட்சியை இவ்வாறு மேன்மையும், மென்மையும் பட எடுத்துரைத்துள்ள இளங்கோவடிகள் இதன் வழிச் சொல்ல வருவது என்னவெனில், இல்லறத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழக் கூடாது என்றும், அவ்வாறு பிரிந்து வாழ்ந்தால் அவ்வாழ்க்கையை இணைக்க முயலும் பெரியோர்களுக்கு வழிவிடவேண்டும் எனவும், அப்பெரியோர்கள் கருணை கொண்டு பொறுமையை இல்லறத்தார்க்குக் கற்றுத் தரவேண்டும் என்பனவும் ஆகும்.
கோவலனும் மாறி வருவேன் என்று சிலம்புடன் சென்றவன் இறந்துபோகின்றான். அச்சூழலில் தனித்திருக்கும் பெண்ணான கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள். தன் கணவன் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கப் போராடுகிறாள். வாதாடுகிறாள். உண்மையை நிலைநிறுத்தப் பாடுபடுகிறாள். இதற்குக் காரணம் தன் இல்வாழ்வின் மீது அவள் கொண்டிருந்த பற்றே ஆகும்.
கோவலன் காட்டும் வாழ்வியல் அறம்
கோவலன் மாடல மறையோனைச் சந்திக்கின்றபோது, அவனைக் கருணைமறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று பாராட்டுகின்றான். வாழ்வியல் சார்ந்த அறம் கருதி மூன்று அறச்செயல்களைக் கோவலன் செய்தான் என்பதால் இப்பட்டங்களை மாடல மறையோன் அவனுக்கு வழங்குகின்றனான். அந்தணன் ஒருவனை மதம் கொண்ட யானையிடம் இருந்து விடுவித்து, அந்தணனுக்கும் யானைக்கும் கருணை கூர்;ந்தவன் கோலவன் என்பதால் அவன் கருணை மறவன் ஆனான். குழந்தைக்காக அக்குழந்தையைப் பாம்பிடம் இ;ருந்துக் காத்த கீரையைக் கொன்ற பார்ப்பினியின் பாவம் போக்க தன் பொருள் கொடுத்து உதவியதால் கோவலன் செல்லாச் செல்வன் எனப்பட்டான். பொய் சாட்சி சொன்ன ஒருவனுக்காகத் தன்னுயிர் கொடுக்கத் தயார் ஆனான் கோவலன். இது கருதி அவனுக்கு இல்லோர் செம்மல் என்ற பெயர் ஏற்பட்டது. இவற்றின் வழி கண்ணகி சொன்ன அந்தணர் ஓம்பல் என்பதையும் கோவலன் தலையாய அறமாமக் கொண்டு வாழ்ந்தான் என்பது தெரியவருகின்றது.
கவுந்தியின் இறப்பு காட்டும் அறம்
மதுரைக்குச் செல்லும் கோவலனுக்கும், கண்ணகிக்கும் துணையாக வந்தவள் கவுந்தி என்ற துறவி. இவர் கோவலன் இறப்பு கருதி தன்னுயிர் துறக்கிறார். இல்லறத்தார் துறவறத்தாருக்கு உதவி வாழும் காப்பிய காலச் சூழலில் இல்லறத்தான் ஒருவனுக்காக வடக்கிருந்த கவுந்தியின் நிலை உணர்த்துவது துயரம் மனிதவாழ்வின் சென்று சேராத பக்கங்களுக்குக் கூட சென்று சேர்த்துவிடும் என்பதாகும்.
இளங்கோவடிகள் காட்டும் வாழ்வியல் அறங்கள்
இளங்கோவடிகள் காப்பிய முடிப்பிற்கு முன்னால் சில வாழ்வியல் அறங்களைச் சுட்டுகின்றார்.
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின், தவம் பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையியுர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக்கோட்டியும் விரிகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்து உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தருகாதை, 186- 202)
என்ற இந்த அறங்கள் இளங்கோவடிகள் சுட்டும் வாழ்வியல் அறங்கள் ஆகும். இதனைக் கடைபிடித்து வாழ சிலப்பதிகாரம் வலியுறுத்துகின்றது.

M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigation
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *