முதல் சம்பளம்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தாரமங்கலம் வளவன்

சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

சைக்கிளை நிறுத்தி விட்டு, மாரியம்மாவின் குடிசை அருகில் சென்ற சண்முகம், அந்த மண் சுவரின் மேலே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த அந்த நாகப் பாம்பை பார்த்து நடுங்கிப் போனான்.

“ ஐயோ.. பாம்பு.. பாம்பு..” என்று கத்தினான்.

அதைக் கேட்டு பக்கத்து ரைஸ் மில்லில் நெல் அவிக்கும் குப்பன் ஓடி வந்தான்.

பக்கத்தில் இருந்த ஒரு மூங்கிலை எடுத்தான்.

ஏதோ நடைபெறுகிறது என்பதை புரிந்து கொண்ட அந்த பாம்பு வேகமாய் ஓட ஆரம்பித்தது

அதை குறி வைத்து அடித்தான் குப்பன்.

அதன் மேல் அடி பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஓடி விட்டது.

அதற்குள் கூட்டம் கூடி விட்டது.

“ அடி வாங்கிட்டு ஓடி போயிடிச்சா.. நாகப் பாம்புடா.. மனசிலே வைச்சுக்கும்.. அடிச்சவன் முகம் அது கண்ணுல அப்படியே பதிஞ்சி போயிருக்கும்.. என்னிக்கானாலும் அடிச்சவன பழி வாங்காம விடாது..”

கூட்டத்தில் யாரோ சொல்ல, குப்பனின் முகத்தில் கலவரம் தெரிந்தது.

உடனே எப்படியும் அந்த பாம்பை கொன்றாக வேண்டும் என்ற வெறி தோன்றியது அவனுக்கு.

இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டார்கள்.

மூங்கில் கம்பை போட்டுவிட்டு ஒரு கடப்பாரையை எடுத்துக் கொண்டான் சித்தன்.

குடிசையை ஒரு சுற்று சுற்றி விட்டு அதே இடத்திற்கு மீண்டும் வந்தது அந்த பாம்பு.

தலைகீழாக கடப்பாரையை பிடித்துக்கொண்டு அதை குறி வைத்து தாக்கினான்.

அது நகர்ந்து விட, அதன் வால் பகுதியில் அடிபட்டு ரத்தக் கறையுடன், வெகு வேகமாய் தப்பித்து ஓடியது.

சித்தனின் முகத்தில் இன்னும் பீதி பரவியது.

“ நாகப் பாம்பாச்சே.. அடி வாங்கிட்டு ஓடிப் போயிடிச்சே…”

சிலர் பரிதாபமாய்ப் பார்த்தார்கள் சித்தனை.

இன்னும் வெறி ஏறியது சித்தனுக்கும் அவனைச் சுற்றி இருந்தவர்களுக்கும்.

மூன்று பேரும் கடப்பாரையிலும் மூங்கில்களிலும் தொடர்ந்து அந்த பாம்பை தாக்க, அந்த தாக்குதலின் பெரும் பகுதி அந்த மண் சுவருக்கு தான் கிடைத்தது.

தொடர் தாக்குதலில் அந்த மண் சுவர் தாங்காமல் உட்பக்கமாய்ச் சரிந்தது.

மூன்று மணி நேரம் நடந்த அந்த போராட்டத்தில், பல முறை அடி பட்டு, பல முறை ரத்தக் கறையுடன் தப்பித்து, கடைசியில் செத்து விழுந்தது அந்த பாம்பு.

அதனுடன், அந்த குடிசையும் முழுவதுமாய் நொறுங்கி விழுந்தது.

கிணற்றில் இருந்து மண் பானையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு
வந்து கொண்டிருந்த மாரியம்மா, தரை மட்டமாய் போன தன் குடிசையை பார்த்து கலங்கிப் போய்,

“ ஐயோ.. ஐயோ..” என்று தலையில் அடித்துக் கொண்டு கதற, மண் பானை தண்ணீரோடு தரையில் விழுந்து நொறுங்கியது.

சண்முகத்திற்கு உடனே அவளிடம் போக மனம் வரவில்லை.

பிறகு செத்து போன அந்த பாம்பை எப்படி அடக்கம் செய்வது என்று சித்தனும் அவனுடன் பாம்பை அடித்துக் கொன்றவர்களும் பேசிக் கொண்டார்கள்.

மஞ்சள் துணி, பால் எடுத்து வர வேண்டும் என்று ஒருவன் சொல்ல, சிலர் அதை எரிக்கும் போது, ஒரு நாணயத்தை போட வேண்டும் என்று சொன்னார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் புறப்பட்டு போக, வெற்றி வீரனாக அந்த கூட்டத்திற்கு நடுவில் அந்த செத்த பாம்பை தன் மூங்கில் கழியில் தூக்கி கொண்டு அதனை அடக்கம் செய்ய சென்றான் குப்பன்.

சற்று நேரம் கழித்து, அழுது கொண்டிருந்த மாரியம்மா முன் சண்முகம் போய் நின்றான்.

சண்முகத்தைப் பார்த்ததும்,

“ என்ன கண்ணு.. அம்மா கூப்பிட்டாங்களா..” என்றாள் கண்களை துடைத்த படியே மாரியம்மா.

அவள் தண்ணீர் எடுக்க போயிருந்ததால், அவன் முன்னமே வந்துவிட்டதோ, அந்த பாம்பை பார்த்து அவன் சத்தம் போட்டதோ அவளுக்கு தெரியவில்லை போலிருக்கிறது.

தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்ல சண்முகத்திற்கு வாய் வந்தது. ஆனால் சொல்லவில்லை. அதை மறைத்து விடுவது என்று அவன் அன்று முடிவு செய்து கொண்டான்.

வீட்டிற்கு திரும்பிய சண்முகம், அம்மாவிடம் மாரியம்மாவின் குடிசை நொறுங்கி விழுந்ததைச் சொல்லிவிட்டு,

“ அம்மா.. நம்ம வீட்டிற்கு மாரியம்மாவை கூட்டிகிட்டு வந்திடலாம் ” என்றான்.

யோசித்த சண்முகத்தின் அம்மா, “ சரி…” என்று சொல்ல, மாரியம்மாவை போய்க் கூட்டி வந்தான்.

சண்முகம் தன் அப்பாவை குழந்தையாக இருக்கும் போதே இழந்து விட்டான். சண்முகத்தின் அம்மா மூன்று கறவை மாடுகளை வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல், மற்ற இரண்டு மூன்று வீடுகளில் மாட்டுத்தொழுவம் சுத்தம் செய்வது, வீட்டு வேலைகளுக்கு ஒத்தாசை செய்வது என்று தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தாள் மாரியம்மா. அவளுடைய புருஷன் ரங்கன் பெரிய குடிகாரன். அவளுக்கு அவன் ஒரு சுமை மட்டுமே.

ஒரு நாள் அம்மாவிடம் சண்முகம்,

“ நான் வேலைக்கு வந்து, என்னோட முதல் சம்பளத்தில மாரியம்மாவோட இடிஞ்சி போன குடிசையை திரும்ப கட்டி கொடுப்பேன்..” என்றான்.

சண்முகத்தின் அம்மா வியப்புடன் தன் மகனைப் பார்த்தார்கள்.

பனிரெண்டு வருடமாய் அப்படியே கிடந்த அந்த குடிசைக்கு விடிவு காலம் வந்தது.

சண்முகம் கொடுத்த பணத்தில் மூங்கில்களும், ஓலையும் வாங்கிக்கொண்டு, கூரை மேய ஒருவனை கூட்டி வந்தாள் மாரியம்மாள்.

வேலை ஆரம்பித்தது.

சண்முகம் நினைத்து பார்த்தான்.

அன்று அவன் அந்த பாம்பை பார்த்து அலறி ஊரைக்கூட்டாமல் இருந்திருந்தால் அந்த நாகப் பாம்பு ஒரு வேளை தானாகவே அவள் குடிசையை விட்டு போயிருக்குமோ..

அல்லது அங்கேயே இருந்து இரவிலே அவளை தீண்டி கொன்று இருக்குமோ..

குடிசை கட்டி முடிக்கப் பட்டு, கூரை வேய வந்தவன் தன் கூலியை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

மாரியம்மாவிடம், அன்று தன்னுடைய அலறலால் தான் சித்தன் ஓடி வந்தான், அதனால் தான் அவள் குடிசை இடிந்து போனது என்பதை அவளிடம் சண்முகம் விளக்க ஆரம்பித்தான்.

அவனுடைய விளக்கத்தை காதில் வாங்கிக் கொள்ளாமல், புதிய மூங்கில்கள், புதிய ஓலையுடன் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் தன் குடிசையை ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மாரியம்மாள்.

————————————————————————

Series Navigation
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *