பாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 31 in the series 11 ஜனவரி 2015

அயான் ஹிர்ஸி அலி

charliehebdocartoon13 சென்ற புதன்கிழமையில் பிரெஞ்சு வாரப்பத்திரிக்கை சார்லி ஹெப்டோவில் நடந்த படுகொலைகளுக்கு பிறகாவது வன்முறைக்கும், பயங்கரவாத இஸ்லாமுக்கும் இடையேயுள்ள தொடர்பை மறுக்கும் அசட்டுத் தனத்தை   மேலை நாடுகள் இறுதியாக விட்டொழிக்கலாம்.

இது மனநிலை சரியில்லாத, ஒற்றை நபர்  செய்த படுகொலைகள் அல்ல. இறைதூதர் முகம்மது என்று தாங்கள் கருதுபவருக்கு நேர்ந்த அவமானத்தை பழி தீர்க்கிறோம் என்று அந்த படுகொலைகளை செய்தவர்கள் கத்தியதை கேட்க முடிந்தது. அது தற்செயலாக உணர்ச்சிவேகத்தில் நடந்தது அல்ல. மிக அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டு, அலுவலகத்தில் இருந்தவர்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆட்டமாட்டிக் ஆயுதங்களுடனும், தப்பிக்கும் திட்டத்துடனும் நடந்ததப்பட்ட ஒரு படுகொலை இது. அது திகிலை உருவாக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டது. அது நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

மேற்குலகு சரியாகவே திகிலடைந்திருக்கிறது. ஆனால், இந்த நிகழ்வு வியப்பை அளிக்கலாகாது.

இந்த குரூரமான நிகழ்விலிருந்து நாம் பாடம் எது வும் கற்றுக் கொள்ள முடியுமென்றால் , அது நாம் இஸ்லாமை பற்றி என்ன நம்புகிறோம் என்பது கணக்கிலெடுக்க தேவையில்லாதது என்பதுதான். இந்த மாதிரியான வன்முறை, ஜிகாத், என்பதுதான் இஸ்லாமிஸ்டுகள் நம்புவது.

குரானில் ஏராளமாக வன்முறை ஜிகாதுக்கான அறைகூவல்கள் இருக்கின்றன. குரான் இங்கே (இது போன்ற மத  வன்முறையைக் கோருவதில் ) தனித்த புத்தகம் இல்லை. இஸ்லாமை பொறுத்தமட்டில், ஜிகாத் என்பது மிக நவீனமான கருத்தாக்கம். 20ஆம் நூற்றாண்டு ஜிகாதுக்கான புனிதப் புத்தகம்  என்று இஸ்லாமிஸ்டுகள் போற்றும் புத்தகம், 70களில் பாகிஸ்தானி ஜெனரல் எஸ். கே மாலிக் என்பவரால் எழுதப்பட்ட “குரானின் கருத்தாக்கத்தின் படி போர்” என்ற புத்தகம்தான்.  இந்த புத்தகத்தில் கடவுள், அதாவது குரானின் அல்லா, குரானின் ஒவ்வொரு வார்த்தையையும் தானே எழுதியிருக்கிறார் என்று வாதிடுகிறார். ஆகவே, குரானில் போர் பற்றி எழுதப்பட்டிருக்கும் சட்டங்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களை விட உன்னதமானவை என்று வாதிடுகிறார்.

மாலிக்கினால் விளக்கப் பட்ட குரானின் போர்த்திட்டத்தின்படி, எந்த ஸ்தூலமான போர்க்களத்தைவிட மனித ஆன்மாவே போரின் மையமாக இருக்கிறது.அல்லாவால் போதிக்கப்பட்டு உருவான வழியில்  முகம்மதின் போர் வரலாற்றில், வெற்றியின் மையப்புள்ளி, எதிரியின் ஆன்மாவை வத்  தாக்குவதே. எதிரியின் ஆன்மாவை தாக்கும் மிகச்சிறந்த வழி,  திகிலை (terror) உருவாக்குவதே. ”திகில் terror என்பதுதான் வழியும் முடிவும் சந்திக்கும் இடம்” என்கிறார் மாலிக். திகில் என்பது நமது குறிக்கோளை  எதிரியின் மீது திணிக்க நமக்கு இருக்கும் வழி அல்ல. திகில்தான் நாம் அவர்கள் மீது திணிக்கும் குறிக்கோள் ” என்கிறார் மாலிக்

பாரீஸில் நடந்த படுகொலைகளுக்கு பொறுப்பாளிகள், டச்சு சினிமா இயக்குனர் தியோ வான்கோவை 2004இல் கொலை செய்தவரை போலவே திகிலை நம் மீது திணிக்கிறார்கள். அவர்கள் மதவாத  வன்முறையை நியாயப்படுத்தும் அவர்களது பார்வைக்கு விட்டுக்கொடுக்கும் போதெல்லாம், அந்த பயங்கரவாதிகள் என்ன விரும்புகிறார்களோ அதனையே அவர்களுக்கு கொடுக்கிறோம்.

இறைதூதர் முகம்மது என்று இஸ்லாம் குறிப்பிடுபவரை வரைவதோ அல்லது அவமரியாதைக்கு உட்படுத்துவதோ மிகப்பெரிய பாவம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. அதனை நம்பும் முஸ்லீம்களுக்கு இதனை நம்ப முழு உரிமையும் உண்டு. ஆனால், அந்த விதியை ஏன் இஸ்லாமை நம்பாதவர்கள் மீது திணிக்க வேண்டும்? ”மார்மன் புத்தகம்” என்ற ப்ராட்வே நகைச்சுவை நாடகத்தை எழுதி உருவாக்கி நடிக்கும் மனிதர்கள் மீது மார்மன் மதத்தை சார்ந்தவர்கள் மரண தண்டனை விதிக்கவில்லை. 1400 வருடங்கள் வரலாறு கொண்டதும், 1.6 பில்லியன் மக்கள் பின்பற்றுவதுமான இஸ்லாம் என்ற மதம், ஒரு பிரெஞ்சு கிண்டல் பத்திரிக்கை எழுதும் கார்ட்டூன்களை தாங்கி நிற்க முடியும். ஆனால், முகம்மதை படம் வரைந்த கார்ட்டூன்களுக்கு கொலை மூலம் வரும் பதில்கள் இந்த ஜிகாத் யுகத்தில் புதியதல்ல.

குரான் என்னதான் சொன்னாலும், எல்லா பாவங்களும் சமமானவை அல்ல. முஸ்லீம்கள், முக்கியமாக முஸ்லீம் நாடுகளிலிருந்து வெளியேறி மேற்குலகில் வாழும் முஸ்லீம்கள், இந்த கேள்விக்கான பதிலை தரவேண்டும் என்று மேற்குலகு கோர வேண்டும். முகம்மதின் பெயரால், இந்த உலகில் இன்று நடக்கும் படுகொலைகள், சித்திரவதைகள், அடிமைத்தனம், போர்க்குற்றங்கள், பயங்கரவாதம் ஆகியவை ஒரு நம்பிக்கையாளரான முஸ்லீமுக்கு மனவருத்தத்தை தருமா, அல்லது இந்த பயங்கரவாதிகள் முகம்மதுவை பற்றி கொண்டிருக்கும் கருத்துக்களை கிண்டல் செய்யும் கார்ட்டூன்கள், அல்லது புத்தகங்கள் ஆகியவை ஒரு நம்பிக்கையாளரான முஸ்லீமுக்கும் மனவருத்தத்தை தருமா? 

ஜெனரல் மாலிக் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமானால், மேற்குலகின் ஆன்மா, அதன் மனசாட்சியின் சுதந்திரத்தின் மீதும், சுதந்திர கருத்துரிமையின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையில் இருக்கிறது. நமது கவலைகளை தெரிவிக்க சுதந்திரம், யாரை வணங்கவேண்டுமென்று நாம் கருதுகிறோமோ அவர்களை  வணங்க இருக்கும் சுதந்திரம், அல்லது எதையுமே வணங்காமல் இருக்கும் சுதந்திரம்,.. இந்த சுதந்திரங்கள்தான் நமது சமூகத்தின் ஆன்மா. அதில் குறிவைத்துத்தான், இஸ்லாமிஸ்டுகள் தாக்கியிருக்கிறார்கள். மீண்டும்.

இந்த தாக்குதலை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுதான் பெருத்த விளைவுகளை உண்டுபண்ணக்கூடியது. அவர்கள் கொண்டிருக்கும் கருத்தியலுக்கு சம்பந்தமில்லாத சில ரவுடிகள் இவர்கள் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால், அவர்களுக்கு பதில் தரவில்லை எனலாம். இன்றைய இஸ்லாமிஸ்டுகள் ஒரு அரசியல் கொள்கை கொண்டவர்கள், அந்த அரசியல் கொள்கை இஸ்லாமின் அடிப்படையான புத்தகத்தின் வாசக ங்களில் ஆழமாக வேரூன்றியது என்பதை நாம் ஒப்புகொள்ளவேண்டும்.  செயல்களுக்கும், அந்த செயல்களை தூண்டும் கருத்து/கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்று நாம் நம்மை நாமே ஏமாற்றிகொள்ளமுடியாது.

இது மேற்குலகுக்கு ஒரு வேறு திசைப்பயணமாக இருக்கும் . பெரும்பாலும் இப்படிப்பட்ட ஜிகாதி வன்முறைக்கு அவர்களை சாந்தப்படுத்தும் படி அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதையே செய்துகொண்டிருக்கிறது. நமது பத்திரிக்கைகள், நமது பல்கலைக்கழகங்கள், நமது வரலாற்று புத்தகங்கள், நமது பள்ளிக்கூட பாடங்கள் ஆகியவற்றில் தணிக்கையை கொண்டுவரும்படி முஸ்லீம் அரசுகளின் தலைவர்கள் நம்மிடம் கோருவதற்கு செவிசாய்த்து தணிக்கையை கொண்டுவருகிறோம். நமது சமூகங்களில் உள்ள முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறோம். இந்த வன்முறைகளையும் இஸ்லாமையும் இணைத்து பேசக்கூடாது ஏனெனில் அவர்களது மதம் அமைதி மார்க்கம் என்று சொல்லுகிறார்கள். நாமும் தலையாட்டுகிறோம்.

பதிலாக என்ன நமக்கு கிடைக்கிறது? பாரீஸின் இதயத்தில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள்  எந்த அளவுக்கு நாம் அடங்கிப்  போகிறோமோ, எந்த அளவுக்கு நாம் செவிசாய்க்கிறோமோ, எந்த அளவுக்கு அவர்களது கோரிக்கைகளுக்கு தலைசாய்க்கிறோமோ அந்த அளவுக்கு எதிரிகளுக்கு தைரியம் உருவாகிறது.

சார்லி ஹெப்டோவின் அலுவலர்களுக்கு எதிரான அருவருக்கத் தக்க ஜிகாதுக்கு ஒரே ஒரு பதில்தான் நாம் தரமுடியும். நகைச்சுவையாகவோ, கிண்டலாகவோ அல்லது வேறெந்த உருவத்திலும் வரும் கருத்து சுதந்திரம் அடிப்படையான உரிமை என்று மேற்கு உலகமும், அரசியல்வாதிகளும், மதத்தினரும், பொதுமக்களும் கூற வேண்டும். மேற்குலகு பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு தலைசாய்க்கவே கூடாது. ஒரு காலத்திலும் தன் குரலை அடக்கிக் கொள்ளக் கூடாது. ஒருமித்த குரலில் பயஙகரவாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். உங்களது வன்முறை எங்கள் ஆன்மாவை அழிக்க முடியாது.
——–

Series Navigationபொங்கலும்- பொறியாளர்களும்பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *