தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

புது டைரி

ருத்ரா

Spread the love
வருடம் பிறந்து விட்டது என்று
புது டைரியை பிரித்து வைத்து
என்ன எழுதலாம் என்று
பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன்.
அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது.
பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம்.
அவ்வளவுக்கு
பாழ் மணல் வெளி.
சூரியன்
தன் வெயிலை எல்லாம்
சிவப்பாய் மஞ்சளாய் வெள்ளையாய்
வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
எதை எழுத?
உச்சு கொட்டினால்
உமர் கய்யாம் வருகின்றான்.
செல்ஃபோன் ஒலி எச்சில்களில் கூட‌
ந.முத்துக்குமார் இனிமை வழிய இளமை பிழிந்தார்.
பிள்ளையார் சுழியாய் “உ”வையும் கோடுகளையும்
ஏதோ ஒரு காக்கையோ குருவியோ
எச்சம் இட்டு எங்கோ சென்றது.
முதல் தேதி என்று
சடசடத்த காலத்தின் பிஞ்சு ரெக்கைகள்
டைரியில் இறைந்து கிடக்கிறது.
என்ன எழுத?
ரத்தம் சொட்ட சொட்ட‌
ஊடகங்களில்
தலை கொய்யப்படும் காட்சிகள்
காட்டும் கொடூரங்களை
எந்த கடவுளுக்கு படையல் இடுவது?
எந்த கடவுள் முன் மண்டியிட்டு
குரல் உயர்த்துவது?
எந்த கடவுளுக்கு
மிச்சமிருக்கின்ற ஆத்மாவைக்காட்டி
சாந்தியடைய சங்கீதம் பாடுவது?
துப்பாக்கியையும் கத்தியையும்
துடைத்துப்போடும் காகிதமாய்
மனித உயிர்களா கிடைத்தது
இந்த மிருகங்களுக்கு?
பரந்து விரிந்து கிடக்கிறதே என்று
இந்த மைதானத்தை
மயானம் ஆக்கவா
வெறி பிடித்து வந்தாய் மனிதா?
கடவுளைக்கூறு போட்டு
எந்தக் கூறு சிறந்தது என்று
ருசி பார்க்க‌
மனித ரத்தமா நீ கேட்பது
ஓ!மிருகக்கூட்டமே!
எதையும் எழுதிக்கிழித்து
என்ன ஆகி விடப்போகிறது?
அறிவெல்லாம் தீப்பிடித்து எரிகிறது.
எங்கு பார்த்தாலும்
வேட்கை வேட்கை மற்றும்
வேட்கைகளின்
வேட்டை வேட்டை வேட்டை தான்!
டைரியின்
வெறும் வெள்ளைப்பக்கங்கள்
அத்தனையும்
வெறுமையால்
வெறுமையின் வெறியால்
கருப்பு ஆக்கப்பட்டு விட்டன.
==================================================ருத்ரா
Series Navigationநிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்புCaught in the Crossfire – another English Book – a novel

Leave a Comment

Archives