தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
மைதிலி படுக்கை அறையில் மேஜையருகில் உடகார்ந்திருந்தாள். அவள் கண்கள் மேஜை மீது பரத்தி வைக்கப் பட்டிருந்த தொழிலாளர்கள் கோ ஆப்ரேடிவே சொசைட்டி பாலன்ஸ் ஷீட்டை கவனமாக பரிசீலித்துக் கொண்டிருந்தன. போன வருடத்தை விட இந்த வருடம் மெம்பர்கள் கூடி இருந்தார்கள். கடன் கொடுத்த ரொக்கமும் கூடியிருந்தது. ஆனால் வசூல் ஆன கடன் தோகையும், வருமானமும் குறைந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் சீக்கிரத்திலேயே பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மைதிலி பேப்பரை, பேனாவை எடுத்துக் கொண்டு மெம்பர்களுக்கு நோட்ஸ் எழுதத் தொடங்கினாள்.
அதற்குள் போன் ஒலித்தது. மைதிலி எடுத்தாள்.
மறுமுனையிலிருந்து அபிஜித்தின் குரல் கேட்டது “”மைதிலி! நான் வருவதற்கு தாமதம் ஆகும். மிஸ்டர் வர்மா வந்தால் நீயே பேசிவிடு. அவர் நம்முடைய கம்பெனி ஷேர்கள் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். மற்ற இரு பார்ட்னர்களின் சம்மதமும் வாங்கி விட்டேன் என்று சொல்லு. நாம் அறிமுகப்படுத்தி வைப்போம். நேராக அவரே டீல் செட்டில் செய்துக் கொள்ளட்டும்.”
“அப்படியே ஆகட்டும்.”
“சித்தார்த்துக்கு நிமோனியாவாம். கண்ணாயிரம் இப்போதுதான் போன் செய்தார். ஆஸ்பத்திரியில் ஜெனரல் வார்டில் இருக்கிறானாம். ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருகிறேன்.”
“சித்தார்த் கிடைத்து விட்டானா?” அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.
“அந்த கண்ணாயிரம்தான் தேடி கடைசியில் கண்டு பிடித்தான். ஸ்ட்ரீட் சில்ட்ரன் ஹோமில் இருந்தானாம். ஜுரத்தில் சுயநினைவு இல்லாமல் படுத்துக் கிடந்தானாம்.”
“மை காட்!”
“கண்ணாயிரம் போன் செய்து சொன்ன போது நானும் இதே வார்த்தைதான் சொன்னேன். ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்துவிட்டு வருகிறேன்.” அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள் போலும் “எஸ் கமின்” என்று சொல்லிக் கொண்டே போனை வைத்து விட்டான்.
மைதிலி கையிலிருந்த பேனாவை பேப்பர் மீது போட்டுவிட்டு நாற்காலியில் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தாள். கண் முன்னால் காகிதம், எண்கள் எல்லாம் மாயமாகி விட்டன. அன்று பாட்டியின் சுடு சொற்களுக்கு கன்றிவிட்டிருந்த சித்தார்த்தின் முகம் ஒன்றுதான் தென்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இளம் முகத்தில் இயலாமை! அவமானம்! அவைதான் நினைவுக்கு வந்தன.
அந்த வயதில் இருக்கும் குழந்தைகள் இது போன்ற அவமானங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு இருக்கும் பலத்திற்கு கையை உயர்த்தினான் என்றால் கிழவியின் வாயை மூடச் செய்ய முடியும். ஆனால் அவன் அந்த காரியத்தை செய்யவில்லை. தன்னிடம் அந்த பலம் இருக்கும் நினைப்பு இல்லாதவனாக சும்மா இருந்துவிட்டான். ஏதாவது அவமானம் நேர்ந்தால் விழுங்கிக்கொண்டு குன்றிப் போவதைத் தவிர எதிர்த்து நின்று பதிலடி கொடுப்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்.
மைதிலியின் மனதில் ஏதோ வேதனை துளைக்கத் தொடங்கியது. அன்று வீடு வரைக்கும் வர வேண்டாம் என்று அவன் சொன்ன பிறகும் தான் கேட்டு கொள்ளாமல் கொண்டுவிட்டாள். தன் முன்னால் நடந்த அந்த ரகளைக்கு அவன் ரொம்ப அவமானமாக உணர்ந்திருப்பான். அப்படித்தான் இருக்க வேண்டும்.
அன்று மாலைக்குப் பிறகு சித்தார்த்தை பார்க்கவில்லை. அபிஜித் சித்தார்த்தைத் தேடிக்கொண்டு அன்று இரவு அன்னம்மா வீட்டுக்குப் போனான். சித்தார்த் வரவில்லை என்று அவள் சொல்லிவிட்டாள். “வராமல் எங்கே போய் விடுவான்?” என்றாள் ஜோசியம் சொல்வது போல். கண்ணாயிரத்திடம் சித்தார்த் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கண்டுபிடித்து தனக்கு தகவல் தெரிவிக்கச் சொல்லி ஆணையிட்டுவிட்டு வந்தான் அபிஜித். அன்று இரவு காரில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அபிஜித் சொன்னான். ‘சித்தார்த்தை அந்த சூழ்நிலையிலிருந்து கூடிய சீக்கிரத்தில் வெளியே கொண்டு வர வேண்டும். இருந்தாலும் அந்தப் பையன் எதிர்த்து நிற்காமல் ஏன் சும்மா இருக்க வேண்டும்? இளம் வயதில் இருப்பவன். அந்த வயதில் இருக்கும் குழந்தைகள் எதிர்த்து நின்றால் இந்த உலகம் பயந்து நடுங்கும்” என்றான்.
மைதிலி பதில் பேசவில்லை.
மறுநாள் முழுவதும் அவன் ஜாடை தெரியவில்லை. கண்ணாயிரம் காலையிலும், மாலையிலும் போன் செய்தார். இரண்டு நாட்கள் கழிந்து விட்டன.’ மைதிலி ரொம்ப முயற்சி செய்து அவனைப் பற்றிய எண்ணங்களை தவிர்த்தாள். இப்போது அபிஜித் இந்த செய்தியைச் சொன்னதும் அந்த எண்ணங்கள் திரும்பவும் சூழ்ந்து கொண்டன.
சித்தார்த்தைப் பார்ப்பதற்கு அபிஜித் போகப் போவதாகச் சொன்னான். தானும் போக வேண்டும் என்று அவளுக்கு பலமாகத் தோன்றியது. தன்னையும் உடன் அழைத்துப் போவதாக இருந்தால் அபிஜித் தானே சொல்லியிருப்பான். அவன் சொல்லாததை கேட்கும் வழக்கம் தனக்கு இல்லை. அன்யோன்யமான தாம்பத்தியத்தில் அவரவர்களின் எல்லைகள் அவரவர்களுக்குத் தெரியும்.
இருந்தாலும் மைதிலிக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ தெரியாத சக்தி இலக்குமண ரேகை போன்ற அந்த எல்லைக்கோட்டை தாண்டி வெளியின் காலடி எடுத்து வைக்கச் சொல்லி தூண்டிக் கொண்டே இருந்தது.
“நானும் உன்னுடன் சித்தார்த்தை பார்க்க வருகிறேன்” என்று கணவனிடம் சொல்வதற்கு நிச்சயித்துக் கொண்டாள். கணவனை அழைப்பதற்கு ரிசீவர் மீது அவள் கை படிந்தது. அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற சந்தேகம். அதற்குள் போன் மணி கணகணவென்று ஒலித்தது. திடுக்கிட்டவளாய் கையை எடுத்துவிட்டாள். போன் தொடர்ந்து ஒலித்தது.
ரிசீவரை எடுத்து “ஹலோ!” என்றாள்.
“மைதிலி! சர்வீசுக்குப் போன கார் இன்னும் வரவில்லை. இன்னும் நேரம் ஆகும் என்று டிரைவர் இப்போதுதான் போன் செய்து சொன்னான். நீ ஏதாவது வேலையில் இருக்கிறாயா?”
“இல்லை.”
“அப்படி என்றால் காரை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு வரமுடியுமா? நான் இந்த பைல்களை பத்து நிமிடங்களில் பார்த்து முடித்து விடுகிறேன். நீ வந்து கீழே இருந்தாய் என்றால் நான் வந்து விடுகிறேன்.”
“அப்படியே செய்கிறேன்.”
“தாங்க்யூ டியர்!” அவன் போனை வைத்து விட்டான்.
மைதிலிக்கு ஏனோ திடீரென்று சந்தோஷம் ஏற்பட்டது. அதே சமயத்தில் இந்த சந்தோஷத்திற்குக் காரணம் தெரியாமல் உள்ளூர திகைப்பும் ஏற்பட்டது. மைதிலி டிரைவ் செய்து கொண்டிருந்த கார் சரியாய் பத்து நிமிடங்களுக்கு பிறகு மைதிலி இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் வந்து நின்றது. கூர்க்கா ஓடி வந்து கார் கதவைத் திறக்கப் போனான். மைதிலி வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.
ஆபீசில் இன்னொரு மாருதி வேனும், ஜீப்பும், டிரைவர்களும் இருந்தார்கள். ஆனால் அபிஜித் கம்பெனி விவகாரங்களில் பிசியாகி, வீட்டில் அதிக நேரம் இருக்க முடியாமல் போய் விட்டால், எங்கேயாவது போக வேண்டி வந்தால், மைதிலியை காரை எடுத்துக் கொண்டு வரச் சொல்லுவான். வழியில் போகும்போது அந்த கொஞ்ச நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கலாம் என்ற எண்ணம்தான். விரிவடைந்து கொண்டிருந்த வியாபாரமானது அவனை அவளிடமிருந்து பறித்துக் கொண்டு தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது. உடல்ரீதியாக அவன் வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்தாலும் அவன் மனம் மைதிலியின் பக்கம் ஈர்க்கப் பட்டிருந்தது. தான் இல்லையென்றால் தனிமையில் மைதிலி வேண்டாத எண்ணங்களுடன் மனதைப் பாழாக்கிக் கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு.
மைதிலி காரில் உட்கார்ந்தபடியே சுற்றிலும் பார்வையிட்டாள். அந்த வளாகத்துக்குள் நுழைந்து விட்டாலே இனம் தெரியாத நிம்மதி ஏற்பட்டுவிடும். விதவிதமான பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகளுடன் பல வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாக இருக்கும். அத்தனை பேர் வேலை செய்து கொண்டிருந்தாலும் அங்கே அமைதி குடி கொண்டிருக்கும். தபோவனம் போல் நிசப்தமாக, அங்கே வேலை செய்பவர்கள் ஒருமித்த மனதுடன் செயல் படுவது போல் தோன்றும்.
அபிஜித்தும் ஆட்களை தேர்வு செய்யும் முன் அவர்களின் திறமையை எடை போட்டு தனக்கு சரிப்பட்டு வருமா இல்லையா என்று முடிவு செய்வான். ஒரு முறை ஆட்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு வேலையைக் கொடுத்துவிட்டால் அந்தத் துறை பன்மடங்காக முன்னேற்றம் அடைய வேண்டியதுதான். மைதிலியின் மனதில் கலவரம் குறைந்து மெள்ளமாக அமைதி குடியேறத் தொடங்கியது. இந்த வளாகத்தில் அடியெடுத்து வைத்தாலே அபிஜித்தின் முன்னிலையில் இருப்பது போல் தோன்றும்.
அபிஜித் லிப்டில் இறங்கி மளமளவென்று வந்தான். அவனைப் பார்த்ததும் மைதிலி கார் கதவைத் திறந்தாள்.
“வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா?” உள்ளே உட்கார்ந்து கொண்டே கேட்டான்.
“இல்லை” என்றாள் காரை ஸ்டார்ட் செய்து கொண்டே.
மைதிலியின் கார் நெரிசலாக இருக்கும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. அபிஜித் பின்னால் சாய்ந்து ரிலாக்ஸ்ட் ஆக உட்கார்ந்து கொண்டான்.
“மைதிலி! எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயங்களில் ஒன்று தெரியுமா?”
“என்ன?”
“நீ இது போல் டிரைவ் செய்து கொண்டிருந்தால் நிம்மதியாக உட்கார்ந்து வெளி உலகத்தைக் கவனித்துக் கொண்டிருருப்பது. நான் செய்த நல்ல காரியங்களின் ஒன்று உனக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தது.”
“நான் ட்ரைவிங்கிற்கு லாயக்கு இல்லை என்றும், வெறும் மக்கு என்றும், எனக்கு ரோட் சென்ஸ் இல்லை என்றும் சலித்துக் கொண்டது யாராம்?”
அபிஜித் சிரித்தான். அந்த சிரிப்பில் சொல்ல முடியாத நிம்மதி இருந்தது. “நான் அப்படி சலித்துக் கொண்டதால்தான் உனக்குக் கோபம் வந்து நான்கு நாட்களில் கற்றுக் கொண்டாய். இப்போது குருவை மிஞ்சிய சீடன் ஆகிவிட்டாய். உனக்கு வசதியாக இருக்கும் என்றும், டிரைவர் மீதோ, என் மீதோ சார்ந்து இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக உனக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.”
“ஆமாம். பயமாக இருக்கிறது வேண்டாம் என்று நான் சொன்ன போது என் காதை திருகிவிட்டு, கண்களை உருட்டி விழித்து ‘இன்னொரு முறை அந்த வார்த்தையைச் சொல்லாதே என்று கூட சொன்னாய்.”
அபிஜித் உரத்தக் குரலில் சிரித்தான். “ஆமாம். அது உனக்காகத்தான். எனக்கு ஏனோ நீ எல்லா விஷயங்களிலேயும் சுதந்திரமாக, சுயமாக செயல் படுபவளாக இருக்க வேண்டும் என்று தோன்றும். உன் எண்ணங்களுக்கு, முடிவுகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.”
“என்ன செய்து கொள்வது அந்த சுதந்திரத்தை? எனக்கு சுதந்திரம் இல்லை என்றோ, அடிமையாக இருக்கிறேன் என்றோ ஒருநாளும் நான் நினைத்தது இல்லை. சில சமயம் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக செய்து ‘மைதிலி! இந்த ஜென்மத்தில் உனக்கு சுதந்திரம் என்பது இல்லை’ என்று உன் வாய் வழியாகக் கேட்கணும் என்று தோன்றும்” என்று சொல்லிக் கொண்டே அவன் பக்கம் பார்த்தாள்.
அவனும் பார்த்தான். அவன் கண்களில் தடுமாற்றமில்லாத நிறைவு. இந்த ஜென்மத்தில் உன்னால் அந்த காரியத்தை செய்ய முடியாது என்ற நம்பிக்கை.
அவன் கையை நீட்டி மைதிலியின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டான். “சில சமயம் உன்னைப் பார்க்கும் போது எனக்கு என்னவென்று தொன்றும் தெரியுமா?”
“உனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு விதமாகத் தோன்றும். என்னால் எப்படி ஊகிக்க முடியும்?” காரை பக்கத்து சாலையில் திருப்பிக் கொண்டே சொன்னாள்.
“உன்னுடன் கழிக்காத ஒவ்வொரு நிமிடமும் வியர்த்தம். வியாபாரத்தில் நிறைய சம்பாதித்து விட்டேன். இனி போதும். வைண்டப் செய்து விடுகிறேன். உன்னுடன் சேர்ந்து பிடித்தமான பாடல்களை கேட்டுக் கொண்டே, நீ கலந்து கொடுக்கும் அமிர்தம் போன்ற காபியை பருகிக் கொண்டே, நீ படித்த புத்தகங்களைப் பற்றி கருத்துகளை பரிமாறிக் கொண்டே, உன்னுடன் நிலா வெளிச்சத்தில் வாக்கிங் போய்க் கொண்டு…”
மைதிலி காரின் வேகத்தை குறைத்து ஒரு ஓரமாக நிறுத்தினாள்.
“என்னவாயிற்று? காரை ஏன் நிறுத்திவிட்டாய்?” பதற்றத்துடன் கேட்டான்.
“உங்களுடைய கனவைப் பற்றி முழுவதுமாக சொல்லி முடி.”
‘நான் பேசிக் கொண்டிருந்தான் உனக்கென்ன வந்தது?”
“வெறும் பேச்சா இது? என் கையைப் பிடித்துக் கொண்டு உன்னுடன் அந்த உலகிற்கு அழைத்துக் கொண்டு போகிறாய். நான் யார் மீதாவது காரை இடித்து விட்டேன் என்றால், நாம் முதலில் ஆஸ்பத்திரியில் சேர வேண்டியிருக்கும்.”
“ஓ.. ஐ யாம் சாரி!”
“இருந்தாலும் அபீ! கடந்த பதினைந்து வருடங்களாக இப்போது சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ,நீ திரும்பவும் இப்படிப் பேசுவானேன்?”
“எனக்குத் தெரியாது. கடந்த இரண்டு நாட்களாய் நான் உன்னுடன் சேர்ந்து இருக்கவே இல்லை. நீ காலையில் விழித்துக் கொள்ளும் முன்பே கிளம்பிப் போய் விடுகிறேன். இரவில் தாமதமாக வருகிறேன். தூக்கம் சொக்கும் விழிகளுடன் நீ எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பதைப் பார்க்கும் போது என்னுள் குற்ற உணர்வு பரவுகிறது.”
“அது குற்ற உணர்வு இல்லை. உன் மீது உனக்கே இருக்கும் அவநம்பிக்கை.” சீரியஸாக சொன்னாள்.
“மைதிலி!” குற்றச்சாட்டு தாங்க முடியாதவன் போல் பார்த்தான்.
“ஆமாம். இரண்டு மணி நேரம் உன்னை விட்டு தொலைவாக இருந்தால் நான் வேண்டாத யோசனைகளுடன் திக்குமுக்காடிக் கொண்டு இருப்பேன் என்பது உன் எண்ணம். நான் எவ்வளவு சொன்னாலும் உனக்கு என் மீது நம்பிக்கை வர மறுக்கிறது. இது என்னுடைய இயலாமை. சில சமயம் என் மீது எனக்கே எரிச்சல் ஏற்படும்.”
“மைதிலி! நீ என்னுடைய கனவுகளிலிருந்து பாதாளத்திற்கு தள்ளி விடுகிறாய். நாம் ஆஸ்பத்திரிக்கு போய்க் கொண்டிருக்கிறோம். நோயாளியைப் பார்க்கப் போகிறோம்.” சமாதானப் படுத்தினான்.
“நானும் அதைத்தான் உனக்கு நினைவுப் படுத்துகிறேன். நான் காரை இனி ஓட்டப் போவதில்லை.”
“மைதிலி! ப்ளீஸ்!”
மைதிலி பதில் பேசவில்லை.
“சாரி சொன்னேன் இல்லையா. ஸ்டார்ட் பண்ணு” என்றான்.
மைதிலி காரை ஸ்டார்ட் செய்தாள்.
அவன் சிரித்த முகத்துடன் ஏதோ சொல்ல வந்தவன் அவள் சீரியஸாக இருப்பதைப் பார்த்துவிட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
- இந்திரனின் நெய்தல் திணை
- ஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!
- மிதிலாவிலாஸ்-8
- பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு
- தொடுவானம் 62. நேர்காணல்
- மிதவை மனிதர்கள்
- வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்
- ‘சார்த்தானின் மைந்தன்’
- தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)
- வெட்டிப்பய
- நூல் மதிப்புரை – சாந்தாதத் அவர்களின் “வாழ்க்கைக் காடு”
- படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்
- அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை
- ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ” நெய்தல்” ( கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)- பொன் விழா நிகழ்ச்சி