நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6

This entry is part 22 of 25 in the series 17 மே 2015

மார்கழி குளிர்! காகம் கரைந்து எழுப்பியது விடியலை. யாழினி மெல்ல கண்விழித்தாள். பெற்றோரின் பிரிவு ஒருவாறு பழகிப்போயிருந்தது யாழினிக்கு. சாணத்தைக் கரைத்துவாசலில் தெளிக்க, சட்டென்று குமட்டிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் வாழை கன்றில் வாந்தி எடுத்தாள் யாழினி. மெல்ல தலைச் சுற்றுவது போன்ற உணர்வு. வாசற்படியிலேயே வந்து அமர்ந்துவிட்டாள்.

 

என்னவாயிற்று எனக்கு, பெற்றோர் இறந்த துக்கத்தில் மாதவிடாய் பற்றிய அக்கறையே இல்லாமல் இருந்துவிட்டோமே அப்படி என்றால், கர்ப்பமாய் இருக்கிறேனா என்ன?ஒரு முறை சேர்ந்தால் குழந்தைப் பிறக்குமா? மெல்ல எழுந்த கேள்விகளை யாரிடம் கேட்டுத் தீர்ப்பது என்று தெரியாமல் தத்தளித்தாள்.
யாழினிக்கு என்று நெருக்கமான சிநேகிதிகள் யாருமில்லை. அம்மாவே அவளுக்கு சிநேகிதியுமாக இருந்ததால் வேறு சிநேகிதிகளும் தேவைப்படவில்லை. ஒரு நல்லடாக்டராகப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது என்று முடிவெடுத்தாள்.
கதவைப் பூட்டி செங்கம் புறப்பட வெளியே வந்த போது சகாதேவனும் அவன் தாயாரும் குறுக்கே வந்தார்கள். எங்கடிம்மா கிளம்பிட்ட என்றாள் சகாதேவனின் அம்மா
செங்கம் வரைக்கும் போய்ட்டு வரேன்த்த என்றாள் யாழினி
இப்ப என்ன செங்கத்துக்கு அவசரம், உங்கப்பாரு மாமாக்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாரு. அது வட்டியும் முதலுமா 5 லட்சதுக்கு வந்துடுச்சு அந்த நெலத்தவச்சுட்டு நீ என்ன போற கடனுக்கு ஈடுகாட்டிடு என்றாள்.
செய்வதறியாது திகைத்தாள் யாழினி. அப்பா அவளுக்குத் தெரியாமல் ஒரு சிறு தூசிக் கூட வாங்குபர் அல்ல. அத்தையோ 5 லட்சம் என்கிறாள்.
என்னடி அப்படி முழிக்குற நான் என்ன பொய்யா சொல்றேன் பண்டு பாத்திரமெல்லாம் இருக்கே என்றாள் வக்கனையாக
யாழினிக்கு திடீரென நினைவு வந்தது, ஒரு 5000ரூபாய் கடனுக்கு வெத்து பாண்டு எழுதி அந்த கடனை வாங்காமல் விட்டது. அந்த பாண்டைக் கூட அப்பா கிழிக்காமல்வைத்திருந்தாரே! அடக் கடவுளே எரியற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்ன்னு பாண்டை எடுத்து வைச்சுக்கிட்டதுங்களோ ஆசை யாரை விட்டது. இனி இந்த வீட்டில் இருப்பதுஅத்தனை உசிதமில்லை. சொத்திற்காக தலையில் கல்லைப் போட்டாலும் போட்டுத் தொலைப்பார்கள்.
சகாதேவன் அம்மாக் கோண்டு போல் எதுவும் பேசாது நின்றிருந்தான். வஞ்சகம் பேசுபவர்களிடம் நியாயம் அநியாயத்தைப் பற்றி வாதாடி என்ன ஆகப்போகிறது என்றுதோன்றியது யாழினிக்கு. இந்த வாழ்க்கை ஏன் துயரத்தின் எல்லை வரைத் துரத்துகிறது.
செங்கம் போய்ட்டு வரேன் அத்த எதுவுவா இருந்தாலும் வந்ததும் பேசிக்கலாம் என்று அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்.
பேருந்தின் ஜன்னலோர இருக்கை ராகவை நினைவுப்படுத்தியது. அந்த உள்ளங்கை சூடு தற்போது தேவையாய் இருந்தது. அவன் குழந்தை தான் அவளின் வயிற்றில். அந்தநினைவே அவன் மீது அதீத காதலை உருவாக்கியது. ஒரு வேளை தன் வயிற்றில் அவன் குழந்தை வளர்கிறது என்றால் பழைய வெறுப்பை தூக்கி எறிவான் என்றுஎதிர்பார்த்தாள். முதலில் டாக்டரைப் பார்ப்பதற்கு முன் அவனைப் பார்த்து பேச வேண்டும் என்று எண்ணி அவன் வீட்டிற்கு சென்றாள்.
அந்த வீடு சிறியதாய் இருந்தது. ஒட்டுக்குடித்தனம். மதில் சுவரின் மேல் மஞ்சள் ரோஜாக்கள் மலர்ந்து சிரித்தது.
யாழினிக்குள் ரோஜா மீது ஒரு உந்துதல் ஏற்பட, மலர்ந்த ரோஜவில் ஒன்றை பரிக்க கை வைக்க வெளியே வந்து நின்றாள் ராகவின் அக்கா
கண்ட அவுசரிகள்லாம் ரோஜா பரிக்க வந்துடுதுங்க என்றவள் பார்க்காது சொன்னது போல நீயா யாழினி எப்ப வந்த, ஏதாச்சும் செலவுக்கு காசு வேணுமா? இப்படி அடிக்கடிவராதம்மா! இப்படி வந்தினா ராகவ் பொண்டாட்டி கோவிச்சுக்க மாட்டாளா? ஏதோ போறாத கொறை ராகவ் உன்னை பொண்ணு பார்க்க வந்தது. அதுக்கு எவ்வளவோசெஞ்சுட்டான். இன்னும் அவன எதிர்பாக்குறது தப்பில்லையாம்மா? என்றவள் பவித்ரா பவித்ரா என்று அழைத்தாள்.
உள்ளிருந்து வந்த பெண் ஒடிசலாய் சராசரி முகலட்சணத்தோடு இருந்தாள். புதுத்தாலி கழுத்தில் மின்னியது. கழுத்து நிறைய நகைகள்.
என்ன செய்வது இந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரி நான் என்பதா? இருண்ட பிரதேசத்தில் உடலைக் கொடுத்து ஜீவன் வாங்கிக்கொண்டு தனித்து நிற்பதை சொல்லிஅவமானப்படுவதா? என்ன செய்வது கலங்கி போய் நின்றாள் யாழினி.
எங்கு போவது என்று தெரியாமல் செங்கம் பஸ்டேண்டு வளாகத்தில் வந்து அமர, அங்கே அருகில் வந்து நின்ற ஆடவன் ஒருவன் ஒரு பெரிய நோட்டு தரேன் வரியா என்றான்.
முதலில் என்ன சொல்கிறான் என்று புரியாது நின்றவள், புரிந்த போது வெகுண்டெழுந்தாள். அதோடு இந்த நேர்ததில் இங்கு நிற்பது தன்னை தவறானவளாகத்தான் காட்டும்என்று தோன்றியது. வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஜனங்களோடு ஜனங்களாக ஏறி நின்றுக்கொண்டாள்.
ஏம்மா அங்க ஒரு சீட் இருக்குது பாரு போய் உக்காரு என்றவர், யாழினியின் முகத்தைப் பார்த்து நீ செல்வராகவன் பொண்ணு தான எங்கம்மா இந்த நேரத்துல என்றார்.
யாழினிக்கு அவர் அப்படி கேட்டது அழுகையை தோற்றுவித்தது. பெற்றோர் இறந்ததை சொல்லி ஒரு மூச்சு அழுதது தீர்த்தாள். அத்த வீடு திருப்பத்தூர்ல இருக்கு அங்கில்அங்க தான் போறேன் என்று பொய் சொன்னாள்.
இங்க இருந்து ரெண்டு மணிக்கு திருப்பத்தூர் போவ, பஸ்டாப்புக்கு யாரயாச்சும் வரச் சொல்லிடுமா, என்றார் அவர் நிஜமான அக்கறையோடு. இப்போதைய காலகெட்டுக்கிடப்பை பற்றி ஒரு பெரும் அங்கலாய்ப்பை வார்த்தைகளில் வெளியிட்டுக் கடந்தார்.
ஜன்னலோர காற்றின் ஈரம் முகத்தில் அடிக்க, மூளைத் துரித கதியில் யோசித்தது என்ன செய்வதென்று. எங்கு போவது யார் இருக்கிறார்கள். உண்மையாய் நேசிப்பவர்கள்யாரேனும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அவள் எத்தனை யோசித்தும் எந்த கருத்தையும் மூளை முன் வைக்கவில்லை. திருப்பத்தூர் இறங்கு என்ற போது கண்டெக்டர் அருகில் வந்தார். இந்த இடத்துலஇறங்காதம்மா என்று பேருந்தின் வெளி வரும் இடத்தில் நிறுத்தி வெளிச்சத்திற்காக நிறுத்தி இங்க இறங்கிக்கம்மா, உங்க ரிலேஷன் வர வரைக்கும் எதிர்ல ரோந்து போலீஸ்இருக்கும் பயம் இருக்காது, என் ப்ரண்ட் ஒருத்தன் எஸ்.ஐ ஆ இருக்கான் நான் சொல்லிட்டு போறேன் என்றார்.
சொன்னது போல் அவர் பேருந்தில் இருந்து இறங்கி எஸ்.ஐயிடம் அவளைக் காட்டி ஏதோ சொல்ல வரும் முன் அந்த எஸ்.ஐ என்னடா புது கேசா என்று கண்ணடித்தது,அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. உடல் அணுக்களை குண்டுசி முனைகளால் ஒருசேர குத்துவதைப் போன்ற வலி.
ஏய் அப்படி இல்லடா, அந்த பொண்ணோட பெத்தவங்க ரெண்டு பேரும் செத்துட்டாங்க நாராயணா பஸ் ஆக்சிடெண்ட்ல ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருக்கு போலஅவங்க வர வரைக்கும் கொஞ்சம் பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னா இப்படி கேக்குற,
என்ன செய்யடா தப்பு பண்ற பொண்ணுங்களை பார்த்து பார்த்து எல்லாம் தப்பாதான் தெரியுது என்று சொன்னவரின் பார்வையில் ஒரு அனுதாபம் தெரிந்தது. இருந்தாலும்இந்த அனுதாபம் எதுவரைக்கும் நீடிக்கும்.
அந்த போலீஸ்காரரின் பார்வையில் மின்னிச் சென்ற கண நேர சபலம் அவளை பயமுறுத்தியது. இதே போலீஸ் காரர் பாயும் புலியாக மாறிவிடலாம். ஒரு பெண் தன் சுயஇடத்தை விட்டு நகரும் போது அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் இந்த சமூகத்தில் பெரியதாக இருக்கிறது.
சர்ர்ர்ரென்று வீறிக்கொண்டு வந்து நின்றது ஒரு கார். அதில் இருந்து ஒருவன் இறங்கினான். இவனை எங்கோ பார்த்தோமே! என்று அவள் மூளையைக் கசக்கும் முன்பாக வாதேவகி என்றான் தோழமையுடன் அணைத்தவாறு,
யாழினி ஒரு கணம் தடுமாறினாள் ஏற்கனவே ஒருவன் அணைப்பு வாழ்க்கையை நிர்கதியில் விட்டிருக்கிறது. இதோ மற்றவன் அனுமதியை எதிர்பார்க்காமல் அணைக்கிறான்.தொட்டும் தொடத அணைப்பு தோழமையை உணரச்செய்வது போல!
எதிர்புறம் இருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து சிநேகமாய் சிரித்தான். சார் நான் தேவகியை அழைச்சுட்டு போறேன் என்று கூறி ஒப்புதலை எதிர்பார்த்து அனுமதி தேவைஇல்லை என்பதைப் போல ஒரு தோரணை. எங்கிருந்து வந்தது அவள் மீதான உரிமைப் பாரட்டல்.
பின் இருக்கைக்கான கதவைத் திறந்து வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து, உள்புறமாகத் தள்ளினான்.
இதில் இன்ஸ்பெக்டரும் உடந்தையோ என்ற வினா தொக்க கலவர பாவனை முகத்தில் தோன்றிய போதும், தெருவிளக்கின் சோபையில் அது அழிந்து கரைந்து போனது.
காற்றின் சீரிய தீண்டலில் குளிரெடுக்க ஸ்ஸ்ஸ் என்ற ஓசையோடு சேலை மேல் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டாள் யாழினி.
ஒரு வேளை தேவகி என்ற பெண்ணிற்கான வாகனமோ இது என்று சந்தேகம் ஏற்பட முன் ஒட்டுநர் இருக்கையின் சாய்மான பகுதியை தட்டி நான் தேவகி இல்லை என்றாள்.
தெரியும் என்ற ஒற்றைப் பதிலே அழுத்தமாய் வந்தது.
பிறகு ஏன்? என்ற வினாவில் சிறு நடுக்கம் வெளிப்பட குரல் இழைந்தது
நானும் பெண்களோடு பிறந்தவன் வளர்ந்தவன் அதனால் என்று முடித்துக்கொண்டான். மேற்படி அவன் எதுவும் பேசவிரும்பாது கார் ஓட்டுவதிலேயே மும்முரமானான்.
பெண்களோடு வளர்ந்தவன் என்ற வார்த்தை சற்று நம்பிக்கையை கொடுக்க! காரில் சாய்ந்து உட்கார்ந்தாள், பசிக்கிறது! காலையில் இருந்து சாப்பிடவில்லை என்பதைமனதிற்குள் உச்சரிப்பதாக எண்ணி சத்தமிட்டு சொல்லிவிட்டாளா என்ன? சாலையோரத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்டில் கொண்டு போய் நிறுத்தினான்.
இங்க இட்லி நல்லா இருக்கும் தேவகி என்றான்.
என் பெயர் யாழினி, தேவகி அல்ல
அது சரி ஏதோ அப்பொழுது அந்த பெயர் தான் வாயில் வந்தது. தனியா விட்டுட்டு வர மனசில்ல உங்க பின்னாடி சீட்ல தான் இருந்தேன். எங்க கண்டெக்டர் அடையாளம்கண்டுட்டு தடுத்துடுவாரோன்னுஅவர் போறவரைக்கும் வெயிட் பண்ணிட்டு அப்புறமா வந்து உங்கள தள்ளிட்டு வந்துட்டேன் என்று கண்ணடித்தான்.
அந்த கண்ணடிச் செய்கை வயிற்றில் ஒருதிடீர் பய உணர்வு பிராந்தியத்தை ஏற்பதுத்தியது.
அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு உட்காரு என்றான் ஒருமையில், அந்த திடீர் ஒருமை மாறல் மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
எந்த பதிலும் கூறாமல் அமர்ந்தாள் யாழினி.
தட்டில் ஆவிப்பறக்க வந்த இட்லியும், தேங்காய் சட்னியும் பசியை துரிதப்படுத்த அவன் பணிக்காமலேயே இட்டிலியை விண்டு விழுங்கினாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் சிறு சலனம். இத்தனை பசியைத் தேக்கிக்கொண்டு ஒரு பெண் சங்கடப்பட நேர சூழல் காரணமாகிவிட்டதே. இதேபெண்களின் கதைகளின் தான் எத்தனை முரண்பாடு. என்ற மென்னை உணர்வும் பரிதாபமும் அவள் மேல் எழுந்தது அந்த புதியவனுக்கு.
தண்ணி என்று சைகை செய்தாள் யாழினி
மெதுவா சாப்பிடுங்க என்றான் பன்மைக்கு மாறி
சற்று நிதானித்தவள், எதுக்கு மாறி மாறி பேசறீங்க என்றாள்
என்ன மாறி மாறி
ஒரு முறை நீ வான்னு ஒருமை பிறகு பன்மை
ஹா ஹா ஹா என்று கம்பீரமாய் சிரித்தான். அதுவா எனக்கு காலேஜ் டேஸ்ல ஒரு தங்கச்சி இருந்தா, அதாவது ப்ரண்ட் தங்கச்சி
ப்ரண்டா, தங்கச்சியா
ப்ரண்டா அறிமுகமாகி, தங்கச்சியா மாறிட்ட ஒரு கேரக்டர்
ம்
அவள் பேரு தான் தேவகி

நீயும் அவளப்போலவே இருந்ததால டக்குன்னு நானும் தேவகின்னு அழைச்சுட்டேன்
அப்ப என்னை தங்கச்சின்னு சொல்றீங்க என்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
ஒரு மென் புன்னகையை பரவவிட்டவன் உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எடுத்துக்கொள், நான் கயவன் இல்லை. பெண்களிடம் கண்ணியமாகத்தான் பழகுவேன் என்றான்.
உங்க பேரு
டேவிட் பிரான்சிஸ்
கிறிஸ்டியனா?
ம்
முகத்தை வேறு பக்கம் திருப்பி வேடிக்கைப் பார்த்தாள் யாழினி. ரெஸ்டாரண்ட் இடம் பெற்றிருந்த இடம் மட்டிலும் வெளிச்சமாகவும், சுற்றிலும் இருள் கவிழ்ந்து பொட்டுபொட்டுகளாய் தெரிந்தது.
வான இருளில் மங்கலான சாம்பல் மேகங்கள் நகர்ந்துக்கொண்டிருந்தது.
வானத்துல உங்க ஆள் முகம் தெரியுதா என்ன? என்றான் டேவிட்
ம் என்று திகைத்துப் போய் பார்த்தாள்.
உங்கள நான் இதுக்கு முன்னாடி கூட பார்த்திருக்கேன் தேவகி, ஒரு ஆள் கூட பிள்ளையார் கோயில்ல
நீங்க டேவிட் கிறிஸ்டியன் தான, கோயிலுக்கெல்லாம் வருவீங்களா?
ஏதோ எப்பவாச்சும் தனிமை கிடைக்கும் என்றால், கிறித்துவத்துல அந்த தனிமை கிடைக்காது என்றான்
ராகவ் பற்றிய நினைவு எழுந்ததும் கண்கள் கசிந்தது.
மெல்ல விரல் நுனியால் வழிந்த நீரை சுண்டினாள் யாழினி
சொல்லு தேவகி ஏதாச்சும் பிரச்சனையா என்றான் டேவிட்
அதரவற்ற இந்நிலையில் இவனுக்கு நம்மைப்பற்றி தெரிந்தால் தவறில்லை என்று தோன்றியது. துவக்கத்தில் இருந்து அன்றைய பொழுது நடந்து முடிந்தது வரை அவள்சொல்லி முடித்த போது நீ இவ்வளவு ஏமாளியா தேவகி என்று கடிந்தான்.
அப்பவே சட்டையை பிடிச்சு நிறுத்துறத விட்டுட்டு இன்னொருத்திக்கு தாரவார்த்து கொடுத்துட்டு வந்திருக்க
பொண்டாட்டியா நெனச்சே பார்க்க முடியலேன்னு சொல்லிட்டப் பிறகு என்ன உரிமையை எதிர்பார்க்க முடியும் டேவிட் என்றாள் யாழினி. அந்த குரல் வறண்டிருந்தது. இந்தஅனுபவம் உறவுகள் மேல்அவளுக்கிருந்த நம்பிக்கையைக் குலைத்திருந்தது.
[தொடரும்]

Series Navigationவயசுகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *