தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Spread the love

ullasakapalதிருமதி. கிருத்திகா எழுதிய உ.ப (சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து) நூலை நான் ஒரே மூச்சில் இன்று காலை படித்து முடித்தேன். நான் அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவள். இருந்தாலும் இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியதும், படித்தேன். உடன் அதைப் பற்றி எழுதவும் துணிந்தேன்.

நான் முனைவர் பட்டப் படிப்புக் காரணமாக சிங்கப்பூரில் நடந்த தகவல் தொழில் நுட்ப மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது சிங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்கும் ஆவலில் இணைய தளத்தின் மூலமாகக் கிடைத்த மின்னஞ்சல் முகவரி மூலமாகச் சிலரைத் தொடர்பு கொண்டேன். அதில் சிங்கைக் கதைக் களத்தின் தலைவர் திரு. ஆண்டியப்பன் அவர்கள் பதில் அனுப்பி மாதத்தி;ன் ஒவ்வொரு முதல் வார ஞாயிற்றுக்கிழமைகள் கூடும் கதைக்கள நிகழ்விற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கு தான் நான் கிருத்திகாவைச் சந்தித்தேன். ஏனோ முதன்முதலில் பேசும் போதே இந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்து, படித்துக் கருத்து கூறுமாறு சொன்னார்.

ஹாங்காங் திரும்பியதும் வேலை பளு காரணமாகப் புத்தகத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை. இன்று படித்த போது, உடன் அது பற்றிய கருத்தை அவருக்கு மட்டுமல்லாது, மற்ற எழுத்தாளர்களுடனும் பகிர்ந்து கொள்ள எண்ணியே, இதை எழுதுகிறேன். சிங்கையில் ஒரு கணிப்பொறி வல்லுநர், அதுவும் எஸ்.ஏ.பி வல்லுநர் என்றால், வேலை பளுவிற்கு கேட்கவே வேண்டாம். அதற்கு மத்தியில் தன்னுடைய தமிழ் ஆர்வத்தையும் திறனையும் வெளிக் கொணர வேண்டும் என்று எண்ணி, இந்த நூலை எழுதியுள்ளார் என்பது பாராட்டத் தக்க விசயம். அவருக்கு அந்தப் பயணம் எவ்வளவு பிடித்திருந்தது என்பதையே இது காட்டுகிறது.

இந்தப் புத்தகம் ஒரு பயணக் குறிப்பு வகையில் ஐந்து நாட்களின் குறிப்புகள் ஐந்து அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணம் பற்றி கூறும் அதே வேளையில், அதற்கான ஆயத்தம், பயணத்தின் போது உடன் இருந்தோர் பற்றிய குறிப்புகள் இருப்பது, நூலைப் படிக்கும் போது சுவாரசியமாக இருக்கச் செய்தது. கிருத்திகா தன் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை, மகளின் பயணக்கருத்தை (தமிழ் அதிகம் தெரியாத வயதினள் என்பதால் ஆங்கலத்தில்) கொடுத்திருப்பதும், அவரது தாயார் பயணத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டு, அருமையான கவிதை ஒன்றை எழுத்திக் கொடுத்ததை வெளியிட்டிருப்பதும் காட்டுகிறது. அவர் கணிப்பொறி வல்லுநர் என்பதை இறுதியில் வார்த்தைப் பிரயோகங்களின் பட்டியல், மேலும் விவரங்களுக்கு இணைய முகவரிகள், கேள்வி பதில் பகுதி கொடுத்திருப்பதிலிருந்தே தெரிந்துவிடும். படங்களுடன் உணர்வுகளை எழுதிக் கொடுத்துள்ளது, நம்மையும் பயணத்திற்கு உடன் இட்டுச் செல்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.

பயணத்தின் போது, வேறுபட்ட உணர்வு கொண்;ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. இப்பயணத்தின் போது ஒரு காதல், ஒரு மோதல் என்று கொடுத்திருப்பது படிப்பதற்கு சுவாரசியமாக இருந்த போதும், சற்றே சினிமாத்தனமாக இருந்தது என்று கருதுகிறேன். சில பல வார்த்தைப் பிரயோகங்கள், சிங்கைத் தமிழாகத் தெரிகின்றது. படிக்கும் போது, வார்த்தைகள் அட்டவணையைச் சுட்டித் தெரிந்து கொண்டேன்.

உல்லாசக்கப்பல் பயணம் செல்ல விரும்புவர்கள் பொதுவாக என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தக் குறிப்பு நூலில் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம். பயணக் குறிப்பு நூலுக்கான தகுதிகள் பல கொண்ட நூல். ஒரு கப்பலை முழுமையாக இல்லாவிட்டாலும், தேவையான அளவு வர்ணிக்கும் நூல். பயண விரும்பிகளுக்கு பயனுள்ள நூல் என்றே நான் எண்ணுகின்றேன்.

தமிழ் நூலாசியர் உலகிற்கு அடி எடுத்து வைத்திருக்கும் ஆசிரியர் கிருத்திகாவிற்கு பாராட்டுக்கள். மேலும் பல நூல்கள் தந்து தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள்.

Series Navigationசிறுகுடல் கட்டிகள்காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )

Leave a Comment

Archives