மனக்கணக்கு

This entry is part 11 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன்

ஜெகதீசனுக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது. மல்லிகாவிற்கு கல்யாணம். அதுவும் சாதாரண மல்லிகா இல்லை. பட்டதாரி. அதுவும் சாதாரண பட்டதாரி இல்லை. முதுகலை பட்டதாரி. அரசு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை. கை நிறைய சம்பளம். நேற்றுதான் அப்பா ஊரிலிருந்து கடிதம் போட்டிருந்தார். ஆவணி மாதம் 10ந்தேதி திருமணம் விழுப்புரத்தில் நடத்தப் போகிறார்கள். மாப்பிள்ளைக்கு அரகண்ட நல்லூர். திருக்கோயிலூர் பெருமாள்தான் இந்த வரனை இவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அப்பா அப்படித்தான் எழுதி இருந்தார்.
திருக்கோயிலூரில் இருந்து பத்தாவது கல்லில் இருக்கிறது நாச்சியார்மடம். மிகவும் பின் தங்கிய கிராமம் அது. அந்த கிராமத்தில் ஆண் பிள்ளைகள் பத்தாவது தாண்டினாலே அது உலக அதிசயம். பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வரைதான் வெளியே போக முடியும். அதனால் எட்டு கிளாஸ் கூட தாண்டாத பிள்ளைகள்தான் அங்கு அதிகம். மல்லிகா பூப்பெய்துவது கொஞ்சம் தாமதானது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். பத்தாவது முடித்த பின் தான் அவளுக்கு அந்த சடங்கு நடந்தது. நன்றாகப் படிக்கக் கூடிய பெண். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகியிருந்தாள்.
தினத்தந்தி பரிசு கொடுத்து படமும் போட்டது. முதலமைச்சர் கோட்டைக்கு வரவழைத்து பரிசு கொடுத்து கல்லூரி வரையிலும் இலவச படிப்புக்கு உத்தரவாதம் தந்தார். எதிர்கட்சி அம்மா ஜெயித்த தொகுதி அது என்பதால் அவர் பங்குக்கு கணிப்பொறியும் சைக்கிளும் தந்தார்.
“ சமைஞ்ச பிள்ளையை எப்படி படிக்க வெளிய அனுப்ப முடியும். அது நம்ம சாதி பழக்கமில்லீங்க “
உயர்நிலைப் பள்ளி நிர்வாகியிடம் மல்லிகாவின் பாட்டி சின்னாத்தா திட்டவட்டமாக சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பழமையிலேயே ஊறிப்போனவர். மல்லிகா பின் கட்டில் தூணோரம் மறைந்து நின்றுகொண்டு கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிக்கொண்டான் ஒரு படையுடன் வந்தார்.
“ பாட்டிம்மா நீங்க இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கீங்க.. பொம்பள பிள்ளைங்க ராக்கெட்ல போறாங்க.. விமானம் ஓட்டறாங்க.. நீங்க என்னடான்னா வீட்டை விட்டு வெளியவே அனுப்ப யோசிக்கிறீங்க “
“ பறக்கறவள படிக்க வையி.. என் பேத்திக்கிட்ட ஏன் வர்ற.. “
நாளொரு செய்தியும் பொழுதொரு புரளியுமாக மல்லிகா படிப்பு நிறுத்தப்பட்ட விசயம் பத்திரிக்கை களில் வெளியாக தொடங்கியது. கருத்துக் கணிப்பு நடத்தி மல்லிகா படிக்கலாமா கூடாதா என்று பட்டிமன்றம் நடத்தினார்கள்.
தடாலடியாக ஒரு நாள் பதினைந்து வெள்ளைக் கார்கள் மல்லிகாவின் வீட்டின் முன் நின்றன. மூன்றாவது காரில் இருந்து பூனைப்படைகள் புடைசூழ எதிர் கட்சி தலைவி அம்மா இறங்கி வந்தார்கள்.
“ பாட்டி எப்பவுமே என் மவராசன், அவன் நல்லா இருக்கணும்னு சொல்லுவியே அந்த மவராசன் கட்சியிலேருந்து அவரு அனுப்பிச்ச அம்மா வந்திருக்காங்க.. உன் பேத்திய படிக்க சொல்லி கேட்கறாங்க.. என்னா சொல்ற “
“ அவரா? என் மவராசனா அனுப்பினாரு.. அவரு கேட்டு எதையாவது மறுக்க முடியுமா.. படி புள்ள நல்லா படி “
அம்மா, மல்லிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எல்லா செய்தித்தாள்களிலும் மறுநாள் வந்தது.
ஒரு போராட்டமாக உருக்கொண்ட மல்லிகாவின் படிப்பு முடிந்து இப்போது அவளுக்கு கல்யாணம்!
மல்லிகா நன்றாகப் படித்தாள். மேற்படிப்புக்கு சென்னை போனாள். கூடவே சின்னாத்தாவும் துணைக்குப் போனாள். அதோடு கல்லூரி வரையிலும் கூடவே போய் விட்டு விட்டு, வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து கொள்வாள். காலையில் கஞ்சித் தண்ணி தான் குடித்திருப்பாள். பகல் முழுவதும் அவள் பசியையும் தூக்கத்தையும் போக்க காரப் புகையிலைதான் கூட்டு.
இன்றைய பாரத சுத்த திட்டமெல்லாம் வருவதற்கு முன்பே சின்னாத்தா சுத்தத்தைப் பற்றி ஒரு ஆய்வு கட்டுரையே எழுதும் அளவிற்கு சுத்தமாக இருந்தாள். இரண்டாவது நனைத்தலிலேயே வெளிறிப் போன பருத்திச் சேலையை வினோத சுற்று சுற்றி, அதன் கணிக்க முடியாத மடிப்புகளில் ஒரு பொக்கிஷமே வைத்திருப்பாள் சின்னாத்தா! விரற்கடை நீளத்திற்கும் அதே பருமனுடன் அவள் வைத்திருக்கும் புகையிலை துண்டுகள் எடுத்தவுடனே அந்தப் பகுதியை வாசமாக்கும்.
மாதம் ஒரு முறை நாச்சியார் மடம் போவாள் சின்னாத்தா! உறவு முறைகளைப் பார்க்க மல்லிகா வர, புகையிலைக்காகவே போவாள் சின்னாத்தா! ராவுத்தர் கடையில் தான் அவளுக்கான காரம் கிடைக்கும்.
“ அத்தா! பன்னீர் பொகையிலேன்னு இப்பல்லாம் வந்திருக்குதே! அதே தான் எல்லோரும் வாங்கிக்கினு இருக்காங்க? நீ என்ன்ன்னா இன்னமும் பழைய காலத்துலேயே இருக்கியே! உன் ஒருத்திக்காகத்தான் இதை வாங்கி வைக்கிறேன். நீ மவுத் ஆயிட்டே.. நான் நிறுத்திப்புடுவேன். “
பொக்கை வாயால் சிரிப்பாள் சின்னாத்தா! “ இன்னும் கொறை காலம் வாங்கணும் ராவுத்தரே! எம் பேத்தி பெரிய படிப்பு படிக்குது. அது முடிச்சி, அதுக்கு கல்யாணம் பண்ணி, அதும் புள்ளைங்களை நா எடுத்து கொஞ்சற வரையிலும் இருப்பேன்”
தூக்கு சட்டி இல்லாமல் சின்னாத்தா வெளியே கிளம்புவதில்லை. அதில் ஏதும் திண்பண்டம் இருக்காது. காலி. புகையிலைச் சாற்றை உமிழ அது பயன்படும். கல்லூரி முடிந்து கிளம்பும் நேரம் வரும் போது அதைக் காலி செய்வாள் சின்னாத்தா!
தெருவோரமாக ஓடும் மாநகராட்சியின் பாதாள சாக்கடையில் கவனமாகக் கொட்டுவாள். பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து அதை சுத்தமாக அலம்பிக் கொள்வாள். மல்லிகாவுடன் வீடு வரும் வரையில் புகையிலை போட மாட்டாள். பேத்தியுடன் ஏதாவது பேசிக் கொண்டே வருவாள்.
“ என்னா கரி! என்னா புகை! பஸ்ஸுங்க விடற மூச்சு வெள்ளைக்காரனைக் கூட கருப்பா ஆக்கிரும் போலிருக்கே மல்லி!”
“ ஊரெல்லாம் சுத்தம் பண்றவன் பீடி பிடிக்கிறான். தகரத்தை சொரண்டறா மாதிரி இருமறான். ஊர் சுத்தம் பார்க்கறவன் அவன் சுத்தம் பாக்க மாட்டேங்கறான்.”
“ ஏன் பாட்டி? நீ கூடத்தான் புகையிலை போடற? அது மட்டும் சுத்தத்துல சேர்த்தியா?”
“ நா என்னா சோறு துன்றா மாதிரியா உள்ளாற தள்றேன்? மென்னு துப்பிடறேன். அதுவுமில்லாம நாச்சியார் மடத்து ராவுத்தர் புகையிலை மூலிகைடி? ஒண்ணியும் பண்ணாது!”
மல்லிகா பட்டப்படிப்பு முடித்து முதுகலைக்கு படிக்கப் போகும்போது சின்னாத்தா திட்டவட்டமாக கூறி விட்டாள்.
“ என்னால வரமுடியாதும்மா! நான் இங்கனயே இருக்கேன். ஒன் ஆத்தாவை கூட்டிக்கிட்டு போ! எம் மவனுக்கு இருக்கற புள்ளைங்க போதும்!”
0
“கன்சைன்மெண்ட் இந்த வாரத்துல போகணும்.. இப்ப போய் லீவு வேணும்னு கேக்கறியே.. எப்படி ஜெகதீஸ்? “
“ இல்ல சார் நான் அவசியம் போகணும்.. முக்கியமான கல்யாணம்.. போயாகணும்.. “
“ யாருக்கு கல்யாணம்.. உன் தங்கச்சிக்கா? “
“ இல்ல சார் எங்க ஊர்ல இருந்து, தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித்தந்த ஒரு பெண்ணுக்கு கல்யாணம் சார். நான் அவசியம் போயே ஆகணும் “
“ ஊர்ல யாருக்கோ கல்யாணம்.. அதுக்கு நீ போகணுமா? “
“ ஆமா சார் போயாகணும்.. இது தெய்வத்துக்கு நடத்தற திருவிழா மாதிரி.. எல்லோரும் வருவாங்க.. அதை அவங்க பெருமையா நெனைப்பாங்க! நான் போகலைன்னா என்னைத் தப்பா நெனைப்பாங்க“
0
மல்லிகாவின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது. ஜெகதீசன் ஓடியாடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். ஊருக்கு கிளம்பும்போது மல்லிகா சொன்னாள்:
“ இனிமே நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.. நான் வந்து எல்லா ஏற்பாட்டையும் பாத்துக்கறேன். என்னங்க இவருதான் ஜெகதீசன்.. துபாய்ல இருக்காரு.. அஞ்சு வருசத்துக்கு முன்னால இவரத்தான் எனக்கு கட்டி வைக்கிறதா இருந்தாங்க.. இவருதான் மல்லிகா படிக்கணும்.. கல்யாணத்த அப்புறம் வச்சிக்கலாம்னு ஒரே போடா போட்டு என்னைய படிக்க வச்சாரு.. பெரிய மனசுங்க இவருக்கு “
மல்லிகாவின் புருசன் கையெடுத்து கும்பிட்டான். அவன் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.
“ ஒங்களுக்கும் மல்லிகா மாதிரியே மனைவி அமையணுங்க.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணி பத்திரிக்கை அனுப்புங்க “மல்லிகா அவனை நேராக பார்த்தபடி புன்னைகைத்தாள்.
0
ஜெகதீசன் ஏதேதோ கனவுகளில் இருந்தான். ஆனால் அவன் ஊக்குவித்த மல்லிகா கல்வியில் எட்டிய சிகரங்களே அவனுக்கு எதிரியாக வந்தது. கூடவே அவனது வசதியும், வயதும்!
காலம் மாறியிருந்தது. இளங்காளையாகவும் இருக்க வேண்டும். முதுகலையாகவும் இருக்க வேண்டும் என்று மல்லிகாவின் அப்பா தீர்மானித்தார். ஜெகதீசன் முதுகளையாக இருந்தான். இளங்கலையாகவும் இருந்தான்.
மல்லிகாவின் அப்பா அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “ நீங்க மட்டும் உறுதியா சொல்லலைன்னா, நான் கூட தடம் மாறியிருப்பேன் ஜெகதீசு! மல்லிகா படிச்சிருக்க மாட்டா! இப்படி ஒசத்தியான மாப்பிள்ளை கெடைச்சிருக்க மாட்டாரு! “
மல்லிகா கல்யாணக் கோலத்தில் நிற்க அவன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை துபாய் அறையில் தன் மேசை மீது வைத்திருக்கிறான் ஜெகதீசன்.
ஜெகதீசன் பள்ளிப்படிப்பு முடிந்த மல்லிகாவை நினைவு கூர்ந்தபடியே பெருமூச்சு விட்டான். அவன் கணக்கு தவறிவிட்டது அவனுக்கு தாள முடியாததாக இருந்தது. அந்த வேதனையை மென்று முழுங்கியபடியே, அந்த குளிர்சாதன அறையில் சாய்ந்தான். மனதில், கல்யாண சீர் வரிசைகளுடன், மல்லிகாவும் அவள் புருஷனும் சென்று கொண்டிருந்த மகிழுந்தின் பிம்பம் தெரிந்தது. அனிச்சையாக அவன் கைகள் அசைந்தன.
மல்லிகாவின் கல்யாணம் முடிந்த ஒரு வருடத்தில், சின்னாத்தா தொண்டைப்புற்று நோய் வந்து செத்துப் போனாள்.
 

 

Series Navigationமாஞ்சாஇந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *