தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

கண்ணன் ராமசாமி

Spread the love

நேற்று மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களும், அதன் முதுகெலும்பில்லா தன்மையும் வருமாறு:

அம்சங்கள்:

௧. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், லோக் பால் மசோதா வரம்பிற்குள் வாரமாட்டார்கள்.

௨. பார்லிமென்ட்-க்குள் எம்.பிக்களின் நடத்தையும் மசோதா வரம்பிற்குள் வராது.

௩. பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், அவருக்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.

௪. ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பில், ஒரு தலைவரும், எட்டு உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

௫. லோக் பால் அமைப்பில் இடம் பெற்றுள்ளவர்கள் மீதான புகார்கள், ஜனாதிபதியால், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப் படும்.

௬. ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம், லோக்பால் குழுவுக்கு உண்டு.

௭. அரசு ஊழியர்களுக்கு எதிராக, பொய் ஊழல் குற்றச் சாட்டுக்களை தெரிவிக்கும் நபர்கள் மீது, விசாரணை நடத்தப் படும்.

௮. பொய் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டது, விசாரணையில் நிரூபிக்கப் பட்டால், சம்பந்தப் பட்ட நபருக்கு, சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் முதல், இரண்டு இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப் படும்.

௯. ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான அரசு ஊழியர்களை பணியிடமாற்றம் செய்யும்படியும், சஸ்பெண்டு செய்யும்படியும் பரிந்துரைக்க, லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

௧௦.அமைச்சர்கள், எம்.பி.க்கள், குருப் ஏ அதிகாரிகள், அவர்களுக்கு இணையான பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களையும், பார்லிமென்ட் சட்ட திட்டங்களின் படி செயல்படும் வாரியம், கழகம், அறக்கட்டளை, தன்னாட்சி அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஊழல் புகார்களையும் விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு உண்டு.

முதுகெலும்பு இல்லாத தவளை:
௧. எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல, பிரதமர் மசோதா வரம்பிற்குள் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது பிரதமர் ஊழல் செய்ய முழு சுதந்திரம் பெறுகிறார் என்று ஒப்புக் கொள்வதைப் போல இந்த மசோதா அமைகிறது. பிரதமரின் பணிகள் பாதிக்கப் படுமாம். அமைச்சர்களை சிறைக்குள் செல்லும்போது, புதிய அமைச்சர்களை நியமிக்கும் பிரதமர், தன்னை விசாரிக்கும் போது, தன் பணியை, துணைப் பிரதமரிடம் விட்டுச் செல்லலாமே.

௨. எம்பிக்களின் பார்லிமென்ட் நடத்தைகள் ஊழலுக்கு தொடர்புடையவை அல்ல. அவை நடத்தை விதிமுறைக்கு தொடர்புடையவை. இதை மசோதா விசாரிக்க அவசியம் இல்லை. ஆனால், தூங்கிக் கொண்டிருப்பவர்களையும், நாற்காலியை தூக்கி அடிப்பவர்களையும் என்ன செய்வது?

௩. பிரதமர் பதவியிலிருந்து விலகும் வரை அவர் மீது வந்த புகார்கள் தாக்குப் பிடிக்குமா? ஒரு கவுன்சிலர், தன் கட்சி ஆட்சியில் இருந்தாலே சாட்சிகளை கலைத்துவிடுகிறார். ஊழல் செய்யும் பிரதமர் இதை செய்யாமல் விடுவாரா?

௪. தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசை சாருமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் தவறே நடைபெறவில்லை என்று கூறிய கபில் சிபல் போன்றோர், குழுவை நியமிக்கும் பொறுப்பை ஏற்றால், இந்த மசோதாவுக்கும், மற்ற சட்டங்களுக்கும் என்ன வித்யாசம் என்று புரியவில்லை. அப்படி நியமிக்கப்படும் குழு, புகார்களை அணுகும் முறை சரியாக இருக்குமா?

௫. தலைவர், குழுவினர் ஆகியோர் மீது எழும் புகார்களை ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் தலைமை நீதிபதி விசாரிக்கலாம் என்று மசோதா சொல்கிறது. அப்துல் கலாம் போன்ற ஜனாதிபதி இனிமேல் வரப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

௬. அமைச்சர்களின் சொத்துக்களை மட்டும் விட்டுவிட்டு, அரசு ஊழியர்கள் சொத்தை பறிமுதல் செய்யலாம் என்று கூறியிருந்தால், பதவியைப் பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும்; தவறு செய்பவர்களுக்கு சம தீர்ப்பு முறை சரியில்லை என்று இந்த அரசு நினைப்பதாய் நாங்கள் தெளிவாக புரிந்து கொண்டிருப்போம்.

௭&௮. பொய் குற்றச் சாட்டுக்களை பற்றி ரொம்பவே கவலைப் படுகிறது அரசு. எதிர்கட்சிகளை அடக்க இது உதவும் என்ற காரணமா? இல்லை, உங்கள் புகார்கள் பொய் புகார்களாக ஆக்கப் படலாம் என்ற எச்சரிக்கையா? ஒரு பாமர மனிதன் புகார் அளித்து, அந்த புகார் பொய் என்று திரிக்கப் பட்டால், அவன் 25 ரூபாய் அபராதத்தை எங்கிருந்து கட்டுவான்? அவன் சிறை செல்ல வேண்டிவந்தால், அதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?
௯. கேலிக் கூத்தான அம்சங்களின் இதுவும் ஒன்று. ஊழல் செய்பவரை பதவி நீக்கம் செய்யமுடியாவிட்டால், அந்த மசோதா இருந்து என்ன புண்ணியம்? அவர் பணியிடமாற்றம் செய்யப் படலாம் என்று கூறுவது, “இங்கு ஊழல் செய்யாதே. புகார் வராத இடத்திற்கு சென்று ஊழல் செய்” என்று கூறுவதைப் போல தான் இருக்கும். அதோடு, சஸ்பெண்டு முறை, திணிக்கப் பட்ட விடுமுறையாகத் தான் கருதப் படுகிறது. திரும்பவும் வந்து அதே தவறு தான் நடக்கப் போகிறது.

௧௦. பத்தாவது அம்சத்தில் குறிப்பிட்டுள்ளவர்களை விசாரிக்க மட்டும் தான் அதிகாரம் உண்டா? நடவடிக்கையில் தாமதம்; அதிகார பலத்தால், நடவடிக்கை நீர்த்துப் போதல், ஆகியவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் படும்?

இந்த கேள்விகள் எல்லாமே, ஒன்றை தான் புரியவைக்கின்றன.முன்பு, சட்டத்தில் தவறுதலாய் ஓட்டைகள் விழுந்தன. இப்போது, வேண்டும் என்றே ஓட்டைகள் உருவாக்கப் படுகின்றன. ஒன்று நிச்சயம். முதுகெலும்பில்லா தவளையாகப் போகிறது இந்திய ஜனநாயகம்.

Series Navigationவாளின்பயணம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2

One Comment for “லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை”


Leave a Comment

Archives