தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்

முனைவர் தி.இரா மீனா

Spread the love

ஆன்மீக நாட்டத்திற்கும் ,தேடலுக்கும் உரிய வழி முறைகளில் பக்தி பரவலாகவும்,எளிதாகவும் அமைகிறது. தத்துவ விவாதங்களில் சிக்காமல் கடும் பயிற்சிகளில் ஈடுபடாமல் பக்தி என்ற சாதனம் மூலம் இறையருளைப் பெற முடியும். படித்தவர்கள், ஞானம் உடைய வர்களால் மட்டுமே அணுக முடியும் என்பது இறைக் கொள்கையாக அமையும் போது இறைவன் பாமரர்களால் ,சாதாரண மனிதர்களால் அணுக முடியாதவனாகிறான்.ஞானிகளால் மட்டுமே அறியப் படுகிற வனாக அவன் இருப்பதில் பயனில்லை. சாதாரண மனிதன் கடவுளை அணுக முடிவது, அடைய முடிவது பக்தி மார்க்கத்தில் தான்.’ கடவுளின் மேல் நிலையாகக் காட்டப்படும் அன்பு’ என்ற விளக்க அடிப்படையில் அமையும் பக்தி வேதம் மற்றும் உபநிடதத்தில் விதையாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஆகமங்களில் ஓரளவு வளர் பெற்று, புராணங்களில் முழுமை பெறுகிறது.” ஊமை மனிதன் இனிப்பைச் சுவைத்து உணரும் அனுபவம் போன்றது பக்தி ” என நாரத பக்தி சூத்திரம் பக்திக்கு விளக்கம் தருகிறது. ஞானியான ஆதி சங்கரர் தன்னளவில் நின்று விடாமல் சாதாரண மனிதனுக் குள்ளும் பக்திப் பரவசம் குறிப்பிடத் தக்கது.வாழ்க்கை முடிந்த பிறகு கிடைக்கும் பேரின்பமாக இல்லாமல் தான் வாழும் காலத்திலேயே தன்னை உணர்ந்து மகிழ்வது பக்தியின் பயனாகும்.தன்னுணர்வு கல்வி மற்றும் பயிற்சியால் வருவதில்லை.. சாதாரண மனிதனிடமும் ஒழுங்கையும், தூய்மையையும் ஏற்படுத்த பக்தியால் மட்டும் முடியும்.. ஞானியின் பார்வையாக இல்லாமல் வேத காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வரும் கணபதியம்,சைவம் ,வைணவம், சாக்தம், கௌமாரம்,சௌரம் என்ற பெயர்களில் அமைகிற இச்ட தெய்வ மரபு வழிபாட்டை சங்கரர் ஆதரிக்கிறார். ஜீவ பரமாத்மா ஒன்றுபடும் அத்வைத தத்துவம் மாயை வசப்படும் அஞ்ஞானத்தைத் தடுக்கிறது.ஆனால் சாதாரண மனிதனிடம் இது சுலபமாக ஏற்பட்டு விடாது.. அதனால் தான் ஞானத்திலிருந்து விலகி ஆத்மா, கடவுள் என்ற நிலையில் அன்பும் ,அருளும் காட்டுகிற இஶ்ட தெய்வமாக கடவுள் அமையும் நம்பிக்கையை காட்டுகிறார்.அத்வைத தத்துவப்படி இருமையற்ற நிலை இருந்தாலும் சாதாரண மனிதனை பரவசப் படுத்தும் நோக்கத்தில் இருமை இருக்க வேண்டியதன் தேவையை அறிந்ததால் பக்தியை அவன் உணரும் வண்ணம் எளிதாக்குகிறார்.இந்த அணுகு முறை அன்றாட வாழ்வுக்குரியதாகிறது.இஶ்ட தெய்வங்கள் எனப்படும் கடவுளின் மீது கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி ஏற்படும் வகையில் இனிய எளிய தோத்திரப் பாடல்களை மிகப் பெரிய அளவில் ஆதிசங்கரர் உருவாக்கியது இந்த நோக்கில் தான். இவை வழிபாட்டு சிந்தனையை வளர்த்ததோடு மட்டுமில்லாமல் பக்தியின் அர்த்தத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. உலக வாழ்வு தொடர்பு உடைய மனிதன் மேம்பட பக்திதான் சிறந்த வழியாகும் என வேதங்கள் கூறுவதும் நினைக்கத் தக்கது.கடவுளை எல்லாவற்றிலும் பார்க்க பக்தி உணர்வு பழக்குவதோடு வலி வேதனை ஆசைகளில் இருந்து முதலில் தற்காலிகமாக விடுபட துணை செய்கிறது.கடவுளிடம் ஏற்படும் உண்மை அன்பு நாளடைவில் பக்தியை வளர்க்கிறது. மனித வாழ்வின் அடிப்படை நாதமான அன்பு பெரும் பாலான சிக்கல்களுக்கு மூலமாகிறது. செல்வம், பதவி, புகழ் என்ப வற்றின் மீது ஏற்படும் அளவற்ற அன்பு ’தன்னலப்பட்டு’ நிற்கிறது. ஏதாவது இழப்பின் போது அது சோகமாகிறது.இந்த அன்பு கடவுளின் மீது திசை திருப்பப் படும் போது அமைதியும், விவேகமும் ,பேரின்பமும் கிடைக்கிறது.கண்ணால் காண முடியும் பொருட்கள் தரும் மகிழ்வை தொடக்கத்தில் வழிபாடு தர முடியாது.எனினும் தொடர்ந்த வழிபாடு,பிரார்த்தனை மூலம் அதைச் சாத்தியமாக்க முடியும்.அதனால் தான் சாம வேதம் “அன்பான மனிதர்களே! மீண்டும் மீண்டும் கடவுளை வழிபடுங்கள் ” என்கிறது.தன்னைத் துன்பங்களில் இருந்து விடுவிக்கும் படி மனிதன் வேண்டும் போது அவன் கடவுளிடம் நெருக்கம் கொள்கிறான்.அது அவனுக்கு நிம்மதியையும்நம்பிக்கையும் தருகிறது.தொடரும் இச்சிந்தனை ஒரு சூழலில் ஆசையற்றவனாக்கி விடுகிறது.
கீர்த்தனம்,பாராயணம்,ஜபம், ஆலய தரிசனம்,சேவை உள்ளிட்ட பதினோரு வழிபாடுகளை பாகவதம் காட்டும் முறையை ஆதி சங்கரர் ஏற்றுக் கொண்டாலும் ’நாம ஜபம் ’ வழிபாட்டை மட்டும் சாதாரண மனிதனுக்கு உரியதாக்குகிறார்.பிற வேலைகளில் இருக்கும் போதும் மனிதனால் செய்ய முடியும் இவ்வழிபாடு சாதி, பால் வேறுபாடு இல்லாமல் ,யாரையும் பாதிக்காமல் ,எந்தச் சடங்கின் அடிப்படையிலும் அமையாமல் சிறப்புடையதாகிறது.இதை நடை முறைப் படுத்த விரும்பி தான் சௌ ந்தர்ய லஹரி,, கனகதாரா ,சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம் போன்ற தோத்திரப் பாடல்களை இயற்றியுள்ளார்.அம்பிகையை வணங்கி அருள் பெறுவது, பயம் போக்குபவனாகக் கடவுளைக் காண்பது என பாடல்களைத் தந்து பக்திப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.” அங்கோலா விதை அடிமரத்தைச் சுற்றி இருப்பது போல, காந்தம் இரும்பை ஈர்ப்பது போல,, கடலில் சேரும் நதியைப் போல இறைவனின் திருவடியை நோக்கி மனம் செல்வதுதான் பக்தி [சிவானந்த லஹரி .]என எவருக்கும் புரியும் வகையிலான உவமைகளைக் காட்டுகிறார்.ஞானிகள் நான்கு வகையான யோகங்களை அறிந்து வாழ்ந்தாலும் சாதரண மனிதனை உயரச் செய்வது பக்தி யோகம் எனக் காட்டிய பெருமை ஆதி சங்கரரை சேரும். வேதாந்தியாக ஞானத்தைப் போதிக்கும் அத்வைதக் கருத்துக்களை அவர் சொல்லி இருந்தாலும் எளிய மனிதர்களையும் தன் பாடல்களால் வயப்படுத்துகிறார்.எல்லாக் கால கட்டத்திற்கும் வழி காட்டுகிற ஆதி சங்கரரை’ லோக சங்கரா’ எனப் போற்றுவது பொருத்தமாக்கிறது.

முனைவர் தி.இரா மீனா

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்குசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43

4 Comments for “ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்”

 • dev says:

  ” அங்கோலா விதை அடிமரத்தைச் சுற்றி இருப்பது போல, காந்தம் இரும்பை ஈர்ப்பது போல,, கடலில் சேரும் நதியைப் போல இறைவனின் திருவடியை நோக்கி மனம் செல்வதுதான் பக்தி [சிவானந்த லஹரி .]

  அங்கோலம் நிஜ பீ³ஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா
  ஸாத்⁴வீ நைஜ விபு⁴ம் லதா க்ஷிதிருஹம் ஸிந்து⁴ஸ்ஸரித்³ வல்லப⁴ம் ।
  ப்ராப்நோதீஹ யதா² ததா² பசு’பதே​: பாதா³ரவிந்த³த்³வயம்
  சேதோ வ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே ।।

  அழிஞ்சிலின் விதைகள் அடிமரத்தோடு ஒட்டிக்கொள்வது போலவும், ஊசி காந்தத்தோடு ஒட்டிக்கொள்வது போலவும், ஆறு கடலோடு கலப்பது போலவும், குலமகள் கணவனைப் பிரியாதிருப்பது போலவும் ஈசன் எந்தை இணையடிகளோடு மனம் ஒன்றுவதே பக்தி என்று பகரப்படுகிறது.

  (அங்கோலம் – அழிஞ்சில்)

  தேவ்

 • பறையரசு says:

  சங்கரர் பாமரனுக்குப் பக்தி மார்க்கம் என்றார். அவன் அப்பக்தியைச் ‘சுவைக்க’ நூற்கள் இயற்றினார். எந்த மொழியில் இயற்றினார் ? சமசுகிருதத்தில். சௌந்தர்ய லஹரியையும,கனகதாராவையும் ,சிவானந்த லஹரியையும், பஜ கோவிந்ததத்தையும் சமசுகிருதத்தில் பாமரர்கள் படிக்கவியலுமா ? அது பேச்சுமொழியாக என்றுமே மக்களிடையும் இல்லையே ? பாமரர்கள் உணர்ச்சிப்பூர்வமாக புரியாமொழியில் தோத்திரப்பாடல்களைப் பாடி பக்திச் சுவையடைவார்களா ? முடியுமா ?

  இதைத்தெரியாமலா சங்கரர் இருந்திருப்பார் ? இவர் ஞானிகளுக்கும், அல்லது ஞானத்தைப்பயன்படுத்தி இறைவழிபாடு செய்வோருக்குத் தனியாக நூற்களையும், தத்துவத்தையும், பாமரனுக்குத் தனியாக தோத்திரப்பாடல்களும் எழுதி இறைவழிபாட்டையே ஏற்ற தாழ்வு அல்லது இவனுக்கு ஒருமாதிரி அவனுக்கு இன்னொரு மாதிரி என்ற பேதபாவம் பண்ணுகிறார். இல்லையா ? அதே வேளையில் கட்டுரையாசிரியர் சுட்டிக்காட்டியது போல பக்திமார்க்கமே சிறந்தது என்றால், ஞான மார்க்கம் சிறந்தது இல்லையென்றாகிறது. சிறந்தது பாமரனுக்கு, சிறபில்லாதது படித்தவருக்கு என்றுதானே ஆகிறது ? ரிவர்ஸ் டிஸ்கிரிமினேஷன் ! பக்திமார்க்கமே சிறந்தது என்றால், ஏன் அனைவருக்குமே அம்மார்க்கமே என்று இவர் சொல்லவில்லை ?

  சங்கரரின் அணுகுமுறையில் அடிப்படையிலேயே பேதபாவம் புரையோடிக்கிடக்கிறது !

 • விருட்சம் says:

  அங்கோலா மரம் சென்னையை அடுத்துள்ள பொன்னேரிக்கு பக்கத்தில் சின்னக்காவனம் என்னும் கிராமத்தில் நூற்றேட்டீஸ்வரர் கோவிலில் இருக்கிறது. மிகவும் பழமையான மரம். கோவிலும் தான்.

  திரு பறையரசு

  பக்தி மார்க்கம் உயர்ந்ததா ஞான மார்க்கம் உயர்ந்ததா ? எதுவானாலும் நமக்கு எந்த வழியில் போக முடிந்ததோ அதில் தானே போக முடியும்?

 • Balu says:

  மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி


Leave a Comment

Archives