13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)

This entry is part 3 of 12 in the series 10 ஜனவரி 2016

( 7 ) Copy of ushadeepan 1 002

டேவிட், டேவிட்…- மகனைக் கட்டிக்கொண்டு புலம்பினார் ராபர்ட் மைக்கேல். முழுசாகப் பையனைப் பார்த்தது அவருக்கு நிறைவைத் தந்தது.

எங்கே என் ஒரே பிள்ளையையும் இழந்திடுவேனோன்னு மலைச்சுப் போயிட்டேம்ப்பா… – சிறு குழந்தையாய் திக்கித்திக்கிப் பேசினார்.

என்ன டாடி இப்படி? – உங்களுக்கு ஏத்த பள்ளையாத்தானே சாமர்த்தியமா இந்த வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்? என்னைப் பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தா அழறீங்களே?

சரி, சரி…விடு. நீ மட்டும் எப்படி போலீஸ்லேயிருந்து தப்பிச்சே? அதை முதல்ல சொல்லு…

நடந்த்தை அப்படியே விவரித்தான் டேவிட்.

ஃபெண்டாஸ்டிக் ஐடியா டேவிட்…ரொம்ப புத்திசாலித்தனமா நடந்திட்டிருக்கே…போலீஸ் எந்த ரூட்ல செக் பண்ணும்னு தெரிஞ்சு வழியை மாத்திக்கிறது பெரிசில்லே…அவங்க அட்டென்ஷனை டைவர்ட் பண்ணி எதிர்பார்த்தபடியே ஏமாற்றமில்லாமே சரக்கையும் பிடிக்க வைச்சு அவங்க சந்தோஷப்பட்டிருக்கிற நேரத்துல வேறொரு திசையில் உன் காரியத்தை சாதிச்சிருக்கே பாரு அதைதான் பாராட்டியாகணும். அது சரி, உன் நண்பர்கள்?

என்ன டாடி இது? கொலைக்கும் கொடூரத்துக்கும் அஞ்சாத தொழில் இது. இதிலே பழம் தின்னு கொட்டை போட்ட நீங்களா இந்தக் கேள்வி கேக்கறீங்க… பத்துக் கோடில பாதி முக்கியமா, நண்பர்கள் முக்கியமா? சின்ன மீனைப் போட்டு பெரிய திமிங்கலத்தையே பிடிச்சிருக்கேன். ஒண்ணுமே தெரியாத மாதிரி ஏதோ உதவி பண்ணப் போறது போல பசங்களை வெளியே இட்டாந்து பத்திவிட்டா போச்சு…

அது எப்படி? எவனாவது உளறி வச்சான்னா?

சரக்கைக் காரிலே பதுக்கி வச்சது நான்தான்னு ஒருத்தனுக்கும் தெரியாதே?

சந்தேகம் வராமலா போகும்?

ஒரு பர்சன்ட் கூட வராது. ஏன்னா எத்தனையோ முறை அவங்க கஞ்சா அடிச்சிட்டிருந்தபோது வெறும் சிகரெட்டை ஊதிட்டிருந்தவன் நான். இதுவரைக்கும் ஒருமுறை கூட நம்ம எஸ்டேட் சரக்கை பகிர்ந்துக்கிட்டதில்லை அவனுகளோட தெரியுமா?

என்ன சொல்ற நீ?

ஆமா டாடி…நீங்க நினைக்கிற அளவுக்கு நான் இன்னும் கெட்டுப்போகலே…அப்படிக் கெட்டு சீரழிஞ்சிருந்தேன்னா…என் புத்தி இத்தனை கூர்மையா வேலை செய்யாது இந்நேரம். இதை உணருங்க…என் சாமர்த்தியத்தைப் புரிஞ்சிக்குங்க…என் திறமையைப் பாராட்டுங்க…மனசில்லையா விட்டிடுங்க…

என்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…

ரொம்ப அற்புதமாத்தான் செஞ்சிருக்கீங்க. எப்படிங்கிறதை நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

திடுக்கிட்டுத் திரும்பினர் இருவரும்.

( 8 )

ரொம்ப சாமர்த்தியமா, நயவஞ்சகமா நண்பர்களை ஏமாத்திய நீங்க ஒரு சின்ன விஷயத்துல தப்புப் பண்ணிட்டீங்க. அது அவசரத்துலே விளைஞ்ச தப்பு. கஞ்சா அடிக்கிறவன் முழுசா தப்பு பண்ணுவான். அதைத் தொடாதவன் இப்படி எங்கேயாவது கோட்டை விட்டுட்டு நிப்பான். நீங்க…? அந்த ரகம். ஏன் மிஸ்டர்…பார்சலைக் காரில மறைச்சு வக்கணும்னு தெரிஞ்ச உங்களுக்கு போயும் போயும் உங்க கை ரேகைகளை அழிக்கணும்னு கூடத் தெரியாமப் போச்சே? போலீஸ் டிபார்ட்மென்டுக்கே நிறைய கேசுகளைப் பிடிச்சுக் கொடுத்தது அதுதான்னு தெரியாதா?

இன்ஸ்பெக்டர், என்ன சொல்றீங்க…?

உங்க நண்பர்களை ஏமாத்தணும்ங்கிற அவசரத்துலே காரியத்தை சாமர்த்தியமா முடிக்கணும்ங்கிற துடிப்பிலே உங்களையே ஏமாத்திக்கிட்டீங்கன்னு சொல்றேன்…ரேகையை வச்சு என்ன செய்ய முடியும்னு கேட்கிறீங்களா? நியூ இயரின் போது ஓட்டல் பிருந்தாவன் பார்ல நடந்த கலாட்டா ஞாபகம் இருக்கில்லே…அப்போ பதிவு செய்த உங்க கை ஜாதகம் இப்போ எவ்வளவு உதவியா இருக்கு பாருங்க…?

டேவிட்டிற்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது. வெறும் கலாட்டாவோடு ஓடி வந்துவிட்டதாகவல்லவா இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன். தான் யாரென்றே அன்று காட்டிக் கொள்ளவில்லையே? பின் எப்படித் துருவினார்கள்? கோலத்துக்குள் நுழைந்தால், இவர்கள் தடுக்குக்குள் நுழைவார்கள் போலிருக்கிறதே?

அது சரி மிஸ்டர் ராபர்ட், தலையில்லாம வால் ஆடாதுன்னு சொல்வாங்க…எத்தனை நாளா இந்த பிசினஸ்…?

திடுக்கிட்டார் மைக்கேல்…

என்ன முழிக்கிறீங்க? கஞ்சா கடத்துறதைத்தான் சொல்றேன்…

இன்ஸ்பெக்டர், வாட் டு யூ மீன்…?

ஐ மீன், வாட் ஐ மீன்….ஏதோ சினிமா வசனம் மாதிரி இல்லே?

விளையாடாதீங்க….?

நாங்க விளையாட்டை நிறுத்தித்தான் பழக்கம்….நீட்டிப் பழக்கமில்லே…மத்த பன்னிரெண்டு பார்சல்ஸ் எங்கேன்னு சொல்றீங்களா?

இருவருக்கும் உடம்பெல்லாம் ஆட்டமெடுத்துப் போனது.

( 9 )

விழித்தார் மைக்கேல் ராபர்ட். தலைக்கு மேல் பூகம்பமே வெடித்தது போலிருந்தது அவருக்கு. தன் காரியங்களில் அவனையும் ஈடுபடுத்தி இப்படி மாட்டி விட்டுவிட்டோமே? வழக்கம் போல் தன்னுடைய ஆட்களை வைத்தே இதைச் செய்திருக்கலாமோ? தேவையில்லாமல் டேவிட்டைக் கூப்பிட்டு, அவனின் பேச்சை நம்பி, அவன் சாமர்த்தியத்தின் மேல் அசட்டு நம்பிக்கை வைத்து, ஒரு தேர்ந்த கடத்தல்காரன் செய்யும் வேலையா இது? தனது இத்தனை வருஷ சர்வீஸ், போயும், போயும் இப்படி விவஸ்தையில்லாமல் ஒரு சின்ன விஷயத்தில் மாட்டிக் கொண்டதே…? அது கிடக்கட்டும், ஒரு பார்சலை, அதுவும் ஒரு உதரியை மாதிரியாகக் கொண்டு மற்றதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? கரெக்டாகப் பன்னிரெண்டு என்கிறாரே…? அந்த ஒரு டஸன்தானே பத்துக் கோடி…? அஞ்சு கைக்குக் கிடைத்தாயிற்று என்று வீண் கனவு கண்டுவிட்டேனோ? தோண்டினால் கஜராஜூம் அல்லவா மாட்டிக் கொள்வார்…?

என்ன? நான் கேட்குறதுக்குப் பதிலையே காணோம்? இந்த உலகத்துலதான் இருக்கீங்களா? அதுக்குள்ளேயும் தடுமாறிட்டா எப்படி? அப்டீன்னா இந்தத் தொழில்லே உங்களுக்கு அனுபவமே பத்தலேன்னுல்ல அர்த்தம்? இதோ பாருங்க…13/13. ஏன் சார்…? ஒரு டஜன் பார்சல்களை ஞாபகத்துல வச்சிக்க முடியாதா? அதுக்கு நம்பர் வேறையா? ஏதோ லாரி ஆபீஸ் மாதிரி பட்டையத் தீட்டியிருக்கீங்க….ஒரு வேளை அத்தனையும் ஒரே சரக்கா? இல்ல வேறெ வேறையா? பதிமூணு பை பதிமூணுன்னு போட்டா, அதிலேயும் வெள்ளைத் துணியில் இன்னர் டிசைன், அதக்கூட என்னவோ சொல்வாங்களே…உறாங்…ஞாபகம் வந்திடுச்சி….வாட்டர் மார்க்…வாட்டர் மார்க்….பிரிண்டிங் கொடுத்தா கவனிக்க மாட்டமா? போலீஸ் கண்ணு பொட்டைன்னு நினைச்சிட்டீங்களோ? கண்ணுல வௌக்கெண்ணை ஊத்திட்டுப் பார்க்கிறதுன்னு சொல்வாங்களே….அதெல்லாம் உண்மையா என்னன்னு நினைச்சிட்டீங்களோ? அது கிடக்கட்டும், மீதிப் பன்னிரெண்டு பார்சலுக்கும் நம்பர் கொடுத்திருப்பீங்களே? 1/13 லேயிருந்து 13/13 வரைக்கும். தப்பு, தப்பு…13/13 இதோ இருக்கே….12/13வரைக்கும் உள்ள பார்சல்களை நான் பார்க்க வேண்டாமா? ஏன் இப்படி நம்பர் கொடுக்கிறீங்க…? ஒரே சரக்கா? இல்லை இன்னும் அதை வேற நாங்க கண்டுபிடிக்கணுமாக்கும்…போலீசுக்கு நல்லா வேலை கொடுக்கிறீங்க சார்…என்ன மிஸ்டர் டேவிட்…உங்க ஐடியாவா இது? புதுசானவங்க ஐடியா குடுத்தா இப்டித்தான் எங்கயாவது வழுக்கிக்கும்…

மிஸ்டர் மைக்கேல்…ஒண்ணு பார்த்தீங்களா? இந்தப் பதிமூணாம் தேதி பார்த்து ஏன் இந்த வேலையைச் செய்தீங்க? பதிமூணு எப்பவுமே பேட் நம்பர் தெரியுமா? அது வெள்ளைக்காரங்களுக்குத்தான் ராசி….பாருங்க, இன்னைக்குத் தேதி பதிமூணு, உங்க பாக்கிங் பதிமூணு, இந்தப் பார்சல் பிடிபட்ட கார் நம்பரும் பதிமூணு…ஒரு வேளை உங்களுக்கு ராசியான நம்பரோ? – சொல்லிவிட்டு சிரித்தார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.

 

—————————————-

(முற்றும்)

 

 

Series Navigationப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *