அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 19 in the series 2 அக்டோபர் 2016

lathapo

ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்)

தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்”
_ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை?
ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய்
சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன்
திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய்.
என்னை யேன் நான் நானாக நினைக்கிறேனா?
என்னை மறுத்து உன்னை வரிக்க உண்மையில்லையே உன்னிடம்.
குரலற்றவர்களின் குரலாக உன்னை நீயே நியமித்துக்கொள்வது உண்மையில் அவர்களை ஆளத்தானே!
உன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப வரலாறைத் திரித்தபடியே உன் கையும் வாயும்…
போயும் போயும் பொய்தானா கிடைத்தது உன் பையை நிரப்ப?
என்னவொரு வன்மத்தோடு வார்த்தைகளை உமிழ்கிறாய்
என்னைப் புதைசேற்றில் என்றென்றைக்குமாய் அமிழ்த்திவிட எத்தனையெத்தனை உத்திகளைக் கையாள்கிறாய்.
உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்
எல்லோரையும் உள்ளபடியே நல்லவிதமாய்த்தான் நடத்துகிறாயா நீ?
என்றைக்கும் உன்னைப்போலவேதான் நடத்துகிறாயா? உன்னைக்கூட?
தனியொருவனுக்குணவில்லையெனில் என்னைக் காரணமாக்கிக் காறியுமிழ்ந்து காரிலேறிப்போய்
ஐந்துநட்சத்திரங்களைத் தொட்டுவிடும் சிற்றுண்டிசாலையில்
நீ பசியாறுவது சிதம்பர ரகசியமல்லவா?
குற்றவுணர்வுக்கு என்னை மட்டுமே குத்தகைக்காரராக்கிவிட்டு
கவலையற்ற களிப்பில் அத்தனை அதிகாரபீடங்களிலும் அமர்ந்தபடி
உன்னை நியே ஆடியில் அழகுபார்த்துக்கொள்கிறாய்.
கேட்பவர் மனங்களில் சமூகத்தின் ஒரு சாரார் மீது
வெறுப்பையும் வன்மத்தையும்
கட்டுக்கட்டாய்ப் பஞ்சுபொதியெனத் திணித்து
தீக்குச்சி சொற்கள் சிலவற்றை அவற்றின் மீது விட்டெறிந்துவிட்டு
உன்னை நீயே தட்டிக்கொடுத்துக்கொள்கிறாய்.
ஒருநாள் குபையையே வீட்டில் வைக்க விரும்பாதவர்கள் நாம்.
ஒராயிரமாண்டுகால குப்பையை வைத்திருக்கிறோமென்றால்
அதற்கு ஒரே காரணம் தான் இருக்கமுடியும்:
குப்பையைக் காசாக்கும் வித்தை பழகிவிட்டோம்
_ நாம் எல்லோரும்.
_ நாம் எல்லோருமே.

 

 

 

டவுள் மறுப்பாளனாக இருந்தாலும்கூட
சபையில் நான் துகிலுரியப்படுவது என் முன்வினைப்பயன் என்று
நியாயங்கற்பிக்கக்கூடும் நீ.
எனக்கு இழைக்கப்படும் அநியாயத்திற்கு நான் தான் நியாயங்கேட்டாகவேண்டும்.
அன்று வந்ததும் இன்று வந்ததும் அதே நிலாதான் என்றாலும்
முன்னம் பார்த்த கண்களா இன்னமும் பார்க்கின்றன?
அப்படித்தான் என்று நீ க்வாண்ட்டம் தியரியைத் துணைக்கழைத்தால்
அஃறிணை உயர்திணையை அகராதியிலிருந்து அகற்றிடவேண்டிவரும்.
அதி காரமாய் உன் கருத்தை அடிக்கோடிடுவதே அதிகாரம்தான்
அதிகாரம் உண்டு செய்யுளுக்கும்.
திகாரின் தமிழாக்கமாயிருக்கலாம் திகாரம்.
காதி, ரதி, ரம் இன்னும் என்னென்ன விதங்களிலெல்லாமோ
என்னை மட்டும் குற்றவாளியாக்கியபடியே
நீ அதிகாரத்தின் அத்தனை ருசிகளையும் சுவைத்த வண்ணம்.
அவைக்கு அவை கிடைக்கும் ஆரவாரக் கைத்தட்டலில்
அதிகதிகமாய்க் கிறங்கியவாறு
என் மனசாட்சியை உறுத்தச் செய்து
உன் மனசாட்சியை அறுத்தெறிந்து
உன்னை நிரபராதியாக்கும் ‘alibi’களை எத்தனை கவனத்தோடு நீ திரட்டிக்கொண்டாலும்
நாம் கூட்டுக்களவாணிகள்தான் என்று சாட்சி சொல்லும்
சரித்திரம்.

 

டையறாத ‘மியூஸிக்கல் சேர்’ ஓட்டம்
அங்கிங்கெனாதப்டி நடந்துகொண்டிருக்கிறது எங்கேயும்….
பெரிய வெளி வட்டமாய் சில நாற்காலிகள்;
சிறிய உள்வட்டமாய் சில நாற்காலிகள்…
சிம்மாசனம் போல் இருக்கையொன்று மையத்தில்.
முதல்கட்ட வட்ட நாற்காலிகளில் இடம்பிடித்துவிட
முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசபீடத்தை எட்டிப்பிடித்துவிடும் வேகத்தில்
ஆட்டவிதிகள் ஆட்டங்காண,
போட்டியாளர்கள் சிலர் சிலரால் காலிடறப்பட்டு
கட்டாந்தரையில் குப்புற விழ,
அவர்கள் மீது மிதித்துக்கொண்டேறித்
தங்கள் ஓட்டத்தைத் தொடர்கிறார்கள் மற்றவர்கள்.
வாழ்க்கையே ஒரு ஓட்டந்தான் என்று வறட்டுத்தத்துவம் உதிர்த்தபடி
வேண்டாவெறுப்பாய் ஓடுவதான் அபாவனையில்
விரைகிறார்கள் உள்வட்ட இருக்கைகளை நோக்கி _
தம் கால்களில் ஆயிரம் வல்லூறுகளின் ஒருங்கிணைந்த இறக்கைவிசையும் இரைவேட்கையுமாய்.
இந்த வட்டப்பாதை ஓட்டம் நீளப்போக்கில் இருப்பின்
வசமாகக்கூடும் வானம் என்பதோர் அனுமானம்
எங்கோ வனாந்திரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடும்.
வெளிவட்டந்தாண்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போர்களில் சிலர்
விரட்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள் அடுத்திருப்பவரை.
வேறு சிலர் விதவிதமாய்க் கைதட்டப் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறார்கள் _ விலையில்லாமலும் கட்டணத்திற்கும்.
வெட்டுகாய்களை வெட்டி முடித்து
உள்வட்ட இருக்கைகளை நெருங்க நெருங்க
உள்ளத்துக் கள்ளமும் கயமையும் கூடிக்கொண்டேபோய்
சதுரங்கக்கட்டங்களில் Check&Mate ஆகி நிற்கிறது காலம்.
ஆறேழு கொலைகளை முடித்துஅரியணையேறியவரும்,
அடுத்தடுத்த இடம்பிடித்து அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டவரும்
அங்கேயோர் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
குழந்தையின் உயிரணுவில் அதிகாரம் கலந்திருப்பதாய்ச் சொல்லி
அதைக் கழுமேடைக்கு உடனடியாக அனுப்பிவைத்தபின்
தங்களுடையதேயான குற்றவுணர்விலிருந்தும் பொறுப்பேற்பிலிருந்தும் சுலபமாய் வெளியேறி சுற்றுக்கு விடுகிறார்கள்
கொடுங்கோலாட்சியதிகாரக் கட்டளைகளின் பட்டியலை.

 

Series Navigationதாழ் உயரங்களின் சிறகுகள்சுயம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *