தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஆகஸ்ட் 2019

ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..

தாரமங்கலம் வளவன்

Spread the love

 

மும்பை கபே பரேடில் பதினைந்து மாடி கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில் கார்த்தி ஜிஎம். சிறு வயதிலேயே கார்த்தி ஜிஎம் ஆகி விட்டான்..

காரணம் ஐஐஎம் டிகிரி தான்.

கார்த்தி அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அப்பா தாமோதரன் கார்த்தியின் அம்மா இறந்த பிறகு மகனைத் தவிர வேறு நினைவு இல்லாமல் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

வாரம் ஒரு முறை, அதாவது ஞாயிற்றுக் கிழமையில் கார்த்தியிடமிருந்து போன் வரும், மகனின் குரலைக் கேட்கலாம் என்று காத்துக் கொண்டு இருப்பவர்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் என்று திங்கட் கிழமையிலிருந்து ஏங்க ஆரம்பித்து விட்டார்.

சனி இரவு பதினொன்று, பனிரெண்டு என்று காத்து இருந்துவிட்டு ஏமாற்றத்துடன் தூங்கப் போனார். ஆனால் தூக்கம் வரவில்லை. எப்போது தூக்கம் வந்தது என்று சொல்ல முடியாது. காலையில் உடம்பு அசதியாக இருந்த போது தான் தெரிந்தது, இரவு தூக்கம் வராதது.

ஞாயிறு பகல் முழுவதும் காத்து இருந்தார். போன் ஏதும் வரவில்லை. ஞாயிறு இரவும் காத்து இருந்தார். சரி திங்கட் கிழமை காலை அலுவலகம் போகும் முன், அப்பாவுக்கு போன் செய்யாதது ஞாபகம் வந்து போன் செய்வான் என்று காத்து இருந்தார்.  பத்து மணியும் ஆகி விட்டது. போன் வரவில்லை. இனிமேலும் பொறுக்க முடியாது, அவனுடைய குரலைக் கேட்காமல் இருக்க முடியாது என்று தோன்ற, செல் போனை எடுத்தார். கார்த்தியின் நம்பரையும் கண்டு பிடித்து விட்டார்.

நம்பரை அழுத்தியும் விட்டார்.

நம்பரை அழுத்திய பிறகு தான் மனதில் தோன்றியது.

நான் வளர்த்த பையன்.. ஐஐஎம்மில் படிக்க வைத்தது நான் தான். எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். வாரம் ஒரு முறை ஞாயிற்று கிழமையாவது போன் செய்ய வேண்டும் என்று. ஏன் அவன் போன் செய்ய மாட்டேன் என்கிறான். அப்படி என்ன மறதி. அப்படி என்ன வேலைப் பளு. வேண்டும் என்றே உதாசீனப் படுத்துகிறானா..

நான் பணிந்து போய் அவனிடம் பேச வேண்டுமா.. அது கௌரவக் குறைவா..

ஐயோ ரிங் அடிக்கிறதே.. எப்படி ஆரம்பிப்பது.. ஏன் போன் செய்யவில்லை என்று மகனைக் கண்டிப்பதா.. இல்லை சாதாரணமாக நலம் விசாரிப்பது போல பேசி அவனுடைய குரலைக் கேட்டு சந்தோசப் படலாமா..

தன்னை உதாசீனப் படுத்தும் அவனிடம் நான் ஏன் முதலில் போன் போட்டதாக காண்பிக்க வேண்டும்..

அதே சமயத்தில் மறுமுனையில் இருந்து கார்த்தி “ ஹலோ..” என்றான்.

அப்போது அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.

உடனே பேச்சை மாற்றி,

“ கார்த்தி.. நீ போன் செஞ்சியா.. உன்னோட மிஸ்டு கால் பாத்தேன்.. அது தான் நான் போன் போட்டேன்..” என்றார், தன் கௌரவத்திற்கு பங்கம் எதுவும் இல்லாமல்.

‘ இல்லியே….’ என்று சொல்ல கார்த்திக்கு வாய் வர, மின்னலென ஒரு விஷயமும் ஞாபகம் வந்தது அவனுக்கு.. சனி ஞாயிறு முழுவதும் போர்டு மீட்டிங்குக்கு தயார் செய்து கொண்டிருந்த டென்ஷனில், அப்பாவுக்கு ஞாயிற்றுக் கிழமை போன் செய்ய மறந்து போனது.

தன்னை கண்டிக்கவும் மனம் இல்லாமல், தானே இறங்கி வந்து போன் செய்தது போல் காண்பிக்கவும் மனம் இல்லாமல்,  இப்படி ‘மிஸ்டு கால் பார்த்தேன்’ என்று சொல்லி அப்பா ஆரம்பிக்கிறார் என்று புரிய, அவனும் சாதுர்யமாக,

“ ஆமாம்பா.. நான் தான் போன் பண்ணி இருந்தேன்.. நீங்க குளிக்க போயிருந்திருப்பீங்க போல இருக்கு..” என்றான்.

——————————————————————————————–

Series Navigationகடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்கவிதைகள்

One Comment for “ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..”

  • meenal says:

    இப்படித்தான் பலரும் ர்மபோன் பண்ணாமலே மிஸ்டுகால் விட்டேன்ன்னு புருடா விடுறாங்க


Leave a Comment

Archives