மஞ்சுளா.
ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான மனநிலை சில நேரங்களில் அந்த தொகுப்பின் தலைப்பாகக்கூட இருக்கலாம். கிழக்கிலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” அத்தகையதொரு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்ற புலம் இலக்கிய அமைப்பில் நண்பர்களிடையே ஏற்பட்ட சந்திப்பில் இத்தொகுப்பினைக் காண நேர்ந்தது. ஜே.பிரோஸ்கானின் ஏழாவது பிரசவம் இது என்றாலும்கூட இத்தொகுப்பு என் வாசிப்பில் அவருக்கான முதல் பிரசவத்தின் அனுபவங்களைச் சுமப்பதாகவே தெரிகிறது.
வாழ்க்கை எப்போதும் விசித்திரமான அனுபவங்களைக் கொண்டது. அந்த விசித்திரங்களை மனதில் ஏந்திக் காத்திருப்பவன் அதன் எல்லா அனுபவங்களிலும் தன்னை ஒப்புக் கொடுத்த பின்னர்தான் அல்லது அந்த அனுபவங்களில் தன்னை இழந்த பின்தான் தன்னை முழுதாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். ஜே.பிரோஸ்கானின் வாழ்க்கை அனுபவங்கள் அவருக்கு முன் ஒரு வெள்ளைக் காகிதத்தை விரித்து வைத்து விட்டது. அதில் அவர் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் அவரைப் போலவே தனிமையுணர்வில் தத்தளிக்கின்றன.
தனித்துவம் பேசும் தனிமை – தொகுப்பின் இக்கவிதையை வாசித்த பின் தனிமைக்கான அடையாளத்தை அவர் மனம் உருவகப்படுத்தும் விதம் அலாதியான ஆவலாக வெளிப்படுகிறது. கவிதை தரும் போதத்தில் மனமற்ற நிலையில் பிரவேசிக்கிறது. பிரதிக்குள் பிரதியாக அல்லது பிம்பத்திற்குள் பிம்பமாக நின்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டேயிருக்கும் ஒரு விநோதம் நிகழ்கிறது. பிரவ்னையும், நம்ருத்தையும் பற்றி ஃ பேசும் அவன் ஃ நேற்று மாலையிலிருந்து ஃ அவர்களாகவே பேசப்படுகிறான் ஃ எனது உள்ளத்திற்குள்.
இவ்விடத்தில் கவிஞனுக்கான பின்னணியை அறிய முடியாத நாம் கவிதையின் பின்னணியில் கை கோர்த்து திரும்புகிறோம்.
மலட்டுக் கவிதை
கழிப்பறையில் இருக்கும் நேரங்களில்
என் தலைக்கு மேலாக
முளைத்து விடுகின்றன கவிதைகள்,
மரங்களென,
முளைத்த மரங்கள்
பூப்பதுமில்லை
காய்ப்பதுமில்லை
கனிவதுமில்லை
வாசிப்பின் போது என் பார்வையில் இதற்கான விருட்சம் இல்லை. ஆனால் விதையிருக்கிறது. அந்த விதை மலடாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! அதனாலென்ன! உலகம் அந்த விதையை தேடித் தேடி அலுத்துப் போகட்டும். அல்லது அதைத் தோண்டி எடுத்து வெளியே வீசி எறியட்டும். எப்போதும் முளைக்காத அந்த விதையை சுமந்து சுமந்து அலுத்துப் போகும் இந்த மண்ணுக்கும் இந்தக் கவிதை சாட்சியாகட்டும். கவிதையை விட்டு நாம் நகர்ந்துவிடலாம். சாட்சியை விடுவது அவ்வளவு எளிதானதல்ல.
கவிதைகள் எப்போதாவது தனக்குள் ஒரு கதை சொல்லியை வைத்துக் கொண்டு விளையாடுவது என்பதும் நிகழக்கூடியதுதான். ‘ஆலமரத்துப் பேயும் அம்மம்மாவும்” கவிஞனுக்குள் நிகழ்த்தும் கதையில் மரத்தில் காய்த்திருக்கும் பேய்கள் அவனுக்குள் பயத்தை கிளப்ப வேண்டும் என்பதற்கான அம்மம்மா சொல்லிப் போகும் விஷயங்கள் நமது சிறு வயது பயங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது. அம்மம்மாவை மறக்காதவன் ஆலமரத்துப் பேயையும் மறக்க மாட்டான். கவிதை எப்போதும் ஞாபகங்களை நிகழ்த்தக் கூடியதுதான் என்றாலும் வலிமையான ஞாபகம் மட்டுமே இப்படியான ஒரு கவிதையை இப்போது ஜே.பிரோஸ்கானுக்குள் கதை சொல்லியாக நிகழ்த்தியிருக்க வேண்டும்.
அக்காளின் திருமணத்திற்கும்
இளைய தங்கையின் பட்டப்படிப்புக்கும்
மூத்த அண்ணனின் ஆப்ரேஷனுக்கும்
கட்டாரிலிருக்கும் அப்பா பணமாக தான்
வந்தார்.
இன்று அம்மாவின் சாவுக்கும்.
பணம் என்பது எப்போதும் பணமாக மட்டும் இருப்பதில்லை. அது சகலமுமாக சலாம் போட்டு மனிதனிடம் வந்து சேரும் போது மனிதன் மனிதனாக இருப்பதும், இல்லாததுமான அவசியத்தை உணர்த்துகிறது. பணம் அப்பாவாகத் திரும்பும் ஒரு கவிதையில் ஜே.பிரோஸ்கான் தனது வாழ்வுக்கு அருகிலேயே தனது கவிதையையும் வைத்திருக்கிறார். இது ஏதோ தற்செயலாக நிகழ்ந்துவிட்டதல்ல.
வெயில் ஒழுகும் பெருநகரத்தை வனமாகப் பார்த்தவன், இன்னுமொரு கவிதையில் தன்மகன் வரைந்த மரத்திலிருந்து ஒரு வனமாக வளரும் அவனது கனவுகளில் அவன் பார்த்தழிந்த நிஜங்கள் ஒரு அழகியலை நிகழ்த்துகின்றன. யதார்த்தத்தில் தொலைத்த எல்லாவற்றையும் அவன் கனவுகளில் பத்திரப் படுத்துகிறான். கனவுகள் என்பது எப்போதும் கனவுகள் மட்டும் தானா? அவன் அழைத்துச் செல்லும் உலகங்களுக்குள் நாமும் பத்திரமாகப் போய்விடலாம். திரும்புவது எளிதல்ல.
தொகுப்பு முழுக்க அவன் கண்களுக்குள் ஓடும் கனவுகள் தீரா நதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. மனம் என்பது பிரபஞ்சம் போல் விரியக் கூடியது. வெறும் வரிகளால் தன்னை விரிப்பவனல்ல இவன். தூங்கும் போதும் தனது நிலத்தை உற்று நோக்கும் இவனது கண்களில் மீன்கள் செத்தவண்ணம் உள்ளன.
இன்னும் அதிகமாக சொல்வதென்றால், அதிகார வலையில் பிடிபட்ட உயிருள்ளவைகள் அனைத்தும் விழுங்கப்படுவதும், செரிக்கப்படுவதுமாகவே இந்த பூமியில் நிகழ்ந்து வருகின்றன. நாமும் அமைதியாக பார்த்துக்கொண்டே இருக்கிறோம் செத்த மீன்களின் கண்களைப் போலவே.
ஆசிரியர் : ஜே.பிரோஸ்கான்
வெளியீடு : பேனா பப்ளிகேஷன், 92ஃ4, உமர் ரழி வீதி, மஹ்ரூப் நகர்,
கிண்ணியா, இலங்கை, பக்கங்கள் 64, விலை 230ஃ-.
ஆழடி : 94 779300397.
- இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு
- எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது
- ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்
- ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :
- குழந்தைகளும் கவிஞர்களும்
- நுரைகள்