வளவதுரையன்
கடைதிறப்பு
கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம் அவர்களின் வாயிலில் நின்று வாசல் கதவு திறக்கப் பாடுவதே கடைதிறப்பு பகுதியாகும்.
இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் அந்தக் காலத்தில் இரண்டாம் இராசராச சோழனின் தலைநகராக விளங்கியது. அந்நகரத்தில் தேவமாதர்களும் கடவுளர்களும் வாழ்ந்ததாக ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
தார்மார்பும் முகவிம்பமும் நுமகாதலர் தரநீர்
சேர்தாமரை இறையாள் அடிபணிவீர் கடைதிறமின். [10]
[தார்=மாலை; விம்பம்=இடம்]
இப்பாடலில் திருமகளும் கலைமகளும் வாயில் திறக்க அழைக்கப்படுகிறார்கள்.
”மாலையணிந்த திருமால் தன் மார்பினையும், பிரமன் தன் நாவினயும், தங்குமிடமாக உம் கணவரால் தரப் பெற்றவர்களே! உங்கள் தாமரை மலர்களை உமையன்னையின் பாதங்களில் தூவித் துதிக்கின்றவர்களே! உங்கள் வாயில் கதவுகளைத் திறவுங்கள்.
====
கைவைக்கவும் அடிதோயவும் உடன்நின்று கவிக்கும்
தெய்வக்கொடி திசைதைவர நிற்பீர்! கடைதிறமின். [11] [அடி=கால்; தோய்தல்=படுதல்; கவிக்கும்=தழைக்கும்; தெய்வக்கொடி=தேவர் உலகத்தில் உள்ள கற்பகவல்லிக் கொடி; தைவர=தடவ;
கைகளால் பிடித்து இழுத்தாலும், கால்களால் மிதித்தாலும் தளராமல் திசையெங்கும் துளிர்விட்டுத் தாவிப்படரும் கற்பகக்கொடி உள்ள தேவர் உலகில் வாழும் பெண்களே! வாயிலைத் திறவுங்கள்.
=======
வெல்லும் பொருளதிகாரம் அலங்காரம் விளங்கச்
சொல்லும் பொருள்பகரும் குழல்மடவீர்! கடைதிறமின். [12]
[வெல்லும்=வெற்றிகொள்ளும்; பகரும்=சொல்லும்; குழல்=கூந்தல்]
பொருளதிகாரத்திலும், அணி அலங்கார அதிகாரத்திலும் விளக்கிச் சொல்லப்படுகிற அழகுக் குறிப்புகளுக்குப் பொருளாக விளங்கக் கூடிய கூந்தலை உடைய பெண்களே! வாயிலைத் திறவுங்கள்.
=======
உருகும் சுரர்உயிர் உண்டன உணர்வுண்டன ஒழுகத்
திருகும்குழல் அரமங்கையர் திறமின் கடைதிறமின். [13]
[சுரர்=தேவர்கள்]
தேவர்கள் எல்லாரும் உங்கள் அழகில் மயங்கித் தம் உயிரையும் உணர்வையும் இழந்தனர். அத்தகைய அழகுமிக்கக் கூந்தலுடைய தேவமாதர்களே! கதவைத் திறவுங்கள்.
======
வேல்போல் நிறைபொருதுண்பது மெய்யே உயிர்பொய்யே
சேல்போல் கடைபிறழும் சிலகண்ணீர் கடைதிறமின். [14]
[சேல்=மீன்; நிறை=தன்மை]
மீன்களைப் போல கடைவிழிப் பார்வை கொண்ட பெண்களே! உங்கள் கண்கள் மீன்கள் என்பது பொய்யே! அவை சேல்கள் அல்ல. வேல்கள்; காண்பவரின் உள் சென்று தைத்து உயிரையும் கொன்றுவிடும் என்பதுதான் மெய்யே! அப்படிப்பட்ட கண்களை உடையவர்களே! கதவைத் திறவுங்கள்.
======
வெங்கோல்வர நீர்பெற்ற தலைக்கோல் வரவிறல்வேள்
செங்கோல்வர வருவீர் உயர்செம்பொற் கடைதிறமின். [15]
[தலைக்கோல் என்பது நடனமாதர் பெற்ற பட்டமாகும். சிலம்பில் மாதவி பெற்றாள் என இளங்கோ காட்டுவது இங்கு எண்ணத்தக்கது. விறள்=வலிமை; வேள்=மன்மதன்]
பெண்களே! நடனத்தில் நீங்கள் பெற்ற தலைக்கோலைக் காமன் கைச்செங்கோலாகக் கொண்டு காண்பவர்களை அழகால் வருத்துபவர்களே! செம்பொன்னாலான உங்கள் வாசல் கதவைத் திறவுங்கள்.
=====
மூவராய் அவரின் முதல்வராய் அதிதி
புதல்வ ராய முப்பத்து முத்
தேவர்ஆய் அவர்தம் ராசராச புரி
வீதிமாதர் கடை திறமினோ. [16]
[அதிதி என்பவர் முப்பத்து முக்கோடி தேவர்களைப் பெற்றவர். அவர் காசியப முனிவரின் மனைவி; ராசராசபுரி=இராசமாபுரம்; இன்றைய தாராசுரம்]
சிவபெருமான், திருமால், பிரமன் என்னும் மூவரிலும் முதல்வராக விளங்குபவராகவும். அதிதி பெற்றெடுத்த முப்பத்து முக்கோடி தேவர்களின் தலவராகவும் விளங்குகின்ற சிவபெருமானின் இராசமாபுர வீதிகளில் வாழும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
====
உம்பர்ஆளும் அமராபுரம் தவிர
லோகபாலர் எயில்காவல் கூர்
செம்பொன் மாடநிரை ராசராச புரி
வீதிமாதர் கடை திறமினோ. [17]
உம்பர்=தேவர்; அமராபுரம் தேவர்களின் தலைநகரம்; லோகபாலர்=மன்னர்; எயில்=கோட்டை;நிர=வரிசை]
தேவர்கள் வாழ்ந்து ஆட்சி செய்யும் அமராவதியை விட்டு இங்கு மண்ணுலகிற்கு வந்து வலிமையான அரசரால் காவல் செய்யப்படுகின்ற வரிசையாக உள்ள பொன்மதில் மாடங்கள் நிறைந்த இராசமாபுர வீதிகளில் வாழும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
====
யாவரும் பரவும் இந்திரரும் பழைய
சந்திர சூரியரும் எண்திசைத்
தேவரும் புகுதும் ராசராசபுரி
வீதிமாதர் கடைதிறமினோ. [18]
[தேவர்=திசைக்காவலர்; புகுதும்=வந்திருக்கும்]
எல்லோரும் போற்றிப் பணிகின்ற இந்திரர்கள், சந்திர சூரியர்கள், அட்டதிக்குப் பாலர்கள் என அனைவரும் வந்து தங்கி வாழும் இராசமாபுர வீதிகளில் வாழும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
==========
பாடியும் பணிந்தும் பரவியும்
பண்டைநுங்கள் வடிசேடிதென்
சேடியும் தவிர ராசராசபுரி
புகுதும் மாதர் கடைதிறமினோ. [19]
[பரவுதல்=துதித்தல்; பண்டை=பழைய; சேடி=வித்தியாதரர் உலகம்]
பெருமையைப் புகழ்ந்து பாடியும், வணங்கியும், வேண்டித் துதித்தும், இருக்கும், வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிடக்கும் பழைய வித்தியாதரர் உலகம் நீங்கி இங்கு இராசமாபுரத்தில் வந்து வாழும் வித்தியாதரப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
======
யாவர் தேவர்இவர்தாம் எனப்பெரிய
இருவர்தேவர் இவர் எளிவரும்
தேவ தேவர்தம் இராசராச புரி
வீதிமாதர் கடைதிறமினோ. [20]
[எளிவரும்=எளிமையான தன்மை கொண்ட]
தேவர்கள் யார் எனக் கேட்பவர்க்கு, இவர்கள்தாம் தேவர்கள் எனக் காட்டிக் கூறும் பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும், எளிமையாக வந்து வாழ்கின்ற தேவர்க்கெல்லாம் தலைவராகிய சிவபெருமானின் இராசமாபுரத்து வீதிகளில் வாழும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
- தட்டும் கை தட்டத் தட்ட….
- கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்
- கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- சொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- சமகாலங்கள்
- ஒரு கதை கவிதையாக
- “வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.
- குட்டி ரேவதி – ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பை முன்வைத்து …
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
- கனவுகளை விற்பவன்
- இருப்பும் இன்மையும்
- “சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….