ஒரு துளி காற்று

author
2
0 minutes, 38 seconds Read
This entry is part 3 of 12 in the series 27 டிசம்பர் 2020

எல்.ரகோத்தமன்

அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும்.  ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் அவருக்கு ஸ்லாக்யம்.  ஓடிஓடி சம்பாதித்தார். அந்த சம்பாத்யத்தில் சென்னையில் ஒரு வீடு. தங்கையின் திருமணம். அம்மாவுக்கு கேட்டதெல்லாம். ஆனால் அதில் பத்து சதவிகிதம் உடலைப் பேணியிருத்தால் இந்த ஐசியு தேவையில்லாமல் போயிருக்கும். இன்று  ஐசியுவில் துளிக் காற்றுடன் போராடிக் கொண்டிருக்கிறார் அப்பா.  எல்லாம் விதி.

திருநெல்வேலி பக்கத்தில் மனப்படை கிராமம் . அதுதான் அவர் ஊர்.  அக்கிராமத்தைப் பற்றி அம்மா நிறைய சொல்லியிருக்கிறாள். பூர்வீக வீடு, நிலபுலத்துடன் ஓஹோ குடும்பம். ஓஹோ வாழ்க்கை. ஆனால் இன்று எதுவும் இல்லை. தாத்தா தன் காலத்திலேயே அவர் உறவுகளின் குடும்ப தகராறில்,  சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்,  என்று ஒதுங்கிக் கொண்டவர் என்று அம்மா கதைகதையாய் நிறையச் சொல்லியிருக்கிறாள். ஆனால் தாத்தாவின் செயலில் அப்பாவிற்கு உடன்பாடில்லை. சண்டை போட்டு பாதி சொத்தையாவது  வாங்கியிருக்க வேண்டும் என்பது அப்பாவின் துணிபு. அதற்காக ஒரு முறை, இன்றும் வடிகட்டிய கிராமமாகவே இருக்கும் அந்த கிராமத்தைத் தேடிப் பிடித்துச் சென்று, இப்போதைய உடமையாளர்களைக் கோர்ட்டுக்கு இழுக்க முடியுமா என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட சாத்தியமில்லை என்பதே உண்மை. இன்னும் பச்சையாகச் சொன்னால் அந்த ஆள்முழுங்கி கூட்டத்திடம் அப்பாவின் பருப்பு வேகவில்லை. ஏனெனில், அவ்வளவு பெரிய சொத்தை ஏராளமான பேர் கூறுபோட்டு சொந்தமாக்கிக் கொண்டிருந்தனர். 

ஏனோ இந்த பழங்கதையெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. எல்லாம் ஆசை தான். அவ்வளவு பெரிய சொத்து.. இருந்திருந்தால் இன்று கோடீஸ்வரனாக இருந்திருக்கலாம். இப்படி ஆஸ்பத்திரி பில் எவ்வளவு வரும் என்ற பயத்துடன்  இருக்கவேண்டிய தேவை  இல்லாமல் போயிருக்கும். அப்படி இப்படி பத்து நாட்கள்  ஓடிவிட்டது. ஆஸ்பத்திரியே கதி என்றாகிவிட்டது. கரையும்  கரன்சிக்கு அளவில்லை.  என்ன தான் காப்பீடு இருந்தாலும் அதில் அடங்காத செலவுகள் தொட்டுத் தொட்டு ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருக்கிறது தினம் தினம். அதைச் சமாளிக்க  ஒரு வங்கியில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். இன்னும் முடிவு தெரியவில்லை. கடன் கிடைக்குமா கிடைக்காதா? உள்ளூர ஒரு உதறல் இருந்து கொண்டே இருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் கிடைத்துவிட்டால் நிம்மதி. 

விசிட்டர் லவுஞ்சில் ஏதேதோ சிந்தனை ஓட்டத்தில் அமர்ந்திருந்திருக்கையில், “சார்.. உங்கள டாக்டர் கூப்பிடராரு..” என்று பழக்கமான அந்த நர்ஸ் சொல்லிவிட்டுப் போனாள். நினைவுகளைக் கலைத்துக்கொண்டு  வேகவேகமாக டாக்டரின் அறைநோக்கிச் சென்றேன். அறையில் டாக்டர் அமைதியாக அமர்ந்திருந்தார். உடன்  இரு உதவி டாக்டர்களும் இருந்தனர். நானும் அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். டாக்டர் அப்பாவின் உடல்நிலை குறித்து நிறைய விளக்கினார். அவருக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் சொன்னார். கடைசியில் “ப்ராக்ரஸ்  இஸ் வெரி ஸ்லோ. பட் ஸிம்டம்ஸ் ஃபார் ரெக்கவரி இஸ் ஹோப்ஃபுல்… ரெஸ்ட் இஸ் வித் காட்“  என்று முடித்தார். டாக்டர்களின் மழுப்பலான நம்பிக்கைச் சொற்களை வாங்கிக்கொண்டு அந்தத் தலைமைமருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தபோது என் செல்ஃபோன் அதிர்ந்து சிணுங்கியது. பச்சைநிற அம்புக்குறியை மேலே தள்ளி தொடர்பைப் பிடித்தேன். எதிரில் ஒருவர் தன்னை என் அப்பாவின் நண்பர் என்றும் தற்போது கும்பகோணத்தில்  வசிப்பதாகவும் சொன்னார். கேட்டுக்கொண்டேன். மேலும் “என்னை உனக்குத் தெரியாது. நானும் உங்க அப்பாவும் சிம்லால ஒண்ணா வேலை பாத்திருக்கோம்..” என்று அடுக்கிச் சென்றார். அவருடன் உரையாடும் மனநிலை இல்லை எனக்கு. இருப்பினும் மௌனமாக செவி மடுத்தேன். என் நம்பர் எப்படிக் கிடைத்தது என்று கேட்க எத்தனித்த போது,  “பைதி பை நான் ஏன் ஃபோன் பண்ணேன்னா,  என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை அனுப்பனும், உங்க வீட்டு அட்ரஸ் வேணும்..”

“நோ ப்ராப்ளம். உங்க நம்பருக்கு மெஸேஜ் பண்றேன். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா.”

“என் பேர் நாதன்முனி. எல்லாரும்  ’நானி’ன்னுதான் கூப்டுவாங்க. நீ அவரோட சன் திகம்பரன் தானே..”  என்றதும் உள்ளம் ஆச்சரியத்துடன் துணுக்குற்றது. எனக்குத் தெரிந்த அப்பாவின் நண்பர்களின் பட்டியலில் இந்த நானி இல்லை. அப்பா சிம்லாவில் வேலை பார்த்தது உண்மை. அப்போது எனக்கு வயது பத்து என்று அம்மா சொல்லியிருக்கிறாள். சிம்லாவில் ஒரு தேயிலைக் கம்பெனியில் தரம் பிரிக்கும் பிரிவில் அப்ரூவராகப்  பணிபுரிந்தார். விதவிதமான தேயிலை ரகங்களை அப்பா அவ்வப்போது வாங்கி வருவார். அம்மாவின் கைவண்ணத்தில் விதவிதமான சுவையில்  கமகம வாசனையில் ஆவி பறக்க அடிக்கடி குடித்துப் பழகி வளர்ந்த நாக்கு  என்னை இன்று டீ பித்தன் ஆக்கியிருக்கிறது. சிம்லா நண்பர் நினைவுபடுத்திய நல்ல டீயின்  சுவை நாடி கேன்ட்டீனில் நுழைந்தேன். அதற்கு முன் சிம்லா நண்பருக்கு வீட்டு விலாசத்தை குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்தேன். சுயசேவையில் டீயைப் பெற்று சுவைத்துக்கொண்டிருந்த போது கைபேசியில் பதிலுக்கு ஒரு “தேங்க்ஸ்” வந்து விழுந்தது. டீ சுமார் தான். சிம்லாவின் சுவை இல்லை. யார் இந்த சிம்லா ’நானி’.. அம்மாவிடம் போய்க் கேட்கவேண்டும். 

மருத்துவமனையின் பின் கொட்டிலில்  பார்க் செய்த வண்டியை எடுக்க  நடந்துகொண்டிருந்தேன். மீண்டும் சிணுங்கியது கைபேசி. அதே எண். அதே நானி. எதற்கு லைனில் வருகிறார்..

“ஏம்ப்பா திகம்பரா..  நானும் ஏதோ சாதரணமா உங்கிட்ட பேசிட்டேன்.. இப்பதான்  ‘சீமா‘க்கு ஃபோன் பண்ணப்ப கேள்விப்பட்டேன். அப்பாக்கு உடம்பு  சரியில்லையாமே. இப்ப எப்படி இருக்கார்..”

“இன்னும் ஐசியுலதான் இருக்கார்.“

“என்ன சுகர் ஏறிடிச்சோ?“

“ஒண்ணா ரெண்டா.. எல்லாம் தான். “

“சரிப்பா..தைரியமா இரு. பகவான் எல்லாம் நல்லதையே நடத்தி வைப்பான். உன் அட்ரஸ் கெடச்சது. பத்திரிகை அனுப்பி வைக்கறேன். அடுத்த மாசம் 28ஆம் தேதி. அம்மாவையும் கேட்டதாச் சொல்லு. வச்சுடவா.”

“ம்.. ரொம்ப நல்லது. நெலைமைய அனுசரிச்சுண்டு வரப்பாக்கறேன்..”

••

நானி விலகிக்கொண்ட மறுகணம் வந்து விழுந்த ‘டிங்‘ என்ற ஒற்றை ஒலி குறுஞ்செய்தியைக் காணவைத்தது. ஒரு வங்கியிடமிருந்து வந்திருந்தது. கடன் பற்றிய நல்ல செய்தியை நினைத்தபடி ஆவலுடன் அந்த ஐந்துவரிச் செய்தியைப் பிரித்தேன்.  உப்பு சப்பில்லாத செய்தி. ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைத்துவிட்டீர்களா?.. என்று கேட்டு கெடு விதித்திருந்தது. வெறுப்பில் அச்செய்தியைக் கோபத்துடன் நீக்கினேன். ஏன் கடன் வர தாமதமாகிறது? எல்லா நடைமுறைகளும் முடிந்துவிட்டதே.. ஒரு ஆவல்மிகு எண்ண ஓட்டத்தோடே பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஒரே உதையில் கிளர்ந்துவிட்டது. எல்லா ட்ராஃபிக் இடஞ்சல்களையும் கடந்து வீடு வந்துசேர அரைமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. வழியில் இரண்டு மூன்று முறை கைபேசி  அடித்தது. எடுக்காமல் ஓயவிட்டிருந்தேன். செக்யூரிட்டி  கதவைத் திறந்துவிட பைக்கை ஒரங்கட்டிவிட்டு லிஃப்டை நோக்கி நடந்தபடி வழியில் லைனில் வந்தவர் யாரென்றறிய முற்பட்டேன். எடுக்காமல் விட்ட தொடர்புகள் அம்மாவிடமிருந்துதான். லிஃப்ட் வேலை செய்யவில்லை. அது இரண்டு நாட்களாகவே ரிப்பேர். ஆனால் தன்னிச்சையாக லிஃபட் பட்டனை அழுத்த முற்பட்டபோது மீண்டும் எரிச்சலானேன். மெள்ள படி ஏறத் துவங்கினேன். மூன்றாவது மாடி. இந்த ஃபிளாட் மெயின்டனஸ் பொறுப்பாளர் பாதி நாட்கள் ஊரிலேயே இருப்பதில்லை.  அடுத்த மீட்டிங்கில் வேறு நபரைப் பரிந்துரைக்க வேண்டும்.  என் தலையில் வந்து விழுந்துவிட்டால்? எல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம்! 

அப்பா…டீ! ஒரு வழியாக வீட்டைக் கண்ணால் பார்த்தேன். மூன்று மாடி ஏறி வந்ததில் மூச்சிரைத்தது.  வாசலில் இருந்த ஷு  ஸ்டாண்டில் செருப்பைக் கழட்டி விட்டேன்.  அழைப்பு மணிக்கு அவசியமின்றி வீடு திறந்தே இருந்தது. கிரில் கேட்  உட்புறத் தாழ்ப்பாளை மட்டும் திறந்து வீட்டினுள் நுழைந்தேன். எதிரே சுவரில் பதித்த டிவி  சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ நாம சங்கீர்த்தனம். அம்மா எங்கே.. என்று ஒரு வினாடி ‘சுருக்‘ ஆனது மனம். பைக் சாவியை சுவரில் மாட்டிவிட்டு அம்மாவை தேடிக்கொண்டு உள்ளே சென்றேன். அம்மா பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பாகவதம்  படித்துக் கொண்டிருந்தாள்.

“‘டிவிய  ஓடவிட்டுட்டு, இங்க என்ன பண்ற.. வீடு வேற தெறந்தே இருக்கு..”

மகனின் குரல் கேட்டதும் பாகவதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, “ஓ… வந்துட்டியா. அவர் எப்படிடா இருக்கார். டாக்டரப்  பாத்தியா…“ 

“பிரஷர் நார்மலா இருக்குன்னார். ரெஸ்பிரேஷன் ப்ராப்ளமும் கம்மி ஆயிருக்காம்.  ஆனா சுகர்தான்  கவலையா இருக்காம்..“

“மனுஷன் ஸ்வீட் ஸ்வீட்னு அலஞ்சே உடம்ப அழிச்சிண்டிருக்கார். சொன்னாக் கேட்டாதானே.. எல்லாம் என் தலவிதி..”

”நீ ஏம்மா டென்ஷன் ஆகற.. எல்லாம் சரியாய்டும்.. நல்ல ட்ரீட்மென்ட் கொடுத்திண்டிருக்கா..“

“பகவான் புண்ணியத்லே நல்லானா சரிதான்..” என்ற ஆதங்கத்தோடே,  அம்மாவோடு கூடத்து சோபாவிற்கு நகர்ந்தேன். சப்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்தேன். 

“ஏண்டா.. பிரதாப் மாமா வந்திருந்தார். உங்கிட்டே பேசணும்னார். அதுக்குத் தான் ஃபோன் போட்டேன். நீ எடுக்கலே… ஒரு காபிய குடுத்தேன். அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணினார். சரி. நான் ஹாஸ்பிட்டல்லேயே பாத்துக்கறேன்னு கெளம்பிட்டார்..அதுக்குள்ள நீ இங்க வந்துட்டே”

“சரி விடு. திரும்ப வருவார்..”

அம்மா மீண்டும் பாகவதத்தில் மூழ்க நான் என் அறைக்குப் போய் கதவைச் சாத்திக்கொண்டேன். சாதா உடைக்கு மாறியதும் சிறிது நேரம் படுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. லேசாக பசியும் ஊறியது. மணிக்கணக்கில் கொண்ட காத்திருப்பு ஓய்வையே நாடியதால் சிறிதுநேரம் தலையைச் சாய்க்க முற்பட்டேன்.  பிரதாப் மாமா நினைவுக்கு வந்தார். அவர் பிரதாப் இல்லை. பிரதாப் சிங். ஆனால் ’சிங்‘ இல்லை. ஒரு நல்ல சிவ பக்தர். நிறையப் பேசுவார். ஆன்மீகம், விளையாட்டு, அரசியல்… ஒன்று விடாமல் பிளந்து கட்டுவார். அப்பாவும் அவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால்  பொழுது சாய்ந்துவிடும். டீ, காபி, ஸ்நாக்ஸ் கொடுத்து அம்மாவுக்கு மாளாது.  

“ஏண்டி.. குட்டனுக்கு டீ கொடுக்கறியா..” என்று குரல் கேட்டதும் அம்மா துரிதமடைவாள். அப்பா பிரதாப் மாமாவை ‘குட்டன்‘ என்றே அழைப்பார். அவர் ஏன் அப்படி அழைக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் அவரோடு எப்படி ‘சிங்’  ஒட்டிக்கொண்டது என்று சொல்லியிருக்கார். பிராதாப் மாமாவின் தந்தை ஒரு வங்கி அதிகாரியாக இருந்த போது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். டர்பன்  பஞ்சகச்சம் சகிதத்துடன் அவர் வீட்டில் ஒரு பழைய புகைப்படம் பார்த்திருக்கிறேன். அது அநேகமாக பிரதாப் மாமாவின் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அவர் ஒரு   முறை தன் வங்கியில் வந்த ஒரு காசோலையைத் தவறாக பைசல் செய்துவிட்டார். அதனால் பணத்தை இழந்தவர் வங்கியில் புகார் கொடுக்க, அது பூதாகாரமாக அவர் மேல் வெடித்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கூட போலி காசோலை! புகாருக்குப் பின்தான் அது போலி காசோலை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக வங்கி எடுத்த நடவடிக்கையில் அவர் வேலையும் இழக்க நேரிட்டது. கயவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். திருந்தாத உலகம்! அந்த இக்கட்டான சூழ்நிலையில்  அவருக்குக் கீழ் வேலைபார்த்த  ஒரு சர்தார்ஜி  உதவ முன் வந்தார்.  டெல்லியில் சர்தார்ஜியின் மூத்த சகோதரர் ஒருவர் நடத்திவந்த  கலைப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைப் பெற்றுத் தந்தார். போன மானத்தைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த சர்தார்ஜியின் நினைவாக நன்றிக்கடன் பொருட்டு அவருடைய பெயரையே, ’பிரதாப் சிங்‘ என்று தன் மகனுக்கு வைத்துவிட்டார். பிரதாப் மாமாவை நினைக்கும் போதெல்லாம் அப்பா சொன்ன இந்தக் கதை நினைவக்கு வரும். பிரதாப் புராணத்தை விலக்கிக் கொண்டு சாப்பிடுவதற்காக வெளியே வந்தேன். மேஜையில் உணவு தயாராக இருந்தது. சம்பந்தமில்லாமல் நினைவில் வந்து முட்டியது வங்கிக் கடன் குறுஞ்செய்தி. கடன் கிடைக்குமா?

”ஏண்டா.. வந்து பரிமாறவா…”  அம்மாவின் குரல் நான் ஏற்படுத்திய மேஜை  சலனத்தால் குறிப்பறிந்து ஒலித்தது.

“வேண்டாம்மா. நானே போட்டு சாப்ட்டுக்கறேன்… ஏம்மா இன்னிக்கி நானின்னு ஒருத்தர் ஃபோன் பண்ணினார். யாரும்மா அவர்? அப்பாவோட ஃபிரண்டுன்னு சொல்லிண்டார். சிம்லால இருந்தாராமே..“

“ஆமாண்டா. சிம்லால எல்லாரும் ஒரே தெருல இருந்தோம். அப்பாவோட கம்பெனிக்கு அவர் தான் ஆடிட்டர். அவருக்கென்ன இப்போ..“

“அவர் பொண்ணுக்குக் கல்யாணமாம். யார்கிட்ட இருந்தோ  நம்பர் வாங்கி  அட்ரஸ் கேட்டு ஃபோன் பண்ணினார். பத்திரிகை அனுப்பறேன்னார்..”

“ நாம அங்க இருந்தவரைக்கும் அவருக்குக் குழந்தையே இல்லையே..”

”அப்பறமா பொறந்திருக்குமா இருக்கும்..”

“இப்ப எங்க இருக்கார்? கல்யாணம் எங்க?“

“கும்பகோணத்தில  இருக்கார். கல்யாணம் எங்கன்னு பத்திரிகை வந்தா தான் தெரியும்..”

அம்மாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன். அறையில்  இருந்த கைபேசி அடிக்க ஆரம்பித்தது. அவசர அவசரமாகச்  சென்று ஒலியை அணைத்து லைனைப் பிடித்தேன். ஆஸ்பத்திரியில் இருந்து அழைப்பு. மனம் பரபரத்தது. மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.

“எஸ் மேடம் சொல்லுங்க.“

”சார். நாங்க இன்சூரன்ஸ் டெஸ்க்லேந்து பேசறோம்..“

“சொல்லுங்க மேடம்..”

“இதுவரைக்கும் இன்சூரன்ஸ் சேங்ஷன் பண்ணின அமவுன்ட் எல்லாம் எக்ஸாஸ்ட் ஆயிடிச்சி. ஃபர்தரா சேங்ஷன் ஆகல.”

“அதுக்கு என்ன பண்ணணும்?“

”நாளைக்கு ஈவினிங்குள்ள ஒன் லேக் டெபாஸிட் பண்ணணும். இன் கேஸ் சேங்ஷன் ஆச்சுன்னா டெபாஸிட்ட ரீஃபண்ட் பண்ணிடுவோம்.“

“நாளைக்கு ஈவினிங்குள்ள கொஞ்சம் கஷ்டமாச்சே மேடம்… ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க மேடம்..”

“உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணச் சொன்னாங்க. நீங்க டாக்டர் கிட்ட பேசிக்கோங்க…”

“ஓகே மேடம்.”

••

லைனிலிருந்து விடுபட்டதும் மனம் சுருங்கிவிட்டது. ஒரு லட்சத்திற்கு உடனே எங்கே போவது? இந்த ’சனியன் கடன்‘ எல்லா நடைமுறைகள் முடிந்தும் வராமல் கழுத்தறுக்கிறது! அம்மா பாகவதத்தில் முழ்கியிருந்ததால் நான் ஃபோனில் பேசியது சரியாகக் காதில் விழவில்லை போலும். இல்லையென்றால்  யார் லைன்ல, என்ன ஏது என்று கேட்டு வந்திருப்பாள். அலுவலகத்திலும் ஒரு லட்சம் கேட்டிருக்கிறேன். அது இன்னும் ஜி.எம் மேஜையிலிருந்து எம்.டி மேஜைக்குச் செல்லவில்லை. ஜி.எம்மிடம் நேற்று தான் பேசினேன். எம்.டி வெளிநாடு சென்றிருக்கிறார். அவருக்கு என் சம்பள அட்வான்ஸ் கடிதத்தை ஸ்கேன் செய்து பரிந்துரையுடன் அனுப்பியிருப்பதாகச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை.  ஆனால் இந்த ஆஸ்பிடலில் அதற்குள் தொல்லை கொடுக்கிறார்களே! வங்கியின் கடன் மேலாளருக்கு ஃபோன் செய்ய எத்தனித்தேன். பாதி எண்கள் இடும்போதே அடுத்த எண் இடுவதில் சந்தேகம் வந்துவிட்டது. ஒரு  ஊகத்தில் மீதி எண்களை இட்டதில் அது ராங் நம்பரில் போய் முடிந்தது. அவசரத்தில் எல்லாம் தடுமாறுகிறது.  சட்டென்று ராம்சரண், என்று அந்த வங்கி அதிகாரியின் பெயர் நினைவுக்கு வரவே, கைபேசியில் ராம்சரணை தேடிப்பிடித்து அவரைத் தொடர்பில் பிடித்தேன். என்னை அடையாளம் காண சிறிது நேரம் ஆயிற்று அவருக்கு. 

“யு திகம்பர சுப்ரமணியன்..?“

“எஸ் சார்.. இன்னும் கிரடிட் வரலை… என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் பண்ணினேன்..”

”இன்னும் வரலையா? நோ இஷ்யு இன் யுவர் கேஸ்.  நான் எல்லாம் கிளியர் பண்ணிட்டேனே.. நான் ரெண்டு நாள் லீவ்ல இருக்கேன்.  எதுக்கும் நீங்க ஷெக்ஸன்ல செக் பண்ணுங்களேன். நானும் கேக்கறேன்.“

“ஓகே சார்.. சாரி ஃபார்த டிஸ்டர்பென்ஸ்..”

“நோ ப்ராப்ளம்.. நீங்க செக் பண்ணிட்டு எனக்கு ஃபீட்பேக் கொடுங்க..”

“ஷூர்.. ஷூர்..”

அந்த வங்கி அதிகாரி மறுமுனையில் விலகிக்கொண்டார். நேரே வங்கிக்குச் செல்ல முடிவு செய்தேன். வங்கியின் வேலைநேரம் முடிய இன்னும் ஒன்றரை மணிநேரம் இருந்தது. சனி, ஞாயிறு என்பதால் அடுத்த இரு நாட்களும் வங்கி விடுமுறை என்று நினைவுக்கு வரவே மனம் பரபரப்பானது. இன்று போனால் தான் உண்டு. அவசர அவரமாக உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டேன். சுவரில் மாட்டியிருந்த வண்டிச் சாவியை எடுக்கும் போது அம்மா பார்த்துவிட்டாள்.

”என்னடா.. வந்தே.. உடனே கிளம்பிட்டே..“ 

“கொஞ்சம் பேங்க் வரைக்கும் போய்ட்டு வந்திடறேன்.”

மூன்று மாடி ஏறி இறங்க வேண்டுமா? காசுக்காக எத்தனை மாடியானாலும் ஏறித்தான் ஆகவேண்டும். இறங்கித்தான் ஆகவேண்டும். பைக்கை உதைத்துக் கிளம்பியது தான் தெரியும், அடுத்த இருபது நிமிடத்தில் வங்கி வாசலில் இறங்கினேன். அங்கும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. இரண்டு மாடி ஏறவேண்டியதாயிற்று. வங்கிக்குள் நுழைந்ததும் இதமான குளிர்ச்சி இனிதே வரவேற்றது. கடன் சங்கதிகளைக் கையாளும் அந்த இளம் பெண்ணை சந்தித்தேன். அவள் கொஞ்சம் துருதுரு என்பது  என்னை வரவேற்றதிலேயே தெரிந்தது. லோன் ரெஃபரன்ஸ் நம்பரைக் கேட்டாள். கைபேசிக்கு ஏற்கனவே வந்திருந்திருந்த குறுஞ்செய்தியைத் தேடிப்பிடித்து ஒரு பதினாறு இலக்க எண்ணைச் சொன்னேன். அவள் வெண்டை விரல்கள் சுறுசுறுப்பாக இயங்கின விசைப்பலகையில். கணினி சில வினாடிகளில் பதில் சொல்லிவிட்டது. 

“சார்.. ஷேங்ஷண்ட்.  பட் நெக்ஸ்ட் பேட்ச்லதான் வரும்..”

“அடுத்த பேட்ச்னா  எத்தன நாள் ஆகும்? “

“மேக்ஸிமம் நெக்ஸ்ட் வீக் எண்ட்…“

“ஓகே. தேங்ஸ் மேடம்..”

ஒருவழியாக நிம்மதி கொண்டது மனம். வங்கியை விட்டு வெளியே வந்ததும் கைபேசி அடிக்க ஆரம்பித்த்து. எடுத்துப் பார்த்தேன். லைனில் தங்கைதான் வந்து கொண்டிருந்தாள். பச்சை அம்புக்குறியை மேலேதள்ளி  தங்கையோடு இணைந்தேன்.

“சொல்லு நிரு… சௌக்யமா…”

“அப்பா எப்படி இருக்கார்டா..”

“சுகர்தான் இன்னும் கன்ட்ரோல்ல வரலே.. மத்தபடி நார்மலா இருக்கார். நேத்திக்கெல்லாம் கொஞ்சம் பேசினார். இருந்தாலும் டூ டேஸ் அப்ஸர்வேஷனுக்கு அப்பறம்தான் வார்டுக்கு மாத்துவாங்க போல இருக்கு.”

“சரி… நானும் அவரும் நாளைக்குக் கெளம்பி வரோம்.. அம்மா ஒன்னும் டென்ஷன் ஆகலையே…”

“அதெல்லாம் தைரியமாத்தான் இருக்கா.  நிரு உன்னால ஒரு ஒன் லேக் டூ டேஸ்ல அரேஞ் பண்ண முடியுமா?  இன்சூரன்ஸ் ஃபர்தரா ஷேங்ஷன் ஆகல. அதனால ஒன் லேக் டெபாஸிட் கட்டச் சொல்றா ஆஸ்பிடல்ல..”

”இல்லாட்டி ட்ரீட்மென்ட்ட நிறுத்திடுவாங்களாமா.. வாட் நான்சென்ஸ்..“

“அப்படில்லாம் ஒண்ணும் சொல்ல்லே.. நீ ஏன் டென்ஷன் ஆகற.. இன்சூரன்ஸ் ஷேங்ஷன் ஆச்சுன்னா டெபாஸிட் ரிடர்ன் வந்துரும்.. இது ஒன்லி ஸ்டாப் கேப் அரேஞ்மென்ட் தான்.”

”சரி சரி.. அவர் வந்த உடனே சொல்றேன்.  பணம் விஷயமெல்லாம் அவருக்குதான் தெரியும்..”

“முடிஞ்சா பாரு.. இதுக்காக ரொம்ப கஷ்டபடுத்திக்க வேண்டாம்..”

”இதுல என்னடா இருக்கு…. நல்ல வேளை என்கிட்ட கேக்கணும்னு தோனித்தே… நம்ம  அப்பாக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறோம்.”

“நாளைக்கு எப்ப கெளம்ப போறீங்க?“

“மத்யானம் வஞ்ச் முடிச்சுட்டுக் கெளம்பலாம்னு இருக்கோம். ஏன்னா.. கார் சர்வீஸ்லேந்து பதினோரு மணிக்கு மேலதான் வரும்..”

“ஓகே.நோ ப்ராப்ளம். சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன். நீ எப்ப வேணுன்னாலும்  வா… அம்மாட்ட சொல்லிட்டியா?“

“இன்னும் சொல்லலே. நீயே சொல்லிடு..”

“சொன்ன உடனே அம்மா உனக்கு ஃபோன் போட்ருவா. பாத்து நிதானமா ஓட்டிண்டு வரச்சொல்லு  உன் ஆத்துக்காரரை..”

“அதெல்லாம் நான் பக்கத்துல இருந்தா நிதானமாத்தான் ஓட்டுவார்..”

தங்கை நிரு (நிரஞ்சனா)  நாளை வரப்போகிற செய்தி கேட்டதும் அம்மாவுக்குத் தலைகால் புரியவில்லை.  உடனே எக்ஸ்ட்ரா பால், எக்ஸ்ட்ரா தயிர், காய்கறி என்று ஆரம்பித்தாள்.

“அம்மா அவ என்ன இங்க விருந்துக்கா வர்றா. அப்பாவப் பாக்க வர்றா..”

”எதுக்காக இருந்தா என்ன. ஒரு வாய் சாப்டாமப் போய்டுவாங்களா..”

“சரி சரி, என்ன வேணுமோ நீயே கடைக்காரனுக்கு ஃபோன்லேயே ஆர்டர் பண்ணு.. நான் கொஞ்ச நேரம் தூங்கனும். நைட்வேற ஆஸ்பிடல்லே இருக்கணும்..”

கைபேசி மிகவும் சார்ஜ் இறங்கியிருந்தது. அதை ஹாலில் சார்ஜ் ஏற விட்டுவிட்டு என் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு, ஏசியை ஓடவிட்டுப் படுத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை. கண்களை மூடி வெறுமனே படுத்திருந்தேன். அலுவலகத்தில் சிறு பிரச்சனை தொட்டு அன்றும் இப்படித்தான் படுத்திருந்தேன். அதாவது அப்பா முடியாமல் போன அன்று.

”அப்பா ஒருமாதிரி இருக்கார்டா. என்னன்னு வந்து பாரேன்…’’ அம்மா வந்து சொன்னாள்.

“ராத்திரி பன்னண்டு மணி வரைக்கும் டிவி பாத்தா அப்படித்தான் இருக்கும். கேட்டா தானே..”

“இல்லடா முகமே சரியில்ல.. விரல்லாம் தன்னால நடுங்கறதுடா.. வந்து பாரேன்.”

அவர் அறையில் போய்ப் பார்த்தேன். ஈஸிசேரில் வெறும் பனியனோடு படுத்திருந்தார். மார்பில் செல்ஃபோன் கிடந்தது. சுவாசம் வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வாய் ஏதோ சொல்ல வருவது போல் குழறிக் கொண்டிருந்தது.  அம்மா சொன்னது சரிதான். சம்திங் ராங்!  உடனே 108க்கு ஃபோன் போட்டேன். பத்து நிமிடத்தில்  அவசர ஊர்தி வந்துவிட்டது. வீட்டை அவசர அவசரமாகப் பூட்டிக்கொண்டு பரபரத்த மனதுடன், எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டு நானும் அம்மாவும் ஊர்தியோடு வந்து அப்பாவை  இந்தத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரத்திற்கு மேல் ஓடிவிட்டது. அன்று தொடங்கிய ஐ.சி.யு வாசம் இன்னும் தொடர்கிறது. சேர்த்த முதல் இரண்டு நாட்கள் கண்  விழிக்கவில்லை. மூன்றாம்நாள் லேசாகக் கண் விழித்து  ஜாடையில் பேச ஆரம்பித்த பின்தான் தங்கைக்கே சொன்னோம். அந்த மூன்றாம் நாள் தான் அப்பாவின் நடைப்பயிற்சி நண்பர் வேலுப்பிள்ளையை ஆஸ்பிடலில் பார்க்க நேர்ந்தது.  அவர் தன் மாதாந்திர உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். உடன் அவர் மகளும் வந்திருந்தார். “எங்க இந்தப் பக்கம்..” என்று வேலு சார் வினவவே  எல்லா கதையையும் சொல்ல வேண்டியதாயிற்று. விஷயத்தைக் கேட்டதும் வேலு சாருக்கு சுருக்கென்று தைத்திருக்க வேண்டும். அது அவர் முகத்தில் தெரிந்தது. அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிறிது மௌனம் நீடித்தது. பின் “ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுப்பா.. என்னால முடிஞ்சத செய்யறேன்..”

”ரொம்ப சந்தோஷம். இன்சூரன்ஸ்லாம் இருக்கு. தேவப்பட்டா கேக்கறேன். ஹெல்ப் பண்றேன்னு சொன்னதுக்கு தேங்ஸ்..”

“க்ரிட்டிக்கல் சிட்சுவேஷன்ல ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணலேன்னா.. அப்பறம் இத்தன நாள் பழகினதுக்கு அர்த்தமே இல்ல. பாத்துக்கோப்பா. தைரியமா இரு..”

வேலுப்பிள்ளையின் மூளையைக் குடைந்திருக்க வேண்டும் அப்பாவின் உடல் நலக்குறைவு. தன் ஆற்றாமையை இறக்கி வைக்க பார்க்கிற நண்பர்களிடம்ல்லாம் பகிர்ந்திருப்பார் போலும். தினமும் ஐந்தாறு கைபேசி அழைப்புகள். டேப் ரிக்கார்டர் போல் எல்லோருக்கும் பதில் சொல்லி மாளவில்லை. அது இன்றய நானிவரை வந்து முடிந்திருக்கிறது.  இன்னும் எத்தனை பேர் வருவார்களோ தெரியவில்லை. எல்லோருடைய நல்ல மனதுக்காகவது  நல்லபடியா அப்பா வீடு வந்து சேரணும்.

••

அப்பாவுக்குப் பெரிய மனக்குறை, எனக்குக் கல்யாணம் ஆகவில்லையென்று.  பொதுவாக அம்மாக்கள் தான் தன் பிள்ளைக்கு பெண் வாய்க்கவில்லை என்று கவலைப்படுவார்கள். ஆனால் இங்கே அம்மா கொஞ்சம் அடக்கி வாசிக்கக்கூடியவள்.  அவள் கவலையெல்லாம் தங்கையைக் கரையேற்றுவது தான். அது வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது. மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்பது அவள் துணிபு.  இப்போது இருக்கிற பெண்களெல்லாம்  யு எஸ் மாப்பிள்ளையைத் தான் விரும்புகிறார்கள். யு எஸ் ராஜாதான் எல்லா மாப்பிள்ளை ராஜாக்களுக்கும் செக் வைத்துக்கொண்டே இருக்கிறானே! அந்த ராஜா மனது வைத்தால் தான் இந்த ராணிகள் அங்கே அடைக்கலம் கொள்ள முடியும். இருந்தாலும் அவர்கள் மோகம் தீர்ந்த பாடில்லை. 

அப்பா தடபுடலாக நிச்சயதார்த்தத்தை ஆடம்பரமான ஓட்டல் ஒன்றில் இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பாடு செய்திருந்தார். இருநூறு பேருக்கு மேல் கலந்து கொண்டனர். அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். பெண் என்னைவிட கொஞ்சம் உயரம்.  நுணிநாக்கு ஆங்கிலம். கொஞ்சம் மா நிறம் தான். சிரித்துச் சிரித்துப் பேசுகிற அழகில் அம் மாநிறம் அடிபட்டுப் போனது.  எந்த ஒரு ஆணுக்கும் அந்த அழகைப் பெறுவதில் ஒரு கர்வம் வந்துவிடும். கர்வம் என்னுள்ளும் அன்று நுழைந்தது. அந்த கர்வம் ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை.

முதலில் ஒருநாள் ஃபோன் செய்து “திகம்பர சுப்ரமணியன் என்கிற உங்கள் பெயர் மிகவும் கர்நாடகமாக இருக்கிறது. மாற்றிக்கொண்டால் என்ன?’’ என்று கேட்டாள். இது என்ன புதுப் பீடிகை என்று மனம் கலவரமானது. இன்னொரு நாள் நேரில் சந்திக்கும் போது “ உங்களுக்கு யு எஸ் போற ஐடியா இருக்கா?“ என்றாள்.  இல்லையென்று தெரிந்ததும் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். மெல்ல ஒருநாள் “எனக்கு யு எஸ் யுனிவர்ஸிட்டிலே ரிசர்ச் பண்ண ஸ்காலர்ஷிப் கெடச்சிருக்கு. போனா மூணு வருஷம் ஆகும். எனக்கு என் கேரியர் தான் முக்கியம். ஸோ ஐ டிஸைடட்  டு பர்ஸ்யூ  மை ரிசர்ச்..” என்று போட்டுடைத்தாள். அவள் யு எஸ் போகிற விஷயத்தை அம்மா அப்பாவிடம் சொன்னேன். ஒரு நிமிடம் கலங்கிப்போனார்கள். பின் இரு வீட்டாரும் என்ன பேசினார்களோ தெரியவில்லை. ஒருநாள் “டேய் சுப்பு இந்தப் பெண் நமக்கு சரி வராது.. நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு வந்துட்டேன். ஊர்ல பொண்ணா இல்ல..” என்று ஒரு தீர்மானத்துடன் சொல்லிவிட்டார் அப்பா.

அத்தனை பணம் செலவழித்து ஸ்டார் ஓட்டலில் நடந்த நிகழ்வெல்லாம் கேலிக்கூத்தானது. இதைத்தான் தலையெழுத்து என்பார்களோ? – தூக்கம் வரமால் கண்களை முடி படுத்த நிலையில் நிச்சயதார்த்த லீலைகள்  தேவேயில்லாமல் நினைவோடையில் வரிசைகட்டி உறுத்தியது. அப்பா அங்கே ஒரு துளி காற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இது என்ன நினைப்பு? உடல் அசதியில் இருந்தாலும் ஏனோ தூக்கம் பிடிக்கவில்லை.

இன்னும் ஏதேதோ எண்ணங்கள் புரண்டன மனதில். எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ஏதோ ஒரு பொறி தட்டவே நேரே அப்பாவின் அறைக்குச் சென்று பீரோவைத் திறந்தேன். லாக்கரிலிருந்து அவரது வங்கி பாஸ் புத்தகங்களை எடுத்து நோட்டம் விட்டேன். கடைசியாக போன மாதம் பத்தாம் தேதி வரை பரிவர்த்தனைகளைப் பதிவேற்றியிருந்தார். அன்றய தேதிக்கு எல்லாமாகச் சேர்ந்து இரண்டு லட்சம் வரை இருந்தது. இவ்வளவு பணம் இருந்தும் மருத்துவமனைக்கு பணம் கட்டமுடியாத நிலை. அப்பாவின் தயவில்லாமல் ஒரு பைசா கூட எடுக்க முடியாது.

பீரோவை இன்னும் கொஞ்சம் குடைந்ததில், செக் புத்தகங்கள் – ஏழெட்டு கம்பெனிகளின் ஷேர் சர்டிபிகேட்கள் –  அம்மாவின் பெயரில் இரண்டு வைப்புநிதிக்கான ஆவணங்கள் என்று எல்லாம் கிடைத்தன. வைப்புநிதி  முதிர்வடைய இன்னும் இரண்டாண்டுகள் இருந்தன. என் கம்பெனியின் பங்குகள் கூட வாங்கிப் போட்டிருக்கிறார். நல்ல மனிதர். காசு சேர்ப்பதில் அப்பா அளவிற்கு எனக்கு சாதுர்யம் இல்லை. எடுத்தபடியே ஆவணங்களையெல்லாம் மீண்டும் பீரோவில் வைத்துவிட்டு என் அறைக்குத் திரும்பினேன். ஏசி அறையை மிகவும் ஜில்லாக்கியிருந்தது.  அம்மாவின் குரல் வெளியே கேட்டது.

“ஏண்டா… எப்ப கெளம்பப் போறே? நைட்டுக்கு டிஃபன் என்ன பண்ணணும்?”

”என்ன தோணுதோ பண்ணுமா. ஏழு மணிக்கு எழுப்பு..”

“ஃபிரிட்ஜ்ல கொஞ்சம் சப்பாத்தி மாவு இருக்கு… சைட் டிஷ் டால் பண்றேன்..”

“சரி அதையே பண்ணு. ஏழு மணிக்கு மறக்காம எழுப்பிடு..”

அம்மாவை எழுப்பச் சொன்னேனே ஒழிய விழித்தே தான் படுத்திருந்தேன். குளிர் இதமாக இருந்தது. சனிக்கிழமையோடு எடுத்த விடுப்பு முடிகிறது. திங்கள் முதல் அலுவலகம் செல்லவேண்டும். அநேகமாக அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். நாளை ஜி.எம்மோடு பேசவேண்டும். நல்ல மனிதர் தான். இருந்தாலும் அலுவலக விதி என்று ஒன்று இருக்கிறதே! எச்.ஆர் ரிடமும் பேசவேண்டும். எச்.ஆர்ல செக் பண்ணினீங்களான்னு ஜி.எம் கேட்பார். இப்படி அலுவலக நினைப்பு ஓடிக் கொண்டிருக்கும்போதே, வெளியே சார்ஜில் இருந்த ஃபோன் அடிக்க ஆரம்பித்தது.  எல்லா நினைப்பும் ஒரு நொடியில் கலைந்து போயிற்று. படுக்கையிலிருந்து பரபரப்பாக எழுந்து கதவைத் திறந்துகொண்டு ஃபோனை எடுக்க விரைந்தேன்.   அதற்குள் அம்மா, ”ஃபோன் அடிக்குது பாரு..“ என்று குரல் கொடுத்தாள். அதைக் காதில் வாங்காமல், ஃபோனில் இணைந்தேன். மருத்துவமனையிலிருந்து பேசினார்கள்.  

“வாசுதேவன் உங்க பேஷன்ட் தான…”

“ஆமா.. என்ன விஷயம் சொல்லுங்க..”

“நீங்க உடனே கிளம்பி வாங்க. டாக்டர் அர்ஜன்ட்டா கூப்டராங்க..”

“இதோ இப்பவே கிளம்பி வரேன்..” ப்ரஷர் உச்சிக்கு ஏறியது. படக்கென்று ஃபோனை சோபாவில் வீசிவிட்டு, அவசர அவசரமாக  உடை மாற்றிக்கொண்டு ஆஸ்பிடலுக்குப் புறப்பட்டேன்.

“எங்க இருந்துடா ஃபோன். எங்க திரும்பவும் கெளம்பிட்டே..”

”ஆஸ்பிட்டல்லே அவசரமா வரச் சொலைறாங்க. என்னன்னு  கேட்டுட்டு வந்திடறேன்.”

மகன் போகிற அவசரத்தைப் பார்க்கப் பொறுக்காமல் “ஏண்டா பாத்துப் போ.. வண்டில போகாதே. ஆட்டோல போ..”  பின்னோடே குரல் கொடுத்த வண்ணம் லிஃப்ட் வரை வேகவேகமாக வந்தாள் அம்மா.

Series Navigation‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்“வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    முருகன் says:

    “ஏண்டா பாத்துப் போ.. வண்டில போகாதே. ஆட்டோல போ..” பின்னோடே குரல் கொடுத்த வண்ணம் லிஃப்ட் வரை வேகவேகமாக வந்தாள் அம்மா.

    – ஏனோ கண்ணீர் வந்தது.

  2. Avatar
    jananesan says:

    ஒருதுளி காற்று சரளமாக நகர்ந்தாலும் அப்பாவின் மூச்சுக்காற்று நிலைக்கனும் , உடல் தேறி வரணும் என்று அவரது நண்பர்கள் போலவே நம்மையும் நினைக்கத் தூண்டுகிறது.இன்றைய மருத்த்துவமனை நிர்வாகங்களின் மேல், இன்றைய அமெரிக்க மோகப் பெண்களின் தலையில் ஒரு குட்டு வைத்து கதை நகர்கிறது. ஒரு துளி உயிருக்கான போராட்டம் வெல்லும் என்று நினைக்கும்படியாக ரகோத்தமன் கதையை நகர்த்துகிறார் வாழ்த்துகள் ரகோத்தமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *