என்னவோ நடக்குது 

This entry is part 17 of 19 in the series 3 அக்டோபர் 2021

 

 

எஸ்ஸார்சி

கன்னியாகுமரி  விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து  திருநெல்வேலிக்குப்பயணம். என்  ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய்  வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள்.

சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள்.  ரெண்டாம் கிளாஸ்  படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம் ஒன்றுக்கு மேல் ஆயிற்று..

கொரோனாவின்  கோர ஆட்சி தொடர்ந்துகொண்டு இருந்தது. சேரன்மாதேவியில் தங்கியிருக்கும் பேத்தியை நேரில் பார்த்துவிட்டு வந்தால் தேவலாம் என்று எனக்கு  ஒரு யோசனை.

சிறப்பு ரயில் என்று ஒன்றோ இரண்டோ  சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச்சென்றும் திரும்பிக்கொண்டிருந்தது.

. கொரோனா  தன்  பேயாட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருந்தது.  ஆட்டம் ருத்ர தாண்டவமாக இப்போதைக்கு இல்லை. ஆனால் இங்கேயும் அப்படி ஆகரக்கூடும். என்கிறார்கள்.

 நான் பயணித்தது.மூன்றாம் வகுப்பு ப்படுக்கை வசதி கூடிய. ஏ சி கோச். லோயர் பெர்த் எனக்கு அலாட் ஆகியிருந்தது.   நேரமோ முன் இரவு.  ஆனாலும் நல்ல குளிர் அடித்தது… சிலர் சாதுர்யமாக கம்பளிப் போர்வை இத்யாதிகள் கொண்டு வந்திருந்தனர். சிலர் அவை கொணராது குளிரோடு சிறு சிறு யுத்தம் நடத்திக்கொண்டிருந்தனர்.

 பக்கத்து சீட்டிலும் எதிர் சீட்டிலும் ஒரு அம்மாவும்  ஒரு அய்யாவும் ஓயாது தும்மிகொண்டும் இருமிக்கொண்டும் இருந்தனர். எனக்குச் சங்கடமாக இருந்தது.  அந்த இருவருக்கும் கொரோனா  முகக்கவசம் இல்லை.  சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். அந்தப்பெட்டியிலுள்ள எட்டு பேரில் நான் மட்டும்  அச்சத்தோடு முகக்கவசம் அணிந்திருந்தேன்.ஒரு சிலர் அதனை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு பாவ்லா காட்டிய வண்ணம் இருந்தனர்.

 வண்டியில் அப்படியும் இப்படியும் உலா வந்த ரயில்  டிக்கட் பரிசோதகர் முகக்கவசத்தைக்கடனுக்கு மட்டுமே அணிந்திருந்தார்.

எனக்கு ச்சன்னலோர இருக்கை. ஆனால் அதனில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமர்திருப்பது குறித்து அவளுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. எது பற்றியும் கவலையே இல்லாமல் அவள் மொபைலில் தொடர்ந்து நொள்ளை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தாள். லக்கேஜ்  இத்யாதிகளைத் தன்  சீட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு நீண்ட இருக்கையை ஆக்கிரமித்தாள்.

மாலை நேரம்.மணி ஏழு கூட ஆகவில்லை. எதிர் ப்பக்க லோயர் பெர்த் ஆசாமி தான் படுக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தான். ஆக  அந்த நெருக்கடியின் விளைவாய் உட்காரமுடியாமல் உபரியாகிவிட்ட இருவரும் எங்களின் லோயர் பெர்த்தில் நெருக்ககியடித்து அமர்ந்துகொண்டனர்.

ரயில் வண்டி விழுப்புரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் கொண்டு வந்திருந்த தோசைப் பொட்டலத்தை அவிழ்த்துச் சாப்பிட்டேன். அப்புறம் ஒவ்வொருவராக அவர்கள் கொண்டு வந்த இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தார்கள். ரயிலின் உள்ளே வாட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை..

யாரும் யாருடனும் மனம் விட்டுப்பேசவில்லை. அந்த ஊர்க்கதை உலகத்துக்கதைப் பேசும் காலம் எல்லாம் மலை ஏறி எத்தனை க்காலம் ஆனது.. ரயில் சினேகிதம் என்கிற சொல் வழக்கும் பொய்த்தே விட்டது.

மொபைல் இல்லை லாப்டாப் வைத்துக்கொண்டு அவரவர்கள் ஏதோ தெரிந்தது செய்துகொண்டு மும்முரமாகவே இருந்தனர். ஒரு அரை மணி ஆகியிருக்கலாம். டப் டிப்பென்று எல்லாவற்றையும் மூடிவிட்டுப் ‘படுக்கையை போடலாம்’ என்றனர்.

எங்கள் பெட்டியின் சைடு லோயரில் ஒரு பெண் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் கணவனாக இருக்கலாம். அவள் சீட்டுக்கு மேலாக இருக்கும் சைடு அப்பரில் படுத்துக்கொண்டு அங்கும் இங்கும் கண்களை உருட்டி உருட்டி பார்த்தபடியே இருந்தான்.இருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்துமிருக்கலாம். அது  உண்மையோ  என்னவோ.. அவர்கள் சின்னஞ்சிறுசுகள்..ஒரு மணி நேரம் ஆயிற்று..

சைடு அப்பரில் படுத்திருந்த மனுஷன் படபட என க்கீழே இறங்கினான்.என் தலைக்கு மேலாகத்தூங்கிக்கொண்டிருந்த ஒருவனை

 ‘எறங்குடா கீழே’

என விரட்டினான்.  விரட்டப்பட்ட அவன் செகண்ட் பர்த்தில் அரைத்தூக்கத்தில் இருந்தான். திரி திரி என விழித்தான். கீழே இறங்கினான்.

‘ நானும் பாக்குறன் அப்பயிலிருந்தே  பார்க்குறேன். என் வயிஃபையே  மொறச்சி மொறச்சி பாக்குற. நீ என்ன பொம்பள பொறுக்கியா’

கத்து கத்து என்று கத்தினான். அதற்குள்ளாக லைட் எல்லாம்  போட்டுக்கொண்டு எல்லோரும் எழுந்து உட்கார்ந்துகொண்டும் நின்றுகொண்டும் என்ன கலாட்டா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘ நீ என் பொண்டாட்டியை  வச்ச கண்ணு வாங்காம மொறைக்கில. ஏன்  அப்பிடி  மொறச்ச. சொல்லு’

‘ நானு  அப்பிடி ஒண்ணும் பாக்குல’  பிரச்சனையில் மாட்டிக்கொண்டவன் பதில் சொன்னான்.

‘புளுவாத நாந்தான் கண்ணால பாத்தனே’

‘ நானு பாக்குல.அப்பிடியே  ஒரு பேச்சிக்கி பாத்தேன்னு வச்சிகிட்டாலும்   சும்மா பாக்குறது கூட  ஒரு தப்பா’

‘வச்சிகிட்டாலும்  அது  ஒரு தப்பான்னு  ராங்கு மசுரா பேசுற’

‘அப்பிடி நா சொல்லுலயே’

‘சட்டமா  சரா பேசுற. உன்ன வுடவே மாட்டன் . சொல்லிய அவன் பளார் பளார் என்று கன்னத்தில் நான்கு அறைகள்  ஓங்கி விட்டா.ன்.

அடுத்த அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகக்கூடினர்.

‘இவுனுவுள இப்பிடியே உடக்கூடாது.  பொரம்போக்கு புளியாமரத்துல கட்டி தோல அப்பிடியே உறிக்கணும்’ என்றனர் சிலர்.

அடிபட்டவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.  அவன் முகம் விகாரமாகியது வீங்கிப்போயிற்று.

‘அந்த ப்பொண்ணயே கேளுங்க. அவுங்க  உண்மையை சொல்லுட்டும்’

அடிவாங்கியவன் அழுதுகொண்டே சொன்னான்.

‘பொம்பள சொல்லுணுமா. எப்பிடி சொல்லுவா   நாந்தான் உன்ன பாத்தேனே. எதிர்ப் பேச்சா பேசுற’

மீண்டும் அவன் முகத்தில் இரண்டு குத்து குத்தினான். சில்லி மூக்கு உடைந்தது.ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அவன் அதனை துடைக்கவும் இல்லை. யார் தகவல் தந்தார்களோ அந்த இடத்திற்கு டி டி ஈ வந்து நின்றுகொண்டார்.

‘ இங்க என்ன நடந்துது. என்ன பிரச்சனை. எதா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுணும். நீங்களே முடிவு பண்ணிக்கறது இல்லே. ரயில்ல போலிஸ் இருக்கு. அவுங்களுக்கு சேதி போவுணும்’

‘ ஒத்தன் என் பொண்டாட்டிட கைய புடிச்சி இழுப்பான். நா உங்கள தேடுவேனா’

‘ எதயும் நீங்களே முடிவு பண்ணிகறது இல்லே. எனக்கு த்தெரியுணும். போலிசுக்கு தெரியணும்.இது சின்ன சமாச்சரம் இல்லே’

‘அது எப்பிடி சாரு இங்க ஒரு அநியாயம் அக்கிரமம் நடக்கும்  அது பாக்க நீங்க பொழுதுபோயி வருவீங்க நாங்க அது வரைக்கும் தேவுடு காக்குணுமா’

‘அடிபட்டவன் செத்து கித்து போயிட்டா என்னா செய்வ. யாரு பதிலு சொல்லுறது. சட்டம் இருக்கு கோர்ட்டு இருக்கு இன்னும் ஏதுதோ இருக்குதுல்ல’

‘அப்ப ஒரு பொம்பள அழிஞ்சி போனாலும் போவுலாம் சட்டத்தை மட்டும் நேரா நிக்கவச்சிட்டா அது போதும்’

‘ரொம்ப பேசுறீங்க.. இது தப்பு. தப்பு’

மூக்கில்ரத்தம் வழிந்தவன் அப்பிடியே கீழே அமர்ந்துகொண்டான்.  அவன் கண்கள் மூடியிருந்தன. சட்டை எங்கும் ரத்தமாக இருந்தது.

இரண்டு போலிஸ்காரர்கள் சர்ர் புர்ர் என்று அவ்விடம் வந்து,

‘ இங்க என்னதான் பிரச்சனை’  சத்தம் போட்டார்கள்.

அடிபட்டவன் போலிஸ்காரர்கள் அருகேபோய் நின்று தன் வீங்கிய முகத்தைக்காண்பித்தான். அவனை அடித்தவன் எதுவும் பேசாமல் மவுனமாக நின்றுகொண்டிருந்தான்.

’சார் எம் மொபைல இப்பத்தான் யாரோ ரவுட்டிட்டான் காணுல’ ஒரு நடுத்தர வயதுக்காரர் அழுது அழுது புலம்பினார்.

’என் கழுத்துல இருந்த   ரெண்டு பவுன் தங்க நெக்லசு  காணூல. அய்யய்யோ’ என்று இளம் வயதுக்காரி  ஒருத்தி  ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள்.

‘ என் பொட்டி என் பொட்டி என் பொட்டி’ என்றபடி மதுரைக்குப்போகும் மடிசார் புடவை மாமி  லபோ திபோ என்று கூச்சலிட ஆரம்பித்தாள்.

போலிஸ்காரர்கள் இருவரும்  இந்தக் கம்பார்ட்மெண்டில் சைடு அப்பரில் தன் பெண்டாட்டிக்கு ஏதோ அநியாயயம் நடந்துவிட்டதாய் அமர்க்களம் செய்தவனைக்கெட்டியாகப்பிடித்துக்கைகளைப்பின்புறமாய் இழுத்துக் கட்டினர்.

அவனோடு  மனைவி என வந்திருந்த பெண் அழுதுகொண்டே நின்றாள்.

போலிசுகாரரில் ஒருவர் பேசினார்.

‘இவுங்க ரெண்டு பேருமே திருட்டு கும்பலை ச்சேந்தவங்க. இவங்களோட இன்னும் ரெண்டு பேர் ஆணும் பொண்ணும் ஜோடியா உண்டு. ஒரு ஜோடி இப்பிடித்தான் குய்யோ முறையோன்னு  பெரிய கலாட்டா ஆரம்பிக்கும்  அந்தக்களேபரத்தில் இன்னொரு ஜோடி திருட்டுத்தொழில் பாக்கும்.  ஆக ஒரு ஜோடி கலாட்டா பண்ண  ஒரு ஜோடி திருடும்’

அடுத்திருந்த போலிசுக்காரர் என்ன என்ன அங்கே திருடுபோனது அவர்களின் பெயர்விலாசம் போன் நெம்பர்  இன்னும்  தேவையானவைகளைக்குறிப்பு எழுதிக்கொண்டார்.

‘ எந்த  ஸ்டேசன்ல நீங்க இறங்குறிங்களோ அந்த  இருக்குற ரயில்வே போலிசு  கிட்ட போய் நடந்த விபரம் குறித்து  தகவல் தெரிவிச்சிட்டுப்போகணும். ஏதும்  சேதின்னா நாங்க உங்கள கூப்பிடுவோம்’ அவர் தன் பணி முடித்துக்கொண்டார்.

 தாய்மார்கள் அவரவர்கள் தங்கள் கழுத்தைக் கைகளை காதை மூக்கைத் தொட்டு தொட்டு.ப்பர்த்துக்கொண்டனர்.  கொண்டுவந்த  தங்களது உடமைகளைச்சரி பார்த்தனர்.

ரயில்வண்டி எது எப்பிடி இருந்தால் எனக்கென்ன என்று  சொல்லி வேதாந்தமாய் ஓடிக் கொண்டே இருந்தது.

திருச்சி சந்திப்பில்  ரயில் வண்டி நின்றது. அங்கே  பிளாட்பாரத்தில் பெண் போலிசு இருவர் தயாராய் நின்றுகோண்டிருந்தனர்..

நான்கு போலிசுகாரர்களும்  திருட்டுக்கும்பல் ஆண் பெண் இருவரையும் இறக்கி  பிளாட்பாரத்திற்கு நெட்டிக்கொண்டு சென்றனர்.

திருச்சி சந்திப்பில் எங்கள் கம்பார்ட்மெண்டின் அந்தக்காலியான சைடு அப்பர் மற்றும் லோயர் பர்த்துக்கு  இப்போது புதிய ஜோடி ஒன்று அத்தர் மணம் வீச உலாவி வந்து கால்களை நீட்டி அமர்ந்துகொண்டது.

 நாளைக்கு கன்னியாகுமரியில்  அவர்களுக்கு ஹனி மூனாம். அவர்களை ரயில் ஏற்றிவிடவந்தவர்கள்  அவர்களிடம்பேசிவிட்டுச்சென்றதிலிருந்து எனக்குக் கசிந்த  சமாச்சாரம்.

‘கொரோனா காலத்தில்  ஹனிமூனா’  

என் மனம்  ஏது ஏதோ யோசனைக்குத்தாவியது.

——————————————————————-

Series Navigationஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள் கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *