இசையும் வசையும்

 

 

லதா ராமகிருஷ்ணன்

 

பாடகனின் அநாதிகாலம்!

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)

 

(சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

 

எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே

என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்

மேடையில்…..

காதல் என்று அவன் பாடுவது எனக்குக்

காலம் என்பதாய் குழம்புகிறது.

அவனை மாற்றியிருக்குமோ காதல்?

ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?

எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்

மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.

குரலில் கரகரப்பு கூடுகிறது.

ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்

கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்

செல்லப் பாப்பாவும் வரக் காண்பது

சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!

இசையின் உன்மத்தநிலையில்

சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்

அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

என்று அழைக்கும் அந்தக் குரல்

கண்ணனுடையதாக _

கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்

பாலினங் கடந்து!

வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்

முன்நெற்றி முடிச்சுருளுமாய்

அந்தப் பாடகனின் குரல்

அநாதி காலத்திலிருந்து கிளம்பி

அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.

மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்

அவனுடைய பிரதிபிம்பங்களாய்….

அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய

விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்….

பாடலை எழுதிய, இசையமைத்த

கைகளும் மனங்களும்

தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்

இரண்டறக் கலந்து

ஈரம் நிறைக்கும் இசையில்

அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்

விரவிய ரசிகர்களின்

காலம் இல்லாமலாகியது.

அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்

அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து

அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது

அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி

அவனை அத்தனை அன்போடு

வழியனுப்பிவைக்கிறார்கள்.

நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை

உருவாக்கித்தந்தவனுக்கு

என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்

நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.

 

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என்ற கர்ணன் படப் பாடலை சித் ஸ்ரீராம் ஏதோ விழாவில் பாடிய காணொளி ஒன்றை வைத்து அவரை அப்படித் திட்டித் தீர்க்கிறார்கள் சிலர்.  

(இது பாடலின் லிங்க் (https://www.youtube.com/watch?v=OTT1HlOUS5Q)

ஏற்கனவே உள்ள பாடலை இன்னொரு பாடகர் மேடையில் பாடுவதொன்றும் அத்தனை அராஜக விஷயமோ இதுவரை நடக்காத விஷயமோ அல்ல. இன்று கர்நாடக இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், கானா பாடகர்கள், மேற்கத்திய இசைப் பாடகர்கள் என பலதரப்பட்ட இசைக்கலைஞர்கள் திரைப்படத்துறையில் இருக்கிறார்கள்.

கர்ணன் படத்தில் எல்லாப் பாடல்களுமே பிரபலமானவை. எல்லாப் பாடல்களுமே கர்நாடக இசையில் அமைக்கப்பட்டிருப்பவை. இன்னும் சொல்லப்போனால் சமீப காலமாக நடந்து வரும் இசைக்கான ‘ரியாலடி ஷோக்களில் சினிமாப் பாடல்கள் அனைத்திற்குமே பொதுவான அடிப்படையாக கர்நாடக இசை அமைந்திருப்பதை ஷட்ஜமம், பஞ்சமம் என நடுவர்கள் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக்காட்டு கிறார்கள். புழக்கத்திலுள்ள பல்வேறுவிதமான இசைகள் திரையிசையில் கலந்து தரப்படுகின்றன. இதில் தவறேதுமில்லை. ஃப்யூஷன் பியூஸிக், சேர்ந்திசை, என பல புதுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழல் இன்று. IMPROVISATION, கல்பனா சங்கீதம் போன்ற பிரிவுகளும் இசையில் உண்டு

இன்னொன்று, பெயர்பெற்ற எந்தக் கலையைக் கற்றுத் தேர்ச்சி பெறுவதற்கும் நிதி வசதியும் நிதியுதவியும் அவசியம். ஆக, இது வர்க்கம் சார்ந்த விஷயமும்கூட. இந்த உண்மை பொருட்படுத்தப்படுவதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அழுத்தந் திருத்தமாக மறைக்கப்படுகிறது

பிரபல பாடலை ஒரு பாடகர் ஆர்வங்காரணமாகப் பாடலாம். அது மூலப் பாடலைப் போலவே இருக்கும் என்றோ இருக்கவேண்டும் என்றோ எதிர்பார்க்கலாகாது. அப்படி யிருக்கவேண்டிய அவசியமுமில்லை. பாடும் நோக்கம் மூலப் பாடலையோ பாட லைப் பாடியவரையோ மதிப்பழிக்கவேண்டும் என்பதாக இருக்கலாகாது. அவ்வளவே.

சித் ஸ்ரீராம் கர்ணன் படப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப்போல் பாடவில்லை யென்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. ஆனால், ’இவர் யார் பாடுவதற்கு’ என்றவிதமாய் எழும் வசவுகளும், ‘வேண்டுமென்றே இவர் சிவாஜி பாடலை சீர்காழி பாடலை மதிப்பழிக்கிறார் என்பதாய் தூற்றுவதும் அபத்தமாய் இருக்கிறது. இந்த அபத்தத்தின் பின்னே ஒரு அரசியலும் தெரிகிறது.

நிறைய பேர் கர்நாடக இசையென்பதை மேற்குடி சார்ந்த விஷயமாய், ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த விஷயமாய்ப் பார்த்து சமயம் கிடைத்தபோதெல்லாம் கர்நாடக இசையைத் தூற்றுவதும் மதிப்பழிப்பதும் தமிழ்ச்சூழலில் வழக்கமாக நடந்துவரும் ஒன்றுதான். ஆனால், உண்மைநிலவரம் அதுவல்ல. சமுதாயத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த எல்லோருமே கர்நாடக சங்கீதம் கற்பதில்லை என்பது ஒருபுறமிருக்க இன்றைய சூழலில் யாரும் செலவேயில்லாமல் இணையம் வழி கர்நாடக சங்கீதத்தைக் கேட்க முடியும்; கற்க முடியும். ஆனால், கற்க ஆர்வமிருப்பவர்கள்தான் கற்கிறார்கள்; கற்பார்கள். எந்தப் பிரிவினராயிருந்தாலும் சரி.

பல தமிழ்த் திரைப்படங்களில் கர்நாடக இசைக்கலைஞர்கள் நகைச்சுவைத்துணுக்கு களாக்கப்பட்டிருக்கிறார்கள். பிரபல பாடல்கள் கேலி செய்யப்பட்டிருக்கின்றன. முத்தைத் தரு பத்தித் திருநகை / அத்திக்கிறை சத்திச் சரவண /
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் என்ற திருப்புகழ் பாடல் பிதாமகன் படத்தில் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டலாம் (சிம்ரனின் ஆட்டமும் அந்தக் காட்சியும் ரசிக்கத்தக்கவை என்பது வேறு விஷயம்!)

‘மாங்கல்யம் தந்துனானேன’ என்ற இந்துமதக் கல்யாணங்களின் முக்கிய சுலோகம் எப்படியெப்படியெல்லாமோ கேலிசெய்யப்பட்டு கர்ணகடூரமாகப் பாடப்பட்டிருக் கிறது. அப்போதெல்லாம் எழாத கோபம் கர்ணன் படப் பாடலை சித் ஸ்ரீராம் எந்த விதமான மதிப்பழித்தல் நோக்கமுமில்லாமல் பாடியிருப்பதில் ஆத்மார்த்தமாகப் பாடியிருக்கிறார் என்று நினைப்பவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லக்கூட அஞ்சும் அளவு ஏன் இத்தனை ஆக்ரோஷமாக, HATE SPEECH ஆக வெளிப்படுகிறது?

 

 

author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *