பொறாமையும் சமூகநீதியும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 17 in the series 12 பெப்ருவரி 2023

தாமஸ் சோவெல்

ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு தற்போதைய புதிய பெயர் “சமூக நீதி”

வரலாற்று ரீதியில் நடந்த அநீதிகளால் சில குழுவினர் ஏழையாக இருப்பதை வைத்து எழையாக இருக்கும் எல்லா பேருக்கும் வரலாற்று ரீதியான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பொத்தாம்பொதுவாக அடித்துவிடுகிறார்கள். உலகத்தின் பல பகுதிகளில் ஆரம்பத்தில் மிகுந்த ஏழையாக இருந்த பல குழுவினர், கடுமையான உழைப்பின் காரணமாகவும், வலி நிறைந்த தியாகங்களாலும் சராசரிக்கும் மேலான வளமைக்கு பல தலைமுறைகளுக்கு பின்னால் வந்திருக்கிறார்கள். இப்போது ஆழமான சிந்தனையாளர்கள் நடுவே வந்து, இப்படி கடுமையான உழைப்பின் மூலம் அடைந்த வளமையை முன்பு வளமையாக இருந்தாலும் அந்த அளவுக்கு கடுமையாக உழைக்காதவர்களுக்கு பிரித்து கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.

பல மூன்றாம் உலக நாடுகளில், அங்கு ஏற்கெனவே இருந்த மக்கள் கடுமையான, சில நேரங்களில் ஆபத்தான வேலையான ரயில் ரோடுகளை கட்டுதல், சுரங்க வேலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தல், தேயிலை தோட்டங்களில் வேலை செய்தல், கரும்பு பயிரிடுதல் போன்ற வேலைகளை செய்ய மறுத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர்களுக்கு அங்கே இருந்த வளமையான நிலங்களும், அந்த நிலங்களில் மிகக்கடுமையாக வேலை செய்யாமலேயே கிடைத்த உற்பத்தியுமே. இவர்களுக்கு அப்படி கடுமையாக தேயிலை தோட்டங்கள் போன்றவற்றில் வேலை செய்ய தேவையுமில்லை.

அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் இல்லாத கூலிகள், பெரும்பாலும் சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்த கூலிகள், கொண்டுவரப்பட்டு, அந்த நாட்டின் பழங்குடிகள் செய்யவிரும்பாத வேலைகளை செய்விக்கப்பட்டார்கள். இது காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த மலேசியா, இலங்கை தொட்டு பெரு, பிஜி, கென்யா உகாண்டா என்று பல்வேறு இடங்களில் சில்வற்றை சொல்லலாம்.

இந்த சீனர்களும் இந்தியர்களும், தங்களது சொந்த நாடுகளில் கஷ்டப்பட்டிருந்ததை விட்டு இந்த புதிய வாய்ப்புக்களை பயன்படுத்திகொண்டு அங்கே (மற்றவர்களுக்கு வாழ போதாததாக இருக்கும்) வருமானத்திலிருந்து சேமித்து பிறகு சிறு கடை வைப்பவர்களாகவும், சொந்தமாக புதிய இடங்களில் நிலம் வாங்கி விவசாயம் செய்பவர்களுமாக ஆனார்கள்.

முன்னேறுவதன் முதல் படி எப்போதுமே நீண்டதாகவும், இடையூறு அற்ற வேலையாகவுமே இருக்கிறது. ஆரம்பத்தில் பிரயோசனம் என்று ஒன்றையும் காணமுடியாததாகவும் இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் சீன கடைக்காரர்கள் மிக நீண்ட நேரம் கடைகளை திறந்து வைத்திருப்பது தெரிந்ததே. ஒரு சீன பெண், முழங்காலளவு தண்ணீர் நிற்கும் வயலில் ஒரு குழந்தையை முதுகில் கட்டிகொண்டு வேலை செய்வது அடிக்கடி பார்க்கக்கூடிய காட்சிதான். தெற்கு ஆப்பிரிக்காவில் இந்திய விவசாயிகள் மற்றவர்களுக்கு வேலை செய்தது போக, வீட்டுக்கு வந்து தங்கள் நிலங்களில் நிலா வெளிச்சத்தில் களை பிடுங்கிவிட்டு, அதிகாலையில் உற்பத்தியை வீடு வீடாக சென்று விற்பதை பார்க்கமுடியும். இது போன்ற பல்வேறு கதைகளை நாம் உலகத்தின் எல்லா நாடுகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் லெபனீஸ் மக்கள், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் முன்னொரு காலத்தில் யூதர்கள் இப்படி கடுமையான உழைப்பில் உழன்றிருக்கிறார்கள்.

ஒருவழியாக, சில வேளைகளில் இரண்டாம் தலைமுறையிலேயே, இந்த குழுக்கள் வளமை அடைகிறார்கள். இவர்களது வியாபாரங்கள் விஸ்தரிக்கின்றன. இவர்களது குழந்தைகள் படித்த தொழில் முனைவர்களாக ஆகிறார்கள். இப்போதுதான் இவர்களை பார்த்து அங்கிருக்கும் பழங்குடியினர் பொறாமைப்பட ஆரம்பிக்கிறார்கள். முதன் முதல் பருத்தி ஜின்களும், அரிசி ஆலைகளும் இந்தியர்களாலும் சீனர்களாலும்தான் கட்டப்பட்டன என்பதை வெகுகாலத்துக்கு முன்னரே மறந்துவிட்ட அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும், இந்த குழுக்கள் நாட்டின் பருத்தி ஜின்களையும் அரிசி ஆலைகளையும், இதர முக்கிய சொத்துக்களையும் கைப்பற்றிவிட்டதாக கூறி இந்த குழுக்களை அவதூறு செய்ய ஆரம்பிக்கிறார்கள். பல உற்பத்தி பொருட்களும், சேவைகளும் இந்த குழுக்களாலேயே அங்கிருக்கும் பழங்குடியினருக்கு கொண்டு வரப்பட்டன என்பதை வெகு வசதியாக உதாசீனம் செய்துவிடப்படுகிறது.

அங்கே இருக்கும் பழங்குடிகள் மட்டுமே இது மாதிரி பேசுவதில்லை. தொலைதூரத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஆழமான சிந்தனையாளர்களும் மலேசியாவில் இருக்கும் சீனர்கள் அங்கிருக்கும் மலாய்களை விட இரண்டு மடங்கு சம்பாதிப்பதன் வருமான சமத்துவமின்மையை பற்றி விலாவாரியாக எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். அரசாங்க ஆலோசகர்களாக உருமாறி, இப்படிப்பட்ட “வருமான சமத்துவமின்மையை” ” சீர் செய்ய” பல திட்டங்களை “சமூகநீதி” என்ற பெயரால் உருவாக்கவும் பரிந்துரை செய்யவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அங்கிருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேலே போகிறார்கள். அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்த முக்கிய பங்காற்றிய குழுக்களையே நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்கிறார்கள். 50000 இந்தியர்கள் உகாண்டாவிலிருந்து இடி அமீனால் துரத்தப்பட்டது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு. ஆனால் வரலாற்றில் இது போல பல நடந்திருக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டதும், பல ஆசிய நாடுகளிலிருந்து சீனர்கள் துரத்தப்பட்டதும் இது போலவே.

நேரடியாக இப்படிப்பட்ட திறம் வாயந்த குழுக்கள் நேரடியாக துரத்தப்படவில்லை என்றாலும், அவர்களது நிலையை மிகுந்த பிரச்னைக்கு உள்ளாக்கி அவர்கள் ஓடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதும் நடக்கலாம். வியத்நாமின் “படகு மக்கள்” என்பவர்கள் இப்படிப்ப்ட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் சீனர்கள். 1960இல் நைஜீரியாவின் இபோக்கள் என்பவர்களும், துருக்கியில் ஆர்மீனியர்களும், தெருக்களில் படுகொலை செய்யப்பட்டபின்னால், மீதமிருந்தவர்கள் தானாக ஓடினார்கள்.

பொறாமை என்பதை ஏழு மிகப்பெரும் பாவங்களில் ஒன்றாக திருப்பி அழைக்க வேண்டும். குறைந்தது, அதை “சமூக நீதி” என்று கூறாமலாவது இருக்கவேண்டும்.

அக்டோபர் 4, 1985

Series Navigationநாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300எங்கள் தீபாவளி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *