சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

This entry is part 3 of 4 in the series 28 ஏப்ரல் 2024

தாரமங்கலம் வளவன்

திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள்.

’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும் பாவங்கள் செய்யாதீர்கள். ’

அந்த மூன்று மனிதர்கள் பேசும் போது அவர்கள் இயல்பாக இல்லை. ஏதோ வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே பேசுவது போல் தெரிந்தது. வளைந்து, நெளிந்து கொண்டே பேசினார்கள். அவர்களே சித்ரவதைகளை அனுபவித்தவர்கள் போல் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் சம்மந்தப் பட்ட  டிவி சேனல்காரர்கள் இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. எங்கள் கட்டுப்பாட்டை மீறி இது நடந்து விட்டது. இது கடவுளின் செயல் என்றே சொன்னார்கள்.

முன்பு ஒரு நாள்.

எம லோகம்.

பாவங்கள் புரிந்து, நரகத்திற்கு சென்று, எம தர்மன் அளிக்கும் தண்டனையை அனுபவிக்க சில மனிதர்கள், குலை நடுங்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைத் தூக்கிப் போடுவதற்காக, ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கிறது.

சித்ர குப்தன் தனது பெரிய கணக்குப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு, அந்த மனிதர்கள் செய்த பாவ புண்ணிய கணக்குகளை எம தர்ம ராஜனுக்கு பணிவுடன் படித்துக் காண்பிக்கிறான். பாவங்கள் செய்த மனிதர்களை,  எம தர்மனின் உத்தரவுப்படி, எம கிங்கரர்கள் கதறக் கதற பிடித்து அந்த கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்டு தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

எங்கு பார்த்தாலும் ஓலங்கள். கதறல்கள்.

சித்ர குப்தன் பேசினான்.

” பிரபோ.. இப்படி மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை கூட்டிக் கழித்துப் பார்த்து, தண்டனை கொடுக்கச் சொல்லி தங்களுக்கு ரெக்கமண்ட் செய்து எனக்கு சலித்து விட்டது. மனிதர்களை பாவங்கள் செய்ய அனுமதித்து விட்டு அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பார்ப்பதை விட, அவர்கள் அந்த பாவத்தை செய்வதற்கு முன்பே அவர்களைத் தடுக்க வேண்டும்.  ஆங்கிலத்தில் கூட ஒரு பழமொழி இருக்கிறது ’நடக்கும் முன்பே தடுக்க வேண்டும்’ என்று..”  

”ஆமாம். இந்த  பழமொழியை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.”

 ” உங்களுக்கு தெரியாதது இந்த மூவுலகத்தில் ஏது பிரபு..”

“ முகஸ்துதி வேண்டாம் சித்ர குப்தா..  மனிதர்கள் பாவங்களைச் செய்வதற்கு முன்பே எப்படி அவர்களைத் தடுப்பது..”

“ அதாவது பிரபு.. பாவங்கள் செய்பவர்களுக்கு, இப்படி நரகத்தில் சித்ரவதை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை பூலோக வாசிகளுக்கு நாம் முதலில் தெரியப் படுத்த வேண்டும். அப்படி தெரியப் படுத்தினால், அவர்கள் பாவங்கள் செய்யப் பயப் படுவார்கள்.”

”நரகத்தில் சித்ரவதை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை பூலோக வாசிகளுக்கு எப்படி தெரியப் படுத்துவது..”

“ இப்போது பூலோகத்தில் டிவி மூலமாகவே அனைத்து செய்திகளும் மக்களுக்கு தெரியப் படுத்தப் படுகிறது பிரபு. அதனால் நாமும் அதே வழியைத் தேர்ந்தெடுப்போம். பூலோகத்தில் பாவங்கள் செய்து கொண்டிருக்கும் சில மனிதர்களைத் தேர்ந்தெடுப்போம்.. குறிப்பாக அவர்களில் யாருக்கெல்லாம உடனடியாக ஆயுள் முடிகிறதோ அவர்களை எமலோகத்திற்கு கொண்டு வந்து சித்ரவதைகளை அனுபவிக்க வைத்து, பாவங்கள் செய்பவர்களுக்கு இப்படி நரகத்தில் சித்ரவதை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை  அவர்கள் வாயால், பூலோக வாசிகளுக்கு நாம் டிவி மூலமாகத் தெரியப் படுத்துவோம். அவர்கள் அப்படித் தாங்கள் அனுபவித்த சித்ரவதையை சொல்லும் போது இந்த பூலோக வாசிகளுக்கு ஒரு பயம் வரும். பாவங்கள் செய்ய மாட்டார்கள். அதாவது, அவர்களை ஒரு உதாரணமாக உபயோகப் படுத்துவோம்.”

“ அது சரி.. பாவங்கள் செய்து நமது எமலோகத்திற்கு வந்து விட்டவர்களை, கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்டவுடன் அவர்கள் கருகிப் போய் விடுவார்களே. அவர்களை எப்படி உதாரணமாக உபயோகப் படுத்திப் பேச வைப்பது..”

“ அதற்கு ஒரு உபாயம் வைத்து இருக்கிறேன் பிரபு. அனைவரையுமா நாம் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்டு கருக வைக்கிறோம். செய்த பாவங்கள், செய்த புண்ணியங்கள், இவைகள் இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்து தானே நாம் தண்டனை கொடுக்கிறோம்.  பல பாவங்கள் செய்திருந்தாலும், சில புண்ணியங்கள் செய்திருந்தால், அவர்களை நாம் சவுக்கடியோடு விட்டு விடுவதில்லையா. அப்படி தொடர்ந்து பாவங்களே செய்து கொண்டிருப்பவர்களை,  அவர்கள் ஆயுள் முடியப் போகும் தருவாயில் சில புண்ணியங்களைச் செய்ய வைப்போம்.”  

”  புரியவில்லை.  விளக்கமாகச் சொல்..”       

சித்ர குப்தன் தன் திட்டத்தை எம தர்மனுக்கு விளக்கினான்.

ரவு பதினோரு மணி.

சென்னை மாநகர மக்கள் உறங்க ஆரம்பித்து இருந்தனர்.

ஒரே நாளில் வண்ணாரப் பேட்டை, அண்ணா நகர், மற்றும் ஈசிஆர்  பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகள்.

வண்ணாரப் பேட்டை:

கண்டெய்னரில் கடல் மூலமாக இந்தோனேசியா, தாய்லாந்துக்கு சிறுமிகளையும், இளம் பெண்களையும் கடத்தும்  கும்பலில்,  டிரைவர் சுப்ரமணி ஒரு விசுவாச ஊழியன்.

பல ஆண்டுகளாக அவர்களிடம் அவன் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

சுப்ரமணி மட்டும் இது வரை நூறு சிறுமிகளையும், இளம் பெண்களையும் தனது கண்டெய்னரில் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்து இருக்கிறான்.

கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல், கொடூரமான முறையில் நடந்து தனக்கு கொடுக்கப் பட்ட பணியை கச்சிதமாக முடித்து வைப்பவன் அவன்.

அதனால் கணிசமான பங்கு கிடைக்கும் அவனுக்கு.

அந்தப் பணத்தில் தனது சொந்த ஊரான நீடாமங்கலத்தில் இருபத்து ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி போட்டு இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மிகவும் ஜாலியான பேர் வழி அவன்.

எப்போதும் சிரித்துக் கொண்டே தனது பாவ காரியங்களைச் செய்பவன்.

இப்போதும் அப்படி ஒரு வேலை அவனுக்கு கொடுக்கப் பட்டு இருக்கிறது.

எப்போதும் போல் சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடைத்து வைத்த கண்டெய்னர் லாரியை துறைமுகத்துக்கு ஓட்டிச் செல்லுமாறு அவன் பணிக்கப் பட்டுள்ளான். 

ஒரு கை விடப் பட்ட தொழிற்சாலையின் தகர கொட்டகையில் இருபத்திற்கும் மேற்பட்ட சிறுமிகளும், இளம் பெண்களும் அடைத்து வைக்கப் பட்டுள்ளதாகவும், அவர்களை அவன் தனது கண்டெய்னரில் அடைத்து, நள்ளிரவில் துறைமுகத்துக்கு  கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவனுக்கு கட்டளை வந்து உள்ளது.

அவன் ஸ்பாட்டுக்கு வந்து சேரும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது.

அவனுக்கு இடப் பட்டு இருக்கும் பணி கண்டெய்னரை ஓட்டுவது மட்டும் தான்.

மற்ற வேலைகளை அதற்காக முதலாளியால் நியமிக்கப் பட்டு இருக்கும் மற்ற ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அவன் டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்.

“ அதுக்குள்ள என்ன அவசரம்.. இருட்டில செய்ய வேண்டிய காரியமாச்சே நம்மோட காரியம். இன்னும் நேரம் இருக்குது.. பத்து மணி ஆகட்டும்.” என்றார்கள் மற்ற ஆட்கள்.

அந்த சுப்ரமணிக்கு, சித்ரகுப்தன் தேர்ந்தெடுத்து இருக்கும் மூவரில் தானும் ஒருவன் என்பது தெரியாது.

திடீரென்று சுப்ரமணியின் முகம் மாறியது.

டிரைவர் சீட்டில் இருந்தது கீழே குதித்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தான்.

யாரும் தன்னை கவனிக்க வில்லை என்பதை உறுதி செய்து கொண்டவுடன், மறைவாக புதராக இருக்கும் மரங்களுக்கும், செடிகளுக்கு இடையில் சென்றவன் டிவி சேனல்காரர்களுக்கு போன் செய்தான் சுப்ரமணி.   

பிறகு தனது கண்டெய்னரில் வந்து உட்கார்ந்தான்.

நேரம் கடந்தது.

மற்றவர்கள் தங்களது வேலையை கச்சிதமாகச் செய்து முடித்து அவனை கண்டெய்னரை எடுக்கச் சொன்னார்கள்.

வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினான் சுப்ரமணி.

மணி இரவு பதினொன்று ஆகி விட்டது.

துறைமுகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த அவனது  கண்டெய்னர் லாரி திடீரென்று ரூட் மாறி போலீஸ் ஸ்டேஷன் முன் வந்து நின்றது.

ஏற்கனவே அவன் சொல்லி இருந்த படி டிவி ரிப்போர்ட்டர்கள் அங்கு வந்து சேர்ந்து இருந்தார்கள்.  சுப்ரமணியின் அந்த கண்டெய்னரைப் பார்த்தவுடன் அங்கு நின்று கொண்டிருந்த டிவி ரிப்போர்ட்டர்கள் தங்கள் கேமராக்களோடு அந்த கண்டெய்னரை நோக்கி பிளாஷ் லைட் வெளிச்சத்துடன் ஓடி வந்தனர்.

டிரைவர் சுப்ரமணி தனது டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கி, அந்த கண்டெய்னர் லாரியின் அந்த பெரிய பின் பக்க கதவைத் திறந்து அவர்களுக்கு காட்டினான்.

கேமராவின் பிளாஷ் வெளிச்சம் கண்டெய்னர் லாரி உள்ளே பாய, உள்ளே சிறுமிகள், இளம் பெண்கள், வாய் திறக்க முடியாத நிலையில் இருப்பது தெரிந்தது.

அவர்களின் கை கால்கள் மற்றும் வாய், துணியால் கட்டப் பட்டு இருந்தது.

டிரைவர் சுப்ரமணி போலீசில் சரணடைந்தான். அந்த சிறுமிகளும், இளம் பெண்களும் காப்பாற்றப் பட்டார்கள்.  அந்த கும்பலின்  மூலகர்த்தாக்கள் பிடிபட்டனர்.

றக்குறைய அதே சமயத்தில் ஹிராயின் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர், தனது காரை வேகமாக ஓட்டி வந்து, அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிறுத்தினான்.

அதே போல் டிவிக்காரர்கள் தங்கள் காமெராக்களுடன் அந்த காரின் டிக்கியை நோக்கி ஓடினார்கள். 

ஏற்கனவே அந்த டிரைவர் டிவி ரிப்போர்ட்டர்களை அங்கு வரச் சொல்லி இருந்தான். அந்த காரைப் பார்த்தவுடன் அங்கு நின்று கொண்டிருந்த டிவி ரிப்போர்ட்டர்கள் தங்கள் கேமராக்களோடு அந்த காரை நோக்கி பிளாஷ் லைட் வெளிச்சத்துடன் ஓடி வந்தனர்.

டிரைவர் சீட்டுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த முதலாளி கத்தினார்.

“ ஏண்டா, இங்க எதுக்கு வண்டியைக் கொண்டு வந்தே.. உனக்கு என்னா பைத்தியமா..”

தன்னுடைய முதலாளி சொல்வதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாமல், அந்த காரின் டிரைவர், காரை விட்டு இறங்கி, போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடி அங்கு தூக்க கலக்கத்தில் இருந்த அந்த போலீஸ்காரர்களிடம் ஏதோ சொன்னான்.

உடனடியாக அந்த காரை நோக்கி ஓடி வந்த போலீஸ் காரர்கள், அந்த காரின் டிக்கியைத் திறந்தார்கள். டிவி கேமராக்களின் பிளாஷ் லைட் வெளிச்சம் அடிக்க, அங்கே இருந்த ஹெராயின் போதைப் பொருளை டிவி கேமராக்களின் முன்னிலையில் போலீசார் கைப்பற்றினர். அந்த முதலாளியையும் கைது செய்தனர்.

ந்து அரசு அதிகாரிகள், ஒரு மாலை நேரத்தில், ஈசிஆர் ரிசார்ட் ஒன்றின் ஒரு அறையில் கூடி இருந்தார்கள்.

அந்த அறையில் மது குப்பிகள் நிரம்பி இருந்தன.

போலி ஆவணங்கள் மூலம் ஐம்பது ஏக்கர் அரசாங்க நிலத்தை 99 வருட லீசுக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க அவர்கள் கூடி இருந்தார்கள்.

அந்த தனியார் நிறுவனம், சம்மந்தப் பட்ட ஐந்து அரசு அதிகாரிகளுக்கு பத்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்து இருக்கிறார்கள்.

இரவில் அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து பத்து கோடியைப் பெற்று, ஐந்து பேருக்கும் விடிவதற்குள் இந்த லஞ்சப் பணம் பிரித்துக் கொடுக்கப் பட வேண்டும்.

அவரவர் கைகளுக்கு இந்தப் பணம் கிடைத்தவுடன் காலையில் அதற்கான கோப்புகளில் பணம் வாங்கிக் கொண்டவர்கள் கை யெழுத்து இடுவார்கள்.

இது தான் ஏற்பாடு.

செயற் பொறியாளர் கோபால் இந்த ஐந்து பேரில் ஒருவர். அவருக்கு இந்த பணி கொடுக்கப் பட்டு இருக்கிறது. அவர் அந்த தனியார் நிறுவனத்தின் ஓனர் வீட்டிற்குப் போய்  பத்து கோடி ரூபாயைப் பெற்று, விடிவதற்குள் அந்த பணத்தை மற்ற நான்கு நபர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இப்படி ஏற்பாடு செய்து, கோபாலிடம் பணி ஒப்படைக்கப் பட்டவுடன் மற்றவர்கள் கிளம்பி அவரவர் வீட்டிற்குப் போனார்கள்.

இரவு பத்து மணிக்கு அந்த தனியார் நிறுவன ஓனரிடம் இருந்து பத்து கோடிப் பணத்தைப் பெற்ற இன்ஜினியர் கோபால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு  மற்ற நபர்களுக்கு பிரித்துக் கொடுக்கப் புறப்பட்டவர், திடீரென்று மனம் மாறி, அவரே மீடியாக்காரர்களுக்கு போன் செய்து தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

அவரது வீட்டில் இருந்து மீடியாக்காரர்களிடம் அவர் அனைத்தையும் விவரித்து பேச ஆரம்பிக்க, டிவிக்களில் நேரலையாக அவரது வீட்டில் இருந்தது அது ஒளிபரப்பப் பட்டது,  சம்மந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர். அந்த செயற்பொறியாளர் அப்ரூவர் ஆனார்.

இப்படியாக அந்த மூன்று குற்றங்கள் தடுக்கப் பட்டன. அதன் மூலகர்த்தாக்கள் கைது செய்யப் பட்டு பின்னர் தண்டிக்கப் பட்டனர்

*                                    *                                       *

சில நாட்களில் அவர்களின் ஆயுள் முடிந்தது.  மூவரும் எமலோகம் வந்து சேர்ந்தார்கள்.

எப்போதும் போல் ஒரு நாள்.

அன்று போல், பாவங்கள் புரிந்து எம தர்மனின் தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் மூன்று மனிதர்கள், குலை நடுங்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கிறது.

சித்ர குப்தன் தனது பெரிய கணக்குப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு பாவ புண்ணிய கணக்குகளை எம தர்ம ராஜனுக்கு பணிவுடன் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறான்.

எங்கு பார்த்தாலும் ஓலங்கள். கதறல்கள்.

எம கிங்கரர்கள் அவர்களைக் கதறக் கதற பிடித்து அந்த எண்ணெய் சட்டியில் போட்டு தண்டனையை நிறைவேற்ற எத்தனிக்கும் சமயம்..

“ நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்.”

திடீரென்று சித்ர குப்தன் கூவினான்.

”பிரபோ… ஒரு பெரிய தப்பு நடந்து விட்டது. இங்கு இருப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டிப் பாருங்கள்..”

“ என்னையே கூட்டிப் பாரு என்று எனக்கு வேலை கொடுக்கிறாயா..”

“ பிரபோ.. கோபப் படாதீர்கள்.. இதில் ஒரு விஷயம் இருக்கிறது.. இந்த தலைகளின் எண்ணிக்கையை கூட்டிப் பாருங்கள்.. அப்புறம் நான் சொல்கிறேன் ”

“ சரி.. கூட்டிப் பார்க்கிறேன்.. ஒன்று. இரண்டு. மூன்று.. ”

“ பிரபோ. இந்த மூன்று பேரை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.. சில நாட்களுக்கு முன் ஒரு நாள். சென்னை நகரத்தில்,  மூன்று மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நல்லவர்களாக மாற்றினோம்.  திடீரென்று மூன்று குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப் பட்டன.”

“ ஆமாம். நாட்கள் ஓடி விட்டன.  இருந்தாலும் ஞாபகம் இருக்கிறது.”

” அந்த மூன்று பேர் தான் இவர்கள்.”

“ ஓகோ. அதற்குள் இவர்கள் ஆயுள் முடிந்து விட்டதா.”

“ ஆமாம்.”

“ அது சரி.. இவர்கள் எத்தனையோ பாவங்கள் செய்து இருந்தாலும், கடைசியில் இவர்களை ஒரு புண்ணியம் செய்ய வைத்தோமே. இவர்கள் எப்படி எண்ணெய்ச் சட்டிக்கு வந்து சேர்ந்தார்கள்.. இவர்களை  உபயோகித்து, பூலோகத்தில் இருப்பவர்களுக்கு டிவி மூலமாக, பாவங்கள் செய்பவர்களுக்கு நரகத்தில் சித்ரவதை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை விளம்பரப் படுத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தோமே.”

” ஆமாம் பிரபு. நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதில் ஒரு தவறு நடந்து விட்டது. மன்னிக்க வேண்டும் பிரபு.. கடைசி காலத்தில் அவர்கள் செய்த அந்த புண்ணியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டேன்.”

” என்ன.. இவர்கள் செய்த அந்த புண்ணியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள மறந்து விட்டாயா..”

”ஆமாம் பிரபு. ”

”  சித்ர குப்தா.  என்ன சொல்கிறாய்.”

எம தர்மன் பற்களை நற நற வென்று கடித்தார்.

”சித்ர குப்தா.. நீ செய்த இந்த பாவத்திற்கு உன்னை இப்போது அந்த கொதிக்கிற எண்ணெய் சட்டியில் தூக்கிப் போடப் போகிறேன்.”

“ அய்யோ. பிரபோ, அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது எனது கணக்குப் புத்தகத்தில் அவர்களின் புண்ணியங்களை பாவங்களில் இருந்து கழித்துக் கொள்ள அனுமதியுங்கள். அதற்குள் நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்.. வேண்டுமானால் ரம்பை, மேனகை, ஊர்வசியின் நடனத்திற்கு ஏற்பாடு செய்யட்டுமா.. அதற்குள் நான் எனது கணக்கை சரி செய்து உங்களுக்கு காட்டுகிறேன். பிறகு இவர்களுக்கான தண்டனையை கொடுங்கள்..”

“ சரி.. அப்படியே ஆகட்டும்..”

கணக்கில் தான் செய்த தவறுக்காக தனக்கு எமதர்மன் என்ன தண்டனை கொடுத்து விடுவாரோ என்று பயந்து போன சித்ர குப்தன், எமதர்மனின் சிந்தனையை மாற்றி அவரது கோபத்தை தணிக்க வேண்டும் என்று உடனடியாக ரம்பை, மேனகை மற்றும் ஊர்வசியின் நடனத்திற்கு ஏற்பாடு செய்தான்.

நடனம் ஆரம்பித்தது.

எமதர்மன் நடனத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து, சித்ர குப்தன் தனது பெரிய கணக்குப் புத்தகத்தை விரித்து கணக்கைச் சரி செய்ய ஆரம்பித்தான்.

ம்பை, மேனகை, ஊர்வசியின் நடனம் முடிந்தது.

எம தர்மனின் கோபம் தணிந்தது.

அதற்குள் சித்ர குப்தனின் திருத்தப் பட்ட கணக்கு தயாராகி விட்டது.

எமதர்மனிடம் சித்ர குப்தன் திருத்தப் பட்ட கணக்கை படித்துக் காண்பித்தான்.

” சரி சித்ரகுப்தா. நீ சொன்னபடியே இவர்களை டிவியில் பேச வைக்கலாம். அதே சமயத்தில் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். தண்டனை இல்லாமல்,  இவர்களை விட்டு விட முடியாது.  அதனால் ஒவ்வொரு முறையும் ஐந்து கசையடிகள் கொடுத்து இவர்கள் மூன்று பேரையும் டிவி சேனல்கள் மூலம் பேச வை.” 

எமதர்மன் தனது தீர்ப்பைச் சொன்னார்.

  • வாசக சாலை இணைய இதழ்- அக்டோபர் 2023

    ——————————————————————–

Series Navigationதிரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்உறுதி மொழி
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *