கனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 3 in the series 5 மே 2024

.

சுலோச்சனா அருண்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுக்கப் பெற்ற ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்,’ ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனை இணையாசிரியராகக் கொண்ட ‘தமிழ் ஆரம் – 2024’ சிறுவர்களுக்கான சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப் பெற்றன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர், மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப் பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு. அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் ‘உலகப் புத்தகத் தினத்தைக் கொண்டாடும் இந்த வாரத்தில் எழுத்தாளர் இணையம் இந்த நூல்களை வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், கனடிய எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தனைப் போல ஏனைய எழுத்தாளர்களும் தங்கள் ஆக்கங்களை வெளியிட முன்வரவேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ மற்றும் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்’ ஆகிய நூல்களுக்கான வெளியீட்டுரையைத் திருமதி சசிகலா ஜீவன்ராம் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனது வெளியீட்டுரையில், கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுத்து வெளியிடப்பெற்ற இந்த நூலில் இலங்கை, இந்தியா, கனடாவைச் சேர்ந்த 21 பிரபல எழுத்தாளர்களும், பேராசிரியர்களும், திறனாய்வாளர்களும் ஒன்று சேர்ந்து குரு அரவிந்தனின் எழுத்துக்கள் பற்றித் தங்கள் பன்முகப் பார்வையை இந்த நூலில் எழுத்தில் வடித்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் குரு அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பான சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும் பற்றிக் குறிப்பிடும் போது, ஆங்கில மொழி மாற்றக் கதைகளையே வாசித்து வந்த எங்களுக்கு முதன் முதலாகக் குரு அரவிந்தன் அவர்கள் நேரடியாகவே தமிழில் தந்திருக்கும் இந்த வெளிநாட்டுக் கதைகள் அற்புதமானவை, அதற்காக அவரைப் பாராட்டுகின்றேன் என்று குறிப்பிட்டார்.

அடுத்து கனடா எழுத்தாளர் இணையத்தின் பொருளாளரும், எழுத்தாளருமான கனகசபை ரவீந்திரநாதன் ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கான வெளியீட்டுரையை நிகழ்த்தினார். சங்க இலக்கியப் பாடல் வரிகளை எடுத்து நவீன கதைகளை உருவாக்கியிருப்பது ஆச்சரியப்பட வைப்பதாகவும், அதே நேரத்தில் கொரோனா காலத்துக் கதைகள் அந்த இழப்பை நினைத்து அழவைப்பதாகவும் குறிப்பிட்டார். 

அடுத்து தமிழ் ஆரம் – 2024 சிறப்பு மலர் பற்றி வெளியீட்டரை நிகழ்த்திய இளைய தலைமுறையினரான செல்வி. அர்ச்சயா வீரபத்திர ஐயர் தனது உரையில் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்குமான இது போன்ற தமிழ் சார்ந்த இதழ்கள் தொடர்ந்தும் வெளிவரவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் அவசியமனது என்பதையும் குறிப்பிட்டார்.

முதற்பிரதி, சிறப்புப் பிரதிகளை முறையே பேராசிரியர் இ. பாலசுந்தரம், டாக்டர் கதிர்துரைசிங்கம், ஆனந் அரவிந்தன், வைஸ்ணவி ஜெயக்குமார், கிராமத்து வதனம் பெண்கள் அமைப்புத் தலைவி திருமதி கமலவதனா சுந்தா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர் குரு அரவிந்தனின் ஏற்புரையுடன் விழா சிறப்பாக முடிவுற்றது.

Series Navigationநாளைய சொர்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *