விஜயலட்சுமி கண்ணன்
கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது.
கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது.
“ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள்.
என்னத்தை சாதிக்க முடிந்தது?
காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் உண்மை.”
ரவி தென் இந்திய ரயில்வேயில் சாதாரண குமாஸ்தவாக சேர்ந்து அதிலேயே 35 வருடம் வேலை புரிந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் போது சீனியாரிட்டி வரிசையில் ஆபீஸ்
சூபெரின்டன்டு பதவி உயர்வு.
சுஜாதாவின் பிறந்தவீடும் மிக சாதாரண நாம் அடிக்கடி சொல்லும் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான். சுஜாதாவின் அப்பா வருவாய் துறை அலுவலகத்தில் செக்சன் ஹேட் பதவி. சுஜாதாவின் அம்மா தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை. சுஜாதாவுக்கு ஒரே தம்பி சுந்தர்.
திருமணம் ஆகி இருபத்திரண்டு வருடங்கள் ஓடி விட்டது. ஜோதிடத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விட்டது.
ஜோசியர்கள் பணம் சம்பாதிக்க அவர்களிடம் ஜோதிடம் கேட்க வருபவர்களை பயமுறுத்தி பிராயச்சித்தம் பண்ணுங்க என்று ஒரு பட்டியல் தருகிறார்கள்..ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தால் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம்.அல்லது இது சுத்த ஜாதகம்,அதனால் சுத்த ஜாதகம் தான் பொருந்தும் என்பார்கள்.பொருந்தாத ஜாதகத்தை அபார பொருத்தம் என்று காதில் பூ சுற்றி விடுவார்கள்.
இப்படி தான் சுஜாதா ஜாதகத்தை ரவி ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்து ரவி வெளி நாடு போவான், நிறைய சம்பாதிப்பான், வெளி நாட்டில் செட்டில் ஆகி விடுவான் என்று பெரிய ரீலாக விட்டார்.
சுஜாதா அப்பாவும் மயங்கி, நம்பி, சுஜாதாவை ரவிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டார்..
சுஜாதாவின் மாமா நல்லா தான் இருந்தார். ஐம்பது வயது கூட ஆகவில்லை. அடுத்த வாரம் லண்டன் போக எல்லாம் தயார்.
நல்ல வேலை கிடைத்து மாமா முதலில் போய் பிறகு மாமியும் போவதாக பிளான்.இப்படி ஆகும் என்று யார் கண்டார்கள்?
எந்த ஜோசியன் சொன்னான்?
காலையில் வங்கி வரை போய் வர்ரேன் என்று போனவர் அவரா வரவில்லை. தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
இதற்கு பின் சுஜாதாவுக்கு ஜோசியம் என்றாலே எரிச்சல்.
ஜாதகமே இல்லை என்று எந்த பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்துக் கொண்ட தன் அத்தை மகன் ராஜாவுக்கு என்னக் குறைச்சல்?
ராஜா பேருக்கு ஏற்றவாறு ராஜா மாதிரி மனைவி சுலோவுடன் நல்லா தான் இருக்கான்.
மனப் பொருத்தம் எந்த ஜோசியன் சொல்றான்?
மாலை வேளையில் காற்றாட மொட்டை மாடியில் உட்கார்ந்து கலா அம்மாவுடன் பேச்சை மெல்லத் தொடங்கினாள்.
“அம்மா, உன்னிடம் எனக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.
நீ தான் அப்பாவிடம் எப்படியாவது சொல்லணும்,”
என்று பீடிகை போட்டாள்.
“என்னடி கலா, என்ன குண்டு போட போகிறாய்?”
சுஜாதா ஒரு நொடியில் பதறி கலங்கி விட்டாள்.
“அம்மா, பயப் படாதே. குண்டு எதுவும் இல்லை.
எங்க வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் மகேஷை விரும்புகிறேன் .
அவரும் என்னை விரும்புகிறார்.
அவர் அம்மா அப்பா கிட்டே சொல்லிட்டார்.
அவர்களுக்கு பூர்ண சம்மதம்.
எப்ப வந்து உங்களை பார்த்து பேசலாம் என்று கேட்கிறார்கள்.”
“உங்க அப்பா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். எப்படி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லை.ஜாதகம் பொருத்தம் பார்க்கணும் என்பாரே.”: சுஜாதா கலங்கி போய் விட்டாள். கலாவின் அப்பாவை
சமாளிப்பது லேசில்லை.
“அம்மா,அவருக்கு ஜாதகம் எழுதவில்லை.”
“போச்சு போ!அப்பா ஒத்துக்க மாட்டாரேடி.”
சுஜாதாவுக்கு உண்மையிலேயே சந்தோஷம் தான்.ஆனால் ரவி தான் ஒரு கேள்விக் குறி.
இரவு எல்லாம் சுஜாதா கண் மூடவில்லை.
கலா கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டுமே என்ற வேண்டுதல்.
கலாவின் நண்பன் மகேஷ்க்கு ஜாதகம் இல்லை என்றதும் சுஜாதாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி.எந்த ஜோசியனுக்கும் புளுக வேலை இல்லை.
ரவி ஜோசியர் வீட்டுக்கு போய் இருக்கிறார்.
வந்தவுடன் எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பம்.
: “சுஜாதா, இதைப் பார்.நம்ம கலாவுக்கு பத்து பொருத்தம் உள்ள ஜாதகம்.”
“என்ன சொல்றீங்க?பத்துப் பொருத்தமா?
இருக்கவே இருக்காது.நன்றாகவே பூ சுத்தி விட்டு இருக்கார் உங்க ஜோசியர்”என்றாள் சுஜாதா.
“உனக்கு எப்பவும் கிண்டல் தான்.
கலாகுக்கு மிகவும் பொருத்தமான ஜாதகம்.
பத்துப் பொருத்தம் என்றால் ஜோசியர் பாஷையில் எட்டுப் பொருத்தம் இருந்ததால் ரொம்ப விசேஷம்.”
“சரி,சரி.”
“பெண்ணும் பிள்ளையும் பார்த்துக்கணும். பெரியவா பேசி முடிக்க வேண்டியது தான்.”
மிகுந்த குஷியில் இருந்தார் ரவி.
“ஜாதகம் கையிலே இருக்கா?”
“ம்மம். இதோ” என்று சுஜாதா கையில் கொடுத்தார்.
வாங்கி படித்த சுஜாதாவுக்கு திக் என்றது.
: எப்படி?
“சரி, நீங்க ஏற்ப்பாடு பண்ணுங்க.”சுதாரித்த வண்ணம் சுஜாதா ரவிக்கு பச்சைக் கொடி காண்பித்தாள்.
அன்று இரவு சுஜாதா கலா காதில் ஏதோ முணு முணுத்தாள்.
“எனக்கு தெரியாதே”.என்று கலாவும் கை விரித்தாள்.
இரண்டு நாட்கள் சென்ற பின் கலாவை பெண் பார்க்க வந்தார்கள். சுஜாதா ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டாள்.
பெண்ணுக்கு பிள்ளைக்கும் சம்மதம்.
பெற்றோர்களுக்கு பரம சந்தோஷம்.
கலா மகேஷ் திருமணம் இனிதே நடந்தது.
ஆயிரம் பொய் சொல்லிக் கூட ஒரு கல்யாணம் நடத்தலாம் என்பது இது தானோ?
- பத்துப் பொருத்தம்
- முனி