This entry is part 3 of 3 in the series 10 மே 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

மங்கள மங்களம் சோபன மங்களம்

மங்கள மங்களமே

மங்கள மங்களம் சோபன மங்களம்

மங்கள இங்கிதமே.

அமலா தயாபரா நினதாசியே மிகவே

சமாதானமுஞ் சந்தோஷ பாக்கியமாக வாழ்கவுமே.

மங்கள மங்களம் சோபன மங்களம்

மங்கள மங்களமே

திரியேக ரட்சகனே மரியாள் திருச் சுதனே

திரியேகர் நாமத்திலே யனுதினமே செய் அற்புதனே.

மங்கள மங்களம் சோபன மங்களம்

மங்கள மங்களமே

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை

வில்லாளன், சிம்பாரி மலை, பாப்புவா நியூ கினியா

நான், பாய்ந்துபோய், ஜேம்ஸ் பாதரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கினேன். அவரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்குவதற்காய், எனது இரு கைகள், அவர்’ மார்பைச் சுற்றி வளைத்தது. பாதர், கொஞ்சம் திமிறினார்.

நான் ஆத்திரத்தோடு கேட்டேன். “என்ன பாதர்.. முட்டாள்தனமாக செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.. இந்த கும்மிருட்டில், கண்மண் தெரியாம, நீங்க சுட்ட குண்டு, என் மேல் பட்டு இருந்தா, நானும் தானே செத்துப் போய் இருப்பேன் பாதர்..” என்றவுடன், ஜேம்ஸ் பாதர் உறுமினார்.

“ஐயோ.. இந்த மசளையான் தப்பிவிட்டானே வில்லாளன் .. எத்தனை கிறித்துவர்கள்.. எத்தனை கிறித்துவர்களைக் கொன்று இருக்கிறான், இந்த மசளையான் நாய்.. தப்பி விட்டானே… தப்பி விட்டானே” என்று உறுமிக்கொண்டே இருந்தார் ஜேம்ஸ் பாதர்.

நான், அமைதியாக அவரிடம் சொன்னேன். “பாதர்.. நான் இந்த ஏரியில், நீந்தி நீந்திப் பழக்கப்பட்டவன், உங்களுக்கு அந்தப் பழக்கம் இல்லை, இந்த இரவில், என்னோடு, நீங்களும் நீந்தி வருவது ஆபத்தானது. எனவே, நீங்கள் இங்கேயே இருங்கள்.. நான் போய், மசளையானைப் பிடித்து வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே, நான் ஏரி நீரில் இறங்கினேன்.

துப்பாக்கியில் தண்ணீர் பட்டுவிடாது இருக்க, அதை, எனது, கழுத்துக் கயிற்றில் கட்டிக்கொண்டேன். மெல்ல, மெல்ல கால் நீச்சல் மட்டும் அடித்து, சத்தம் அதிகம் எழுப்பாது நான், ஏரியின் மையத்துக்குப் போனேன்.

ஏரிக்குள் இருந்த மீன்கள், என் கால்களைக் கடித்தன. இருப்பினும், அதைப் பொறுத்துக்கொண்டு, நான் அமைதியாக நீந்தினேன். சில இடங்களில், நீருக்குள் இருந்த தாமரைக் கொடிகள், என்னை நீந்த விடாது, என் கால்களைச் சுற்றிக்கொண்டு, என் அமைதியான கால் நீச்சலைத் தடுத்தன.

நான், ஏரியில் இருந்த மேடுகள் ஒன்றொன்றாய்ச் சுற்றி வந்தேன். அவ்வளவு பெரிய ஏரியை, இவ்வளவு குறுகிய நேரத்தில், மசளையானால், கடந்து விடமுடியாது. நிச்சயம், ஏரிக்குள்ளேயே, எங்காவதுதான், மசளையான் மறைந்து இருக்கவேண்டும்.

நான், ஏரியின் நடுவில் இருந்த, ஒவ்வொரு பாறை மேடாய்ப் பார்த்துக்கொண்டே வந்தேன். அந்த இருளில், எனக்கு உருவங்கள் அவ்வளவாகத் தெரியவில்லை.

நீந்தி நீந்தி, நான் கொஞ்சம் களைத்துப்போய் விட்டேன். கைகளையும், கால்களையும் வைத்து, நீந்துவது எளிது. ஆனால், கால்களை மட்டும் அசைத்து, அசைத்து நீந்துவது என்பது கடினம்தான்.

கடைசியில், ஒரு பாறை மேட்டில், ஒரு பெரிய உருவத்தை நான் பார்த்தேன். என்னைவிட பெரிய உருவம். அகலமான அதன் மார்பே, அந்த உருவம், நிச்சயம் மசளையான் ஆகத்தான் இருக்கவேண்டும், என்று என் மனதில் உறுதியாகத் தோன்றியது.

நான் மெல்ல நீந்தினேன். ஆனாலும், அருகில் செல்லச் செல்ல, மசளையான், நான் நீந்தி வருவதைப் பார்த்துவிட்டான்.

உடனே, அவன் கோபத்தில், “ஆஆ” வேன, வாயை பெரிதாகத் திறந்தான். நான் எதிர்பார்க்கவேயில்லை. அவன் வாயில் இருந்து, நெருப்பு, வெளியில் அனலாக வெளியே வந்து விழுந்தது.

மீன்கள், தெறித்து ஓடின. நிலத்தில் இருந்த தவளைகள் சத்தம் போட்டன. எனக்கு இப்போது பயம் கொஞ்சம் வந்தது. இருப்பினும், துப்பாக்கி, எனது கழுத்தில் இருக்கும் தைரியத்தில், நான் அந்த மசளையான் இருந்த பாறை மேட்டை நோக்கி, வேகமாக நீந்தினேன்.

நான், இன்னும் அருகே வருவது பார்த்து, மசளையான், “கூ,,, கூ” என ஏதோ ஒரு குரலில், பலத்த சத்தத்தை எழுப்பினான்.

அந்த சத்தத்தைக் கேட்டதும், எங்கிருந்தோ சில நரிகள் ஊளையிட்டுச் சத்தம் எழுப்பின. அந்த இருளில், அடையாளம் தெரியாத சில பறவைகள், மசளையானின் கனத்த குரலுக்கு பயந்து, ஒலி எழுப்பி, படபடத்தன.

என்ன ஆச்சரியம், ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள், திடீரெனப் பறந்து, மினுக் மினுக் என்று ஒளியைக் காட்ட, தூரத்து மரங்கள், பேய்கள் அசைந்து அசைந்து ஆடுவது போல ஆடின.

அதைப் பார்த்த நான் முற்றிலும் பயந்து போனேன். இது போன்ற மாயாஜாலக் காட்சிகளை, மந்திர தந்திரங்களை, நான் இதற்கு முன் பார்த்ததில்லை. இப்போதுதான் பார்க்கிறேன். என் நெஞ்சம் நடுங்கியது.

எனது நடுக்கத்தை மறைக்க, நான், எனது கழுத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து, மேல்நோக்கிச் சுட்டேன்.

எனது துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு, மசளையான் பயந்துபோய் இருக்கவேண்டும். அவன் ஊளைக்குரல் நின்று போனது. சில பறவைகள், எனது துப்பாக்கி சத்தத்துக்கு செவி சாய்த்து, படபடவென பறந்து, தூரத்தில் இருந்த இன்னொரு மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டன.

நான், அந்த மேட்டை அடைந்து விட்டேன். மசளையான் இருந்த மேட்டில் ஏறினேன். நான் ஏறுவதைப் பார்த்த மசளையான் நடுங்கினான்.

அவனது நெட்டை உருவம் முன், நான் குட்டையாகத் தெரிந்தேன். பருத்த உடல்.

அந்த கும்மிருட்டில், எனக்கு இன்னும் கூட மசளையான் முகத்தை, சரியாகப் பார்க்க முடியவில்லை. எனவே, நான், எனது துப்பாக்கியை நீட்டிக்கொண்டே, இன்னும் கொஞ்சம், அவனருகே போனேன்.

அவன் முகத்தில் பெரிய மீசையும், காடு போல வளர்ந்த தாடியும் இருந்தது. நான் இன்னும் உற்று நோக்கினேன். அவனுக்கு இருபுறமும் தொங்கிய பெரிய மார்பகங்கள்.

நான், துப்பாக்கியோடு, இன்னும்’ அருகே போனேன். அவனது கண்களை உற்று நோக்கினேன்.

அந்தக் கண்கள், எனக்கு.. எனக்கு.. மிகவும் பழகிய கண்கள். நான், அவன் மீசையைத் தாண்டி, இன்னும் நன்றாக உற்று நோக்கினேன்.

அது.. அது.. என் பூவரசி. என் பூவரசி… அதிர்ச்சியில், நான், மேட்டில் இருந்து, நீருக்குள் விழுந்துவிடுவேனோ என்று எனக்கு அச்சம் ஏற்பட்டது.

“நீ.. நீ.. பூவரசி அல்லவா?” என்று குரல் எழுப்பியதுமே, மசளையான் என்னை அதிர்ச்சியோடு உற்றுப்பார்த்தது.

பின்னர், மசளையான் கோபமாகக் கத்தியது. “பூவரசி என்ற என் பழைய பெயரைக் கூப்பிடாதே. நான் ஆண்.. நான் ஆண். நான் இந்த மலையின் மசளையான்” என்றது.

பூவரசி அழவில்லை. என் பூவரசி அழவில்லை. “நான் இப்போது பூவரசன்” என, அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான்.

ஆனால், பூவரசியின் இந்த நிலை குறித்து, நான் அங்கே அழுதேன். நான்தான் பெண்ணைப் போலக் கதறினேன்.

“பூவரசி… பூவரசி.. உனக்கு பெண்குறியும் இருக்கிறது. ஆண் குறியும் இருக்கிறது. இருந்து விட்டுப் போகட்டும். நான், இப்போதும், உன்னைப் பெண்ணாக மதிக்கிறேன் பூவரசி.. நான் உன்னை இன்னொரு மனைவியாக நடத்துகிறேன் பூவரசி..” நான், இப்படிப் பேசியது, மசளையானுக்கு கோபத்தை உண்டாகியிருக்க வேண்டும். இருந்தாலும், நான் தொடர்ந்து கெஞ்சினேன்.

“பூவரசி.. பூவரசி.. அந்தக் குகையில் ஒரு நாற்றம் வந்து கொண்டே’ இருக்கிறது. அந்த நாற்றம், உனது மாதவிடாய் நாற்றம்தான்.. நீ இன்னும் பெண்தான் பூவரசி..” என்று மன்றாடினேன்.

பூவரசி, பளார் என்று என் கன்னத்தில் அறைந்தாள். அப்புறம், அவள், தனது ஆண்குறியைப் பிடித்துக்கொண்டாள். “ஆமாம் எனக்கு மாதவிடாய் வருகிறது. கூடவே, எப்போதாவது எனக்கு விந்தும் வருகிறது. கையடித்துக் காட்டட்டுமா?” என்றவுடன் நான் ஆவேசமானேன்.

“சரி நீ மசளையான் ஆகவே இருந்துவிட்டுப் போ.. அதற்காக, இரக்கமே இல்லாமல், ஏன் இத்தனைக் கொலைகளை நீ செய்தாய்? உன்னுடைய மாந்தரீக தந்திரங்களைக் கொண்டு, இப்படிக் கொலைகள் ஏன் செய்கிறாய்?” நான் கத்தினேன்.

மசளையான் இப்போது அமைதியாகப் பேசினான். “எனக்கு மாந்த்ரீகம் தெரியும் என்பது உண்மை. தாந்தரீகமும் எனக்குத் தெரியும் என்பது உண்மை. இவையெல்லாம், நீ என்னைவிட்டுப் போனபிறகு, இந்த மேலே உள்ள மலைகளில், நான் போய்க் கற்றுக்கொண்டதுதான்.” மசளையான், புஸ் புஸ் என மூச்சு விட்டுக்கொண்டே பேசினான்.

“ஆனால், நான் எந்தக் கொலையும் செய்யவில்லை” என்று மசளையான் சொன்னபோது, நான் அதிர்ச்சியில் ஆடிப்போனேன்.

“அப்படியென்றால் நீ மசளையானாய், நீ இந்த கிராமத்தில், என்னதான் செய்து கொண்டு இருக்கிறாய்?” என்று நான் மசளையானிடம் கேட்டேன்.

“கிராமத்துப்பக்கம், நான் ஒரே ஒரு நாள்தான் போவேன். அதுவும், அந்தப் புனிதக் குழல் திருவிழாவின் போது மட்டுமே போவேன், விழாவில், எனது பங்கு முடிந்தவுடன், உடனே, இந்த குகைக்குத் திரும்பி விடுவேன்.”

“அப்புறம், நான், அடிக்கடி போவது, இந்த மலைகள் மேலேதான். இந்த மலைகள் மேலே, என்னைப் போல், திருநங்கைகள், திருநம்பிகள் என்று நிறைய பேர், மந்திர தந்திரங்கள் கற்றுக்கொண்டு வாழ்கிறார்கள் என்பது, உனக்குத் தெரியுமா?”.

மசளையான் கொலைகள் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்தபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது.

“ஆம் மசளையான்.. ஆணிலும் சேராமல், பெண்ணிலும் சேராமல் இருப்பவர்களிடம், இரட்டை ஆத்துமா இருப்பதாக, இந்த மலை நம்புகிறது. அவர்களின் அந்த, ஆண் பெண் என்ற, இரட்டை சக்தியால்தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அப்படியெல்லாம், கிறித்துவம் ஒருபோதும் நினைக்கவில்லை. சரி.. வா.. நான் உன்னை பாதரிடம் அழைத்துப் போகிறேன்.” என்று நான் சொல்லிக்கொண்டே, மசளையான் கையைப் பிடித்து இழுத்தேன்.

மசளையான், என்னோடு வர, பிடிவாதம் பிடித்தான். நான் அவனை, சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

“மசளையான்.. உனக்கு ஒரு ஆணாகவேண்டும் என்ற ஆசை இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. அப்படி, நீ, முழு ஆண் ஆவதற்கு,  உன்னை நான், மலைக்குக் கீழே, தலைநகரில் இருக்கும் எங்கள் திருச்சபைக்குக் கூட்டிப் போகிறேன். சரியா” என்று நான் சொன்னவுடன், மசளையான் ஆச்சரியப்பட்டான்.

“மலைக்குக் கீழ், நம் ஊர் மாதிரியே, வேறு வேறு ஊர்கள் இருக்கின்றனவா” என்று ம்சளையான், அப்பாவியாகக் கேட்டான்.

நான் சிரித்தேன். “ஆம்.. கடல் கூட இருக்கிறது. கடல் தாண்டினால், ஆஸ்திரேலியா என்ற நாடும் இருக்கிறது. ஆஸ்திரேலியா போய், நீ அறுவை சிகிச்சை செய்துகொண்டால், பின்னர் நீ முழு ஆண் ஆகிவிடலாம். என்னை நம்பு. சரியா?” என்று நான் சொன்னவுடன்தான், மசளையான் என்னோடு, குகைக்கு நீந்தி வரச் சம்மதித்தான்.

நாங்கள் இருவரும், நீந்தி மறுபடியும் குகையை அடைந்தோம். நான், பூவரசி குறித்த எல்லா விசயத்தையும், ஜேம்ஸ் பாதரிடம் சொன்னேன்.

அதற்குள் விடிந்து விட்டது. குகையின் உள்ளே பார்த்தபோது, நாட்டாமை, குண்டடி பட்டு இறந்து கிடந்தார்.

மசளையான், நாட்டாமை கிட்டே போய் அழுதான். ”எனக்கு ஆண்பால் கொடுத்து, என்னை மசளையான் ஆக்கிய நாட்டாமையாரே.. எனக்கு இத்தனை வருடங்களும் உணவுகொண்டு வந்து கொடுத்து ஆதரித்தவரே..  அப்பா.. நீங்க இல்லாம, இனி எப்படி, புனிதக் குழல் திருவிழா நடக்கும்?” என்று மசளையான் அழுதபோது, நான்  அவன் கிட்டே போனேன்.

“மசளையான்.. நிச்சயம் விழா நடக்கும் மசளையான்..” என்றேன்.

பாதர் என்னை முறைத்தார். “முதலில் உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்” என்றார் பாதர்.

“பாதர்.. நிச்சயம் அது குத்தீட்டியாகத்தான் இருக்கும் பாதர். அவனை பிடித்து, கைவிலங்கிட்டு, தலைநகரில் உள்ள போலீசில் ஒப்படைப்போம் பாதர்..” என்று நான் சொன்னவுடன், பாதர் அமைதியானார்.

பாதர் ஜேம்ஸ், சிம்பாரி மலை, பாப்புவா நியூ கினியா

ஒரு வாரம் ஓடிப்போனது. குத்தீட்டி தான் செய்த கொலைகளை ஒத்துக்கொண்டான். அவனை, ஒரு தனிக்குடிலில், கட்டிப்போட்டு வைத்து இருந்தோம். இனி, அடுத்த வாரம், தலைநகர் கூட்டிப்போய், அவனை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.

வில்லாளனும், புனிதக்குழல் திருவிழா கொண்டாடுவதைத் தொடங்கிவிட்டான்.

இப்போது நாட்டாமை பதவியில், வில்லாளன் இருந்தான். மூக்கில், காட்டுப்பன்றிக் கொம்புகளோடு, உடம்பில் வண்ணவண்ண நிறத்தோடு, அவனைப் பார்த்தபோது, எனக்கு ஆச்சரியம் ஆக இருந்தது.

ஊர் மக்கள் மட்டுமல்ல, மற்ற கிறித்துவ சகோதர்களும், வில்லாளனே விழாவை எடுத்துச் செய்வதால், விழாவிற்கு இந்த முறை, கூட்டமாக வந்து இருந்தனர்.

விழா தொடங்கியது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே, சிறுவர்கள், விழாவில் கலந்து கொண்டார்கள்.

வில்லாளன் கூடவே தங்கி இருந்த மசளையான், கூட்டத்துக்கு நடுவே வந்து, சாமி பிடித்து ஆடினான். பார்ப்பதற்கு அது, பயங்கரமாக இருந்தது.

பின்னர், ஊர்ப்பெரியவர்கள், வந்திருந்த இளம்பிள்ளைகளை, பெருங்காஞ்சொறிகச் செடிகள் கொண்டு, லேசான காயம் வரும்வரை அடித்தார்கள். பிள்ளைகளின் உடல் தோல்கள், செடி தந்த அரிப்பினால், தடித்துப் போயின.

எல்லோரும் குடிலுக்குள் போனார்கள். நானும் போனேன். எனக்கு, அந்த ஆண்பால் குடிக்கும் விஷயம், அறவே பிடிக்கவில்லை. அதை எப்படியும் தடுத்து நிறுத்தவேண்டும். துப்பாக்கி, எனது கையில் தயாராக இருந்தது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆண்பாலுக்குப் பதிலாக, தேங்காய்ப்பால், சிறுவர்களுக்குப் புகட்டப்பட்டது. இது வில்லாளனின் புதிய உத்தி போலும்.

பிள்ளைகளுக்கு, தேங்காய்ப்பால் புகட்டுவதற்கு முன்னர், என்ன அர்த்தத்தில் அந்தத் தேங்காய்ப்பால் புகட்டப்படுகிறது என, இளம்பிள்ளைகளுக்கு, மற்ற வாலிபர்கள், எடுத்துரைத்தார்கள்.

விழாவின் முடிவில், வில்லாளன் சத்தமாகச் சொன்னான். “எல்லோரும் இந்த விழாவில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி.” என்று வில்லாளன் சொன்னவுடன், கூட்டம், கைதட்டி ஆர்ப்பரித்தது.

வில்லாளன் தொடர்ந்து பேசினான். “மக்களே, நமது அடுத்த பொறுப்பு… இந்த மலையில், ஒரு பெரிய திருச்சபை கட்டுவது. நீங்கள் எல்லோரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றவுடன், கூட்டம், மறுபடியும் ஆர்ப்பரித்தது.

எனக்கு மிகவும் சந்தோசம் ஆக இருந்தது. திடீரென்று, யாரும் எதிர்பாரா விதமாக, “இப்போது பாதர் நமக்காக, இறைவனிடம் வேண்டிக்கொண்டு பேசுவார்” என்று வில்லாளன் என்னை அழைத்தபோது, நான் திக்கு முக்காடிப் போனேன்.

எனக்கு வில்லாளனின் அன்பு புரிந்தது. நான், கூட்டத்தின் நடுவில் போய், கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.

அப்புறம் கூட்டத்து மக்களிடம் நான் பேசினேன். வில்லாளன் நான் பேசியதை, சிம்பாரி மொழியில், மொழிபெயர்த்தான்.

“அன்பர்களே.. கிறித்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்டது. ஒவ்வொரு வருடமும், இந்த விழா இங்கே நடக்கும். இயேசு அதற்கு அருள் புரிவார்.” என்றவுடன், கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.

“இங்கே திருச்சபை எழுப்பப்படும் என்று வில்லாளன் சொன்னதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. திருச்சபையிலும், இந்த நல்ல பாரம்பரிய விழா, ஒவ்வொரு வருடமும், கர்த்தரின் முன்னால் தொடங்கும்” என்று நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

கடைசியில், மசளையான் என் கால்களில் விழுந்தான். நான், அவனைத் தூக்கி நிறுத்தி, அவன் நெற்றியில் சிலுவை இட்டேன்.

“மசளையான்.. பத்து லட்சத்தில் ஒருவர்தான், இடையலிங்கம் ஆகப் பிறக்கிறார்கள். அதுவும், ஒரே உடம்பில், மாதவிடாய் வழிந்தும், ஆண் விந்து வழிந்தும், உன்னைப்போல் பிறப்பவர்கள் மிக மிக அரிதானவர்கள்தான்.”

“எனவே, உங்கள் மலையினம் சொல்வதுபோல, நிச்சயம் நீ கடவுளின் செல்லப்பிள்ளைதான். ஆனால், மாந்தரீகம் போன்ற தந்திரங்களை, இனி நீ மறந்துவிடு. மனிதனாக மாறு”

“உன்னை, ஆஸ்திரேலியா அனுப்பி, அறுவை சிகிச்சை செய்து, உன்னை மனிதன் ஆக்குவது எனது பொறுப்பு” என்றேன். மசளையான், பலமாகத் தலையாட்டினான்.

மாலை நேரம் வந்துவிட்டது. மறையும் சூரியனும், வளரும் சந்திரனும், அந்த மாலையில், ஒரு சேரத் தோன்றிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நான் மனநிம்மதியுடன், எனது குடிலுக்குள் போனேன்.

முற்றும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationஇணைப்பு வழித்தடங்களுக்கான போர்