This entry is part 1 of 6 in the series 16 ஆகஸ்ட் 2026

பழனி.கிருஷ்ணசாமி

krishnaswamip@yahoo.com

2026-ம் வருடத்திற்கான சீர் வாசகர் வட்ட விருது ஆய்வாளர் முத்துமோகனுக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது. விருது என்று சொன்னாலே பெரும் சர்ச்சை தான் என்று ஆகிப்போன சூழலில் தகுதியான ஒருவர் இருக்கு இந்த விருதைப் பெற்றிருக்கிறார். முத்துமோகனது அறிவுலகப் பயணம் நெடியது. பொருள் மிக்கது.

தொடக்கத்தில் முத்துமோகன் சீக்கிய சமய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சீக்கிய சமயம் கடவுளை ஒருவராக, உருவமற்றவராகப் பார்க்கிறது. நேர்மை, உழைப்பு, மனித நேயம் என்பவற்றை முன் நிறுத்தும் இந்தச் சமயம் சமணம், பௌத்தம், ஆசீவகம் என்னும் சமயங்களைப் போல தனக்கான இறையியல், வழிபாட்டியல், ஆன்மீகவியலைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் தனித்த வரலாற்றுத் தன்னுணர்வு தான்.  இந்த அளவைகள் இந்திய வைதீகக் கோட்பாடுகளுக்கு மாற்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே சீக்கியம்  திராவிடீயத்தோடு நெருங்கி வருகிறது. சீக்கிய சமய மெய்யியலை, திராவிட சமய மெய்யியலோடு இணைத்து பெரும் ஆய்வுக் களங்களை அடையாளம் கண்டவர்  முத்துமோகன்.  சமய மெய்யியல் என்ற சிறு வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்திய மெய்யியல், திராவிட மெய்யியல் பற்றிய பரந்த, இது வரை அதிகமாகத் கவனிக்கப்படாடத களங்களைக் கொண்ட முத்துமோகனின் ஆய்வு அறம், அன்பு என்னும் விழுமியங்களை மையமாகக் கொண்டது. முரண்பாடுகளைப் புறந்தள்ளாமல் அவற்றிற்குள் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டறிய முயற்சிப்பது. 

பொதுவாக இந்திய மெய்யியலையும், குறிப்பாக தமிழ் மெய்யியலையும் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டிருக்கும் முத்துமோகன் மனிதர்கள் தங்களுக்கிடையே கடைப்பிடிக்க வேண்டிய அறத்தையும், செலுத்த வேண்டிய அன்பையும் மெய்யியலின் அடிப்படைக் கூறுகளாகப் பார்க்கிறார். அவரது  ‘இந்தியத்தத்துவங்களும், தமிழின் தடங்களும்’ (2016)  மெய்யியல்சார் மானுடவியல் (Philosophic Anthropology) நோக்கிலிருந்து இதைப் பார்க்கிறது. பண்டைய இலக்கியங்களில் வெளிப்படும் மெய்யியலை விட இடைக்கால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மெய்யியல் அசலாக இருப்பதற்குக் காரணம் இடைக்காலத்தில் வடமொழியின் தாக்கம் குறைந்து இந்திய மொழிகள் எழுச்சி பெற்றதால் தான். இதே காலத்தில் தான் பிராமணர்களின் ஆதிக்கம் குறைந்து பிராமணர் அல்லாத மேட்டுக்குடிகளின் ஆதிக்கம் தொடங்கியது. காலப்போக்கில் நாம் நம் சுயத்துவத்தை இழந்து ‘ஒரே நேரத்தில் இந்தியர்களாகவும், மேற்கத்தியவர்களாகவும் வாழக்கூடிய இரட்டைத் தன்மை கொண்ட வாழ்வு முறையைக்’ கொண்டவர்களானோம். இதன் கருத்துருவமாக இருப்பவர் தேசீயவாதச் சிந்தனையாளரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவர் முன் வைத்த வேதாந்த தேசீயவாதம், நாட்டுப்புற மற்றும் அடித்தள மக்கள் பண்பாட்டின் மீதும், மொழி வழி வட்டாரப் பண்பாடுகளின் மீதும் ஒரு முரட்டுத்தனமான ஒழுங்கைத் திணிப்பதாக முத்துமோகன் கருதுகிறார்.

வைதீக மரபுக்கு வெளியிலும் நீண்ட நெடிய கால வேர்கள் கொண்ட மெய்யியல் மரபுகள் இருக்கின்றன. தாய்த்தெய்வ வழிபாடு, பிரகிருதி என்னும் இயற்கையை முதன்மையாகக் கொண்ட சாங்கியத் தத்துவம், தேகவாதம், பூதவாதம், காலவாதம், எதேச்சாவாதம் எனப் பலவகையான உலகியல் தத்துவங்களின் சேர்க்கையான சாருவாகம், ஆசீவக-சமண சிந்தனை மரபுகள் என்னும் இந்த அவைதீகத் தத்துவங்களை உபநிடதங்கள் அடியோடு மறுப்பதை முத்துமோகன் சுட்டிக்காட்டுகிறார். சத்திரிய வர்க்கம் என்ன தான் முயன்றாலும் வைதீகத்தை வென்றெடுக்க முடியாமலிருப்பதை கௌசிகன் என்னும் விசுவாமித்திரனுக்கும், வசிட்டன் என்னும் பிராமணனுக்கும் இடையில் நடக்கும் அதிகாரப்போரையும். அதன் விளைவாக பிரம்ம ரிஷி-ராஜரிஷி என்னும் வகைப்பாடுகள் தோன்றியதையும் எடுத்துக் காட்டுகிறார். தனது மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலாகத் தோன்றிய சத்திரிய வர்க்கத்தை ‘நிஷ்காமிய கர்மம்’ என்ற ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கி அந்தக் கூண்டுக்குள் அதை அடைத்து விட்டது ஆரியம். ‘பகவத் கீதையில் நடப்பது தத்துவ விசாரணை அல்ல, வருணக் கடமைகள் பற்றிய விசாரணையே என்பது முத்துமோகனின் வாதம். பகவத்கீதையின் போதே பிராமண-சத்திரியக் கூட்டணி உருவாகி விட்டது.

ஆனாலும் சத்திரியச் சிந்தனை வைதீகத்திற்கு எப்போதும் ஒரு இடைஞ்சலாகவே இருந்து வந்திருக்கிறது. சமணத்தையும், பௌத்தத்தையும் சத்திரியச் சிந்தனையின் மிதமான வெளிப்பாடுகளாகப் பார்க்கும் முத்துமோகன்  புரோகித மேலாண்மை இல்லாத ஒரு வரலாறு தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லுகிறார். சமணமும், பௌத்தமும் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் தான் அறவியல் மற்றும் கல்வி அடிப்படையிலான சான்றோர் வர்க்கம் தோன்றி வளர்ந்திருக்கிறது. அறம் எனபதை முற்றாக விழுங்கி புனிதம் என்பதை  நிலை நாட்டியது பக்திக்காலம். அறவியல் என்பது தான் தமிழர் மெய்யியலின் அடித்தளம்.  தம்மை வளைத்துக் கொண்ட  பக்தி மரபை பாரம்பரியமாகக் கட்டிக்காத்து வந்த அறவியலுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டது தமிழகத்துக்குப் பூர்வக் குடிகளின் நாகரிகம். இந்தக் குடிகள் தங்களுக்கென்று ஓர் இறையியலையும், வழிபாட்டியலையும் வைத்துக் கொண்ட அதே நேரத்தில் ஆகமங்களும், வேதங்களும் தமது புனித நூல்களே என்றும் தெரிவித்துக் கொண்டது.இவர்களது பண்பாடு பூமி சார்ந்தது. வைதீகப் பண்பாடு வானம் சார்ந்தது. இன்னொரு வகையில் பார்த்தால் வைதீகப் பண்பாடு  நெருப்பு வழிப்பட்டது. அவைதீகப் பண்பாடு நீர்வழிப்பட்டது. இங்கே ஆச்சாரியர்கள் இல்லை. குருமார்கள் தான் இருப்பார்கள்.

கிரேக்கத்தில் சாக்ரடீஸ் காலத்திற்கு முன்னமே இருந்த பல சிந்தனைப் பள்ளிகளில் ஒன்று சாமார்த்திய வாதம் (Sophism). தங்களது வாதத்திறமையால் பொய்யைக் கூட மெய்யாகக் காண்பிக்கும் திறமை பெற்றவர்கள், இதனால் அறிவார்த்த நேர்மையற்றவர்கள் என்று இவர்களைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனால் இவர்கள் தான் முற்றிலும் நடுநிலையான உண்மை என்ற ஒன்று இல்லை. மனிதன் தன்னுடைய வாழ்நிலையையும் அதன் பின்னணியையும் வைத்துத்தான் பொருள்களை அறிந்து கொள்கிறான் என்ற கருத்தையும் முன் வைத்தார்கள். அவர்களில் முக்கியமானவரான புரொடேகரஸ் (490-420 பொ.மு) ‘எல்லாப்பொருள்களையும் மனிதன் என்ற அளவுகோளில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்’ என்றார். ஐரோப்பியப் பகுத்தறிவுச் சிந்தனையின் அடிநாதமாகக் கருதப்படுவது இது தான். இந்திய மெய்யியல் அண்டவியலை முன் நிறுத்துகிறது. ஐரோப்பிய மெய்யியல் மானுடத்தை முன் நிறுத்துகிறது. ஆனால் உண்மையில் இந்திய மெய்யியலுக்குள் மானுடவியலும் கலந்து அது ஒரு பன்முகக் கருத்தாக்கமாகவே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. பண்பாட்டுக்குள்ளும் இது கலந்து வந்திருக்கிறது.  திராவிட மெய்யியலைப் பொறுத்த வரை இது ஒரு வரலாற்று உண்மை. ‘ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த போது ஏற்கனவே இங்கே ஒரு வளமான பண்பாடு இருந்ததைக் கண்டார்கள். குறிப்பாக இங்குள்ள இயற்கைச் சூழலுக்குத் தக்கவாறு ஆரியமும், திராவிடமும் (அண்டவியலும், மானுடவியலும்) கலந்த ஒரு பண்பாடு தென்னிந்தியாவில் தகவமைக்கப் பட்டிருந்தது’ (பெட்டி ஹைமன், 2018 (1937) பக்:21-22). ஒரே மதம் என்ற ஒற்றைச் சட்டகத்திற்குள் அடக்கிக் கொள்ள  முடியாத, பன்மைத்துவம் கொண்ட மெய்யியலைக் காண்பது தான் முத்துமோகனின் ஆய்வு.

ஆரிய மெய்யியலாக இருந்தாலும், திராவிட மெய்யியலாக இருந்தாலும் அவற்றிலுள்ள   குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முத்துமோகன் தவறுவதில்லை. சொல்லப்போனால் மெய்யியல் குறித்த மனோரஞ்சிதப் பார்வையைத் தவிர்த்து சத்தியத்தைத் தேடுவதே அவரது முதன்மை நோக்கம். அது பெரிதும் நடைமுறை சார்ந்த வாழ்வியல் நோக்கையே அலகாகக் கொண்டிருக்கிறது. பிராமண எதிர்ப்புக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதிப்பற்றுதல்களை அவதானிக்கும் அவர் ‘சைவப்பேரடையாளம்  கட்டப்படுதலுக்கும், தமிழ்நாட்டு நிலவுடைமைச் சக்திகள் மறுதிரட்சி பெறுதலுக்கும் உதவியாகத் தான் பிராமண எதிர்ப்பு இங்குச் செயல்பட்டு வந்துள்ளது. இதில் பலியாகிப் போனது தமிழர் மெய்யியலின் சாரமான அறம் தான். இந்த அறத்தைத் தான் சித்தர்கள் வலியுறுத்தினார்கள். சமணமும், பௌத்தமும் இலக்கியம் வழியாக இந்த அறவியலைத்தான் முன் நிறுத்தின. இவற்றை வீழ்த்திய சைவமும், வைணவமும் அறச்சிந்தனைக்கு எந்தப் பங்களிப்பும் செய்து விடவில்லை’ என்கிறார்.பக்தியும், கோயில் கலாச்சாரமும் தான் தமிழர் மெய்யியல் என்று கட்டமைக்கப்பட்ட போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்த சித்தர்கள் தான் தமிழர் மெய்யியலின் உண்மையான பிரதிநிதிகள். எப்பொழுது மெய்யியல் சமயம் சார்ந்து நிறுவனமாகியதோ அப்போதே அதன் அறவழி தடம் மாறிப் போய் விட்டது.

சங்கத்தமிழர் தம் வாழ்வியலை இயற்கையின் நீட்சியாகவே பார்த்தனர்.  அதுவே சமூக ஒழுங்கிற்கு முன்னோடியாக இருந்தது. இது புவியியல் சார்ந்த மெய்யியல் பார்வை. தொல்காப்பியர் சுட்டும் நிலமும், பொழுதும் மேற்கத்திய மெய்யியல் காட்டும் காலம், வெளி என்பதனின்றும் மாறுபட்டது. காலமும், வெளியும் அருவமானவை. நிலமும், பொழுதும் பிரத்தியட்சமானவை. இப்படி தமிழர் மெய்யியலின் தனித்தன்மையை முத்துமோகன் சுட்டினாலும் சங்கத்தமிழர் மெய்யியலின் முரண்களையும், சமரசங்களையும் காட்டவும் அவர் தவறவில்லை. முரண்களும், சமரசங்களும் இல்லாமல் எந்த நாகரிகம் வளர்ந்திருக்கிறது?

சமயச்சார்பற்ற அறவியலைக் காட்டிய வள்ளுவர் மெய்யியலின் அடியாழங்களை நன்கு தெரிந்து வினையாடியவர் என்று ஆச்சரியப்படும் முத்துமோகன் இந்தியச்சூழல்களில் வேறு எந்தத் தத்துவமும் அவர் அளவுக்கு நுட்பமாக நகர்வுகளை ஏற்படுத்தியது கிடையாது என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால் சிலப்பதிகாரக் காலத்தில் பண்பாட்டு உளவியல் அதிகாரம் செயல்பட்டதால் தமிழ்ச் சமூகம் தனது சனநாயகத் தன்மையை இழந்தது. ஓர் இனத்தின் மெய்யியல் உருவாக்கத்தில்  பெண்களின் பங்கு காத்திரமானது. அறக்கோட்பாடுகளோடு இணைந்து செல்வது. அது குறைபட்டுப் போன நிலைமையைத் தான் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எடுத்துச் சொல்கின்றன.

தமிழர் மெய்யியலுக்கு ஒரு புதிய, புரட்சிகரமான வரையறையைத் தந்த இராமலிங்கரின் (1823-1874) தத்துவப் படைப்பாற்றலில் பிரமித்துப் போகிறார் முத்துமோகன். இராமலிங்கரது பசி பற்றிய பேச்சு அவருக்கு தத்துவத்தின் வரையறையாகத் தெரிகிறது. அதையே இன்னும் நீட்டிப் பார்க்கும்போது அது தாகம், தேட்டம் என்று விரியும். இராமலிங்கரின் சீவகாருணியத்தில் ஆணவம் உடைபட்டுப் போவதும், அதன் பெருவடிவமே இறை அருளாகத் தெரிவதும்  மெய்யியலின் உன்னத வடிவங்கள். இந்த மெய்யியல் பிறிதொருவரை அந்நியப்படுத்தாத அரவணைக்கும் நெகிழ்ந்த நிலை கொண்டது. ஒரு காலகட்டத்தில் தமிழர் மெய்யியலின் ஏகப்பிரதிநிதியாக விளங்கியவர் இராமலிங்கர். தொழில்மயமாதலின் விளைவாகக் கிடைத்த இதழியல் இந்த மெய்யியலை மேலும் வளர்த்தெடுத்தது. 1882-1888 காலகட்டத்தில் வெளியான ’தத்துவ விவேசினி’ என்ற இதழ் காலனியாதிக்கத்தில் முடமாகிப்போன தமிழரின் சுயத்தை மீட்டெடுக்க முயற்சி செய்தது. சொந்த அறிவை முன்னிலைப்படுத்துபவர்கள் என்ற பொருள் தரக்கூடிய சுயக்கியானம் (சுய அறிவு>சுய ஞானம்>சுயக்கியானம்) என்ற சொல்  தமிழினம் தனது மெய்யியல் தடுமாற்றத்திலிருந்து வெளிவரும் முயற்சியையே குறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே அயோத்திதாசர் (1845-1914) வருகிறார். அயோத்திதாசரது தன்னுணர்வை வெறும் தலித் தன்னுணர்வு என்பதை விட ஒட்டு மொத்த தமிழ் இன விழிப்புணர்வு என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

பௌத்தம் மீண்டும் மீண்டும் தமிழர் மெய்யியலுக்குள் வருகிறது. பௌத்தச் சிந்தனையின் தாக்கத்திற்கு சிங்காரவேலரும் (1860-1946) ஆட்பட்டிருந்தார்.பெரியார் (1879-1973) அவரது பகுத்தறிவுச் சிந்தனையை பெருமளவில் பௌத்தத்துடன் இணைக்கிறார். கெட்டி தட்டிப்போன ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு மாபெரும் மறுப்பு சமூகத்தினுள் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று உயிர்த்துடிப்புள்ள மெய்யியலுக்கு ஒரு விளக்கம் கொடுத்தவர் பெரியார். இவர்களுக்கு அப்பால் வாய்மொழி வரலாறு என்ற ஒன்று உண்டு. மெய்யியலின் உருவாக்கத்தில் இந்த வாய்மொழிப் பண்பாட்டுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை நா.வானமாமலை (1917-1980) நிரூபித்துக் காட்டினார். இப்படியாக தமிழர் மெய்யியல் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழர் மெய்யியல் பற்றிய முத்துமோகனது வரலாற்றுப் பார்வை தனித்துவம் கொண்டது. மார்க்சீய நோக்கிலானது என்று வைத்துக்கொண்டாலும் புறக்கணிக்க முடியாத ஆய்வு முடிவுகளைக் கொண்டது. தமது இனம் பற்றிய மெய்யியல் ஆய்வில்  இவர் அளவுக்கு அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 

                                                                                 *******************

Series Navigationமழை புராணம் : 43