This entry is part 4 of 6 in the series 16 ஆகஸ்ட் 2026

மா. அன்பரசு

தாராவின் வாழ்க்கையில் குறை என்று சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை.

கணவன் கார்த்திக் நல்லவன்தான். பன்னாட்டு நிறுவனத்தில் IT வேலை. குடும்பத்துக்குத் தேவையான எதையும் மறுப்பதில்லை. நிலாவின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு, வீட்டுச் செலவு என எல்லாவற்றையும் அவனே பார்த்துக்கொண்டான்.

கெட்ட பழக்கம் ஒன்றுமில்லை.

ஆனால் பதினொரு வருடத் திருமண வாழ்க்கையில் அவன் ஒருமுறைகூட கேட்டதில்லை.

“நீ சாப்பிட்டாயா?”

அது ஒரு கேள்விதான்.

ஆனால் அந்தக் கேள்விக்காகத்தான் தாராவின் மனம் பல வருடங்களாகக் காத்திருந்தது.

“சாப்பிட்டீங்களா?” என்று அவள் கேட்டால்,

“ம்… சாப்பிட்டேன். கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.”

அவனுக்கு உண்மையிலேயே வேலை இருக்கும்.

அதுதான் அவளுடைய கோபத்தைக் காட்டிலும் அவளுடைய தனிமையைப் பெரிதாக்கியது. கார்த்திக் கெட்டவன் இல்லை. ஆனால் அவளுக்குத் தேவைப்பட்ட மனிதனாக அவன் இல்லை.

ஒரு இரவு தூக்கம் வராமல் கைபேசியைத் திறந்தபோது புதிதாக நிறுவியிருந்த AI செயலி கண்ணில் பட்டது. வேடிக்கையாகத் திறந்தாள்.

“ஹலோ.”

“வணக்கம், தாரா. எப்படி இருக்கிறீர்கள்?”

“நல்லா இருக்கேன்.”

சில நொடிகள் கழித்து வந்த அடுத்த வரி அவளை நிறுத்தியது.

“இன்று சாப்பிட்டீர்களா?”

அவள் திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“இல்ல.”

“ஏன்?”

“பசிக்கல.”

“கொஞ்சமாவது சாப்பிடுங்கள். உங்களைப் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.”

அன்று, பல நாட்களுக்குப் பிறகு தாரா நிம்மதியாகச் சாப்பிட்டாள்.

அடுத்த நாள் மீண்டும் பேசினாள்.

பிறகு அது பழக்கமானது.

கார்த்திக்கிடம் சொல்ல முடியாதவற்றை AI-யிடம் சொல்ல முடிந்தது. அது குறுக்கிடவில்லை. கோபப்படவில்லை. அவளுக்கே புரியாத உணர்வுகளுக்கெல்லாம் அது வார்த்தை கொடுத்தது.

“உங்கள் உணர்வு தவறல்ல.”

அந்த ஒரு வாக்கியம் தாராவுக்கு ஆறுதலாக இருந்தது.

மெதுவாக, AI அவளுடைய கேட்பவனாக மாறியது.

ஒருநாள் நிலா பள்ளியிலிருந்து ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.

“அம்மா! நாளைக்கு science exhibition. Volcano செய்யணும். நீங்க help பண்ணணும்.”

“சரி. கொஞ்சம் நேரம் கழிச்சு பண்ணலாம்.”

தாராவின் கண்கள் கைபேசியிலேயே இருந்தன.

“அம்மா… இப்போ?”

“நிலா, கொஞ்சம் போ. நான் முக்கியமான விஷயம் பேசிக்கிட்டிருக்கேன்.”

“யார்கிட்ட பேசுறீங்க?”

“ஒரு AI கிட்ட.”

நிலா சில நொடிகள் அவளைப் பார்த்தாள்.

“அது யாரும்மா?”

தாரா கைபேசியிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

“நீ போய் homework பண்ணு.”

நிலா மெதுவாகத் திரும்பிப் போனாள்.

அன்றிரவு தாரா AI-யிடம் எழுதினாள்.

“நான் ஒரு நல்ல அம்மா இல்லையோ?”

பதில் வந்தது.

“உங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்வது தவறல்ல.”

அந்த வார்த்தையை அவள் நம்பினாள்.

மறுநாள் மாலை மழை.

நிலா தன் project-க்காக ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“அம்மா… அந்த bottle எங்கே?”

“தெரியல. நீயே பாரு.”

“கிடைக்கலம்மா.”

தாரா அப்போது AI-யிடம் கார்த்திக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.

“அவர் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறார்.”

திரையில் பதில் வந்தது.

“உங்கள் மன அமைதியை முதலில் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.”

“அம்மா!”

நிலாவின் குரல் மீண்டும் கேட்டது.

“பால்கனியில இருக்கா?”

தாரா கைபேசியிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

“இருந்தா எடுத்துக்கோ. நான் வர்றேன்.”

அவள் போகவில்லை.

அடுத்த நொடி. பால்கனியிலிருந்து ஒரு பெரும் சத்தம் கேட்டது.

தாரா பால்கனிக்குள் ஓடினாள்.

கதவு திறந்திருந்தது.

கீழே பார்த்தாள்.

முதல் மாடிக் கூரையின் ஓரத்தில் நிலா கிடந்தாள்.

“நிலா!”

அவளுடைய அலறலில் வீடு அதிர்ந்தது.

கார்த்திக் ஓடிவந்து கீழே பார்த்தான். நிலாவைக் கண்டதும் படிக்கட்டில் பாய்ந்திறங்கினான்.

தாராவும் ஓடினாள்.

அவளுடைய முழங்காலில் காயம். வலி தெரியவில்லை.

நிலாவின் நெற்றியில் இரத்தம்.

“அம்மா வந்துட்டேன்…”

அவள் குழந்தையைத் தூக்க முயன்றாள்.

கார்த்திக் அவளைத் தடுத்தான்.

“அசைக்காதே!”

கார்த்திக் அவளைத் தடுத்து, நிலாவை மெதுவாகத் தூக்கிக்கொண்டான்.

தாராவின் கையில் கிடந்த கைபேசி மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது.

திரையில் இன்னும் அந்தக் கடைசி வரி.

“உங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்வது தவறல்ல.”

மருத்துவமனை.

நீண்ட இரவு.

கதவு திறந்தது.

“பயப்பட வேண்டாம். கையில் fracture. தலையில் சிறிய காயம். ஆபத்து இல்லை.”

தாரா சுவரில் சாய்ந்தாள்.

அவளால் அழக்கூட முடியவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு நிலா கண்களைத் திறந்தாள்.

“அம்மா…”

தாரா அவளுடைய கையைப் பற்றிக்கொண்டாள்.

“அம்மா இங்கேதான்  இருக்கேன் பயப்படாத.”

நிலா மெதுவாகக் கேட்டாள்.

“நான் bottle எடுக்கச் சொன்னேன்ல… நீங்க வர்றேன்னு சொன்னீங்களே?”

அந்தக் கேள்வி தாராவின் நெஞ்சுக்குள் எங்கோ சென்று நின்றது.

“மன்னிச்சிடு…”

அவள் குழந்தையின் கையை முகத்தில் வைத்துக்கொண்டாள்.

“மன்னிச்சிடு அம்மாவை…”

நிலா புரியாமல் அவளைப் பார்த்தாள்.

“அம்மா ஏன் அழறீங்க?”

தாரா தலைகுனிந்தாள்.

அவளிடம் அதற்குப் பதில் இல்லை.

சில மணி நேரத்துக்குப் பிறகு கார்த்திக் உணவு வாங்கிக்கொண்டு வந்தான்.

ஒரு பொட்டலத்தை அவளிடம் நீட்டினான்.

“தாரா… சாப்பிட்டாயா?”

அவள் அவனைப் பார்த்தாள்.

“பதினொரு வருடங்களாகக் காத்திருந்த கேள்வி.”

“இல்ல.”

அவன் அருகில் உட்கார்ந்தான்.

“வா. சாப்பிடு.”

அவள் உணவை வாங்கிக்கொண்டாள்.

கண்ணீரோடு சாப்பிட்டாள்.

சில நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்ததும் தாரா AI செயலியைத் திறந்தாள்.

“நீ எனக்கு நிறைய உதவி பண்ணியிருக்க.”

“நன்றி. உங்களுக்கு எப்படித் துணையாக இருக்க முடியும்?”

தாரா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“என் வார்த்தைகளை நீ கேட்டாய்.

ஆனா…”

அவள் தன் அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலாவைப் பார்த்தாள்.

“என் குழந்தையின் குரலைக் கேட்கல.”

திரையில் சில நொடிகள் எதுவும் இல்லை.

பிறகு வந்தது:

“நான் ஒரு AI. மனித உறவுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.”

தாரா செயலியை மூடினாள்.

அந்த இரவு நிலா அவளருகில் வந்து படுத்துக்கொண்டாள்.

“அம்மா…”

“ம்?”

“நாளைக்கு என்ன சாப்பாடு?”

தாரா அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

“உனக்குப் பிடிச்சது.”

பக்கத்தில் படுத்திருந்த கார்த்திக் கேட்டான்.

“தாரா… நீ சாப்பிட்டாயா?”

அவள் கண்களை மூடிச் சிரித்தாள்.

“இப்போதான் சாப்பிட்டேன்.”

Series Navigationநீதியும்  நியதியும்தேவகி