பாலமுருகன்.லோ
மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்த தேவகி, மாநகரப் பேருந்தைப் பிடித்து சிங்கப்பெருமாள் கோவிலுக்கு டிக்கெட் வாங்கி, சன்னல் ஓர இருக்கையைப் பார்த்து அமர்ந்தாள்.
அமர்ந்தவளுக்கு சிந்தனை நிலையாக இல்லை. ஒரே தலைவலி வேறு. பர்ஸில் இருந்து சின்ன தலைவலி பாம் எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டு, தன் தலையைச் சன்னல் கம்பியின் மேல் சாய்த்தாள். குளிர்ந்த காற்று முகத்தில் பட, அவள் தன்னை அறியாமல் கண்களை மூடினாள்.
கண்களை மூடியதுமே, அவளது எண்ண ஓட்டம் சற்று பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது…
சின்ன வயசிலிருந்தே, சேவை செய்யணும், நாலு பேருக்கு உதவணும்னு எண்ணம் இருந்ததால்தான், இப்போ ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
திடீரென்று ஒரு குரல் கேட்டது.
“அடிங்க நாயே! கண்ண என்ன புடனியிலயா வைச்சுருக்க? வீட்ல சொல்லீட்டு வந்துடியாடா…”
இந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் தேவகி விழித்துக்கொண்டாள். பேருந்தின் ஓட்டுநர் யாரையோ பார்த்துத் திட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளை, யாருக்கும் ஒண்ணும் ஆகல.
பழைய நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தாள் தேவகி. ஓட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்தவுடன், அவளது தற்போதைய நிலையை எண்ணினாள்.
அவளுக்குத் தோன்றியது… வேலை செய்யும் இடத்தைவிட்டு வெளியே வந்துட்டா போதும். எவ்வளவு பெரிய வேலைப் பளு இருந்தாலும், அதையெல்லாம் மறந்துட்டு வீடு திரும்பிடுறாங்க ஆண்கள்.
ஆனா நம்ம மாதிரி பெண்களின் நிலை அப்படியல்ல. வேலை ஒரு பக்கம், குடும்பம் இன்னொரு பக்கம்னு தராசு முள்ளைப் போல எப்போதும் சரியான நடுநிலையிலேயே இருக்க வேண்டியதா இருக்கு.
எப்போதும் அனுசரிச்சு, புரிஞ்சுக்கிட்டு நடந்துக்க வேண்டியதா இருக்கு. மாமனார், மாமியார், புருஷன், பிள்ளைகள்னு அவளோட பளு கூடிக்கிட்டேதான் இருக்கே தவிர, குறைஞ்ச பாடில்லை.
அக்வேரியத்திலிருந்து வெளியே விழுந்த மீனைப்போல தேவகியின் மனம் துடித்துக்கொண்டே இருந்தது. “நாம மட்டும் என்ன பாவம் பண்ணுனோம்?” என்ற எண்ணமே அவளை விடாமல் துரத்தியது.
காலை ஏழு மணி அளவில் தனது கார்டை மருத்துவமனையின் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்தாள் என்றால், திரும்பி இரவு ஏழு மணிக்குத்தான் அதே கார்டைப் பஞ்ச் செய்ய வேண்டும்.
மொத்தமாக பன்னிரெண்டு மணி நேர வேலை. அவளையும் அவளைப் போல இருக்கும் மற்ற செவிலியர்களையும் கான்டிராக்ட் மூலம்தான் அந்த மருத்துவமனை எடுத்திருந்தது. அதாவது ஒப்பந்த அடிப்படையில். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால்தான் இவர்களின் தேவை.
சம்பளம் என்று பார்த்தால் சொற்பம்தான். ஏஜென்சி பிடித்தம் போக, தேவகியின் கையில் சுமார் பதினைந்து முதல் பதினெட்டாயிரம் ரூபாய்தான் கிடைக்கும். அதற்காக தினமும் நான்கு மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கணும்னு சேரும் முன்னரே சொல்லிவிடுகிறார்கள்.
“இதோ பாருங்க, உங்களுக்கு சம்பளம் இவ்வளவு. கண்டிப்பாக நாலு மணி நேரம் ஓவர் டைம் பார்க்கணும். அதற்குத் தனியாக இவ்வளவு,” என்றுதான் சேர்க்கிறார்கள்.
நோயாளிகள் அதிகமா இருந்தா, ஒவ்வொருவரும் மூணு, நாலு நோயாளிகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம். “பார்க்க முடியாது” என்றால் வேலைக்கு உத்தரவாதமில்லை. இதே வேலைக்கு பலர் காத்திருக்கையில், இருக்கிற வேலையைத் தக்கவைத்துக்கொள்வதே பெரிசாக இருக்கும். அதனால், “நான் இவ்வளவு நோயாளிகளைத்தான் பார்ப்பேன்” என்று சொல்லவும் முடியாது.
தினமும் இரவு வேலை முடிந்து வீடு வந்து சேர சுமார் ஒன்னரை மணி நேரம் ஆயிடும். மாநகரப் பேருந்தைப் பிடித்துத்தான் போக வேண்டும்.
இந்த நினைவலைகள் எல்லாம் கடல் அலைபோல முன்னும் பின்னும் அவளது மனதில் வந்துபோய் கொண்டிருந்தன.
பேருந்து சிங்கப்பெருமாள் கோவில் வந்தவுடன், அவளும் இறங்கி தனது வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.
வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து, சாவியை மேஜையின் மேல் வைத்துவிட்டு, எதிர்ப்புறம் இருக்கும் கட்டிலில் ‘அப்பாடா…’ என்று படுத்தவளை அசதி அழுத்தியது. எப்போது கண்களை மூடினாளோ தெரியவில்லை. பத்து, பத்தரை மணிக்குத்தான் திடீரென்று விழித்தாள்.
அவள் விழித்தவுடன், வாங்கி வந்த உணவுப் பொட்டலத்தை மேஜை மீது வைத்துவிட்டு, குளிக்க உள்ளே போனாள். குழாயைத் திறந்தபோது தண்ணீர் வரவில்லை. உடனே வெளியே வந்து மோட்டாரைப் போட்டுவிட்டு, மீண்டும் குளிக்கச் சென்றாள்.
குளித்தப்பின் பசியின் அவசரத்தைப் பொறுத்துக்க முடியாம, வேக வேகமா தலையைத் துவட்டிக்கிட்டு, டேபிள் மேல் இருந்த பொட்டலத்தைத் திறந்து, அந்த இட்டிலியைப் பிய்த்து வாங்கி வந்த சட்டினியில் தோய்த்து வாயினுள் போட்டவுடன், அவளது மூஞ்ஜி மாறிப்போனது.
ஏழரை மணிக்கு வாங்கிய உணவு வேற எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்தவள், டைம்பீஸைப் பார்த்தாள். மணி பதினொண்ணு ஆகியிருந்தது.
அப்படியே வெறும் இட்டிலியை சாம்பாருடன் சாப்பிட்டு, காலியான பார்சல் கவரைக் கட்டி, பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வைத்துவிட்டு, இரண்டு டம்ளர் தண்ணி குடித்த பிறகு, மீண்டும் படுக்கையில் படுத்து உறங்கிவிடுவாள் தேவகி.
அன்று அவளுக்கு தூக்கம் வரவில்லை. அன்று மருத்துவமனையில் நடந்த மோசமான நிகழ்வுதான் கண்முன் நின்றது. அவள் மட்டும் அல்ல, அவளைப்போன்ற இன்னும் மூணு, நாலு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
மருத்துவமனை மேனேஜ்மென்ட், இவர்களை அழைத்து “நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதால், தற்போது உங்களது சேவை இப்போதைக்கு எங்களுக்குத் தேவையில்லை. திரும்பவும் வேணும்னா நாங்க சொல்லி அனுப்புறோம்,” என்று பதில் சொல்லி, “இந்தப் பதினைந்து நாட்களுக்கான சம்பளத்தை அடுத்த மாதம் ஒண்ணாம் தேதி வந்து வாங்கிட்டுப் போங்க” என்று அவர்களை அனுப்பிவிட்டது.
மேனேஜ்மென்ட் சொன்னதை கேட்டதும், தேவகியின் மனக்கண்ணில், “மீண்டும் நம்ம படிச்ச சர்டிபிகேட்டெல்லாம் எடுத்துக்கிட்டு, வீதி வீதியா ஏறி இறங்கி வேலை தேடணும் போல… நமக்கு விடிவுகாலம் எப்ப பிறக்குமோ?” என்ற எண்ணம்தான் ஓடியது.
இப்போதுதான் வேலையில் சேர்ந்த மன மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில், இந்தப் பணிநீக்கச் செய்தி அவளை அதல பாதாளத்தில் தள்ளியதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது.
“நாமும் தினக்கூலி ஆள் போலத்தான். நூறு நாள் வேலைத் திட்டத்துல கூட தினம் தினம் சம்பளம் கிடைச்சிடும். ஆனா, இப்போ பார்த்த வேலையோ மாதச் சம்பளம். வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிட்ட பிறகுகூட, சம்பளத்தை அடுத்த மாதம் ஒண்ணாம் தேதி வந்து வாங்கிக்கச் சொல்றாங்களே. ஏன், வேலை இல்லைன்னா இவங்க எப்படி சமாளிப்பாங்கன்னு அவர்களுக்குத் தெரியாதா?”
“அதெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லை. ‘யாரு எப்படி போனால் எங்களுக்கு என்ன?’ என்ற எண்ணம்தான் அவர்களை எதையும் செய்ய வைக்கிறது.”
“இவங்க நினைப்பதெல்லாம், இவங்க எங்க போயிடப் போறாங்க? இந்த உலகத்துல அவ்வளவு ஈசியா வேலை கிடைச்சிடுமா என்ன? எப்ப கூப்பிட்டாலும் வரத்தானே போறாங்க. இப்ப இருக்கிற ஆட்கள் வரலைன்னா, நமக்கு ஆளா பஞ்சம்? கான்டிராக்ட் வைத்து நடத்துறவங்ககிட்ட சொன்னா, அனுப்பிடப் போறாங்க என்ற மெதப்புத்தான் மேனேஜ்மென்டுக்கு.”
ஒரு கணம் அவள் முதல் நாள் மருத்துவமனை வாசலில் நின்று, அந்த மருத்துவமனையின் பெயர் பலகையைப் பார்த்து உள்ளுக்குள் பொங்கிய ஆனந்தத்தை நினைத்தாள்.
அதே ஆனந்தமானது சோகமாக மாறியிருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால், அவளது தன்னம்பிக்கையை மட்டும் அவள் கைவிடவில்லை. “நாம யாருக்கும் தீங்கு செய்யல, கெடுதல் நினைக்கல. இப்ப நமக்கு சோதனைக் காலம். இப்பதான் நாம இன்னும் தைரியமா இருக்கணும்,” என்று தன் அம்மா சொன்னது அவளது நினைவுக்கு வந்தது.
அவளது அம்மா சொல்லும் எளிய வாசகம் இதுவே. “இதுவும் கடந்து போகும்” என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவளிடம் அடிக்கடி சொல்லுவாள். தற்போது அவளுக்கு அம்மாவின் ஞாபகமும் வரத் தொடங்கியது.
கண்களை மூடினாள். கண்கள் குளமாயின. வராத தூக்கம், சில மணி நேரத்தில் மனதில் எழுந்த அமைதியின் வெளிப்பாட்டாலும்,
தன் அம்மா பக்கத்தில் இல்லை என்றாலும், அவளது விடாமுயற்சியும் ஊக்கமும் தான் இந்த இக்கட்டான நிலையிலிருந்து கட்டாயம் மீண்டு வருவோம் என்ற மனோதிடத்தைத் தந்ததாலோ என்னவோ, அவள் உறங்கிவிட்டாள்.
காலை விடிந்ததும், அவளது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“தேவகி, ஒரு வேலை இருக்கு. உன்னால் முடியும் என்று நினைக்கிறேன். மருத்துவமனையில் இல்லை. ஆனால், ஒருவருடைய வீட்டில். அந்த வீட்டின் பெரிய அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். நர்சிங் கேர் தேவை என்று சொல்லியிருந்தார்கள்.”
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்தவள், “கடவுள் ஒரு கதவை அடைத்தால், அதற்கான வேறு ஒரு கதவைத் திறப்பார் என்பார்களே… அது உண்மைதான் போல,” என்று நினைத்தாள்.
— பாலமுருகன்.லோ ✍️