தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 செப்டம்பர் 2018

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13

சி. ஜெயபாரதன், கனடா


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

“வில்லியம் உழைத்து வேர்வையில் சம்பாதித்த பணம் சாவடியில் சாதனை புரியும் பலருக்கு.  ஆனால் போருக்காகப் பீரங்கி வெடி மருந்து செய்து விற்றுச் சேமித்த உங்கள் பணம் வேதனைதான் தரும் எமக்கு !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)

மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

 

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

நாடக உறுப்பினர்:

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 13

 

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான்.
அடுத்து மிஸிஸ். பெயின்ஸ் வருகிறாள்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஜென்னி:  மேஜர் !  இந்தப் பணத்தில் கொஞ்சம் எடுத்துச் சல்வேசன் அணிவகுப்புக்குச் செலவு செய்யலாமா ?

மேஜர் பார்பரா:  வேண்டாம் ! அணிவகுப்புச் செலவு இப்போது முக்கியமல்ல.  உணவுப் பொருளுக்குப் பணம் போதாது இந்த வாரத்துக்கு.  (வில்லியத்தைப் பார்த்து) வில்லியம் உன்னால் எவ்வளவு தர முடியும் இன்று ?

வில்லியம்:  என்னிடம் இருபது ஷில்லிங் நாணயங்கள் உள்ளது.  அது எப்படிப் போதும் உமக்கு ?

தந்தை ஆன்ரூ:  இதோ பார் பார்பரா !  100 பவுண்டு (பிரிட்டிஷ் நாணயம்) பணத்தில் நிரம்ப உணவுப் பொருள் வாங்கலாம்.  இப்போது இந்த எளிய நபரிடம் இருக்கும் ஒரு பவுண்டை வாங்கிக் கொண்டால் நான் மிச்சம் வேண்டிய 99 பவுண்டைத் தருகிறேன்.

மேஜர் பார்பரா:  (வியப்புடன்) நீங்கள் செலவாளி ஆக வேண்டாம் அப்பா !  வில்லியத்திடம் இருப்பது வெறும் 20 ஷில்லிங் நாணயங்கள்.  அதுவும் மிகக் குறைவு.  நீங்கள் இன்னும் 10 ஷில்லிங் தரலாம்.  30 ஷில்லிங்கை வைத்து ஓருவருக்குச் சல்வேசன் சாவடியில் உணவு அளிக்கலாம்.  வில்லியம் உழைத்து வேர்வையில் சம்பாதித்த பணம் சாவடியில் சாதனை புரியும் பலருக்கு.  ஆனால் போருக்காகப் பீரங்கி வெடி மருந்து செய்து விற்றுச் சேமித்த உங்கள் பணம் வேதனைதான் தரும் எமக்கு !

வில்லியம்:  மகிழ்ச்சியாக இருக்கு மேஜர், என் பணம் உமக்கு உதவ முடியும் என்பதைக் கேட்டு !

 

மேஜர் பார்பரா:  (அழுத்தமாக) வில்லியம் !  நீ முதலில் மனம் மாறி, மதம் மாறி மனிதன் ஆவதில் ஏதும் மறுப்பு இல்லையே !

வில்லியம்:  நான் ஒரு மனிதன்தான் !  மனிதன் ஆவதற்கு நான் ஏன் மதம் மாற வேண்டும் மேஜர் ? உங்கள் அணிவகுப்பில் கொட்டடிப்பும், ஆட்டமும் தலைவலி தரும் எனக்கு ! என்னால் தாங்கிக் கொள்ள முடியாது !  இங்கே வேலையில் இருக்கும் தீவிரப் பெண்களின் நாக்கு கூர்மையானது ! சற்று நீளமானது !  அது எனக்குச் சினமூட்டுகிறது.  என்னால் சாதிக்க முடிவது ஒன்றுமில்லை.  என் நடத்தையை ஏற்றுக் கொள்வதோ, விலக்கி விடுவதோ உமது விருப்பம் !

(அப்போது மிஸிஸ் பெயின்ஸ் நுழைகிறார்.  சல்வேசன் ஆர்மி கமிஷனர் உடை அணிந்திருக்கிறாள்.)

மேஜர் பார்பரா:  (தந்தை ஆன்ரூவைக் காட்டி) இவர்தான் என் தந்தை மிஸிஸ். பெயின்ஸ் ! உங்கள் திறமையில் முயன்று பாருங்கள்.  என் சொல் பலிக்க வில்லை இவரிடம் !  நான் சிறுமியாக இருந்த போது புத்தி கெட்டிருந்ததை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார் !

மிஸிஸ் பெயின்ஸ்:  எங்கள் சல்வேசன் சாவடியை உமக்கு யாராவது சுற்றிக் காட்டினாரா ?  மிஸ்டர் அன்டர்ஷா·ப்ட் !  நாங்கள் இங்கு என்ன செய்து வருகிறோம் என்று தெரியுதா ?

ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்:  இந்த நாடே அறியும் மிஸிஸ் பெயின்ஸ் !

மிஸிஸ் பெயின்ஸ்:  இல்லை ஐயா !  நாடு முழுவதும் இதை அறியாது. !  பணமின்மையால் சல்வேசன் சாவடி முடங்கி விடக் கூடாது !  வடதிசை முதல் தென்திசை வரை நாடு முழுவதும் எமது சேவை வரவேற்க படுது., தொடர்கிறது.  இம்முறை நாங்கள் இல்லாது போனால் லண்டனில் பெரிய கலகம் விளைந்திருக்கும்.  கலகத்தைத் தவிர்த்தவர் சல்வேசன் சாஆன்ரூ:  அப்படியா சொல்கிறய் ?  நம்ப முடிய வில்லை என்னால் !

மிஸிஸ் பெயின்ஸ்:  எனக்கு அது நன்றாகத் தெரியும். 1886 இல் செல்வந்தர் நெஞ்சம் கல்லாகி எளியோரைத் துன்புறுத்தினார்.  வெகுண்டு எழுந்த ஏழைகள் உங்கள் மாளிகைக் கண்ணாடிகளை உடைத்தார்.

ஓபிரையன் பிரைஸ்:  பணக்காரனும் எளியோரைத் துன்புறுத்தி வேறு வழியில் என்னைப் போல்தான் பாவம் செய்தவன் ஆகிறதான் !

(தொடரும்)

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 28, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபோதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்

Leave a Comment

Archives