ரிஷ்வன்
அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, அப்படியே இரவு உணவை, எதாவது ஹோட்டலில் முடித்து, இரவை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்பதால் மட்டும் அல்ல, மறுநாள் விடுமுறை என்பதாலும் நிம்மதியாக தூங்கி விருப்பம் போல எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம் என்பதால் தான்.
ஆனால் சமீபகாலமாக மகிழ்ச்சி இரட்டிப்பானது, காரணம் வேறு ஒன்றுமில்லை, மனைவி தலைப் பிரசவத்திற்காக, தாய் வீடு சென்று இருப்பதாலும், அவளை வாரம் ஒரு முறை பார்த்து வருவதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் மாமனார் வீட்டிற்க்குச் சென்று வாரம் வாரம் விருந்து உண்டு வருவது தான்.
அந்த சந்தோஷமும் தற்சமயம் மூன்று மடங்கு ஆகிவிட்டது. நீங்கள் நினைப்பது சரிதான், எனக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.சென்ற வாரம் குழந்தையைப் பார்த்ததிலிருந்து, குழந்தையின் ஒவ்வொரு அசைவும் என் கண்ணிலே இருந்து வருவதால், இன்று, எப்படியும் முன்னதாக கிளம்பி, மகளையும் மனைவியையும் பார்க்க விரும்பினேன்.
கணேசபுரம், ஒரு குக்கிராமம், சென்னைலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்திருந்தது, கிராமம் தான் என்றாலும், பார்க்க மிகவும் ரம்மியமாக பச்சைப்பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமையுடன் அமைந்து இருக்கும். .
கிராமத்தைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, நடுவில், அந்த கிராமம். நகரின் வாசனை எதுவும் அறியாத மக்கள், ஏதோ ஒரு புதிய உலகிற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றும் படியாகவே இருக்கும்.
எப்படியோ ஆபீசில் பெர்மிஷன் போட்டு, மதியம் ஒரு மணிக்கே கிளம்பினேன். நேரே பாரிஸ் கார்னர் சென்று, தன் மனைவிக்கு பிடித்த இனிப்பு கார வகைகளையும் மற்றும் குழந்தையை கொசுக் கடியிலிருந்து தவிர்க்க குடை வடிவ கொசுவலையையும், கூடவே பழங்களையும் வாங்கித் தயாராக வைத்துக்கொண்டேன்.
பஸ் கிளம்ப மதியம் மூன்று மணி ஆயிற்று, எப்படியும் இங்கிருந்து வேலூர் செல்ல மூன்று மணி நேரம் ஆகும். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் கணேசபுரத்தை இருட்டுவதற்குள் சென்று விடலாம் என்றுதான் மனதிற்குள் கணக்கு போட்டு வைத்திருந்தேன்..
கணேசபுரமோ, மெயின் ரோடிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் உள்ளே இருந்த படியால், அங்கிருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ்ஸில்தான் எப்பொழுதும் செல்வது வழக்கம்,எப்படியும் கடைசி பஸ்சை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்க,
வேலூர் வரைக்கும் நன்றாக சென்ற பஸ், வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், ஒரு இடத்தில் பஞ்சர் ஆகிவிட்டது, நடு வழியில் நின்று விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படியோ பஸ் ஓட்டுனரே, வண்டியின் டையரை மாற்றிவிட்டார். கிளம்ப கூடுதலாக ஒரு மணி நேரம் ஆயிற்று, அப்படியும் கணேசபுரம் மெயின் ரோடு செல்ல கிட்டத்தட்ட ஒன்பது மணி ஆகிவிட்டது.
இறங்கியுடன், சுற்றும் முற்றும் பார்த்தேன், அது பனிக்காலம் என்பதால், அந்த மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளில் ஒரு சில கடைகள் தவிர, மற்ற எல்லாம் மூடியபடி இருந்தது, ஒரே ஒரு டீக்கடையில், பெரியவர் மட்டும் டீக்கடை பெஞ்ச்களை வெளியில் இருந்து, ஒவ்வொன்றாய் உள்ளே அடுக்கிக் கொண்டிருந்தார், அநேகமாய் அவர்தான் கடையின் முதலாளியாய் இருக்க வென்றும், மெல்ல அவர் அருகில் சென்றேன்,
‘பெரியவரே, கணேசபுரம் போகணும், டவுன் பஸ் போயிடுச்சா’
‘இன்னும் போகல தம்பி, இப்ப வர்ற நேரம் தான்’
மனதிற்கு தெம்பாய் இருந்தது, எப்படியும் வந்தது விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க, மணியோ, பத்து ஆகிவிட்டது,அந்த பெரியவரோ, கடையை மூடிவிட்டு, ஒரு பெஞ்சில், துண்டை விரித்து போட்டு தூங்கத் தயாரானார். நானும் அருகில் உள்ள கடையில் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.
‘பெரியவரே. மணி ஆச்சி, பஸ் இன்னும் வரலையே..’
‘சில சமயம் லேட்டா வரும்.. வராம கூட போகும், கணேசபுரம் தானே.. கொஞ்சம் பொறுத்துப் பாருங்க.. வரலைனா …அப்படியே காத்தாட நடந்து போயிடலாம் தம்பி’
அவனும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான், மணி வேறு பதினொன்று ஆகிவிட்டது.இனிமேல் இங்கேயே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை, நடந்தே சென்று விடலாம் என்று எனக்குத் தோன்றியது.இதுவரைக்கும் நடந்து சென்றதில்லை, வெளிச்சம் என்று மருந்துக்கும் இல்லை, பெஞ்சில் படுத்திருந்த பெரியவர் இருமினார்.
அவரை அடிக்கடி தொந்தரவு செயகிறேனோ என்று மனதிற்கு பட்டது, இருந்தாலும் கடைசியா அவரிடம் பொய் விசாரித்து விட்டு நடையை கட்டலாம் என்று தோன்றியது.
‘பெரியவரே.. நடந்து போன வழியில் எந்த பயமும் இல்லையே..’
‘என்ன தம்பி இந்த காலத்துல போய் பயப்படறீயே..’
‘அதுக்கில்ல, வழியில எதாவது பூச்சி, பொட்டு வருமான்னு தான் கேக்கறேன்’
‘அதெல்லாம் ஒன்னும் வராது தம்பி, வழியெல்லாம் ஒரே வயக்காடு தான், எதுக்கும் கையில ஒரு தீப்பெட்டி எடுத்துக்கோ..எதாவது சத்தம் கேட்டதுன்னா, ஒரு தீக்குச்சியை பத்த வை.. நெருப்ப பாத்தா எந்த மிருகமும் பயந்து போய்டும்..’
‘சரி பெரியவரே…. நீங்க தூங்குங்க… நான் கெளம்பறேன்’
நல்ல காலம், கையில் தீப்பெட்டி இருந்தது, சமயத்தில் சிகரெட் பிடிப்பது கூட உதவுகிறது, மனதில் நினைத்தவாறு, கணேசபுரம் செல்லும் சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அதை சாலை என்று கூறுவதை விட, ஒரு மண்ணும் கல்லும் மூடிய ஒற்றையடிப் பாதை என்று தான் கூறவேண்டும், சாலை முழுவதும் சரளைக் கற்கள் பெயர்ந்து, ஒரே குண்டு குழியுமாய் இருந்தது,
இரண்டு புறமும் கருவேல முள் மரங்களும், புளிய மரங்களும், வேப்ப மரங்களும் சாலை நோக்கி வளைந்து சூழ்ந்து கிட்டத்தட்ட பாதையை மூடி, ஒரு குறுகலான தோற்றத்தை உண்டாக்கி இருந்தது, இருட்டில் பார்ப்பதற்கு ஒரு இருட்டு குகைக்குள் செல்வது போல பயமுறுத்தியது.
ஒரு நூறு மீட்டர் நடந்திருப்பேன், சாலையின் ஒரு புறம் உள்ள, கரும்பு தோட்டத்தில், கரும்பு கழிகள் லேசாக அசைய ஆரம்பித்து, காற்று தான் அசைக்கிறது என்று நினைத்தேன், சிறிது நேரத்தில் ராந்தல் விளக்குடன், ஒரு முதியவர், வரப்பில் இருந்து வெளிப்பட்டார்.
அவர் வெளியே வந்து, ரோடை அடையும் வரை பொறுமையாக, அங்கே நின்றேன்.
‘பெரியவரே..’ என்றேன் பதில் இல்லை. அருகில் சென்று மிகவும் சத்தமாக கூற..
லேசாக திரும்பிப்பார்த்தார், அவருக்கு நான் நிற்பதே தெரியவில்லை, பின்னர் தன்னுடைய ராந்தல் விளக்கை என் முகத்தில் அருகே வைத்து பார்க்க…
‘யாரு…’
‘பெரியவரே… கணேசபுரம் போயிட்டு இருக்கேன்..நான் கடைசி பஸ்ஸ தவற விட்டுட்டேன், , நீங்க எங்கே போறீங்க..’
‘ஒ..நானும் அங்கே தான் போறேன்..’
‘நல்லது பெரியவரே.. எனக்கும் தனியா போறதுக்கு கொஞ்சம் பயமா இருந்தது… வழித்துணைக்கு நீங்க வந்தது நல்லதாப்போச்சு.’
‘கால்ல குழாய் எல்லாம் மாட்டிக்கிட்டு இருக்கீங்க… பட்டணத்தில இருந்து வரீகளா..’
‘ஆமாம் பெரியவரே, எனக்கு மாமனார் வீடு இதுதான், பொண்டாட்டி தல பிரசவத்துக்காக வந்திருக்கா …அதான் பாத்திட்டு போக வந்தேன்…இந்த ராத்திரி நேரத்த்தில இங்க என்ன பண்றீங்க..’
‘கரும்பு கொல்லைக்கு தண்ணீர் விட வந்தேன்..ஒரு மணி நேரம் தான் கரண்ட்டு விட்டான, அதுக்குள்ளே போய்டுச்சி .. அதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்..’
‘தனியா போறீங்களே, வழியில காத்து கருப்பு இருக்குதுன்னு சொல்றாங்களே, பயம் எதுவும் உங்களுக்கு இல்லையா…’
‘அதெல்லாம் நெறைய பார்த்திட்டேன் தம்பி… ஆனா ஒன்னும் செய்யாது’
‘என்னது… இருக்கா… நீங்க பார்த்து இருக்கிங்களா’
‘எத்தனோ முறை வழியில பார்த்து இருக்கேன்… ஆனா ஒன்னும் பண்ணாது..’
எனக்கு மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது, ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.
‘இந்த காலத்துல போய் ஆவி, காத்து, கருப்பு எல்லாம் நம்பறீங்களா பெரியவரே..’
‘என்னதான் காலம் மாறினாலும், அதெல்லாம் உண்மைதான்.. இங்க நடமாடற ஆவி கதையை கேட்டு இருக்கீங்களா’
‘அதெல்லாம் நான் நம்பறது இல்ல..சொல்லுங்களேன்… வீட்டுக்கு போற வரைக்கும் போர் அடிக்காம இருக்கும்’
‘அப்படி எல்லாம் நினைக்காத தம்பி…இது உண்மையா நடந்தது தான்’
‘ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி, இங்க கோவிந்தசாமி நாய்க்கர்ன்னு , ஒரு ஜமீன்தார் இருந்தார், சுத்தி இருக்கிற பதினெட்டு பட்டிக்கும், அவர் தான் பெரிய நாட்டாம்மை, வசதிக்கும குறைச்சல் இல்ல..
அரண்மனை போல வீடு இருக்கும், நில புலன்களுக்கும் அளவே இல்ல, வேலை செய்யவே நூத்து கணக்குல ஆள் இருப்பாங்கா..அவருக்கு, கௌரி… லட்சுமி …
‘என்ன.. ரெண்டு போண்ண்டாட்டியா …’
‘இல்லப்பா .. ஒண்ணு தான்.. கௌரி லட்சுமின்னு அழகான மனைவி…அவருக்கு மனைவிமேல அம்ம்புட்டு பிரியம். வாழ்க்கை நல்லத்தான் போய்ட்டு இருந்தது, அப்பதான்.. …’ நிறுத்தினார்.
‘ஏதாவது அசம்பாவிதம் நடந்து போச்சா ..’
‘கொஞ்சம் பொறுப்பா… அவசப்பட்ட எப்படி.. வத்திப்பெட்டி வைச்சிருக்கியா .. சுருட்டு பிடிக்கணும் போல இருக்கு ‘ என்றவர் … மடியில் சுருட்டி வைத்திருந்த சுருக்கு பையைத் துழாவினார்.
‘பெரியவரே…என்ன தேடறீங்க…’
‘இப்பத்தான் … ஒரு சுருட்டு பிடிச்சி.. பாதியை.. இங்கதான் வச்சேன்..அதக் காணோம்..’
‘சிகரேட் பிடிப்பீங்களா…இந்தாங்க….’
‘எனக்கு சுருட்டு பிடிச்சி தான் பழக்கம்…சரி..கொடு…’ கொடுத்தேன்..
பத்த வைத்தவர்.. புகையாய் நன்றாக இழுத்து… தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டார்
நானும் ஒன்றை எடுத்து பத்த வைத்தேன்..
‘இந்த வாசனை நல்ல தான் இருக்கு… ஏனோ சுருட்டுல இருக்கிற காரம் இதில இல்லையே…. ஆங்… எங்க விட்டேன்..’
‘ஜமின்தார் தன மனைவியை நேசித்தார்ன்னு சொன்னீங்க…அப்புறம் ‘
விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன். ..
‘ஆமா.. மனைவி மேல அவருக்கு கொள்ள பிரியம்.. ஜமின்தாருக்கு காட்டுல போய் வேட்டை ஆடுறதுல்ல பைத்தியம்ன்னு சொல்லலாம். , காட்டுக்குள்ள போனாருன்னா… எப்படியும் ஒரு புலி, சிறுத்தை, இல்லாம வீட்டுக்கு வரமாட்டார்.. அதுக்காக காட்டுல ஒரு வாராம் மேல கூட தங்கிட்டு வருவார்…
அப்படி ஒரு தடவ அவர் போன பொழுது…அன்னிக்குன்னு பார்த்து…அவரே எதிர்பாக்காம.. ஒரே நாள்ல .. ரெண்டு புலிய கொன்னு .. போன அன்னிக்கு ராத்திரியே வீட்டுக்கு வந்திட்டார்…
வீட்டுக்கு வந்து பார்த்தா..அவரு மனைவி குதிரைக்காரன் கூட இருக்கிறதை . தன் கண்ணால நேர்லேயே பார்த்திட்டார்…’
‘பார்த்த உடனே குதிரக்காரனையும் மனைவியையும் கொன்னுட்டாரா….’
அவசரப்பட்டேன், முடிவை தெரிந்து கொள்ள..
‘அப்படி பண்ணி இருந்தா தான் பிரச்சினை இல்லையே… ஆனா .. அவர் பார்த்த உடனே குதிரைக்காரன் ஓடிப்போய்ட்டான்..மனைவியோ ஜமின்தார் காலில் விழுந்து கதறி அழுவுறா, அவ அழறதப் பார்த்தவுடன் அவர் மனது கொஞ்சம் இளகியது…
‘எப்போ நீ ஒருத்தன் கூட இருந்தியோ.. அப்பொழுதே இந்த வீட்டை விட்டு போய்விடு..என் முகத்தில் முழிக்காதே..’
கர்ஜித்தார்..
‘அப்படி எல்லாம் செய்திடாதிங்க… எதோ தெரியாம தவறு செய்திட்டேன்..’
மீண்டும் அவர் காலைப் பிடித்து கதற..
‘நீ செய்த தவறுக்கு.. ஊருக்கு மட்டும் நாம் கணவன் மனைவியா இருப்போம், வீட்டுக்குள்ள நீ யாரோ நான் யாரோ, இதற்கு சம்மதம்னா இரு.. ‘
வெளியில் சென்று அவமானப்படுவதை விட, இப்படியே இருந்து விடலாம் என்று முடிவு செய்தவளாய் அவர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.
‘அப்புறம்.. கதையிலே ஒரு திருப்பமே இல்லையே.. என்ன பெரியவரே… ‘
‘இருப்பா.. இனிமே தான் கதையின் முடிவே வரப்போகுது.. அதுக்குள்ளே அவசப்பட்ட எப்படி..’ அவர் அப்படி சொல்ல…
வழியில் வினோத ஒலிகள் கேட்க ஆரம்பித்தது, பாதை இருமருங்கிலும் பனை மரங்கள் வளர்ந்து. இருந்தது, போதாக்குறைக்கு காற்று வேறு பலமாக வீசியதால், காய்ந்த பனைமர மட்டைகள், ஒன்றுக்கு ஒன்று மோதி ‘சல சல’ என்று சத்தம் போட்டு பயமுறுத்தியது.
பக்கத்தில் எங்கேயோ.. குலமோ, குட்டையோ இருக்க வேண்டும், பாம்பு தவளையை துரத்தி செல்ல, பாம்பின் வாயில் மாட்டிய தவளையின் கதறல் சத்தமும், ஆந்தையின் அலறலும் துல்லியமாகக் கேட்டது.
‘என்னப்ப்ப பயமா இருக்குதா..’
‘அப்படி எல்லாம் இல்ல… இந்த சத்தம் தான்.. ‘ இழுத்தேன்.
‘நாள் செல்லச் . செல்ல, கௌரிலட்சுமிக்கு குதிரைக்காரன் மேல ஆசை கொஞ்சமும் குறையல, அதற்காக ஒரு சதித்திட்டம் போட திட்டமிட்டாள்.
ஒரு நாள், ஜமின்தார் மதிய உணவு சாப்பிட்டிட்டு, ஊஞ்சலில் சாய்ந்து ஓய்வெடுதுக்கொண்டிருந்தார், அப்ப மெதுவாக அவர் பக்கத்துல நின்னு,
‘இந்தாங்க கொழுந்து வெத்தலை போட்டுக்கோங்க..’
தன கையால் மடித்த வெற்றிலையை அவரிடம் நீட்ட..
‘என்ன இன்னிக்கு.. இதுல எதாவது விஷம் தடவி இருக்கியா..’
‘ஐயோ.. ஏன் இப்படி என்ன வார்த்தையால சித்திரவதை செய்றீங்க.. பாருங்க..நம்பிக்கையில்லனா… நானே போட்டுக்கறேன்.. அப்படின்னு சொல்லிட்டு …அவளே அந்த வெத்தலைய தன வாயில் போட்டு மெல்ல ஆரம்பிச்சுதமே ..’
ஜமீன்தார கொஞ்சம் சமாதானாமானார். .
‘நான் ஒரு யோசனை சொல்லவா. பேசாம அவன கொன்னுடலாம் .. அப்புறம் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரும் இல்லையா’
தன திட்டத்தை மெதுவா அவர் காதுல போடா ஆரம்பிச்சா..
அவரும் யோசித்தார், அவருக்கும் சரியென்று பட்டது..அதற்கான திட்டமும் தீட்டப்பட்டது… ..
ஜமின்தார் மறுபடியும் வேட்டைக்கு சென்றிருப்பதால், தன்னை வந்து சந்திக்க அய்யனார் கோவிலுக்கு வருமாறு, அந்த குதிரைக்காரனுக்கு தனக்கு விசுவாசமான் ஒருத்தர் மூலம் தகவல் தெரிவித்தாள் …கௌரிலட்சுமி,
அவன் அங்கு வந்தால், அவனை ஜமீன்தார் மூலம் கொலை செய்துவிட்டு, பழியை காத்து, கருப்பு, ஆவி மேல் போட்டு விடலாம. என்ற திட்டத்துடன் இருக்க…
அந்த குதிரைக்காரனும் சரியாக அங்கு வர…
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் காதலர்கள் போல அவர்கள் சந்திக்க, அதை ஜமீன்தார், ஒரு மறைவில் இருந்து பார்த்துக்கொண்டே..மெதுவாக.. அவன் அருகில் வந்து, தன கையில் இருந்த கத்தியால் குத்த முயலும் பொழுது…’ நிறுத்தினார்..
அதற்குள் அந்த ஊரின் எல்லை காவல் தெய்வமான அய்யனார் சிலை சிறிது தூரத்தில் கம்பீரமாக வீற்றிருக்க…ஊர் எல்லையை அடையப் போகிறோம் என்பதை உணர்ந்தான். ..தூரத்தில் … சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை.பார்த்தான்..
‘என்ன பெரியவரே…நிறுத்திட்டிங்க…’
‘ஒண்ணும் இல்லப்பா ….அந்த கௌரிலட்சுமி .கௌரிலட்சுமி…’.
ஏனோ தெரியவில்ல.. கடைசியில் அந்த பெயரைக் கூறிய பொழுது, அவர் குரல் முன் போல இல்லை, குரல் தழுதழுத்தது.. கண் கலங்கியதா…இல்லை கண்ணில் தூசி பட்டதா.. தெரியவில்லை… .
‘அதற்குள், தான் ஆசை ஆசையாய் இருந்த கௌரிலட்சுமியே மறைத்திருந்த கத்தியால் ஜமினதாரின் மார்பில் குத்த, குதிரைக்காரனும் தன் பங்கிற்கு சேர்ந்து கத்தியால் குத்த .. அவர் உயிர் அப்பொழுதே பிரிந்தது..
‘அடிப்பாவி..’ என்றேன்..
‘மறுநாள்… ஜமீன்தாரை… காட்டு புலி கொன்றதாக ஒரு புரளியைக் கிளப்பி.. ஊர் மக்களை நம்பவைத்தாள் கௌரிலட்சுமி…
‘அன்னிக்கு இருந்துதான்.. அந்த ஜமீன்தார் ஆவி… இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கு..’
‘அப்புறம் எப்படி தான்… அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தெரிந்த அந்த ரகசியம் மத்தவங்களுக்கு தெரிஞ்சது பெரியவரே…’
அதற்குள்… அய்யனார் கோவிலை அடைந்து விட்டேன்…
சுற்றும் முற்றும் பார்க்க… பக்கத்தில் நடந்து வந்த பெரியவரைக் காணவில்லை…
பெரியவரே.. பெரியவரே.. சத்தமாக கூச்சலிட்டுப் பார்த்தேன்.. ..
அவரைக் எங்கும் காணவில்லை….அருகில் நடந்து வந்தவர்… அய்யனார் கோயில் வந்த உடனே …. காணவில்லையே..
ஒருவேளை வந்தவர் தான் அந்த ஜமீன்தாரோ … இவ்வளவு நேரம் அவருடன் தான் பேசிக்கொண்டு வந்தேனோ .. ஊரின் தெரு வீதியை அடைந்தும் .. மனதில் இருந்து பயம் விலகிய பாடில்லை…
அன்று ஏற்பட்ட அந்த அனுபவம் இன்று வரையில் என் வாழ்க்கையில்… ஒரே மர்மமாக இருக்கிறது….
தூக்கம் வராமல், இறந்து போன தன் தந்தை சிவராமனின் பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்த எடுத்த டைரியில், 4-11-1972 அன்று எழுதிய மேல் சொன்ன பகுதியை படித்ததிலிருந்து கணேஷுக்கு..கொஞ்சம் நஞ்சம் வந்த தூக்கமும் போய் விட்டது..
சமையல் அறைக்குள் சென்று, ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தலாம் என்று குடிக்கச் செல்ல..
‘என்னப்பா… கணேஷ்.. தூக்கம் வரலையா’
அதிர்ச்சியுடன் குரல் கேட்டு திரும்ப, இறந்து போன தன் தந்தை எதிரில் நின்று கொண்டு இருந்தார்.
‘*************முற்றும்*******************
- “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
- காற்றின் கவிதை
- மகளிர் தினமும் காமட்டிபுரமும்
- நன்றி கூறுவேன்…
- நன்றி. வணக்கம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை
- நிஜங்களுக்கான பயணிப்புக்கள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2
- பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி
- பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 33
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்
- பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.
- தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்
- சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
- பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
- வியாசனின் ‘ காதல் பாதை ‘
- கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
- கன்யாகுமரியின் குற்றாலம்
- முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை
- தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை
- வழிமேல் விழிவைத்து…….!
- அந்த முடிச்சு!
- கசீரின் யாழ்
- ஷிவானி
- வசந்தபாலனின் ‘ அரவான் ‘
- உழுதவன் கணக்கு
- மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?
- பருந்தானவன்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.
- நீ, நான், நேசம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா
- முன்னணியின் பின்னணிகள் – 30
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது
- பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
- ”சா (கா) யமே இது பொய்யடா…!”
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13
- விளையாட்டும் விதியும்
- காதலில் கதைப்பது எப்படி ?!
- மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்
- அச்சாணி…
- கணேசபுரத்து ஜமீன்
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)