15. நரகமாகிப் போன மாயலோகம் சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார். சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார். “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார். உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான். “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை. உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை. சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார். தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார். “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு. “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும். நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான். நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன். அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார். தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார். “நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம். அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..” சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம். பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார். “ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா. மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார். சார்லஸ் அதை ஏற்றுக்கொண்டு, சானை அழைத்து, “பாவ் கவனமாக் கேள்..” என்றார். “என்னப்பா?”…