அடையாளம்

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 17 of 18 in the series 27 டிசம்பர் 2015

தருணாதித்தன்

ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில் பளிச்சென்று தெரிவார்கள், சிலர் எப்பேர்ப்பட்ட மூடியையும் வெறும் கையால் திறப்பார்கள். அந்த மாதிரி சுந்தருக்கு ஒரு திறமை இருந்தது. சுந்தர் எப்போதோ, எவ்வளவு வருடங்கள் முன்போ பார்த்திருந்தால் கூட, அவர்களது முகத்தையும், பெயரையும், குரலையும் நினைவில் வைத்திருப்பான். கூடவே உபரியாக அவருக்கு மசாலா டீ பிடிக்கும், வருடம் தவறாமல் சொந்த ஊரில் அய்யனார் கொடைக்குப் போவார், அக்கா புருஷன் சௌதியில் இருக்கிறான் என்று நிறைய விஷயங்களுடன். தொழிலுக்கு அவசியமாக வளர்த்துக் கொண்ட திறமை. சுந்தர் ஒரு இன்சுரன்ஸ் ஏஜன்ட். கூடவே ம்யூசுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாஸிட், மார்ச் மாசத்தில் இன்கம்டாக்ஸ¤க்கு சேமிப்புகள் எல்லாம் செய்து கொடுப்பான்.
கல்யாணத்தைக்கூட இன்டர்நெட்டில் முடிக்கின்ற காலத்தில், இன்சுரன்ஸ் ஏஜன்ட் வாழ்க்கை சிரமம்தான். இருந்தாலும் சுந்தருக்கு ஒரு சாமர்த்தியம் உண்டு. இன்டர்நெட் உபயோகிக்கத் தெரியாத புற நகர் கீழ் மத்திய தர குடும்பங்கள், மத்தியான வேளையில் ஷாப்பிங் மாலில் க்ரெடிட் கார்டுடன் சுற்றும் வீட்டு மனைவிகள், கையில் பணத்துடன் குழப்பத்தில் இருக்கும் சமீபத்தில் ரிடயர் ஆன ஆசாமிகள் என்று பார்த்தவுடனேயே இன்சுரன்ஸ் வாங்கக்கூடியவர்கள், டெபாஸிட் செய்பவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வான். நிரந்தர புன்னகையுடன் நட்பான உருண்டை முகம், அதிகமாகவே நரைத்த தலை, சற்று பருத்திருந்தாலும் நடையில் உற்சாகம், மேலாக சற்றே இணக்கமான குரல் சுந்தர் எல்லோருக்கும் நண்பன். எப்போதும் சற்று அதட்டும் சுமதியின் குரலுக்குத் தணிந்த மாதிரி நடிக்கும்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் அவனுடைய பெண் சுந்தரைப் பார்த்து கண்ணடிப்பாள்.

ஊரில் இல்லை அடுத்த வாரம் பார்க்கலாம், இப்பத்தான் ஸ்கூலுக்கு டொனேஷன் குடுத்து கையில் பணமில்லை, நாள் சரி இல்லை அடுத்த அம்மாவசைக்கு அப்புறம் என்று மிதமான பொய் சொல்பவர்களை எளிதாக வசப்படுத்துவான். வேற வேலை இல்லை காலையில வந்து கழுத்தறுக்காதே என்று எரிந்து விழுபவர்கள், நாயை அவிழ்த்து விடுபவர்கள் எல்லோரையும் சமாளிப்பான். பொறுமையாக பேசி , ஒத்துக் கொள்ள வைத்து அவர்களுக்கு ஃபார்ம் நிரப்புவான். எடையைக் குறைத்து, கொலஸ்ட் ரால் இருந்தாலும் அதிக அபாயம் இல்லை என்று எழுதக்கூடிய டாக்டரிடம் பரிசோதனைக்கு தன்னுடைய காரில் அழைத்துச் சென்று, திரும்ப வீட்டில் விடுவான். நாளில் பாதி நேரம் யாருக்காகவாவது காத்திருந்து, ட்ராஃபிக்கில் திண்டாடி நொந்து போய் வீட்டுக்கு வரும் போது சில சமயம் தன்னுடைய பத்து வருடப் பழைய மாருதி 800 டன் பேசிக் கொள்வான். அவனுக்கு புதிய கார் வாங்க அவ்வளவாக இஷ்டம் இல்லை. இரண்டு காரணங்கள். முதலாவது – கையில் பணம் இல்லை, இரண்டாவது அந்தப் பழைய காரின் மேல் ஒரு பாசம்.

புதிய கார் வாங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவானது சென்ற வார சம்பவத்துக்குப் பிறகு. அன்று சுமதியின் பெரியப்பா பையன் மகளுக்குக் கல்யாணம். பெரியப்பா அமிதாப் பச்சன் உயரத்தில் ,தடியான கருப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடியும், முழுசாக நரைத்த மீசையும், மூக்கில் ஒரு பெரிய பருவும், அகலமான கருப்புக்கரை வேட்டியுமாக உரத்த குரலில் யாரையாவது விரட்டிக் கொண்டிருப்பார். முதல் நாளே வரச் சொல்லி இருந்தார், வேலை காரணமாக போக முடியவில்லை. சுமதி சற்று நிம்மதியாக தூங்க விரும்பிய சுந்தரை எழுப்பி விட்டாள். எல்லோரும் அவசரமாக குளித்து, காலை டிஃபனுக்கே கல்யாண மண்டபத்துக்கு போவதாக திட்டம். தூரம் வேறு – மண்டபம் எங்கோ மடிப்பாக்கத்தில். அன்றைக்கு வழக்கமாக வரும் பூக்காரி வரவில்லை. பூக்காரியின் கணவன் சிறிது அதிகம் பணம் வரும் என்றால் வாடிக்கை வீடுகளை விசேஷ நாட்களில் விட்டு விடுவான். எப்போதும் குடித்ததுக் கலங்கிய கண்களுடன், , மடித்துக் கட்டிய அழுக்கு ப்ரௌன் லுங்கியில் வந்து, தலையைக் குனிந்து கொண்டே பூவைக் கொடுத்து விட்டுப் போவான். அன்றும் எல்லா பூவையும் வேறு எங்கேயோ விற்கச் சென்றிருக்க வேண்டும். பூ இல்லாமல் அப்போதிலிருந்தே சுமதி டென்ஷன்தான். நீல நிறப் பட்டுப் புடவையின் மாட்சிங் ப்ளவுஸ் அன்று ஏனோ சற்று சின்னதாகப் போன காரணத்தால், வேறு புடவை மாற்றி, கடைசியில் கிளம்பியதே தாமதம்.
சுந்தருடைய அருமைக் கார் அன்று பாதி வழியில் நின்று போனது. இந்தப் பத்து வருஷத்தில் ஒரு தடவை கூட இப்படி நின்று போனதில்லை. அதுவும் சுமதியின் உறவினர் கல்யாணத்துக்குப் போகும் போது.

சுந்தர் ஏதோ தனக்குத் தெரிந்த அளவில் கிளப்பப் பார்த்தான். விதம் விதமாய் சத்தம் வந்தது, கார் கிளம்புவதாக இல்லை. பானட்டைத் திறந்து பார்த்தால், ஒன்றும் புரியவில்லை. தொட்டால் ஒரிடத்தில் கை சுட்டது, கரிய எண்ணெய் பிசுக்கு ஒட்டியது. சுந்தர் மெகானிக் கடைக்குப் ஃபோன் செய்து பார்த்தான். கடை இன்னும் திறக்கவில்லை, ஒருவரும் எடுக்கவில்லை. அவனிடம் கடந்த மூன்று வருடமாக இன்ஸுரன்ஸ் விற்க முடியவில்லை. அந்த மெகானிக் தினமும் ராத்திரி சீட்டு விளையாடி விட்டு, நண்பர்களுடன் அரட்டைக்குப் பிறகு தூங்கப் போவது நள்ளிரவுக்குப் பிறகுதான். அதனால் எப்போதுமே தாமதமாகத்தான் கடையைத் திறப்பான். அதற்குள் சுமதிக்கு கோபம் வந்து விட்டது.
” நாம இப்படி ஆடி அசஞ்சு போகறத்துக்குள்ள, முகூர்த்தமே முடிஞ்சுடும், கால் டாக்ஸி கிடைக்குமான்னு பாருங்க, இந்த ஓட்டைக் கார முதல்ல தூக்கிப் போடுங்கன்னு எத்தன வருஷமா நானும் சொல்லிட்டுருக்கேன்” இந்த மாதிரி சமயங்களில் சுந்தர் அதிகம் பேச மாட்டான். அன்று அதிர்ஷ்டம் இல்லை, கால் டாக்ஸி எல்லாம் கல்யாண நாள் ஆனதால் முதலிலேயே புக் ஆகி இருந்தன. காலை பள்ளிக்கூடத்துக்கு போவதாக ஆட்டோக்களும் வர மறுத்து விட்டன. கடைசியில் அரை மணி நேரம் காத்திருந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து, கல்யாண மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சுமதி வியர்த்து, முகத்தில் பவுடர் எல்லாம் கலைந்து, முக்கிய சடங்குகள் பாதி முடிந்து, டிபன் வேறு தீர்ந்து போய் காபி மட்டும் கிடைக்க, மறு பேச்சு இல்லாமல் வேறு கார் வாங்குவதாக முடிவு ஆயிற்று. சேர்த்து வைத்த பணமும், பாதி கடனுமாக புதிய கார் புக் செய்தான். எல்லோருமாக தேர்வு செய்திருந்த கருஞ்சிவப்பு நிறம் வர ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று,

புதுக் கார் வந்த தினம் சுந்தருடைய வாழ்க்கையில் பிரகாசமாகத்தான் ஆரம்பித்தது. காலை கார் டெலிவரி எடுத்துக் கொண்டு, அடிக்கடி தடவிப் பார்த்து மகிழ்ந்து, நேரே குடும்பத்துடன் பிள்ளையார் கோவிலுக்குப் போனான். அன்று கோவிலில் பூஜை செய்யும் வயசானவர் இல்லை. சமீபத்தில் அவர் யு எஸ்ஸில் ஒரு கோவிலுக்கு அய்ந்து வருட கான் ட்ராக்டுக்கு முயற்சி செய்து கிடைக்காமல் சற்று வெறுத்துப் போயிருந்தார். அதனால் சரியாக பூஜை வேளைக்கு வருவதில்லை. அவர் ஒரு டெபாஸிட் தருவதாக சொல்லி இருந்தார். அவர் பையன் தான் இருந்தான். அவன் காலையில் ஒரு மணி நேரம் பூஜை செய்து விட்டு ஜீன்ஸ் பேன்ட் மாற்றிக் கொண்டு பைக்கில் வேலைக்குக் கிளம்பி விடுவான். அவனுடைய தங்கை ஒருத்தி, பார்க்க சுமார் நிறம், வயசாகியும் கல்யாணம் ஆகவில்லை. வண்டிக்கு மாலை போட்டு, கற்பூரம் காண்பித்து, தீர்த்தம் தெளித்து , சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழம் நசுக்கி, நன்றாக கணீரென்ற குரலில் பூஜை செய்ததில் மகிழ்ந்து, சுமதி நூறு ரூபாய் தட்டில் போட்டாள். அப்படியே பெண்ணை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு விட்டு, சுமதியை வீட்டில் விட்டு விட்டு சுந்தர் அன்று பார்க்க வேண்டிய ஒரு இன்சுரன்ஸ் கேஸ¤க்கு கிளம்பினான். மெட்ரோவுக்காக தோண்டி இருந்தார்கள், மீதி இருந்த இடத்தில் ட்ராஃபிக் அதிகமாக இருந்தது. ரோடு முழுவதும் இன்ச் இன்ச்சாகத்தான் நகர்ந்தது. பக்கத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் இடிக்கிற மாதிரி வந்தன. சுந்தருக்கு அவர்களை பார்த்து, ஒரு நிமிடம் நிற்க முடியாமல் அப்படி என்ன அவசரமோ என்றும், இந்த வேளையில் முதல் முதலாக காரை எடுத்து வந்ததே தப்பு என்றும் தோன்றியது.

கோயம்பேடு அருகே சிக்னலுக்கு நின்றிருந்தான். அப்போதுதான் பின்னால் கோபமாக ஒலித்த ஹாரன்களைக் கேட்டு ,அந்த பைக் இளைஞனை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தான். அவன் குறுக்காக அங்கும் இங்கும் புகுந்து , எல்லா வண்டிகளையும் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒழுங்கில்லாமல் பல நாள் தாடி, ஹெல்மட் அரைகுறையாக தொற்றிக் கொண்டிருந்தது, ஒரு கையால் செல் ஃபோனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான், உயர்ந்த மாடல், தூரத்துலேயே திடும் திடும் என்று ஒலி கேட்டது. வண்டியைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு கையில் சிகரெட், க்ரீம் நிறத்தில் அழுக்கு கார்ட் ராய் பேன் ட், பாசி பிடித்த மாதிரி ஒரு கருப்பு டீ ஷர்ட், ஒரு தடி தங்கச் சங்கிலி கழுத்தில், வண்டி நம்பர் 9999, பார்வையில் அலட்சியம். பின்னால் ஒரு காருடைய சைட் கண்ணாடியை இடறி விட்டு நிறுத்தி கார்க் காரனைத் திட்டி விட்டு வந்தான். அதற்குள் சிக்னல் பச்சை ஆகி விட, சுந்தர் காரைக் கிளப்புவதில் கவனமானான். புதுக்கார் இன்னும் க்ளட்ச் சரியாக பழகவில்லை, வண்டி ஸ்டார்ட் ஆகி ஒரு துள்ளலில் நின்று போயிற்று. சில வினாடிகள் தான் ஆகியிருக்கும், அதற்குள் அந்த பைக் சீறிப் பாய்ந்து முன்னே வந்தது. ” ஏய் மொதல்ல ஒரு எல் போர்டு போடு ” நேராக சுந்தரை முறைத்து சொன்னான். உடனே பைக்கை முரட்டுத்தனமாக திருப்பி, ப்ரேக்கைப் பிடித்துக் கொண்டே வலது கை திருக வண்டி பயங்கரமாக உறுமியது. ஒரு உதறல் செய்து விட்டு வேண்டும் என்றே பக்க வாட்டில் அகலமாக இருந்த க்ராஷ் கார்ட்டில் இருந்த கூரான நுனி சுந்தருடை புதுக் காரில் ஒரு இடி. சுந்தர் திரும்பி என்ன சப்தம் என்று பார்ப்பதற்குள் அவன் கையை நீட்டி ஏதோ உதட்டை மடித்து ஏளனமாகச் சொல்லி விட்டுப் பறந்தான். சுந்தர் சிக்னலைத் தாண்டி ஓரமாக வண்டியை நிறுத்தி சேதம் என்ன அன்று பார்த்தான்.

வண்டியின் பின் கதவில் ஆழமாக ஒரு குத்து, தொடர்ந்து நீளமான கீறல், துருவிய மாதிரி ஆகி மெட்டல் தெரிந்தது. கையால் தொட்டால் பெயின் ட் உரிந்து வந்தது.வழக்கமாக அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத சுந்தருக்கே வலித்தது, உடனே கோபம் பொங்கி தலைக்கு ஏறி கண்கள் இருண்டது. என்ன செய்ய முடியும், பைக் எங்கேயோ போய் விட்டிருந்தது. சுந்தருக்கு அந்தத் தருணத்தில் கை கால்களைக்கூட அசைக்க சக்தி போய்விட்டால்போல இருந்தது. சுதாரித்துக் கொள்ள சற்று நேரம் ஆயிற்று.
பதினோரு மணிக்கு வருவதாக கும்மிடிபூண்டியில் ஒரு பேக்கரி கடைக்காரருக்குச் சொல்லி இருந்தான். மதியம் ஒரகடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர். பேக்கரி ஆசாமி சிறிது நம்பிக்கையாக இருந்தது. அடுத்தவாரம் ஏதோ பணம் வரவேண்டுமாம், தானே கூப்பிடுவதாகச் சொன்னார். அடுத்த இடத்துக்குப் கிளம்பி, நடுவில் இரண்டு ஃபோன் ,வேலை மும்முரத்தில் கிட்டத்தாட்ட கார் விவகாரத்தை மறந்து விட்டான்.
மாலை லேசாக மழை வேறு ஆரம்பித்தது. அப்போதுதான் மழை விட்டு எல்லோரும் ஏக காலத்தில் கிளம்பி, ஆட்டோ டூ வீலர்கள் ரோட்டை அடைத்துக் கொள்ள, பொறுமை இல்லாமல் ஒரு சைட் ரோடில் திரும்ப, அங்கே ஏதோ ஒரு புது காலனி அமைதித் தீவாக இருந்தது. வரிசையாக வீடுகள்,மரங்கள், ஆள் நடமாட்டம் இல்லை. அங்கே ஒரு கமர்ஷியல் காம்ப்லெக்ஸ். ட்யூப் லைட் கசியும் ஒரு பல் டாக்டர் அறை, வாசலில் ஒரு பையன் ஸ்டூலில் , ஒரு செராக்ஸ் கடை வேலை இல்லாமல் ஒரு ஆள் டீ வியில் பார்த்துக் கொண்டிருந்தான், காய்ந்து போன பழங்கள், வாடின காய்கறிகளுடன் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவும் கிழவி, இரும்பு பெயின் ட் சிமென் ட் கடையில் கால்குலேடரை தட்டி நாள் கணக்கை முடித்துக் கொண்டிருந்த ஒரு அரை ட் ராயர் பனியன் ஆசாமி, இத்தனையும் தாண்டி கடைசியாக வரிசையாக பூட்டிக் கிடந்த கடைகளைத் தாண்டி சற்று தள்ளி ஒரு ஏடிஎம். ஏடிம் பார்த்தவுடன் சுந்தருக்கு வரும்போது சுமதி பணம் எடுத்து வரச் சொன்னது நினைவுக்கு வந்தது. அருகே நிறுத்தி இறங்கும்போது இன்னும் கார் ரிப்பேருக்கு எவ்வளவு ஆகுமோ என்று மறுபடியும் வலித்தது.

அப்போதுதான் கவனித்தான். ஏடிஎம் படிகளில் ஒருவன் விழுந்திருந்தான். குடித்து விட்டுக் கிடந்தவன் மாதிரி இருந்தது. ஆழ்ந்த மூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது, வற்றிய முகம் , நரைத்த தாடியுடன், அரைக் கண்கள் திறந்து, நிறம் தெரியாத அழுக்கு பேன்ட், பாதி நிறம் போன சிவப்பு அரணாக் கயிறு, பட்டன்கள் இல்லாத ,காலர் கிழிந்த ஒரு பெரிய சைஸ் சட்டை இப்படியாக கிடந்தான். வயது நாற்பது முதல் எழுவது வரை என்ன வேண்டுமானலும் சொல்லலாம், அருகே பார்த்தால் பசி மயக்கத்தில் கிடந்த மாதிரி, பார்த்தால் பாவமாக இருந்தது.
” யாருப்பா, என்ன ஆச்சு உனக்கு ? ”
கிடந்தவன் லேசாக கண்களைத் திறந்தான். ஏதோ முனகினான். சுந்தர் காருக்குச் சென்று தண்ணீர் பாட்டில் எடுத்து வந்தான். நாள் முழுவதும் வண்டியில் இருந்த பாட்டில் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.
“இந்தாப்பா, முதல்ல தண்ணீர் குடி, இதோ ஒரு நிமிஷம் சாப்பிட ஏதாவது வாங்கித் தறேன் ”
அவன் சற்று அசைந்து சிரமப்பட்டு கை நீட்டி தண்ணீர் பாட்டிலை வாங்கினான். பர்ஸில் சில்லறை நோட்டுகள்தான், பணம் எடுத்தால் ஒழிய எதுவும் வாங்க முடியாது. சுந்தர் சுற்றிலும் பார்த்தான், யாரையாவது உதவிக்கு அழைக்க. இரும்புக் கடைக்காரன் அதற்குள் கடையை மூடி விட்டு, எதிர்த்திசையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். பல் டாக்டர் வாசலில் ஸ்டூல் காலி, கிழவிக்கு கூப்பிட்டாலும் காது கேட்கும் என்று நிச்சயமில்லை.

சரி பணம் எடுத்துக் கொண்டு அவனுக்கு ஏதாவது வாங்கித் தரலாம் என்று ஏடிஎம் உள்ளே நுழைந்தான். சுமதி அய்ந்தாயிரம் கேட்டிருந்தாள். பால்காரன், மளிகைக் கடை இதற்கே போதாது. அக்கௌன்டில் எவ்வளவு மிச்சம் என்று முதலில் பார்க்க வேண்டும், எல்லாம் எடுத்தால் பிறகு ஏதாவது அவசரத்தேவைக்குக்கூட பணம் இல்லை. அடுத்தது பெண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும், கார் லோனுக்கு மாதாந்திரத் தவணை கட்ட வேண்டும். அக்கௌன் டில் ஏழாயிரம் இருந்தது. பேக்கரிகாரர் ஒத்துகொண்டால்தால் இரண்டு வாரத்துக்குள் சிறிது வரக்கூடும், யோசித்து நாலாயிரம் எடுத்தான். டெபிட் கார்டை எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டு, பணத்தை எண்ணும்போது, பின்பக்கம் நிழல். அடுத்த ஆள் காத்திருக்கிறார் என்று திரும்பிப் பார்த்தால், வாசலில் விழுந்து கிடந்தவன். நிதானம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு முன்னேறினான். சுந்தர் “இதோ வந்துட்டேன்பா, பக்கத்துல ஏதாவது ஓட்டல் இருக்குதான்னு பார்..” அதற்குள் அந்த ஆள் “ஏய்” என்று கத்தி, இன்னும் என்ன என்று புரியாத சத்தம் போட்டு, கையை ஓங்கினான் – கையில் ஒரு பெரிய கல். எதிர்பார்க்காத சுந்தர் சுதாரித்து நகருவதற்குள், காட்டுத்தனமாக தலையில் ஒரு அடி – சுந்தர் அப்படியே சரிந்தான்.

சுந்தர் மறுபடி கண் விழித்த போது, சுமதிதான் கலங்கிய கண்களுடன் இருந்தாள். ஆஸ்பத்திரியில். தலையில் பெரிய கட்டு, சுந்தருக்கு அதிகம் பேச முடியவில்லை. மறு நாள்தான் சிறிது உணவு சாப்பிட்ட பின்பு பேச முடிந்தது. தலையில் அடி பட்டு, ரத்தம் வந்து மயங்கிக் கிடந்தானாம். இரவில் யாரோ பணம் எடுக்க வந்த ஆள் ஒருவர் பார்த்து போலீசுக்குச் சொல்லி, ஆம்புலன்ஸில் இந்த நர்சிங் ஹோமுக்கு அழைத்து வந்தார்களாம். சுமதி மிகவும் பயந்து போயிருந்தாள், வழக்கமான அதட்டும் குரலே கம்மிப் போயிருந்தது. பர்ஸில் இருந்த சில்லறை நோட்டுகளை மட்டும் எடுத்திருந்தான், மீதிப் பணம் அப்படியே இருந்தது. சுமதி யார் அடித்தது என்ன ஆயிற்று எவ்வளவு பணம் போயிற்று என்று பல முறை கேட்டாள், சுந்தர் எதுவும் சொல்லவில்லை, அந்தப் பசித்த முகத்தை நினத்தால் இப்போதுகூட வருத்தமாக இருந்தது. மன நிலை சரி இல்லாதவானாக இருக்க்க் கூடும், தூங்குவது மாதிரி கண்களை மூடிக் கொண்டான்.

சுமதி செய்திப் பத்திரிகை காண்பித்தாள் – ” நகரத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, போலீஸ் தூங்குகிறதா ?” அது எதிர்க் கட்சிப் பத்திரிகை.

மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.

” சொல்லுங்க சுந்தர், இப்ப எப்படி இருக்கீங்க ?”
சுந்தர் மெல்லிசாய் புன்னகைத்தான். கண்கள் சேராமல், உதட்டளவில்.
” என்ன ஆச்சு சொல்லுங்க ”
” விட்டிருங்க சார், பரவாயில்லை பணம் அவ்வளவாக போகவில்லை”
“பணத்துக்கு மட்டும் இல்ல, கல்ல வெச்சு தலைல அடிச்சிருக்கான், பணம் எல்லாத்தையும் எடுத்தாலும் பரவா இல்ல, இந்த மாதிரி கேஸ்தான் அபாயம், நாளைக்கு வேற யாராவது அடிச்சு வெச்சா…”
அதற்குள் அவருக்கு அவருடைய செல் ஃபோன் அலறியது. எடுத்தவர் அடென்ஷனில் நின்றார், ” யெஸ் சார், இங்க ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன் ”
மறுபக்கம் உரத்த குரல் வெகு நேரத்துக்குக் கேட்டது.
“இல்ல சார், கட்டாயமா, நாளைக்குள்ள பிடிச்சுடுவோம்”
“யெஸ் சார், நானே பார்க்கறேன்”

” டிஜீபியே ஃபோன் பண்றாரு” சற்று இறுக்கமாகப் பேசினார். இது அரசியல் விவகாரமாக ஆகி விட்டதாம் – ஆளும் கட்சி உடனடியாக ஏதாவது நடவடிக்கை காண்பிக்க வேண்டுமாம்.
இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை. சுந்தர் ஒரு கணம் யோசித்தான்.
“சரி சொல்றேன் – அன்னிக்கு நான் ஏடிஎம் தேடி கார்ல மெதுவா இரண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே போய்ட்டே இருந்தேனா, அப்ப கூடவே வந்தான் பார்த்தாலே சந்தேகமா இருந்தது”
இன்ஸ்பெக்டர் சற்று தளர்ந்தார். கூட வந்திருந்த போலீஸ் ஆசாமி எழுத ஆரம்பித்தார்.
” பைக்ல, திடும் திடும்னு சத்தத்தோட, கையில் ஒரு கையில் சிகரெட், க்ரீம் நிறத்தில் அழுக்கு கார்ட் ராய் பேன் ட், பாசி பிடித்த மாதிரி ஒரு கருப்பு டீ ஷர்ட், ஒரு தடி தங்கச் சங்கிலி கழுத்தில், பைக் நம்பர்….”

– தருணாதித்தன்

Series Navigationபறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடுசொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    AV Muthu says:

    Every characters are nicely described that enable the readers to visualize them and clue them to the story. Story is very natural and shares how a typical low income middle class family go through their life day after day…. Congrats and Keep it up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *