அது ஒரு வரம்

முகில் தினகரன்

திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு.

ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு ஏக்கம்… அவளையுமறியாமல் அவளுள்ளிருந்து எட்டிப் பார்த்தது.

“ச்சை..ஏன்தான் இந்த மதிய நேரத்துல மழை வந்து வாதிக்குதோ?” என்று வாய்விட்டே மழையைச் சபித்தாள்.

“ஏய.;.ஏய்..சும்மா மழையைத் திட்டாதே…அது வந்ததினால்தான் நீ மாமா வீட்டுல வந்து மழைக்கு ஒதுங்க ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு….அப்படி ஒதுங்கினதாலதான் உன் மிலிட்டரிக்கார மாமன் மகன் உன்னை உள்ளார கூப்பிட ஒரு வாய்ப்பு அமைஞ்சுது” உள் மனம் மழைக்கு வக்காலத்து வாங்கிப் பேசியது.

“அது செரி..இப்படியே ஈரச் சேலையோட நின்னு யோசனை பண்ணிட்டிருந்தா அறிவு வராது சாவித்திரி…ஜலதோஷம்தான் வரும்” சிரித்தபடி சொன்ன மாமன் மகன் விஜயகுமாரை வெட்கத்துடன் பார்த்தாள்.

“அது வந்து..அத்தையும் மாமாவும் இருப்பாங்கன்னு நெனச்சுத்தான் இங்க வந்து ஒதுங்கினேன்” நடுங்கும் குரலில் சொன்னாள் அவள்.

“ஏன்..நான் தனியா இருந்தா வரமாட்டியா?..பயமா?…நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்?”என்றான் பெரிதாய்ச் சிரித்தவாறே.

மிலிட்டரிக்காரன் என்பதற்காக சிரிப்புக் கூடவா இப்படி முரட்டுத்தனமா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சாவித்திரி “பயமெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் கழுத்தை அழகாய் ஒடித்தபடி.

“சரி..சரி..பேசிட்டே நிக்காதே…அந்த ரூமுக்குள்ளார போய் ஈரத்தைத் துடைச்சிட்டு அம்மாவோட சேலை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டாவது வா”

பலமாய் மறுத்தவள் அவன் முகம் வாடிப் போகக் கண்டு தயங்கித் தயங்கிச் சென்றாள்.

அடுத்த நான்காவது நிமிடத்தில் “படார்”என்ற இடியோசைக்கு பயந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு அரைகுறை ஆடையுடன் ஓடிவந்து தன் மாமன் மகனை இறுக்க கட்டிக் கொண்டாள்.

மனதில் பயத்தின் படபடப்பு அடங்க பத்து நிமிடத்திற்கும் மேலானது.

அது அடங்கியதும் உடலில் வேறொரு துடிப்ப தோன்றியது. இரும்புத் தூண் போன்ற அந்த ராணுவ வீரனின் இறுக்கம் அவளுள் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, களமிறங்கும் ஆசை கண நேரத்தில் இருவரையும் சாய்த்தது.

வெளியெ மழை ஓய்ந்தது.

சுவரோரமாய் கண்கள் கலங்கியபடி நின்றிருந்த சாவித்திரியை நெருங்கிய விஜயகுமார் அவள் தோளைத் தொட்டுத் திருப்பி “கவலைப்படாதே சாவித்திரி…இந்த முறை நான் போயிட்டு மூணே மாசத்துல லீவ் போட்டுட்டு வர்றேன்…வந்ததும்..உடனே நிச்சயதார்த்தம்…கல்யாணம்தான்..சரியா?”

அண்ணாந்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தவள் பதிலேதும் பேசாமல் தலையை மட்டும் ‘சரி’என்கிற பாணியில் ஆட்டி விட்டு வெளியேறினாள்.

மறுநாள் மாலையே புறப்பட்டு மூன்றாவது நாள் டூட்டியில் ஜாய்ன் ஆன விஜயகுமார் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் போர் புரிய அனுப்பப் பட்டான்.
போர்க்களம் வரை அவனை துரத்திச் சென்ற விதி நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் பட்டியலில் அவன் பெயரையும் இடம் பெறச் செய்து விட்டே ஓயந்தது.

செய்தியைக் கேட்டதும் இதயமே அறுந்து விழுந்தது போல் கதறினாள் சாவித்திரி. மகனை இழந்து தவிக்கும் அத்தையையும் மாமாவையும் பார்த்துப் பார்த்து துடித்தாள.; தனக்கு ஆறுதல் சொல்லவே நூறு பேர் தேவை என்கிற நிலையிலிருந்தும் அந்த வயதான ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள்.

களம் வரை சென்று காவு வாங்கியும் ஓயாத விதி சாவித்திரியின் வயிற்றிலும் விளையாடத் துவங்கியது. இரண்டாவது மாத இறுதியில்தான் அவளுக்கே அந்த உண்மை புரிந்தது. “ஆண்டவா…இது என்ன சோதனை?..நான் என்ன செய்வேன்?..யார்கிட்ட சொல்லி அழுவேன்?” தனிமையில் அழுது தவித்தாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் அதை அவளால் மறைக்க முடியும்? அவள் தாய் சரஸ்வதிக்கு சந்தேகம் வரத் துவங்கியது. ஜாடை மாடையாகக் கேட்டவள் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டாள்.

அழுதபடியே சொன்னாள். தன் தவறுக்காக தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.

செய்வதறியாது சிலையாய்ச் சமைந்து நின்றாள் சரஸ்வதி. மனம் மட்டும் “அடிப்பாவி மகளே..இப்படியொரு காரியத்தைப் பண்ணி குடும்ப மானத்தைக் குலைச்சிட்டியேடி” என்று மௌனமாய்க் குமுறியது.

கணவர் வந்ததும் அவரைத் தனியே அழைத்துச் சென்று கண்ணீருடன் சொன்னாள்.

அதிர்ந்து போனார் சாமிநாதன.; “என்னn…நீ சொல்றது நெஜமா?” நம்ப முடியாமல் கேட்டார்.

மனைவி உறுதியாய்ச் சொன்னபின் தலையில் கைகளை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து மெல்லமாய்க் குலுங்கினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, விஜயகுமாரின் உடல் ராணுவ வேனில் வந்திறங்கியது.

அம்மாவும் அப்பாவும் அதைக் காண சென்றிருந்த நேரத்தில் தன்னைக் கவர்ந்த இரும்பு மனிதனை சவப்பெட்டியில் காணச் சகியாத சாவித்திரி யாருமில்லாத அந்தத் தனிமையை உபயோகப் படுத்திக் கொண்டு தூக்கில் தொங்க முயல,

எதற்கோ திரும்பி வந்த சரஸ்வதி அதைக் கண்டு கூச்சலிட, கூட்டம் கூடியது. அவசர அவசரமாக கதவு உடைக்கப்பட்டு, சாவித்திரி காப்பாற்றப் பட்டாள்.

“அடிப் பாவிப் பெண்ணே..ஏண்டி இப்படியொரு காரியத்தச் செய்யப் பார்த்தே?” பதறினாள் தாய்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சாமிநாதன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த மகளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு “அம்மா..சாவித்திரி…கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் வாங்கிட்டோமேன்னு நீ கவலைப் படாதே சாவித்திரி…உன்னோட வயத்துல வளர்றது ஒரு உதவாக்கரையோட கருவல்ல…இந்த ஊருக்கே பெருமை சேர்த்த…இந்த ஊரே நெனச்சுப் பெருமைப் படற ஒரு உண்மை வீரனோட கரு…தாய் நாட்டுக்காக உயிரை விட்ட ஒரு உத்தமனோட கரு…இதைச் சுமக்கறது உனக்குக் கறை இல்லைம்மா…பெருமை..பெருமை.!…இதுக்காக யார் என்ன வேணாலும் சொல்லட்டும் அதைப் பத்தி எனக்கு கவலையில்லை…அந்த வீரனோட வாரிசை நீ பெத்துக்குடும்மா…நானே வளர்க்கறேன்…வளர்த்து இந்த நாட்டுக்கு மறுபடியும் இன்னொரு ராணுவ வீரனைக் குடுக்கறேன்…”ஆவேசமாய்…அதே வேளை அர்த்தமுடன் பேசிய அவரைப் பார்த்து ஊரே வியந்தது.

தன் வயிற்றுக் கர்ப்பத்தை அதுவரையில் கறையென்று நினைத்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கு அது ஒரு வரம் என்று அப்போதுதான் புரிந்தது.

Series Navigationகதையே கவிதையாய்! (3)உயர்வென்ன கண்டீர்?