அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு
அசோக்குமார் ஜனார்த்தனன்
சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.
அசாதாரணங்களின் கதை என்று கருணாகரன் அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார். அதை வாசித்து உள் செல்வது நன்று. இலங்கை எழுத்தாளர்கள் தமிழகத்தில் அதிகம் பாவிக்க படாத சொற்களுக்கு அடி குறிப்பிடலாம் என்ற கருத்துக்கு, இலங்கை எழுத்தாளர்களை தொடர்ந்து வாசிப்பதனால் எனக்கு அடி குறிப்பு தேவைபடவில்லை. வாசகனாக சிறு உழைப்பும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் என்னை பாதித்த ஒரு எழுத்தாளர் touch என உணர்ந்த ஆறு இடங்களை பகிர்கிறேன்.
- தீர்ப்பெழுதும் ஊர்: ‘ஒரு தாய் உறங்குகிறாள்’ என்ற கதை. திருமணமாகியும் தனியாக வாழும் ஒரு பெண். அவளை அந்த ஊர் பல விதங்களில் பேசுகிறது. அவளை ‘பொதுக்கிணறு’ என்று கூறுகிறது. அவள் இறந்த பின்பு தேவாலயத்தில் அவள் உடல் கிடத்தி வைத்திருக்கும் பொழுதில், இந்த கதை சொல்லியான ஆணுக்கு, ‘இவள் இந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கால்களும், நடந்தால் பாதத்தின் சிறுவிரல் தரையில் படாது’ என்ற நினைவு எழுகிறது. இதில் என்ன எழுத்தாளரின் நுட்பம் என கேள்வி எழலாம். ஆனால் என் பார்வையில் ஊரே தவறாக பேசும் ஒரு பெண்ணை அவள் வாழ்த்த காலத்தில் ஒரு ஆண் எப்படி எல்லாம் கண்டிருக்கிறான், அவள் இறந்த பின்னும் அவனுக்கு அவள் பற்றிய எது முதல் நினைவாக எஞ்சுகிறது என்பதை தொட்ட நுட்பமான இடமாக காண்கிறேன்.
இதே கதையில், இறந்த பெண்ணை இங்கு புதைக்க கூடாது என போர்க்கொடி தூக்குபவளும் ஒரு பெண் தான் ஆண் அல்ல. இதை அந்த பெண் வெளிப்படுத்தும் இடமும் நுட்பம். அவள் தன் சேலையை இருமுறை சரி செய்து கொண்டு பிறகு இறந்த பெண்ணை இங்கு புதைக்க வேண்டாம் என சொல்லிய இடத்தில், மற்றவர் மேல் குற்றம் சுமத்தும் முன் தான் புனிதமானவள் என நிறுவும் மனித மனதின் செயல்பாட்டை எழுதிய இடம் நுட்பம்.
‘The Brothers Karamazov’ நாவலில் ‘ Elder Zossimov’ என்ற பாதிரியார் அவர் வாழ்ந்த ஊருக்கு நல்லது செய்து வாழ்வார். ஆனால் அவர் இறந்த பின்பு அவர் உடலில் இருந்து சிறு துர்நாற்றம் வரவும் அவர் கறை படிந்தவர் என அவர் வாழ்த்த ஊர் பேசும். எல்லாருக்கும் நல்லது செய்து வாழ்ந்த மனிதருக்கே அந்த நிலை என்றால், ஊர் தவறாக பேசிய ஒரு பெண்ணை அவள் வாழ்ந்த பொழுது மட்டுமல்ல அவள் இறந்த பிறகும் ஊர் தீர்ப்பு எழுதத்தான் செய்யும்.
- காமம் சார்ந்த கதைகள்: இந்த சிறுகதை தொகுப்பை இரண்டு பிரிவுகளாக வகுக்கலாம். ஒரு பாதி கதைகள் போரும், போரினால் அழிந்த வாழ்வும், போர் முடிந்த பின்னும் போர் துரத்தி எழுதும் வாழ்வை பற்றியது. மறுபாதி கதைகள் மனிதனின் காமம் சார்ந்தது. காமம் சார்ந்த கதைகள் என்றால் ‘Georges Bataille’ யின் ‘story of the eye’ போன்ற ‘Erotic fiction’ கதைகள் அல்ல. அதுபோன்ற மொழியை தமிழ் சிறுகதைகளில் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அப்படியே எழுதினாலும் அவை தீவிர இலக்கியத்தில் சேர்த்து கொள்ளப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் நடேசன் அவர்களின் இந்த தொகுப்பில் உள்ள காமம் சார்ந்த கதைகள் , மனித காமத்தின் உளவியலையும், சமூகம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பிற்குள் வாழும் மனிதன் காமத்தை சரியாக கையாள வேண்டிய அவசியத்தையும், அப்படி கையாளவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பல இடங்களில் நுட்பமாக எழுதியுள்ளார்.
இந்த தொகுப்பில் உள்ள காமம் சார்ந்த கதைகள் ஆண்/பெண் மற்றும் பெண்/பெண் உறவுகளாக பயணிக்கிறது. ஆனால் ஒரு வாசகனுக்கு, இந்த கதைகளின் வெளியே பெண் உடல் மீது இந்த சமூகம் செலுத்தும் ஆதிக்கத்தை நினைவு படுத்திக்கொன்டே சென்றது. இங்கு சமூகம் என நான் குறிப்பிடுவது ஆண் மட்டுமல்ல, இதில் பெண் , புனிதம் என பல காலமாகவே நமக்குள் புகுத்தப்பட்ருக்கும் கற்பிதங்கள், பொருளாதார ஏற்ற தாழ்வுகளும் அடங்கும்.
உதாரணமாக, கல்லூரி படிக்கும் பெண் அவளின் அன்றாட மற்றும் படிப்பு செலவிற்காக வாரத்தில் ஒரு நாள் விபச்சாரம் செய்கிறாள். ‘Bangkok’ நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண் அங்கு தன் வாழ்நாள் முழுதும் செய்யும் தொழிலை ஆஸ்திரேலியாவில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் செய்தால் பணம் சம்பாதித்து விடலாம் என எண்ண, அவளது இந்த நிலையை பயன்படுத்தி அவளை சுரண்டும் ஒரு ஆண். தன் மனைவியை பார்த்துக்கொள்ள வரும் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும் ஆண், அது தெரிந்தும் ஏற்றுக்கொண்டு அதற்கு தன் உடல்நிலை தான் காரணம் என பொறுத்துக்கொள்ளும் பெண். அந்த ஆண் நிலையில் அந்த பெண் இருந்தால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அவளது கணவன் ஏற்றுக்கொள்வானா? இப்படி பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த சமூகத்தை , சமூகத்தின் விதிமுறைகளை, அரசின் கொள்கைகளை வகுப்பவர்களின் கண்களில் விழாமல் போகும் மனிதர்களை, குடும்பம் என்னும் நிறுவனத்தின் அழுத்தங்களை எல்லாம் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இது போல் கதை ஒரு வழியில் பயணிக்க, வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்து எழுதுவது நுட்பம். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் குடிகார தந்தைக்கு பிறந்த சோபியா என்ற பெண் குடும்ப வறுமை காரணமாக விபச்சாரம் செய்ய, நாள் முழுதும் நின்று வீடு திரும்பும்போது கால் வலியுடன் உறங்க செல்வாள். அப்போது அவளது தாய் காலை அழுத்தி விட முயல, நான் செய்யும் பாவத்திற்கு தண்டனை கால் வலி என சோபியா சொல்ல, உன் பாவத்தில் எனக்கும் பங்குண்டு, அதனால் அனுமதி என தாய் சொல்வாள். இந்த கதைகளில் வரும் பெண்களை வாசிக்கும் பொழுது, அவர்கள் நிலைமைக்கு மறைமுகமாக நமக்கும் சிறு பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. காலை அழுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் அழுத்தலாம். தவறில்லை.
- பதற வைத்த கதை: பதுங்குகுழி என்ற கதை. என்னை மிகவும் பாதித்த கதை.போரின் களத்தில் தந்தையே மகளை புணரும் சம்பவம் கொண்ட கதை. இதை எல்லாம் எழுத தேவை உள்ளதா என கேள்வி எழலாம். 2500 வருடங்களுக்கு முன்னே ‘Oedipus Rex’ இல் எழுதப்பட்டதுதான். அதில் கூட தாய் என தெரியாமல் மகன் தாயை மணந்து கொள்கிறான். இங்கே தெரிந்தே தந்தை மகளை புணருவது நெஞ்சை பதைக்க வைத்த இடம்.
சிங்கள ராணுவ தாக்குதலில் தந்தையையும் மகனையும் பறிகொடுத்த பின்பு, “உன் சண்டை இயக்கத்துடன் என்றால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆனால் இந்த குழந்தையுடன் நீ ஏன் சண்டையிடுகிறாய்? இந்த குழந்தைக்கு தமிழ் கூட இன்னும் தெரியாது. தமிழை விடு இன்னும் இந்த குழந்தைக்கு அழ கூட தெரியாது என கோவப்படும் தாய், அதே சிங்கள ராணுவ வீரன் உயிருக்கு போராடும் வேளையில் தன் பாலை அவனுக்கு நீராக கொடுத்து காப்பாற்றும் இடம் நெஞ்சை தொட்டது.
கடைசியில் அந்த ராணுவ வீரன் நீ திருமணம் செய்து கொண்டால் உன்னை பின்தொடர்வதை விட்டு விடுவேன் என கூறுவது வேறு எங்கும் இதுவரை நான் வாசித்திராதது. நாளை இறந்து விடுவாய் என்றால் இன்று நீ மிருகமாக மாறலாமா? என்ற கேள்வி கொண்ட கதை. இந்த கதையில் இன்னும் பல இடங்கள் வாசிப்பவரை அலைக்கழிக்கும். இந்த புத்தகத்திலேயே என்னை மிகவும் பாதித்த கதை.
- இதிகாசங்கள் மற்றும் தொன்மங்கள்: பல கதைகளில் ராமாயணம், மகாபாரதம், விவிலியம் போன்ற மதம் மற்றும் இதிகாசம் சம்பந்தபட்ட கோணங்களை மிக பொருத்தமாக பயன்படுத்தியுள்ளார். இதிகாசங்கள் மேல் ஆர்வம் இருந்தால், கதையில் கூறப்பட்டுள்ள கோணத்தை தாண்டியும் நீங்கள் சிந்திக்க கூடும். உதாரணத்திற்கு ஆஸ்தி எரித்து ஆத்மா சாந்தி செய்வது முதலில் சகுனி போன்ற கெட்ட ஆத்மாக்களுக்கே செய்ய வேண்டும் என்ற புள்ளியை ஒரு கதையில் இணைத்த விதம் அருமை.
- துறை சார்ந்த தகவல் மற்றும் பார்வை: ஒரு மிருக வைத்தியர் என்பதை உணர்த்தும் இடங்கள் பல கதைகளில் மின்னின. பிரேத பரிசோதனை செய்த நாயை அவிழ்க்காமல் புதைப்பது. ‘Shark Fin’ சூப் குடிக்கும்பொழுது, கதையின் பாத்திரம் இது வளர்க்கப்பட்டதா அல்லது பிடிக்கப்பட்டதா என கேட்கும் இடம். சில நாடுகளில் சுறா மீன்கள் பிடிக்கப்பட்டு அதன் ‘Fin’ மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனாக இந்த செய்தியை கடந்து விடலாம் ஆனால் ஒரு மிருக வைத்தியராக இருப்பதால் இந்த செய்தியை ஒரு புனைவு கதையில் பொருத்தியிருக்கிறார்.
- ரசிக்கும்படியான இடங்கள்: கனமாக செல்லும் கதைகளின் ஊடே மெல்லிய ரசிக்கும்படியான இடங்களும் இல்லாமல் இல்லை.
- மழைக்கு சரியும் கூரையை குட்டி போட்ட ஆடு உட்காருவது போல் எனும் இடம்
- மழை இல்லாத நிலத்தில் சிறிது மழை பெய்தவுடன் கல்யாண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல எனும் இடம்
- நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் பெண்ணை அந்த காலத்து ஐஸ்வர்யா குஷ்பூவாக மாறியிருந்தாள் எனும் இடம்.
- பத்து மாத கோடை இரண்டு மாதங்களுக்கு விராட தேசத்தில் ஒழிந்த பாண்டவர்களாக எனும் இடம்.
- சித்திரை மாதத்து வெயில் உடலில் ஜிகினா பொடியாக என்ற இடம்.
- மறதி என்பது துர்வாச முனிவர் சாபத்தால் மட்டும் வருமா ? வயதானாலும் வரும் என்ற இடம்.
- ஒரே புள்ளி பல கோணங்களில் சொல்லப்பட்ட இடமான கோவில் மணியோசை ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வை கொடுப்பதாக எழுதிய இடம்.
- கதைகளில் கண்களுக்கு தெரியாத கதாபாத்திரமாக வரும் ஆவிகள்
- ஆஸ்திரேலியாவில் வீடுகள் ஏலத்திற்கு வரும் முறை.
- திருமணம் ஆகியும் பிரம்மச்சாரியாக வாழும் ஆணின் மனநிலை. இப்படி குறையாமல் 100 ரசிக்கும் படியான இடங்கள் புத்தகம் முழுதும் உள்ளன.
நான் சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகத்தில் ஒன்று. நடேசன் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்த புத்தகம். ஒரு புத்தகத்தை பற்றி வாசகன் சொற்களால் முழுவதுமாக சொல்லிவிட முடியாது. இந்த புத்தகம் இவை இவை போல் உள்ளது என உவமை காட்ட முடியாது. புத்தகத்தின் முழு சுவையை வாசித்தால் மட்டுமே உணர முடியும். “நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!.
- பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.
- பொருத்தம்
- லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்
- அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு
- இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?
- ‘‘ஔவை’’ யார்?
- கவிதையும் ரசனையும் – 17
- முதுமை
- தேனூரும் ஆமூரும்
- நேரு எனும் மகா மேரு !
- நீ ஒரு சரியான முட்டாள் !
- சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- யாதுமாகியவள்……
- ஊமையின்மனம்
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்
- மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !
- சிற்றிதழ் சிறப்பிதழ்
பின்னூட்டங்கள்