அந்தி மயங்கும் நேரம்

Spread the love

இராமானுஜம்  மேகநாதன்

 

மழைக் காலத்தின் தொடக்கம்!

பெய்வதா வேண்டாமாஎன்றொரு

இமாலயத் தடுமாற்றத்தில்

அந்த காரிருள் வானம்.

சிறிது தூறிய தூறல்களே

எனைக் குலைத்துவிட்டனவே

என்ற புலம்பலுடன்

முதுமைக் கிழவனாய்

அந்த வளைந்த தும்பை.

மேலே உயரே,

அந்த உயர்ந்த மின் கம்பத்தில்

ஒளிரும் நீண்ட விளக்கை

பியித்துத் தின்பது போல்

அந்த புற்றீசல் கூட்டம்.

தங்கள் நாயகனைக் கண்ட

நிலையறியா ரசிகர் கூட்டம்

அந்த நாயகனைத் தொட்டுப் பார்க்க

அலை மோதும்

இந்தியப் பெருங்கடலாய்

அந்தப் புற்றீசல்கள்.

அவற்றை முறைகொன்றாய்

பரித்துக் கொல்லும்

அந்த தெரிந்தும் தெரியா ஆந்தை,

இரவில் இப்பொழுது தெரிகின்ற

அந்த அழகிய முகமுடையாள்.

அவளுடன்,

அந்த இடியின் ஒளியைப் போல

கருப்பிலிருந்து பிறக்குமந்த

கரியவன் வௌவால்.

வேலை

அந்த இரவின் தொடக்கம்.

நீண்ட விளக்கின் ஒளியை

இரண்டாவது சூரியன் என

ஏமாந்த புற்றீசல்கள்.

இரவு மழை தொடர்ந்தால்

அதுவுமில்லைத் தின்பதற்கு

என்றே கரியன் வௌவாலும்

வேண்டப்படாத ஆந்தையும்

சத்தமின்றி

பரிணாமத்தின் பரிமாணத்தை

படம் எடுத்துக்காட்டுகையில்,

பத்தடிப் பக்கத்தில்

தன்னை மறக்க

எதனையும் செய்யத்துடிக்கும்

முறுக்கேறியக் காளை.

அவளை மறந்தாலும்

அதிகம் வேண்டாம்

என்றே கடைக் கண்ணால்பேசும்

அவள்.

பக்கத்தில்,

இவை அனைத்தையும்

பார்த்தும் பாரமலிருக்கும்

எதுயுமே தெரியாத

ஆனால்,

எல்லாம் பார்கின்ற

அந்த வேப்பமரம்.

Series Navigation