“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2

அழகியசிங்கர்

தொடர்ச்சி ……

 

அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

 

26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.

 

தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர்.  லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே.  

 

லெர்மண்டோவ் எழுதிய முக்கியமான உலகப் புகழ் பெற்ற நாவலான நம் காலத்து நாயகன் என்ற நாவலைச் சிலாகித்துக் கூறுகிறார் அஜயன் பாலா.

பொதுவாகத் தகவல்களைத் தொகுத்து கோர்வையாகக் கூறுவதற்குத் திறமை  வேண்டும்.  அஜயன் பாலாவின் இக் கட்டுரைகளைப் படிக்கும்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது.

 

உண்மையில் லெர்மண்டோவ் புகழ்பெற்ற அவருடைய நாவலில்  எழுதியது அக்காலத்து ஜார்மன்னரின் ஆட்சியில் எந்த லட்சியங்களற்றுத் திரிந்த கேளிக்கையில் உழலும் ருஷ்ய மக்களைப் பற்றியது.

 

தஸ்தயெவ்ஸ்கியாவது, ரஸ்கோல் நிகொவ் எனும் எதிர் நாயகன் முன்னிறுத்தி கதைகள் எழுதியிருக்கிறார்.  ஆனால் டால்ஸ்டாய் கதாபாத்திரங்களோ, குற்றம் செய்தமைக்காக தங்களை நெருப்பில் உருக்கிக்கொண்டு உன்னதத்தைத் தேடும் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

 

புஸ்கின் மரணம் உண்டாக்கிய தாக்குதல் ஒரு பக்கமும் லெர்மண்டோவின் புரட்சிக் கவிதை உண்டாக்கிய எழுச்சி இன்னொரு பக்கமுமாக பீட்டர்ஸ்பெர்க் நகரமே கொந்தளித்தது.

 

லெர்மண்டோ எழுதிய புரட்சிக் கவிதை அவரை புஷ்கினின் வாரிசாக அனைவரையும் பேச வைத்தது.

 

நகரின் பிரதான உயர்குல அழகிகள் இருவரது விருந்துகளில் அடிக்கடி கலந்துகொண்டார் லெர்மண்டோ. அங்கு வரும் இதர ஆண்களோடு அடிக்கடி பகை உருவாகியது.  குறிப்பாக அங்கு வரும் பிரெஞ்சுத் தூதரக அதிகாரிகளிடம் அடிக்கடி மோதல் உருவாகி, டூயலுக்கு அழைப்பதும் அரிசின் கோபத்துக்கு ஆளாகி மீண்டும் அவர் தண்டனை பெறுவதும் தொடர்ந்தது.

 

1841 ஜøலை 25 இல், அவருடைய 26ஆம் வயதில் நண்பர் மாட்ரியானோவின் உடைகுறித்து பலர் முன்னிலையில் கேஙூ பேச, அவர் உடனே டூயலுக்கு அழைக்க லெர்மண்டோவும் அதை ஏற்றுக் கொண்டார்.

 

அந்த டூயலால் மாட்ரியானவின் கைகளால் லெர்மண்டோ இறந்தார். 

 

அஜயன் பாலாவின் கட்டுரைத் தொகுப்பில் இரண்டாவதாக ஆளுமைகள் என்ற தலைப்பில் 7 கட்டுரைகள் எழுதி உள்ளார்.

 

பிரான்ஸிஸ் கிருபா, பிரமிள், ஞானக்கூத்தன், புதுமைப்பித்தன், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், மா அரங்கநாதன் பற்றி எழுதி உள்ளார்.  இக் கட்டுரைகள் அழுத்தமாகப் பதிவாகவில்லை என்பது என் கருத்து.  அனுபவப் பூர்வமாக இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.  ஆனால் இவர்களுடைய படைப்புகளைப் பற்றி இன்னும் ஆழமாக எழுத வேண்டுமென்று தோன்றியது. 

 

மூன்றாவதாக அனுபவங்கள் என்ற தலைப்பில் ஐந்து தலைப்புகளில் எழுத்தாளர்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்த விபரங்களைத் தெரிவித்துள்ளார்.

 

இவைப் படிக்கச் சுவாரசியமானகட்டுரைகள்.  உதாரணமாக எஸ் ராமகிருஷ்ணனையும், கோணங்கியையும் சந்தித்த கட்டுரை.  இதில் அஜயன் பாலாவின் கதை சொல்லல் முறை மிளிர்கிறது.

 

எஸ்.ராமகிருஷ்ணனையும், கோணங்கியையும் ரயில் ஏற்ற வந்தவர் அவர்களுடன் பயணம் செய்த அனுபவத்தைப் பரவசமாக விளக்கி உள்ளார்.  ஒரு எழுத்தாளனாகத் தன்னை அடையாளப்படுத்தும் முயற்சி இவர் எழுத்தில் தெரிகிறது. 

 

இவருடைய முதல் ‘தாண்டவராயின் கதை’ விருட்சத்தில்தான் வந்தது.  அந்தக் கதை விருட்சத்தில் வந்ததற்குக் காரணம் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கி என்ற கூற்றை என்னால் நம்பத்தான் முடியவில்லை.  அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக் கூட ஞாபகமில்லை.  அந்தக் கதையை முதலில் படித்தபோது எனக்குப் பிடித்திருந்ததால் நான் பிரசுரம் செய்தேன்.

 

யார் மூலம் அந்தக் கதையை அஜயன் பாலா கொடுத்தனுப்பினார் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை.

 

ஆனால் அவர் முதல் கதையை விருட்சத்தில் பிரசுரம் செய்ததற்கு இப்போது பெருமை அடைகிறேன்.

 

இந்தப் புத்தகத்தின் அடுத்த பகுதி விமர்சனங்கள் என்ற தலைப்பில் 6 புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  

 

‘மா.அரங்கநாதன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் அஜயன் பாலா வெளிப்படையாக எழுதி உள்ளார்.

 

அவர் எழுதுவதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

 

‘….எனக்கு அவருடைய (மா அரங்கநாதன்) கதைகளில் அப்போது விமர்சனங்கள்இருந்தன.  முதலாவதாக, அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்பத் திரும்ப வருவது எனக்குப் பிடிக்கவில்லை.  அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன்.  இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கருப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய் விடுகிறது என்றும், கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன்.. 

 

ஆனால் இந்த அபிப்பிராயத்தை அரங்கநாதனின் மொத்த கதைகளையும் வாசிக்கும்போது மாற்றிக்கொண்டு விடுகிறார்.

 

பிறகு சொல்கிறார்.  ‘தமிழ் நவீன இலக்கியச்சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் மா.அரங்கநாதனுடையது.  அவருடைய கதைகள் எளிமையானவை.  மொழி இலகுவானது.  வாசகனோடு நேரிடையாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மை கொண்டவை என்று கூறி அஜயன் பாலா பெருமைப் படுத்துகிறார்.  

 

கடைசியாக   ‘பிற’  என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டுரைகள் எழுதி உள்ளார். 

அதில் முக்கியமான கட்டுரை என்னை மாற்றிய புத்தகம் என்ற தலைப்பில் இல்யூஷன்ஸ் என்ற ஆங்கில நாவல் பற்றி எழுதி உள்ளார்.  ஆசிரியர் ரிச்சர்ட் பாஹ

 

இந்தப் புத்தகத்தில் முக்கியமான கட்டுரையாக நான் இதைக் காண்கிறேன்.

எனக்கு ஆரம்பத்திலிருந்து அறிமுகமானவர்தான் அஜயன் பாலா.  நான் இருக்கும்  அசோக் நகர்ப் பகுதியில் நடைப் பயிற்சிக்கு வருவார். தன் உடலைப் பேணுவதை முக்கியமாகக் கருதினார்.  அவர் ஆற்ற வேண்டிய காரியங்களில் தீவிரமாக இருப்பவர்.  இந்தக் கட்டுரையில் முழுவதும் தன் மனதைத் திறக்கிறார்.

 

‘…என் வாழ்க்கையில் எத்தனையோ நூல்கள் என்னை நெகிழ்தியிருந்தாலும் ஒரு புத்தகம், அதிசயம் போல என் வாழ்க்கையை மாற்றியமைத்தது.  வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியத்தை அது எனக்குக் கற்றுத் தந்ததது…

 

“.எப்போதும் பொருளை நோக்கித் திட்டமிட்டு வாழும் இந்த மூக்கணாங்கயிறு வாழ்க்கை, எவ்வளவு போலித்தனமானது என்பதைச் சொல்லிக் கொடுத்த நூல் அது என்கிறார்.

 

ஆசிரியர் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட பல நெருக்கடிகளுக்குத் தீர்வாக இந்தப் புத்தகம் அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.

 

இங்கே இன்னொன்றும் குறிப்பிடுகிறார்.

 

திரைப்பட இயக்குநராகும் கனவோடு சில படங்களில் உதவி இயக்குநராகப் பணி செய்துவிட்டு இயக்குநராகும் வாய்ப்புத் தேடி அலைந்து, பல வாய்ப்புகள் நெருங்கி வந்து கை தவறிப்போன பின் மிகவும் மனக்கிலேசத்திலிருந்தபோது இந்த நாவல் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. 

ஒருநாள் அவர் இயக்குநராகும் கனவை விட்டு விட்டார். அதனால் மனம் அமைதியானது.  ஆனால் அப்போது கூட அவர் எழுத்தாளனாவேன் என்று நினைக்கவில்லை.  

இன்று அவர் எழுத்தாளனாகத்தான் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார். 

நாதன் பதிப்பகம் என்று தொடங்கி  45 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.  பெரும்பாலும் அவருடைய புத்தகங்கள்தான்.

 

 

 

Series Navigationஇரு கவிதைகள்மொக்கு