அன்று கண்ட பொங்கல்

Spread the love

ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன

சாரநாத் சக்கரங்களைக்

கட்டை வண்டியில் பூட்டி

சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில்

காவி-வெள்ளை -பச்சை பூசி

தேசியமயமாக்கி…

உமிப்போர்வையில் உறக்கம்போட்ட

விதை நெல்லை எழுப்பி வந்து

ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து…

பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி…

பஞ்சாங்கம் புரட்டி

மேட்டுர் அணையை

வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து…

சேற்றில் கால்புதைத்து

பாட்டுப் பாடி

பொய்களைப் புடுங்கி

உண்மைகளை நட்டு வைத்து…

டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து

என்ட்ரோ சல்ஃபானில்

தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்தி…

தேய்ந்த நிலவொளியில்

கண்விழித்து

லாவணியில் சந்திரமதியின்

லாவண்யங்களைக் கேட்டு…

குறுக்கே வந்த இடைத்தேர்தல்களில்

விரல்களில் மை பூசிக்கொண்டு…

சம்பாவுக்கு அரிவாள் தீட்டி…

முப்பது விடியல்களில் பாவை பாடி

தூக்கம் கலையாத பரமாத்மாவை

அடுத்த வருடக் குளிரில்

எழுப்புவதாக முடிவுசெய்து…

அவர்கள் கணக்குப் பார்த்தார்கள்!

மீண்டும் பொங்கல்!

சிக்கல் கோலங்கள்.

முக்கல் அடுப்பில் மஞ்சள் பானைகள்.

காவலுக்கு நெட்டைக் கரும்புகள்.

சகுனிப் பார்வையில்

சூர்ய நமஸ்காரம் செய்து

வழி பிறக்குமென ஏங்கிய தையை

வரவேற்றார்கள்

இனாம் வாங்கி!

—- ரமணி

Series Navigationரம்யம்/உன்மத்தம்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 6