அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

 

 

நைந்து  போயிருக்கும்

புத்தகம்.

 

அட்டைகள்

இல்லை.

 

முன் பக்கங்கள் சில

முகம் கிழிந்து போயிருக்கும்.

 

கிழிந்த பக்கங்கள்

கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

 

ஒடிந்து போய் விடுமோ என்று

எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.

 

திரிக்கப்பட்ட சிறிய நூலொன்று

புத்தக  அடையாளமாய் வைக்கப்பட்டிருக்கும்.

 

கடைசியாய்

எந்தப் பக்கம் வாசிக்கப்பட்டிருக்குமென்று தெரியவில்லை.

 

புத்தகத்துக்குத்

தெரியுமோ?

 

கவனமாய்

புத்தகத்தைத் திறப்பேன் பழங்காலப் புதையல் போல.

 

எங்கே ‘புட்டுக்’ கொள்ளுமோ என்று பக்கங்களைப்

பையப் புரட்டுவேன்.

 

மூடும் போது புத்தகம்

மூச்சு விடுவது கேட்கும்.

 

’ஒரு பக்கமாவது  வாசித்து விட்டு மூடு’

 

ஏன்?

 

‘இது

உன் அப்பா எத்தனையோ முறை

சிரத்தையில் வாசித்து தன்னைச் சோதித்துத் தீராத புத்தகம்’

 

நான் வைத்திருக்கும்

வெறும் திருக்குறள் புத்தகம் போன்றில்லையென்று தெரியும்

என் அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்.

 

 

                                                    

கு.அழகர்சாமி

Series Navigation