அழகியலும் அழுகுணியியலும் 

 

அழகர்சாமி சக்திவேல் 

காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை.     

ஆஸ்கார் வைல்ட் 

                                                                  

 

அழகு என்பது படைப்பவனைப் பொறுத்தது மட்டுமல்ல. பார்ப்பவனையும் பொறுத்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் மார்பசைவிலும், பெல்லி நடனம் ஆடும் பெண்ணின் இடையசைவிலும், பெண்கள், நளினத்தின் அழகைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண்களின், அந்த மார்பசைவையும், அந்த இடையசைவையும, ஒழுக்கமானதாகவும், ஒழுக்கமற்றதாகவும் பார்ப்பது, பார்வையாளனின் ரசனையில் இருக்கிறது. எனவே, அழகில், ஒழுக்கமானது, ஒழுக்கமற்றது என்ற பாகுபாடு இல்லை. ஆனால், அழகில், உள்ளம் கவர்ந்தது, கவராதது என்ற பாகுபாடு உண்டு. இன்னொரு வகையில் சொன்னால், அழகில், வெற்றி பெற்றது, தோல்வி அடைந்தது என்ற பாகுபாடு இருக்கிறது. இன்று தோற்றுப்போன அழகு, நாளை வெற்றி பெறலாம். ஆக, மனிதனின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே அழகு இருக்கிறது. இப்படி, அழகியல் பற்றி, நாம் அடுக்கிகொண்டே போகலாம். 

 

மேடையில் நீண்ட நெடிய உரையை ஆற்றுகிறவனைப் பார்த்து, பார்வையாளன் கொட்டாவி விடுகிறான். ஆனால், அதே உரையில், நகைச்சுவையும், அடுக்கு வசனங்களும் கலந்து, பார்வையாளனை, இருக்கையில் கட்டிப்போட  முடிந்தால், அங்கே, மேடையில் உரையாற்றுபவன் பேச்சில், ஒரு அழகு மிளிர்கிறது. எழுதுகிற கவிதைகளுக்கு, சந்தங்கள் அழகு, பாடுகிற பாடலுக்கு, ஆலாபனை ஒரு அழகு.  

 

பரதநாட்டியம் ஆடுபவள், இறைவன் குறித்த பாடலுக்கு ஆடி, அந்த ஆட்டத்தால், பக்தியை வளர்ப்பதில் மட்டுமே அழகு இல்லை. மாறாய், இந்திய கிராமங்களில், உடல் உறவு குறித்த கல்வியை,, காமம் மிளிர, தனது அங்கங்களை அசைத்து அசைத்து, சொல்லிக்கொடுக்கும், கரகாட்டத்திலும் ஒரு அழகு இருக்கிறது. நவீன காலங்களில், மேடைகளில் ஆடப்படும் ரெகார்ட் டான்சுகளிலும், ஒரு அழகு இருக்கிறது. கரகாட்டத்திலும், ரெகார்ட் டான்சிலும் ஒழுக்கநெறிகள் இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள், நம்மில் எப்போதும் உண்டு. ஆனால், இந்த நடனங்களில் எல்லாம், அழகு இல்லை என்று, அவர்கள் யாராலும் சொல்லமுடியாது. இப்படி, அழகியல் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள், பலப்பல.  

 

இருப்பினும், இந்த இடத்தில் ஒரு கேள்வி? கரகாட்டத்திலும், ரெகார்ட் டான்சிலும், கவர்ச்சி காட்டும் பெண்ணை ரசிக்க, சுற்றிச் சுற்றி, ஆண்கள் இருப்பார்கள். ஆனால், அதே கவர்ச்சியுடன் ஆடும், அந்த கரகாட்டக்காரனையும், ரெகார்ட் டான்சு ஆடுபவனையும் ரசிக்க, அங்கே பெண் கூட்டம் இருக்குமா? ஏன், ஆடுகிற ஆணிடம் அழகு இல்லையா? அழகான அங்க அசைவுகள்தான் இல்லையா? அந்த ஆணின் அழகு, ஒரு பெண்ணாலோ, அல்லது ஒரு ஓரினச்சேர்க்கை ஆணாலோ ரசிக்கப்படக் கூடாதா? இந்தக் கேள்விக்கான விடையைத்தான், அழகியலில் ஆணாதிக்கம் காட்டும், அழுகிணியியல் என்று நான் சொல்ல விழைகிறேன். இந்த அழுகிணியாட்டம், இன்றல்ல, நேற்றல்ல, காலம், காலமாய் இருந்து வந்ததுதான். எனினும், ஆணின் அழகியல் குறித்து, இன்னொரு ஆணான, உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியவாதி, ஆஸ்கார் வைல்ட், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுத ஆரம்பித்தபோதுதான், அவர் எழுத்தை கடுமையாய் விமர்சித்த, மற்ற ஆண் இலக்கியவாதிகளின் அழுகிணியியல், உலகின் பார்வைக்குத் தெரிய வந்தது. 

 

சரி, இப்போது அழகின் ஒரு பகுதியான, நிர்வாணம் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். பணக்கார வீடுகளில், பார்வையாளர் அறைகளை, பல அரை நிர்வாண அல்லது முழு நிர்வாணப் பெண் சிலைகள் அலங்கரித்துக்கொண்டு இருப்பதை, நாம் காலம் காலமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அந்தச் சிலைகளை, நாம் அழகு என்றும் சொல்லுகிறோம். ஆனால், ஒரு ஆணின் முழு நிர்வாணச் சிலை, எத்தனை வீடுகளின், பார்வையாளர் அறைகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. ஏன், ஒரு ஆணின் அந்தரங்கத்தில், அழகு இல்லையா?  ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை, மத்தளம் என்றும், ஆலிலை என்றும், தம்புரா என்றும், கிண்ணங்கள், பால் குடங்கள் என்றும் வர்ணிக்கத் தெரிந்த, ஒரு புலவனால், ஏன் ஒரு ஆணின் அந்தரங்கம் குறித்து, வெளிப்படையாக எழுத முடியவில்லை? ஒரு ஆணின் தொடைகளையும், தோள்களையும், மீசையையும் வெளிப்படையாக எழுதிய, தமிழர் இலக்கியங்கள், ஒரு ஆணின், நடுப்பகுதியை மட்டும், ஏன் எழுதாமல் போனது? இங்கேதான், ஆணாதிக்கம் நிறைந்த தமிழர் இலக்கியத்தின், அழகியல் குறித்த, அழுகுணி ஆட்டம், நமக்கு நன்கு புலப்பட்டுப் போகிறது. 

 

மேற்கத்திய நாகரிகம் சற்றே மாறுபட்டது. அங்கே, ஆணின் அந்தரங்க அழகும், பெண்ணின் அந்தரங்க அழகும், சரி சமமாகப் பார்க்கப்பட்டது. இன்றும், பார்க்கப்படுகிறது. அதற்கான உதாரணம், கிரேக்க மற்றும் ரோமானிய வீதிகளின் நடுவே, பெரிதாய் வீற்றிருக்கும், ஆண்கள் மற்றும்  பெண்களின் நிர்வாணச் சிலைகள். ஆனால், அங்கேயும் சில குறைகள். ஒரு ஆண், இன்னொரு ஆணின் அந்தரங்கத்தை, சிலையாக வடிக்க உரிமையுண்டு. ஆனால், நீண்ட நெடுங்காலமாக, ஒரு ஆண், இன்னொரு ஆணின் அந்தரங்கத்தின் அழகை, அவன் எழுதும் இலக்கியங்களுக்குள் கொண்டு செல்ல அவனுக்கு உரிமை தரப்படவில்லை. அப்படி, ஒரு ஆணின் அழகை, தனது இலக்கியத்துக்குள் எழுத நினைத்து, பற்பல கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டு, சிறை சென்று, வாடி வதங்கி, தனது நாற்பத்தாறு வயதிலேயே இறந்து போன, ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி குறித்தே, இந்தக் கட்டுரை,  பேசப்போகிறது. 

 

ஆஸ்கார் வைல்ட் என்ற அந்த ஆங்கில இலக்கியவாதி, ஆங்கில இலக்கியத்தின், தலை சிறந்த பத்து இலக்கியவாதிகளுள் ஒருவராக, இன்றளவும் கருதப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஆங்கில இலக்கியத்தில், “விக்டோரியப் பண்பாடு” என்று சொல்லப்படுகிற, பழமைவாதம் நிரம்பிய ஆங்கிலப் படைப்புக்களே, படைக்கப்பட்டு வந்து இருக்கின்றன. அப்படிப் படைக்கபட்ட படைப்புகளில், மதம் சார்ந்த கொள்கைகளுக்கே, நிறைய முக்கியத்துவம் கொடுக்கபட்டன. படைக்கப்படும் ஆங்கிலப் படைப்புக்களில், ஒரு மதம் சார்ந்த ஒழுக்கம், அடிப்படையாக இருக்க வேண்டும். படைப்புக்களில் சொல்லப்படும் நீதி,   மதம் சொல்லும் நீதிகளை மீறி இருக்கக்கூடாது. இப்படி, படைக்கப்படும் படைப்பாடுகளில், பல கட்டுப்பாடுகள், பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்து, ஒரு நவீன இலக்கிய யுகத்துள், ஆங்கில இலக்கியங்களை எடுத்துச் சென்ற பெருமை, ஆஸ்கார் வைல்ட் போன்ற இலக்கியவாதிகளையே சாரும். ஆஸ்கார் வைல்ட் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய இலக்கியங்களுக்குள், அழகியலுக்கே, அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. கவிதை, கட்டுரை, கதை, நாடகம் போன்ற எல்லாப் படைப்புக்களிலும் அழகியலுக்கே, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.    

 

எபிக்ராம் என்ற பொன் மொழிகள் அல்லது கருத்துக் குறிப்புக்கள் எழுதுவது, நாடகங்கள் எழுதுவது, கட்டுரைகள் எழுதுவது, அழகியல் குறித்த சொற்பொழிவுகள் ஆற்றுவது, போன்ற விசயங்களில் சமர்த்தரான ஆஸ்கார் வைல்ட், கதைகள் புனைவதிலும் வல்லவர்தான். அவர் எழுதிய கதைகளில் ஒன்றான, ஒரு அழகியல் கலந்த தத்துவக் கதையான “டோரியன் கிரேயின் படம்” (The picture of Dorian Gray) என்ற நாவல், அவருக்கு உலகப்புகழ் பெற்றுத் தந்தது, என்பது உண்மை. இன்றளவும், பலராலும் விவாதிக்கப்படும் ஒரு நாவலாக, ஆஸ்கார் வைல்ட் எழுதிய அந்தப் புத்தகம் இருக்கிறது என்பதும் உண்மை.  

 

ஆனால், இந்தப் புகழ் எல்லாமே, ஆஸ்கார் வைல்டு வாழும் காலங்களில், அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாய், இந்தப் புத்தகத்தால், ஆஸ்கார் வைல்டுவின் சமகாலத்தில் வாழ்ந்த, ஆங்கில இலக்கியவாதிகளின் கடுமையான விமர்சனங்களை, ஆஸ்கார் வைல்டு எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அது மட்டுமல்ல, அந்தப் புத்தகத்தையே ஒரு ஆதாரமாய் வைத்து, ஆஸ்கார் வைல்டுவைச் சிறையில் தள்ளியது ஒரு கூட்டம். ஒரு கட்டத்தில், தான் பிறந்த நாட்டை விட்டே ஓடினார் ஆஸ்கார். கடைசியில், தனது நாற்பத்தாறு வயதிலேயே, மூளைக் கோளாற்றால், அவரது உயிரும் பிரிந்தது. 

 

ஒரு இலக்கியப் படைப்பாளன், எப்போது முழு மகிழ்ச்சி அடைகிறான்? அவன், தனது இலக்கியப் படைப்பின் மூலம், என்னவெல்லாம் சொல்ல வந்தானோ, அவை எல்லாமே, புத்தகத்தில் பதிவிடப்படும்போதுதான். கூடவே, அவன் தனது படைப்பில் என்ன சொல்ல வந்தானோ, அந்தக் கருத்துக்கள், பெரும்பான்மையான இலக்கியவாதிகளால், வாசகர்களால், ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான். இந்த இரண்டுமே, ஆஸ்கார் வைல்ட் எழுதிய, “டோரியன் கிரேயின் படம்” (The picture of Dorian Gray) புத்தகத்திற்கு வாய்க்கவில்லை. ஏன் இந்த அவலம்? காரணம், ஆஸ்கார் எழுதிய இலக்கியக் கதை, ஒரு மூன்றாம்பாலினம் சார்ந்த கதை. அந்தக் கதைக்குள் இருந்த சில கதாபாத்திரங்களில், ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கை வாடை கொஞ்சம், அங்கொன்றும் இங்கொன்றுமாய், தெளிக்கப்பட்டு இருந்தது. ஒரு ஆண், இன்னொரு ஆணின் அழகியல் குறித்து, பட்டவர்த்தனமாகப் பேசும் காட்சிகள் சில, கதைக்குள் இருந்தது. அவ்வளவுதான் ஆஸ்கார் வைல்டு தொலைந்தார்.  

 

ஐயகோ… இன்று மூன்றாம் பாலின இலக்கியத்தைத் தமிழில் படைக்கும் இலக்கியவாதிகள், மற்ற தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்து, எவ்வளவு சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்கிறார்களோ, அதைவிட அதிகமான சோதனைகளையும், வேதனைகளையும், ஆஸ்கார் வைல்டு, தனது இந்தப் புத்தகத்திற்காக, சந்திக்க வேண்டியிருந்தது. 

 

இன்றைய, தமிழ் மூன்றாம்பாலின இலக்கியங்களை, எழுதுகிறவர்களே கொஞ்சம் பேர்தான். ஒரு பாமர ஆணுக்கும், பாமரப் பெண்ணுக்கும், ஓரினச்சேர்க்கை குறித்து, எளிதில் புரிந்துகொள்ள, இயல்பான வழக்கில் உள்ள வார்த்தைகள் முதலில் தேவை. ஆனால், அப்படிப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வழக்கில் உள்ள வார்த்தைகளை, மூன்றாம் பாலின இலக்கியவாதிகள் எழுதினால், “அய்யோ அய்யோ அசிங்கம்.. பண்பாடு கெட்டுப்போச்சு, கலாச்சாரம் வீழ்ந்தது” என்று கூச்சல் போட, தமிழ் ஆண் இலக்கியவாதிகள், மற்றும் பெண் இலக்கியவாதிகளின் கூட்டம் ஒன்று, எப்போதும் வளைய வந்து, வசை பாடுகிறது. Anal sex என்ற வார்த்தைக்கு, ‘குண்டியடித்தல்’ என்பதே, தமிழ் வட்டார வழக்கு. ஆனால், அப்படியே எழுதினால், “அய்யோ அசிங்கம்” என்று சில கூப்பாடுகள். இதையே “குதவழி உறவு” என்று சமஸ்க்ருதம் கலந்து எழுதினால், அப்போது நாகரீகம், பண்பாடு காப்பாற்றப்பட்டுவிடுமா, என்பது, எனக்குத் தெரியவில்லை. 

 

சில, கருணை நிறைந்த பத்திரிக்கை ஆசிரியர்கள், இது போன்ற மூன்றாம்பாலின இலக்கியங்களுக்கு, சற்றே முக்கியத்துவம் கொடுத்து, தங்கள் பதிப்பில் சேர்த்தால், “இவன் அவனாக இருப்பானோ” என்று, மற்ற ஆண், பெண் இலக்கியவாதிகளிடம் எழும் சந்தேகங்கள். அதைக் கண்டு வேதனைகொள்ளும் பதிப்பாசிரியர்கள், “நான் அவனல்ல, நான் அவனல்ல” என்று கதறும் அவலங்கள்.. சரி.. புத்தகம் போடலாம் என்று கிளம்பினால், மூன்றாம் பாலின இலக்கியத்திற்கு, மதிப்புரை எழுதித்தர, பிற எழுத்தாளர்கள் எழுப்பும் தயக்கம், இப்படி, மூன்றாம்பாலின இலக்கியங்கள் படைக்கும் ஒவ்வொரு நிலையிலும், எத்தனை எத்தனை தடைகள்? இந்தத் தடைகள், இன்றும் நேற்றும் இருப்பதல்ல, நமது கட்டுரைக் கதாநாயகன், ஆஸ்கார் வைல்டு வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு இருந்தது. 

 

1890-இல், லிப்பின் காட் என்ற மாதாந்திரப் பத்திரிக்கைக்கே, முதன் முதலில், “டோரியன் கிரேயின் படம்” (The picture of Dorian Gray) என்ற அவர் நாவலை, ஆஸ்கார் வைல்டு சமர்ப்பித்தார். நாவலைப் படித்துப் பார்த்த பத்திரிகை ஆசிரியர், நாவலுக்குள் இருக்கும் ஓரினச்சேர்க்கை வாடையை உணர்ந்துகொண்டு, அந்த நாவலில், அப்படி எழுதப்பட்டு இருந்த, சுமார் ஐநூறு வார்த்தைகளை நீக்கி, அதன் பின்னரே, தனது மாத இதழில் பதிவிட்டார். அப்போதும்கூட, நாவலைப் படித்த, பற்பல இலக்கியவாதிகளிடம் இருந்து, எதிர்மறைக் குரல்கள் எழாமல் இல்லை. இருந்த போதும், பத்திரிகையில் வந்த அந்த நாவல், பின்பு புத்தகமாகவும் பதிவிடப்பட்டது. 

 

தான் சொல்ல வந்த மூன்றாம் பாலினக் கருத்துக்களில் பல, லிப்பின் காட் பத்திரிகை ஆசிரியரால் நீக்கப்பட்டதாலும், அந்தப் புத்தகத்தைப் படித்த இலக்கியவாதிகள் எழுப்பிய எதிர்மறைக் குரலாலும், மனமுடைந்து போனார் ஆஸ்கார் வைல்டு. இப்போது, தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த ஆஸ்கார் வைல்டு, தனது அதே கதையை, 1891-இல், இன்னும் விரிவுபடுத்தினார். ஓரினச்சேர்க்கை வாடை உடைய கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை, அங்கும் இங்கும் மாற்றி, அவர்கள் மனநிலைக்கு ஒரு எதிர்மறை விளக்கம் கொடுத்து, சமூக ஒழுக்கம் இருப்பது போல, தனது நாவலை,  மாற்றி எழுத வேண்டியதாயிற்று. 

 

இருப்பினும், ஏற்கனவே ஓரினச்சேர்க்கை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஆஸ்கார் வைல்டு, அப்போதிருந்த ஆங்கிலேய ஓரினச்சேர்க்கை குற்றச்சட்டத்தின் மூலம் மாட்டிகொண்ட போது, அவர் எழுதிய இந்தப் புத்தகமே, இன்னொரு ஆதாரமாகி, அவருக்கு இரண்டு ஆண்டுகள், கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்தது. தண்டனையால் நொந்துபோன ஆஸ்கார் வைல்டு, இங்கிலாந்தில் வாழ முடியாமல், பிரான்சு நாட்டுக்குள் தஞ்சம் புகுந்தார். பட்டப்படிப்பு படித்த ஒரு இலக்கியவாதி, தனது கடைசி காலத்தில், வறுமைப்பிடியில் வாடி, இறக்கவேண்டியதாயிற்று என்பது எவ்வளவு பெரிய கொடுமை?   

 

ஆஸ்கார் வைல்டு இறந்த பிறகு, அவரது பல படைப்புக்கள், புத்தகமாக வெளிவந்து, பெரும்புகழ் பெற்றது. பணமும் ஈட்டியது. ஆனால், அதனால், ஆஸ்கார் வைல்டுக்கு என்ன லாபம்? வெறும், நாற்பத்தாறே வயதில், அவர் உயிர் போனதுதான் மிச்சம். சமூகத்தின், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பினால், பல மாற்றங்களுக்கு உள்ளான, ஆஸ்கார் வைல்டுவின் “டோரியன் கிரேயின் படம்” (The picture of Dorian Gray) என்ற அந்த நாவலின் ஆதிவடிவம், ஆஸ்கார் வைல்டு, முதன்முதலில் என்ன அவர் நாவலில் எழுதினாரோ, அவை எதுவும் தணிக்கை செய்யப்படாமல், கிபி 2011-இல் தான், புத்தகமாய் மறுபடி வெளிவந்தது என்பது, ஒரு வேதனையான விசயம் அல்லவா? ஒரு மாபெரும் எழுத்தாளனது ஓரினச்சேர்க்கை கருத்துக்கள் கொண்ட நாவலை, அவன் எழுதியபடியே வெளியிட, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகள் ஆகி இருக்கின்றது என்பது, ஒரு வெட்கக்கேடான விசயம்தானே? ஆண்-ஆண் அழகியல் என்ற ஒரு விசயம், ஆண்  மற்றும் பெண் இலக்கியவாதிகள் ஆடிய அழுகிணி ஆட்டத்தால், எப்படியெல்லாம், உருமாறித் திருமாறிப் போனது என்பது, நாம் ஆஸ்கார் வைல்டுவின், வாழ்க்கையைப் படித்தால், நன்கு புலப்படும். 

 

சரி, அப்படி என்னதான் அந்த நாவலில் ஆஸ்கார் வைல்டு எழுதியிருந்தார்? நாவலின் கதைச்சுருக்கம் இதுதான். பாசில் என்பவன் ஒரு ஓவியன். ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ள அவனுக்கு, கதாநாயகன் டோரியன் கிரேயின் மீது ஒரு மயக்கம். கதாநாயகன் டோரியன் கிரேயை சித்திரமாக வரைய, பாசில் முற்படும்போது, பாசிலின் இன்னொரு நண்பனான  ஹென்றி, உள்ளே வருகிறான். அழகியல் குறித்து அதிகம் தெரிந்து வைத்து இருக்கும், ஹென்றியின் படாடோபம், கதாநாயகன் கிரேயைக் கவர்கிறது. இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். “இளமை இருக்கும் வரை அழகு இருக்கும். அழகு எப்போதும் இருந்தால், அதுவே பேரின்பம்” என்ற ஹென்றியின் தவறான கொள்கைக்கு செவி சாய்க்கும் டோரியன் க்ரே, மனம் மாறி, ஒரு பேயிடம் தஞ்சமடைகிறான். தனது ஆத்துமாவை, அந்தப் பேயிடம் அடகு வைக்கிறான். பதிலுக்கு, தனது வருங்கால முதுமைக்கு, தான் பலியாகாமல், பாசில், தன்னை மாடல் ஆக வைத்து வரைந்த, தனது ஓவியம் பலியாகவேண்டும் என்ற வரத்தை, அந்தப் பேயிடம் இருந்து பெறுகிறான். அதாவது, கதாநாயகன் எப்போதும் இளமையாக இருப்பான். ஆனால், அவனது ஓவியத்திற்கு, வயதாகிக் கொண்டே போகும். கிரே எப்போதெல்லாம் பாவம் செய்கிறானோ, அப்போதெல்லாம், அவனது ஓவியத்தின் உடல், முகம் எல்லாம் அசிங்கமாகிக் கொண்டே போகும். 

 

கதாநாயகன் கிரே, சிபில் வேன் என்ற நாடக நடிகையைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். சேக்ஸ்பியர் நாடகங்களில், திறம்பட நடிப்பதில் வல்லவள் ஆன, நாயகி சிபில் வேன் நடிக்கும் நாடகத்திற்கு, ஒரு முறை, தனது நண்பர்கள் ஆன, பாசிலையும், ஹென்றியையும் கூட்டிக்கொண்டு போகிறான், நாயகன் கிரே. கிரேயின் மீது அளவற்ற காதல் கொண்ட சிபில் வேன், மேடையில் இருந்து அவனையே பார்த்துக்கொண்டு, தனது நாடகத்தில் நடிப்பதில் உள்ள கவனத்தைச் சிதற விடுகிறாள். கிரேயை, எள்ளி நகையாடுகிறார்கள், ஓவிய நண்பனான பாசிலும், இன்னொரு நண்பனான ஹென்றியும். கோபம் கொள்ளும், நாயகன் கிரே, “அழகு என்பது உன் உருவத்தில் மட்டும் இருந்து பயன் இல்லை. உன் நடிப்பிலும் இருக்கவேண்டும்” என்று, அழகியல் தத்துவம் பேசும் நாயகன் கிரே, நாயகி சிபில் வேனைப் பிரிகிறான். சிபில் வேன், தற்கொலை செய்து கொள்ளுகிறாள். ஆத்திரப்பட்டுப் போகும், நாயகி சிபில் வேனின் சகோதரன் ஜேம்ஸ், நாயகன் கிரேயைப் பழி வாங்க அலைகிறான். நாயகியின் தற்கொலையால், பாவம் செய்து விட்ட கிரேயின் ஓவியப் படம், தனது முகத்தையும் உடம்பையும், கோரமாக மாற்றிக் கொள்கிறது.  

 

கோரமான முகம் கொண்ட, தனது ஓவியத்தைப் பார்த்து பயந்து போகும், நாயகன் கிரே, அந்தப் படத்தை, ஒரு அறையில் வைத்துப் பூட்டி விடுகிறான். ஒரு முறை ஓவிய நண்பன் பாசில், அந்தக் கோரமடைந்த ஓவியத்தைப் பார்க்க நேர்கிறது. பேயின் வேலையை, நாயகன் கிரேயின் மூலம் அறிந்து கொள்ளும், ஓவியன் பாசில், கிரேயைக் கடிந்து கொள்கிறான். கோபம் கொள்ளும் கிரே, ஓவியன் பாசிலைக் கொன்று விடுகிறான். கிரே செய்த இந்தப் பாவத்தால், ஓவியத்தின் முகம், இன்னும் கோரமாக மாறிவிடுகிறது. ஆனால், கிரே மட்டும் எப்போதும் இளமையாகவே இருக்கிறான். 

 

கிரேயின் மாறாத இளமை, அவனை இன்னும் பாவங்கள் செய்ய வைக்கிறது. மனம் போன போக்கில் வாழும் கிரேயைக் கொல்ல வருகிறான், தற்கொலை செய்துகொண்ட நாயகி சிபில் வேனின் அண்ணன் ஜேம்ஸ். இளமையுடன் இருக்கும் நாயகன் கிரே, “நீங்கள் தேடும் கிரேக்கு, இப்போது வயதாகி இருக்கவேண்டும். ஆனால் நானோ இளமையுடன் இருக்கிறவன், எனவே, நான் அவனல்ல” என்று சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்ளுகிறான்., பிறிதொரு நாளில், கிரே, ஜேம்சையும் கொல்லுகிறான்.  ஓவியம், இன்னும் கோரமாகிறது. 

 

இறுதிக்கட்டமாக, “இந்த ஓவியமே, நம் நிம்மதியான வாழக்கையின் எதிரி” என்று நினைக்கும் நாயகன் கிரே, ஓவியத்தைக் கத்தியால் கிழித்து அழிக்கிறான். அலறல் சத்தம் கேட்டு, கிரே வீட்டின் வேலைக்காரர்கள், அறைக்குள் ஓடி வருகிறார்கள். அங்கே, ஒரு வயதான முதியவர், கத்திகுத்துப்பட்டு, இறந்து கிடக்கிறார். ஆனால், ஓவியமோ, அதன் முதிய தோற்றத்தில் இருந்து மாறி, இப்போது இளமையாக காட்சி அளிக்கிறது. அந்த முதியவர் அணிந்து இருந்த மோதிரத்தைக் கொண்டு, அந்த முதியவர்தான் கிரே, என்ற முடிவிற்கு, வேலைக்காரர்களும், காவலதிகாரிகளும் வருகிறார்கள். கதை, இங்கே முடிகிறது. 

 

“மிதமிஞ்சும் அழகியலில் ஒரு ஆபத்தும் இருக்கிறது” என்பதே, எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு, தனது நாவலின் மூலம், இந்த உலகிற்குச் சொல்லவரும் விஷயம் ஆகும். ஒரு அழகான, தத்துவம் நிறைந்த கதையைப் பாராட்ட வேண்டிய இலக்கியவாதிகள், கதைக்குள் இருந்த, ஒரு சில, ஒரினச்சேர்க்கைக் கருத்துக்களுக்காய், “இந்தக் கதை, ஒரு ஒழுக்கமற்ற குப்பை” என விமர்சனம் செய்த போது, கதையைப் படைத்த ஆஸ்கார் வைல்டுவின் மனம் எவ்வளவு பாடுபட்டு இருக்கும்? இன்னொரு புறம் சொல்லப்போனால், ஆஸ்கார் வைல்டுவின், இந்த நாவலில் சொல்லப்பட்டு இருக்கும் கதாபாத்திரங்களில் பெரும்பாலோர், அதே சமகாலத்தில் வாழ்ந்த உண்மைக் கதாபாத்திரங்கள்தான். அப்படி உண்மையாய் வாழ்ந்த, அவர்களது, உண்மையான வாழ்க்கைக்குள், தனது கற்பனையைப் புகுத்தியே,  ஆஸ்கார் வைல்டு, இந்த நாவலை எழுதி இருக்கிறார். இருந்தாலும், ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள், எழுந்தபோது, ஆஸ்கார் வைல்டு அதிர்ந்து போனார். இப்போது ஆங்கில இலக்கியவாதிகள் திருந்தி விட்டார்கள். ஆனால், நம் தமிழ் இலக்கியவாதிகள், இன்னும் திருந்தியபாடில்லை. “நான் அவனல்ல” என்ற, பழைய பல்லவிகளையே, இன்னும் பாட ஆசைப்படுகிறார்கள். என் செய்வேன் பராபரமே? 

 

ஆஸ்கார் வைல்டுவின் இந்த ஒரே நாவல், அவர் மறைந்த பின்னர், பல மேடைகளில், புகழ் பெற்ற நாடகங்களாக மாற்றி, நடிக்கப்பட்டு, அந்த எல்லா நாடகங்களும், சக்கைப்போடு போட்டன. இந்த நாவலின் கதை, கிட்டத்தட்ட இருபது முறையாவது, திரைப்படங்களாக வெளிவந்து இருக்கின்றன. அப்படித் திரைப்படம் ஆக வந்த ஒரு படத்திற்கு, ஆஸ்கார் விருதும் கொடுத்து கவுரவிக்கப்பட்டு இருக்கிறது.  

 

ஆஸ்கார் வைல்டுவின் கதை, இங்கே உங்கள் பார்வைக்குக் கட்டுரையாக வைக்கப்படுவதன் ஒரே நோக்கம், மூன்றாம் பாலின இலக்கியவாதிகளுக்கு, ஆண், பெண் தமிழ் இலக்கியவாதிகள், தகுந்த மரியாதை தரவேண்டும் என்ற ஆசையில்தான்.  

 

ஒரு காலத்தில், தமிழ் இலக்கியம், ஆண்கள் கையில் மட்டுமே இருந்தது. அப்புறம், பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தார்கள். அப்படிப் பெண்கள் எழுத ஆரம்பித்தபோது, தங்கள் உணர்வுகளை எழுத்தில் வடிக்க, தங்கள் பெண் இனத்துக்கு உகந்த வார்த்தைகளை, இலக்கியங்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள். தங்கள் இலக்கியமும், ஆணின இலக்கியத்திற்குச் சமமானவையே, என்று உணர்த்த, பெண் இலக்கியவாதிகள், ஒரு காலத்தில் போராடி இருக்கிறார்கள் என்பதை, பெண் இலக்கியவாதிகள் மறந்து விடவேண்டாம், சிவ சங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன் போன்ற, முற்போக்கு இலக்கியவாதிகளின், எழுத்துப் போராட்டத்தை நாம் மறந்துவிட முடியாது.  

 

இன்று அதே போல்தான், மூன்றாம் பாலின இலக்கியவாதிகளும் போராடுகிறார்கள். தாங்கள் சார்ந்த கருத்துகளை, ஆணித்தரமாக எடுத்துரைக்க, தமிழ் அகராதியில் இருந்தாலும், வழக்கில் அசிங்கம் என்று நினைக்கப்படும், “குண்டி, குஞ்சு, கொட்டை” போன்ற வார்த்தைகளை, தங்கள் படைப்புக்களில், உண்மையாய்ப் பிரதிபலிக்க நினைக்கிறார்கள்.  

 

மறந்து விடவேண்டாம், பழையன கழிதலும், புதியன புகுதலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமல்ல. மூன்றாம் பாலினத்திற்கும் சேர்த்துத்தான். தமிழ்ச் சமூக உணர்வு மாறுகையில், ஆஸ்கார் வைல்டு போன்ற இலக்கியவாதிகள், மூன்றாம் பாலினத்திலும், நிச்சயம் தோன்றுவார்கள். 

 

அழகர்சாமி சக்திவேல்  

Series Navigationஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]