அவருக்கென்று ஒரு மனம்

கோ. மன்றவாணன்

அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார்.
“ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க”
“எதுக்குங்க அய்யா”
“ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்”
“எங்க இருக்கிறீங்க?”
“ஒங்க பகுதியிலதான் ஆர்கேவி தட்டச்சுப் பயிலகத்துக்கிட்ட நிக்கிறேன்.”
“அங்கேயே நில்லுங்க. நான் வரேன்”
“முகவரிய சொல்லுங்க. நான் வந்துடுறேன்”
“இல்லல்ல.. இந்த இரவு நேரத்துல என்வீட்ட கண்டுபிடிக்கிறது கஷ்டம். நானே வரேன்”
அய்ந்து நிமிடங்களில் அந்த இடத்துக்குச் சென்றேன். வட்டமான முகத்தில் முறுக்கிவிட்ட அடர்த்தியான மீசையோடு புன்முறுவல் பூத்தவண்ணம் அழைப்பிதழைக் கொடுத்தார்.
அவர் முன்னாலேயே பிரித்துப்பார்த்தேன். ‘திருமண வெள்ளிவிழா விருந்தோம்பல் அழைப்பிதழ்’ என்றிருந்தது. பாரதியார், ஜீவா, அவருக்குத் திருமணம் செய்துவைத்த தொழிற்சங்கத் தலைவர் ஜெகன் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. கவிதை வடிவில் கருத்துச் செறிவோடு அழைப்பிதழ் இருந்ததைக் கண்டு அவரைப் பாராட்டினேன்.
கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தார். என்ன புத்தகம் என்று கேட்டேன்.
வளவ. துரையன் அய்யாவுக்கு அழைப்பிதழ் வைக்க அவர் வீட்டுக்குப் போனேன். அவர் கொடுத்தது என்று சொல்லியபடியே அந்தப் புத்தகத்தை என்னிடம் நீட்டினார். ஒரு தம்பதியினரின் எண்பதாம் ஆண்டு விழா மலர் அது. “பொருத்தமாதான் புத்தகத்தை வளவ.துரையன் அய்யா கொடுத்திருக்குறார்” என்றேன்.
நீலகண்டனைப் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் ஒரு செருப்புக் கடையில் வேலை செய்தபடி, கல்லூhயிpல் பி.காம். படித்துக்கொண்டிருந்தேன். கடையின் தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்த தொலைபேசி அலுவலகத்துக்கு நான்தான் போவேன். அப்போதெல்லாம் அவர்தான் கட்டணத்தை வாங்கி ரசீது போட்டுக் கொடுப்பார். அவருடைய வசீகர முகமும் அடர்த்தியான மீசையும் நீண்ட கருதாவும் என் நெஞ்சில் அப்போதே அச்சடித்த மாதிரி பதிந்துவிட்டது.
அதன்பிறகு… தொழிற்சங்க நிகழ்ச்சிகள், தமிழ்விழாக்கள், பொதுநலப் போராட்ட நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் அவரின் செயல்பாட்டைப் பார்த்திருக்கிறேன். கருத்து முழக்கங்களையும் கேட்டிருக்கிறேன். பொதுநலத் தொண்டு செய்வதையே… மற்றவர்களுக்கு உதவுவதையே நாட்டுக்குச் சேவை செய்வதையே தன் இலட்சியமாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக்கொண்டவர். அதனால் அவர்மீது அனைவருக்கும் ஒரு தனிமரியாதை. அவரை யாரும் குறைசொல்லி நான் கேட்டதில்லை.
அவரிடத்தில் நான் சொன்னேன்.
“இப்பல்லாம் ஒங்கள மாதிரி நல்லவங்கள பாக்குறது அரிதா போச்சுங்க”
“எல்லாரும் நல்லவங்கதான்” என்று அவர் சொன்னதில் அவருடைய வெள்ளை மனம் புன்னகைத்தது.
“அதுக்குச் சொல்லலீங்க அய்யா. மனிதர்கள்லாம் சுயநலப் பிசாசுகளா மாறி அலையறாங்க. நாட்ட பத்தி பொதுமக்கள பத்தியெல்லாம் யாரும் கவலப்படறதில்ல”
“அவுங்க அவுங்க சூழல், வாழ்க்கைத் தேவைன்னு பல இருக்கும். அதுக்காக அவுங்கள குத்தம் சொல்றது சரியாப் படல எனக்கு” என்றார்.
“ஆனாலும் சொல்றேங்க. இப்ப இருக்கிற மனிதர்கள்லாம் நல்ல வேலைக்குப் போவணும். அலுவலகத்துலயும் ஒழுங்காக வேல செய்யாம கைநிறைய மன்னிக்கணும் பைநிறைய சம்பளம் வாங்கணும்… பெரிசா வீடு கட்டணும்னு நெனைக்கிறாங்க. அதாவது பரவாயில்ல. லஞ்சம் ஊழல்னு செஞ்சி குறுக்கு வழியில பணம், சொத்து சேக்கணும்னு பரபரக்கிறாங்க. அரசுப்பள்ளியில் வேல பாக்குற ஆசிரியருங்க கூட அங்குள்ள ஏழப்பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காம ஏமாத்திக்கிட்டு, தங்களோட பிள்ளைங்கள நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும்… முன்னேத்தணும்… வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புணும்ன்னு துடிக்கிறாங்க. எம்மகன் அமெரிக்காவில இருக்கான். அடுத்த மாசம் நான் அமெரிக்கா போறேன்னு மத்தவங்ககிட்ட பெருமை அடிச்சிக்குறாங்க… பக்கத்து வீட்டுல யாரு இருக்கான்னுகூட தெரியாம… தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு இருக்காங்க. பொழுதுக்கும் தங்களப் பத்தியே சிந்திக்கிறாங்க. அடுத்தவங்க கஷ்டத்த போக்க உதவணும்ன்ற எண்ணம் யாருக்கும் கெடையாது. நாட்ட பத்தி… மக்கள பத்தியெல்லாம் சிந்திக்கிறதெல்லாம் அவுங்க வேல இல்லன்னு நினைக்கிறாங்க. இவுங்களால இந்த நாட்டுக்கு என்ன லாபங்க? என்று சமூகத்தின் மீதான என் கோபக்கனலைக் கொட்டினேன்.
அதற்கு அவர் நிதானமாகச் சொன்னார்.
“அவுங்க அவுங்க குடும்பத்த அவுங்க அவுங்க சரியா பாத்துக்கிறதே இந்த நாட்டுக்குச் செய்ற சேவைதான். அத சுயநலமா எடுத்துக்க வேணாம்… கடமையா எடுத்துக்கணும். ஆனா அவுங்க தப்பான வழியில போகாம இருந்தா சரிதான்”
“சரி… ஒங்க வழிக்கே வரேன். நாட்டையும் வீட்டையும் இரண்டு கண்களா பாக்கறவங்கதான் இந்த நாட்டோட குடிமக்கள். மத்தவங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே என்னை மேற்கொண்டு அவர் பேச விடாமல் சைகையால் தடுத்தார். அடுத்தவர்களைக் குறைசொல்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரிந்தது.
“இப்ப நான் திருமண வெள்ளிவிழா நடத்துறேன். இது என்குடும்ப விழாதான். இதுகூட ஒருவகையில சுயநலம்தான். ஆனா என் 50 வருஷ வாழ்க்கையில நிறைய பொது நிகழ்ச்சிகள நடத்தி இருக்கேன். என் திருமணத்த கூட கட்சி நிகழ்ச்சியாத்தான் நடத்தினேன். இந்த வெள்ளிவிழாவையும் பொதுநிகழ்ச்சியா கொள்கை நிகழ்ச்சியா நடத்துவேன்” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்  போதே தீடீர் சத்தம்.
மூன்று இளைஞர்கள் குடிபோதையில் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து, ஒரு முதியவர் மீது மோதிவிட்டு விர்ரென்று பறந்தார்கள்.
“அய்யோ…” என்று அலறி அடித்து அந்த முதியவரை நோக்கி ஓடினார்.
“நாம போய் உதவுனா நாமதான் கோர்;ட்டுல சாட்சி சொல்ல போவணும்” என்று பலர் அந்த முதியவர்கிட்N;ட போகாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
அப்போது அந்த வழியில் வாகனத்தில் போன யாரும் அங்கே நிற்காமல் வேடிக்கை பார்த்தபடியே வளைந்து ஒதுங்கிப் போனார்கள்.
“நின்னு பாத்தா நம்மதான் மோதிட்டோம்னு நம்ம மேலயே எஃப்ஐஆர் போட்டுடுவாங்க” என்று ஒரு பைக்கில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் சொன்னது காதில் கேட்டது.
நாடு, மக்கள், சமூக அக்கறை என்று உரக்கப் பேசிய நானும், “நமக்கெதுக்கு வம்பு” என்று கூட்டத்தோடு சேராமல் சற்றுத் தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன்.
நீலகண்டன் ஒரு ஆட்டோவை நிறுத்தினார். அதில் இரண்டு பெண்கள் இருந்தனர். “அம்மா… விபத்து நடந்துபோச்சி. பெரியவரு அடிபட்டுட்டாரு. நீங்க வேற ஆட்டோ பிடிச்சுப்போறதா இருந்தா இவர ஏத்திக்கிட்டு ஜிஎச்க்கு போயிடுவோம்” ன்னு கையெடுத்துக் கும்பிட்டாரு. அவருடைய பார்வையில் இருந்த கருணையில் கட்டுண்டு, அந்த இருபெண்களும் இறங்கினார்கள். அவர்களுக்கு நன்றி சொன்னபடியே அந்த முதியவரைத் தொட்டுத் தூக்கி ஆட்டோவில் ஒத்தை ஆளா நின்று ஏற்றினார். அவருடைய வெள்ளைச் சட்டையெல்லாம் ரத்தக்கறை. ஆனால் அவர் முகம் சுளிக்கவில்லை.
டிரைவரை விரைவு படுத்தினார்.
“சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்குப் போப்பா”
ஃஃஃ
வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து போனது. சாலை ஓரத்தில் நீலகண்டனின் சைக்கிள் பூட்டப்படாமல் அநாதையாக நின்றுகொண்டிருந்தது. சைக்கிள் ஹாண்ட்பாரில் அவருடைய ஜோல்னா பையும் கேரியரில் மளிகைப்பொருட்களும் இருந்தன.
ஃஃஃ

Series Navigation