“அவர் அப்படித்தான்”……….( ருத்ரய்யா!)

ருத்ரா
(இலக்கிய இயக்குனர் ருத்ரய்யா அவர்களைப்
பற்றிய நினவு கூர்தல்)

திரைப்படக்கல்லூரியில்
சினிமா லென்சை கூர்மைப்படுத்திக்கொண்டு
உயிர்ச்
சிற்பம் செதுக்க வந்தவர்.
நடிகர்களிடம் இருந்த
தேவையற்ற காக்காய்ப்பொன் மினு மினுப்பை எல்லாம்
சுரண்டி விட்டு
அந்த ரத்த நாளங்களில்
அவர் உளியின் சத்த நாதங்களை
துடிக்கச் செய்து வெளிப்படுத்தியவர்.
ஸ்ரீ ப்ரியா கமல் ரஜனி….
அந்த முக்கோணத்தில்
பெண்ணியம் ஆணியம் ஆகிய இரண்டின்
இடையே உள்ள அர்த்தபுஷ்டியுள்ள‌
கண்ணியம் பற்றிய‌
முதல் தூரிகைக்கீற்றின்
அமரத்துவமான கீறல்
வெள்ளித்திரையை
ஹிரண்ய கசிபுவின் குடலாய் கிழித்தது.
கிழிந்த இடைவெளியில்
நம் போலித்தனமான‌
நரசிம்ம சீற்றங்களின் குடல் சரிவு என்று
அது தெரிந்தது.
வங்காளத்து மண்ணின் அடிவயிற்றுக்குரல்
சத்யஜித் ரே மூலம்
உலக மண்ணின் கலைப்பசியை
காட்டி கல கலக்க வைத்தது
ஊரே அறியும் உலகே அறியும்.
ருத்ரய்யாவின் நிழல்
சத்யஜித் ரேயின் விளக்கிலிருந்து
நீண்டது என்று சொல்வதை விட‌
பெண்மை ஆண்மை பற்றிய‌
சமுதாய பிர‌க்ஞை
நிமிண்டிய வெளிச்சமே
அவர்களின் காமிரா இருட்டறைக்குள்
ஒரு கருவறையாக இருந்தது.
பொருளாதாரம்
ஆடம்ஸ்மித் காலத்திலிருந்தே
ஒரு “ஈடிபஸ் கம்ப்ளெக்ஸ்”ல் தான்
கால் ஊன்றிக்கொண்டு வந்தது.
வேர்களாய் இருக்கும் அந்த‌
வேர்வைக்காரன்களையெல்லாம்
வெட்டியெறிந்து விட்டு
உற்பத்தியின் அந்த உபரிமதிப்பை
உறிஞ்சிக்கொள்வதில்
பளபளப்பான வில் அம்பு வேட்டையாய்
வந்த அந்த‌ விளம்பரங்கள்
டாலர் அல்லது ரூபாய்களுக்குள்
அரக்கமனங்களை கருவுயிர்த்தன.
மார்க்ஸ்ன் கனமான சுத்தியல்களுக்கு கூட‌
அவை தண்ணி காட்டிவிட்டு
மானிடத்தை கண்ணீர்க்கட்டுக்குள்
மூழ்கடித்துக்கொண்டிருக்கின்றன.
“அவள் அப்படித்தான்”ல்
டாகுமெண்டரி படம் எடுக்கும்
கமலின் அந்த மூக்கு முனை
சிவந்து சீறி துடிப்பது
ருத்ரய்யாவின் அடி ஆழம் காட்டும்
ஒரு விடியல் பற்றிய
கச்சா ஃபிலிம் கனவு.
பெரும்படத்துள் அவரின் அந்த‌
குறும்படம் மட்டுமே
சமுதாய சைக்காலஜியின்
குற்ற உணர்வை குதறிக்காட்டுகிறது.
பெண்மை என்பது வெறும்
குங்குமச்செப்பு அல்ல.
குமுறும் கடல்கள் ஆயிரம் ஆயிரமாய்
அலையடித்துக்கொண்டிருக்கும் அதில்
என்பது ஒரு ரத்தசிவப்பு அல்லவா.
ஆனால் “கறுப்பு வெள்ளையில்”
அந்த நரம்புகளை
அற்புதமாக மீட்டிவிட்டார்.
ஒரு கிராமத்து அத்தியாயம் கூட‌
சலுகைகள் எனும் புட்டிப்பால்
கொஞ்சம் கொஞ்சமாய்
சமுதாயத்தாயின் முலைப்பாலை
விஷமாய் மாற்றிவிடுமோ என்ற ஒரு
நுண் அச்சத்தை துல்லியமாய்
நுவல வந்த திரைப்படம்.
இரண்டு படங்களில் கூட‌
ஒரு தாகத்தின் சகாப்தத்தை
காட்டமுடியும்
என்று காட்டிய‌
ஒரு கலை சமுத்திரம் ருத்ரய்யா!

Series Navigationபாண்டித்துரை கவிதைகள்யாமினி கிரிஷ்ணமூர்த்தி