அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )

ahmedmor

-நாகரத்தினம் கிருஷ்ணா

Straskrishna@gmail.com

 

அஹமது மெராபத்தைத் தெரியுமா? என்ற கேள்வியைக் கட்டுரையாளர் யாரிடம் கேட்டிருப்பார் என்று தெரியவில்லை. அவரைக் (அஹமது மெராபத்தைக்) கொன்றவர்களிடம் கட்டுரையாளர் கேட்டிருக்கமாட்டாரென நம்பலாம். பிரெஞ்சு அரசாங்கத்திடமும் அல்லது பிரெஞ்சு மக்களிடமுமென்றால் (இஸ்லாமியர்களும் அதில் அடக்கம்.) அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் இறந்த மற்றொரு காவல்துறை அதிகாரி பிரான்க் பிரன்சொலாரொ (Franck Brinsolaro). இவர்கள் இருவரையும் சேர்த்து பத்திரிகை அலுவலகத்தில் கொல்லப்பட்டவர்கள் பன்னிரண்டுபேர். இது தவிர மருத்துவமணையில் உயிருக்குப் போராடுபவர்கள் இருக்கின்றனர்.  மறுநாள் நடந்த மற்றொரு தாக்குதலில் 27வயது ஆப்ரிக்கவம்சாவளியைச்சேர்ந்த பெண்போலீஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார். ஆகமொத்தம் இத்தாக்குதலில் அஹமது மெராபத்தையும் சேர்த்து மூன்று பிரெஞ்சுக் காவல்துறை அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்தில் கடமையைச் செய்கிறபோது இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதைப் பிரெஞ்சு அரசாங்கமும் பிரெஞ்சுமக்களும் செய்வார்கள். காஷ்மீர் எல்லையில் இந்தியப்போர்வீரர் கொல்லப்படுவது செய்தி அல்ல அதேவேளை இந்திய எல்லையில் அப்பாவி கிராமவாசிக் கொல்லபட்டால் அது செய்தி. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடந்தத் தாக்குதல் என்றவகையில் பத்திரிகையாளர் நால்வரும் செய்திகளில் முக்கியத்துவம் பெற்றார்கள், இதில் வேறு மர்மங்கள் இல்லை. இதை பிரான்சு நாட்டிலுள்ள இஸ்லாமியச்சகோதரர்கள் பெரும்பான்மையோர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

 

பிரான்சு இஸ்லாமியருக்குள்ள சுதந்திரம்பற்றி கட்டுரையாளர் பேசக்கூடாது. ஓர் இஸ்லாமியருக்கு இஸ்லாமிய நாடுகளில் கிடைக்காத அடிப்படை சுதந்திரம் பிரான்சிலுண்டு. இந்த நாட்டில் இருந்துகொண்டு பிரெஞ்சு அதிபரை, விமர்சித்து எழுதமுடியும். கட்டுரையாளர் அமெரிக்காவில் இருந்துகொண்டு மேற்கத்தியநாடுகளை விமர்சித்து எழுதமுடிகிறது, மாறாக இதுபோன்றதொரு கட்டுரையை இஸ்லாமிய நாடொன்றில் இருந்துகொண்டு அதன் அமைப்பு முறைக்கு எதிராக எழுத வழியுண்டா? ஷார்லி ஹெப்டோ படுகொலையை விடுங்கள், பாகிஸ்தானில் துடிக்கத் துடிக்க சிறார்கள் கொல்லப்பட்டபோது இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பேனா அதைக் கண்டிக்காதது ஏன்? காலங்காலமாக குர்தினமக்கள் அலைக்கழிக்கப்படுவதற்கு, கொன்று குவிக்கப்படுவதற்கு இந்த அறிவு ஜீவி என்ன பதில் வைத்திருக்கிறார்? இரண்டு நாட்களுக்கு முன்பாக சவுதி அரேபியாவில் எதையோ எழுதிவிட்டு தவணை முறையில் கசையடி வாங்கிக்கொண்டிருக்கும் நபருக்கு இரக்கப்படமுடியாமல் இவரைத் தடுப்பது எது?

 

பிரான்சில் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாமென்றும் பெண்கள் முகத்தை மூடி வருவதைத் தடைசெய்து அவர்களுக்குத் தீங்கிழைத்துவிட்டார்களென அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கிற கட்டுரையாளர் வருத்தப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான பிரெஞ்சு இஸ்லாமியர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடிவருவது பொது இடங்களில் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கிறது. அச்சட்டத்திற்குக்கூட இஸ்லாமிய தீவிரவாதமே காரணம். தீவிரவாதம் வலுவூன்றி இருக்கிற சூழலில் முகத்தை மூடிக்கொண்டு வருகிறபெண்களைச் சோதனை இடவேண்டிய தருணங்களில் எதிர்கொள்கிற பிரச்சினைகளுக்காக இச்சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல அரசு அலுவலங்களில், பள்ளிகள் கல்லூரிகள் போன்ற பொது இடங்களில் பிறமதத்தவர்கள் கூட வெளிப்படையாக தங்கள் மத அடையாளத்துடன் புழங்கக்கூடாதென பிரெஞ்சு சட்டம் சொல்கிறது .கிருஸ்துமஸின்போது கிருஸ்துமஸ் குடிலை, மழலைபள்ளிகளிலும், நகரசபை அலுவலகங்களிலும் அலங்காரமாக வைக்கிற பழமையான மரபை மதச்சார்பின்மையைக் காரணம் காட்டி கடந்த மாதம் பிரெஞ்சு அரசாங்கம் தடை செய்தது. பெரும்பான்மையான கிருத்துவர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். காலித் இ பெய்தூன் ஒரு பிரெஞ்சு இஸ்லாமிய அறிவுஜீவியை விசாரித்திருந்தால் பிரான்சில் இஸ்லாமியர்கள் நிலமைகுறித்து தெரிவித்திருப்பார், அதன் அடிப்படையில் கட்டுரை எழுதப்படிருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

 

தீவிரவாதத்தைக் கையிலெடுப்போர் குறைந்த விழுக்காட்டினர். அவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நல்லவர்கள் எனச்சொல்லிகொள்கிற பெரும்பான்மையோர் அமைதிகாப்பதுதான் இன்றைக்குப் பிரச்சினை. பிரான்சிலுள்ள தீவிர வலதுசாரி கட்சி, அமைதியாக இருங்கள் அடுத்தத் தேர்தலில் எங்களைத்தேந்தெடுங்கள் என ட்விட்டரில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். “துப்பாக்கியை ஏந்தி நிற்பவர் இஸ்லாமியராக” காட்டப்படக்கூடாதுதான் அந்தப்பொறுப்பு உங்களுக்கு இல்லையா? ஏன் மேற்கத்தியர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு மாற்றாக இப்படி யோசித்துப்பாருங்கள் செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் மேற்கத்திய அறிவு ஜீவிகளைக் கொண்டாடவேண்டாம் குறைந்தபட்சம் தங்கள் தங்கள் நாட்டு அறிவு ஜீவிகளைக் கொண்டாடலாமில்லையா? நோபெல் பரிசுக்கு இணையாக ஓர் இலக்கிய பரிசினை அறிவித்து எழுத்தாளர்களை ஏன் ஊக்குவிக்கக்கூடாது, பல நல்ல பெயர்களை உலகறியச்செய்து இளைஞர்களை திசைதிருப்பலாமில்லையா? வேறுபலதுறைகளிலும் சாதனைபடைக்கிற இஸ்லாமியர்கள் இல்லாமலில்லை. அவர்களை முன்னிறுத்தி மற்றவர்களை வழிநடத்தவேண்டாமா? அப்பொறுப்பு உங்களைபோன்ற அறிவு ஜீவிகளுக்கில்லையா, எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதத்தால் எதிராளிக்கு மட்டுமே ஆபத்தல்ல நீங்கள் குறிப்பிட்ட அஹமது மெராபத்தும், பாகிஸ்தானிய பள்ளிசிறுவர்களுங்கூட பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவூகூர்ந்து ஏதேனும் செய்தால் நல்லது. எதிராளியின் குற்றங்கள் குறித்து கைநீட்டி ஓய்ந்த நேரங்களில் நம்மையும் விசாரனைக்குட்படுத்தவேண்டும்.

——

 

Series Navigation”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”