ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்

Spread the love

சுயாந்தன்

பெண்களைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர். ஜெயமோகன் போல யாருமே பெண்களைப் பற்றி எழுதியதில்லை என்று அண்மையில் சில பிரச்சாரங்களை அவரின் ரசிகர்கள் செய்தனர். ஆனால் ஜெயமோகனுக்கு ஈடாக அல்லது மேலாக பெண்கள் மீது அதிக புரிதலைக் கொண்ட ஆண் எழுத்தாளர் ஆதவன். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் பிரத்தியேகமான இடம் ஒதுக்குவதை ஏற்கமுடியாது. அல்லது ஆதவனை மறப்பதை கண்டும்காணாமல் இருக்கமுடியாது. ஆண்-பெண் உறவுகளை ஆண்களின் நிலையிலிருந்து கூறும்போது பெண்களின் உலகத்தை ஆதவன் அவ்வளவு சிறப்பாகச் சித்தரித்திருப்பார். அதனுள் இருந்தது தத்துவ பூர்வமான அழகுணர்வு.

“”நதி தன் பாதையில் வரும் மலையைத் தழுவி வசப்படுத்திக்கொள்ள முயலுகையில் நீர்வீழ்ச்சி உண்டாகிறது. தன்பாதையில் குறுக்கிடுபவற்றை அரவணைத்துச் செல்லத்தான் நதி முயலுகிறதே தவிர, எதையும் அணைத்துக் கொள்வதற்கென்று தன் போக்கைவிட்டு விலகிச் செல்வதில்லை. மலை இல்லாவிட்டால் அது சமவெளியில் ஓடிகாகொண்டிருப்பதில்தான் நதியின் அழகும் கம்பீரமும் இருக்கிறது. பெண்கள்கூட நதியைப் போன்றவர்கள்தாமோ?.

ஆனால் நதிகள் கரைகளுக்கிடையில் செல்லும்போது மதிப்புப் பெறுகின்றனவென்றால், மலைகளும் தனியே இருக்கும்போதுதானே மதிப்புப் பெறுகின்றன?. எல்லாம் மலைகளிலும் நதியோடுகிறதா என்ன? நீர்வீழ்ச்சி இருக்கிறதா என்ன?””

இது ஆதவனின் “நதியும் மலையும்” என்ற கதையிலிருந்த பகுதி. ஆதவனின் பல கதைகளில் பெண்கள்- ஆண்கள் பற்றிய சித்தரிப்புக்களையும் பெண்களின் பிரத்தியேக உலகம் பற்றிய புரிதலையும் எழுதியிருப்பார். இவரெழுதிய பல கதைகளில் இது மிக முக்கியமானது. முற்றிலும் காதல் கதைதான். ஆனால் தமிழ் சினிமாவில் பார்ப்பது போன்ற காதலல்ல. 70களில் இப்படியும் காதல் வாழ்வு இருந்துள்ளது என்று எழுதிய மிகச் சிறந்த கதை. இந்தக் கதையின் உந்துதலில் பல தமிழ் சினிமாக்கள், சினிமாப் பாடல்கள் வந்துள்ளன. எந்த இடத்திலும் ஆதவனுக்குக் credit கொடுக்கப்படவில்லை. மிகச் சீரிய உதாரணம் ரிதம் படமும், அதிலிருந்த “நதி” பற்றிய பாடலும். இதனையே கி.ராஜநாராயணன் தனது கதைகள் தமிழ் சினிமாவில் பிரயோகிக்கப்படுவதாகவும், அதில் அவர் பெயர் குறிப்பிடப்படுவதில்லை என்றும் கூறியிருந்தார்.

பிள்ளை- காந்திமதி என்ற இருவருக்கும் இடையில் இருந்த சிறுவயதுக் காதல் சாத்தியப் படாது போவதும், அதன் பின்னர் பிள்ளை தான் திருமணம் முடித்த வேறொரு பெண்ணைக் காந்திமதி என்று உருவகப் படுத்தி நிஜமான காந்திமதியின் மீது சிரத்தையைக் குறைத்துவிடுவதுமாகக் கதை செல்கிறது. மனைவியின் மரணம் அவருக்குத் திரும்பவும் காந்திமதியை ஞாபகப்படுத்துகிறது. இவற்றைக் கொண்டு மிக அழகாகப் புனையப்பட்ட கதை இது. இதில் நதியும் மலையும் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒப்பீடாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நேர்த்தியான கதைகளை கதையின் “வடிவ-உள்ளடக்க-அழகுணர்வு” கருதி எம்.வி வெங்கட்ராம், தஞ்சைப் பிரகாஷ் என்ற இருவரோடும் ஆதவனை ஒப்பிடலாம். இம்மூவரையும் வாசித்தவர்களுக்கு இது புலப்படும்.

ஆதவன் மேலும் மேலும் பிடிக்கக் காரணம், “சந்தோசமான கணங்களை நிரந்தரமாக்கிக் கொள்ள ஒரு மந்திரமோ மாயமோ இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்” என்பதுபோல அவரது கதைகள் நம் பால்யத்தையும் சமகாலக் காதல்களையும் அழகியலுடன் சித்தரிப்பதொன்றேயாகும்.

Series Navigation27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை