ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது

Spread the love

நண்பர்களே!
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.
ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு முதல், தலா ஐம்பது ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டிருகிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது 2019 :
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை, “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கான குறும் பட்டியலை அறிவித்திருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேர்வு முறைகளில் முறைப்படுத்தப்பட்டு விருதுக்கான கவிதைத் தொகுதியை தேர்வு செய்து வருகிறோம்.2019ஆம் ஆண்டு ஒரு நபர் தேர்வுக் குழுவினை அமைத்து தேர்வு முறை பின்பற்றப்பட்டது.
அறக்கட்டளைக்குப் பரிந்துரைக்கப்பட்ட 46 கவிதைத் தொகுப்புகளிலிருந்து, குறும் பட்டியலை தேர்வு செய்ய, 31 கவிதைத் தொகுதிகளை அறக்கட்டளை தேர்ந்தெடுத்து, நடுவருக்குப் பரிந்துரைத்திருந்தது.
நடுவர் அ.வெண்ணிலா அவர்கள், 9 கவிதைத் தொகுப்புகளின் பட்டியலை, 2019 ஆம் ஆண்டிற்கான கவிதை விருதுக்கு தகுதி பெறும் குறும்பட்டியலாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருந்தார். 
குறும்பட்டியலில் இருந்து, 2019 ஆம் ஆண்டுக்கான “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கான தொகுப்பினை கவிஞர் சமயவேல் அவர்கள் தேர்ந்தெடுத்து அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்துள்ளார்.
கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு, 2019 ஆம் ஆண்டுக்கான “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறக்கட்டளை மகிழ்வுடன் அறிவிக்கிறது.
“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் கவிதை விருது குறித்த நடுவரின் அறிக்கை பின்வருமாறு :
அன்பு நண்பர்களுக்கு,வணக்கம்.“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது” 2019க்காக கவிஞர் அ.வெண்ணிலா தேர்வு செய்த குறும்பட்டியலில் கீழ்க்கண்ட ஒன்பது நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன:1. தேன்மொழி தாஸ் – காயா2. ஸ்டாலின் சரவணன் – ரொட்டிக்களை விளைவிப்பவன்3. முகுந்த் நாகராஜன் – கின் மோர்4. நேசமித்ரன் – துடிக் கூத்து5. வெய்யில் – அக்காளின் எலும்புகள்6. கவின் – யக்கர் உடுக்குறி7. ந.பெரியசாமி – குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்8. ஷக்தி – அபோர்ஷனில் நழுவிய காரிகை9. பெரு. விஷ்ணுகுமார் – ழ என்ற பாதையில் நடப்பவன்
தனிப்பட்ட கவிதைத் தொகுப்பையும் அந்தக் கவியின் மொத்தப் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, இந்த விருது தரப்பட வேண்டும் என்பது ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருப்பமாக இருக்கிறது.
எனவே மேலுள்ள பட்டியலில் ஓரிரு தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டிருக்கும் இளம் கவிகளை விடுத்து, தொடர்ந்து சிறந்த கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்களாக மூவரைக் குறிப்பிடலாம்.1. தேன்மொழி தாஸ்2. நேசமித்ரன்3. வெய்யில்
இந்த மூவரில், சமகால வாழ்வியலின் உயிர்வளியை, குருதிப் பாய்ச்சலை எளிய சமகால மொழியிலேயே கடத்தும் வெய்யிலின் கவிதைகள் முக்கியதத்துவம் வாய்ந்தவை எனக் கருதி, இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் கவிதை விருதை வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்புக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.
இந்த வாய்ப்பை நல்கிய ஆத்மாநாம் அறக்கட்டளை நண்பர்களுக்கு எனது நன்றி.
அன்புடன்,சமயவேல்
விருது பெறும் கவிஞர் வெய்யில் அவர்களுக்கு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.
இவ்வாண்டின் “ஆத்மாநாம் கவிதை மொழிபெயர்ப்பு விருது” அடுத்த மாதத்தில் அறிவிக்கப்படும்.
அன்புடன்,கவிஞர் வேல் கண்ணன்அறங்காவலர்கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைஅடையாறுசென்னை.தொடர்புக்கு: 9841448369.

Series Navigationகதவு