ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்

அபூபக்கர் சித்திக்கி

ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார்.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது.

பிரேம் நகர்- சிதிலமடைந்த இந்து கிராமம்

1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து – சீக்கிய சமூகத்தினரின் தலைவர்களாக இருக்கும் சங்கர் லால் மற்றும் இதர தலைவர்கள் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக கோஸ்த் நகரத்தின் தலைவர்களிடம் அந்த ஊரில் விட்டுவந்த சொத்துக்களை திரும்ப பெற மனு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஊரின் தலைவர்கள் கொடுக்கும் வாக்குறுதியும் ஆதரவும், சங்கர் லால் போன்றவர்களுக்கு தங்களது பேரப்பிள்ளைகள் மீண்டும் கோஸ்த் நகரத்தில் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

தூரத்திலிருந்து லால் போன்றவர்கள் தங்களது தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனித்துகொண்டுவருகிறார்கள்.

”ஆப்கானிஸ்தானை பற்றி ஏதேனும் நல்ல செய்திகளை கேட்டால், திருவிழா போல கொண்டாடுவோம். ஏதேனும் அழிவுச்செய்திகளை ரேடியோவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ கேட்டால், மிகுந்த மனவருத்தம் அடைவோம். ஏனெனில் அது எங்களது தாய்நாடு. எங்கள் மூதாதையரின் பூமி” என்று சங்கர்லால் கூறுகிறார்.
புது தில்லி அருகே வாழ்ந்துவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்களும் இந்துக்களும் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். அதற்காக சங்கர் லால் மற்றும் இதர தலைவர்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது உடனடி குறிக்கோள் மீண்டும் பிரேம்நகரை புனருத்தாரணம் செய்து அங்கே ஒரு மாபெரும் கோவிலை திரும்ப கட்டுவதுதான்.
அடுத்து, கோஸ்த் நகரத்தில் முன்னர் செய்து கொண்டிருந்த தொழில்களை மீண்டும் உருவாக்கி, மருந்து கடைகள், துணிக்கடைகள், பலசரக்கு கடைகளை முன்னர் போல திறந்து நகரத்தை செழிப்பாக்க விழைகிறார்கள்.

சங்கர் லால்

சங்கர் லால் தொழில்ரீதியாக ஒரு பார்மஸிஸ்ட் (மருந்து விற்பனையாளர்). சில வருடங்களுக்கு ஒருமுறை தன் சொந்த நகரத்துக்கு சென்று வருகிறார். அங்கிருந்து வெளியேறியபோது அவர் காபூலுக்கு சென்றார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். இப்போது அவர் திரும்பி சென்று கோஸ்த் நகரத்திலேயே தங்கிவிட விரும்புகிறார். அவரது பேரக்குழந்தைகள் அங்கிருக்கும் மற்ற பஷ்டுன் சிறுவர்களோடு நட்புடன் இருப்பதை விரும்புகிறார்.

பிரேம் நகர், கோஸ்த் நகர முஸ்லீம்களால் இந்து கலா (இந்து கோட்டை) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இவர்கள் அருகாமையிலுள்ள பஷ்டூன் சமூகத்தினரோடு நட்புறவில் இருக்கிறார்கள். சுமார் 150 இந்து , சீக்கிய குடும்பங்கள் அங்கே 25 ஏக்கர் கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி மண்ணாலான பெரும் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மண் சுவர்கள் பஷ்டூன் கட்டட அமைப்பை சார்ந்தவை.

போருக்கு முன்னாள், அமைதியாக வாழ்க்கை இருந்ததை சுகமாக நினைவில் அசைபோடுகிறார்கள். சரண் சிங் என்ற 48 வயதான இந்து, இந்த இந்து சீக்கிய சிறுபான்மையினர் அங்கிருந்த முஸ்லீம்களுடன் சகோதரர்களாக வாழ்ந்துவந்ததை நினைவுகூர்கிறார்.
போர் கோஸ்த் நகரத்தை நெருங்கியபோது, அங்கிருந்த இந்துக்களும் சீக்கியர்களும் காபூல் நகரத்துக்கு சென்றார்கள். பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு சென்றார்கள். ஆனால் சரண் சிங் காபூலில் மருந்துகடையை வைத்து அங்கிருந்து நகரவில்லை. இதனால், தன் சொந்தக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துகொள்வதும் சாத்தியமானது.
அவரது சமூகம் அங்கு வாழும் பஷ்டூன்களுடன் தங்களது இணக்கமான வாழ்க்கையை மீண்டும் கட்டமுடியும் என்கிறார். ஆனால் அதற்கு முன்னால், முழுமையாக அழிக்கப்பட்ட அவரது கிராமத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்கிறார்.

தற்போது எங்களது எந்த குடும்பமும் பிரேம்நகரில் வாழவில்லை. அங்கே வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த விஷயமும் இல்லை” என்று சிங் கூறுகிறார். “அந்த முழு கிராமமும் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கே சிதிலங்களே கிடக்கின்றன. எங்களது புனிதமான கோவில் டாங்கிகளால் குண்டு வீசி அழிக்க்கப்பட்டுவிட்டது. எங்களது வீடுகளும் அதே போல அழிக்கப்பட்டுவிட்டன”

இடிக்கப்பட்ட கோவில்

Ruins of the Hindu temple in Prem Nagar.

80 வயதாகும் சுதால் சிங் எவ்வாறு இந்து மையமாக பிரேம் நகர் இருந்தது என்பதை நினைவுகூறும் அளவுக்கு வயதானவர். பலசரக்கு கடை வைத்திருந்த இவர் இந்தியாவிலிருந்து சென்ற குழுவின் பகுதியாக இருந்தார். 70 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அரசாங்க அதிகாரி கோஸ்த் நகரத்தை சுற்றி அங்கங்கு சிதறிக்கிடந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் கோஸ்த் அருகே ஒரே இடத்தில் வாழ கேட்டுகொண்டதை நினைவு கூர்ந்தார்.

பிரேம் நகர் உருவாக்கம் சமூக வாழ்க்கையையும் அங்கிருந்த இந்து சீக்கியர்களுக்கு வளமையையும் கொணர்ந்தது என்கிறார். இவர்களே அங்கிருந்த பெரும்பான்மையான வியாபாரங்களை கவனித்து வந்தனர்.
இப்போது விஷயங்கள் பெருமளவு மாறிவிட்டன. பஷ்டூன் பழங்குடியினர் ஒரு காலத்தில் வியாபாரத்தை வெறுத்தார்கள். இப்போது அவர்களே முக்கியமான வியாபாரிகளாக உள்ளனர். 15000 கடைகளுக்கும் மேல் அங்கே இப்போது கடைகளை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், சிங் தன் பழைய நண்பர்களை பார்த்தபோது அவர்கள் இந்துக்களும் சீக்கியர்களும் திரும்ப வருவதை அவர்கள் வரவேற்பதாக கூறினார். புதிய போட்டி வந்தாலும், ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
அவரை பொறுத்தமட்டில் கோஸ்த் நகரம் சொந்த வீட்டுக்கு வந்த உணர்வை தருகிறது. ”உண்மையை சொல்கிறேன். கோஸ்த் நகரத்துக்கு வரும்போது நலமாகிவிட்டது போல உணர்கிறேன். என்னுடைய வயதின் காரணமாக ஏராளமான தொந்தரவுகள். கோஸ்த் நகரத்துக்கு வந்தால் அவை குறைந்துவிடுகின்றன. நானும் சந்தோஷமாக, என் ஆன்மாவும் சந்தோஷமாக இருக்கின்றது” என்கிறார்.

எல்லாம் நல்லபடி சென்றால், பிரேம்நகர் இந்து சமூகத்திடம் இந்த மாத இறுதியில் தரப்படும். எல்லாம் நல்லபடி நடக்கும் என்று சங்கர்லால் நம்புகிறார்.

“கடந்த காலத்தை விட நிலைமை இப்போது முன்னேறி வருகிறது. பிரேம் நகர் கிராமம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்று சங்கர்லால் கூறுகிறார்.

 

http://www.rferl.org/content/hindus_sikhs_seek_to_reclaim_afghan_house_of_love/24388591.html

http://www.pajhwok.com/en/2011/11/05/khost-hindus-want-back-their-land

http://www.thefreelibrary.com/Hindu,+Sikh+children+bullied+out+of+school.-a0247679585

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்