ஆவின அடிமைகள்

Spread the love

சமீபத்திய செய்தித்தாள் ரிப்போர்ட் சொல்கிறது, நாம் வாங்கும் அரசு பாலில், இந்தியா முழுவதுமான சர்வேயில், குஜராத் மாநிலப் பால்தான் தரத்தில் 99 விழுக்காடு சுத்தமாம். அப்போ நம் ஆவின் பால்? கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம். அதாவது 95 சொச்சம் சதவிகிதம் தான் சுத்தம். இத்தனைக்கும் வாங்கும் பாலைத், தரம் பிரித்து வாங்குவதாக, ஆவின் நிர்வாகம் மார் தட்டிக் கொள்கிறது.
சரி என்னதான் நடக்கிறது. கறந்த பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருக்கும் கொழுப்புச் சத்து நீக்கப்படுகிறது. டோனிங் என்று பெயராம் இதற்கு. ஆங்கிலத்தில் டோன் என்றால் பல அர்த்தங்கள் உண்டு. ஒன்று பேசும் உச்சத்தை குறைத்துக் கொள்வது. இன்னொன்று தொனியையே குறைத்துக் கொள்வது. இங்கே பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் மந்திர ஸ்தாயிதான். யாருக்கும் கேட்காது. தகவலறியும் உரிமை எத்தனை ரகசியங்களை வெளிக்கொணருகிறது.
இன்னொரு அதிர்ச்சியான உண்மை.. சுத்தமான பாலுடன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பால் பவுடரும் கலக்கப்படுவதுதான். கெட்டித் தன்மைக்கு இன்னொன்றும் செய்கிறார்கள். அதைக் கேட்டாலே அதிருது! டிடர்ஜண்ட் பவுடர்! பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? சுத்தமான கறந்த பால் வெள்ளையாக இருக்காது.
ஆவின் பால் குடித்தவுடன் அவசரமாகக் கொல்லைப்பக்கம் ஓடுகிறீர்களா? உங்களுக்கு இலவசமாக எனிமா கொடுக்கிறது அரசு, என்று புரிந்து கொள்ளுங்கள். புது வீடு கட்டி பால் பொங்க வேண்டும் என்று ஆசைபடுபவர்களே, அந்த நுரையை அப்படியே எடுத்து பக்கெட்டில் போடுங்கள். துணி துவைத்துக் கொள்ளலாம். சோப்பு மிச்சம்.
முன்பெல்லாம் கறந்த மாட்டுப்பாலைக் காய்ச்சி, உறை மோர் போட்டுத் தயிராக மாற்றுவர். உறைந்த தயிரில் கெட்டியாக, மேலாடை போல் படர்ந்திருக்கும் பாலேடு. நடுத்தர வர்க்கம், அதை மட்டும் எடுத்து, பாட்டில்களில் போட்டு வைத்து, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றிக் குலுக்கும். கட்டியாக வெண்ணை திரண்டு மேலே வரும். அதுதான் சாப்பாட்டிற்கு. வெளியில் வாங்குவதெல்லாம் கிடையாது. இப்போது அதெல்லாம் முடியாது. டோனிங் என்கிற பேரில் எல்லாவற்றையும் எடுத்து விடுகிறார்கள். எடுத்த வெண்ணையை வேறு வேறு கொழுப்பு சேர்த்து தனியாக விற்கிறார்கள்.
3 விழுக்காடு கொழுப்பு சத்து உள்ள பால், அரசு விலை லிட்டருக்கு ரூ 24. விற்பனை விலை ரூ27. அதாவது அரசே, 3 ரூபாய், சில்லறை விற்பனைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்கிறது. ஆனால் கடையில் என்ன விலை தெரியுமா? லிட்டர் ரூ 30. அங்கீகரிக் கப்பட்ட ஆவின் வர்த்தக நிலையங்களில், பால் அரசு விலைக்குத்தானே விற்கப்பட வேண்டும்? அப்படி நினைத்தால் நீங்கள் வெளுத்ததெல்லாம் ஆவின் என்று நினைக்கிற வெள்ளந்தி பேர்வழிகள். அங்கும் விலை ரூ 30 தான். இது ஏதோ புறநகர் பகுதிகளில் அல்ல. நடுசென்டரான மைலாப்பூரில்! இன்னொரு செய்தி! பால் வண்டி, பால் பண்ணைகளிலிருந்து உடனே கடைகளுக்கு வருவதில்லை. அதெற்கென இருக்கும் மறைமுக மையங்களில் நிறுத்தப்பட்டு, 50 மில்லி எடுக்கப்பட்டுதான் வருகிறதாம். இது எனக்கு வந்த வதந்தி. டிஸ்போஸபில் சிரென்சுகள் சல்லிசாகக் கிடைக்கும் காலத்தில் இதெல்லாம் கஷ்டமா என்ன? நம் கவலை எல்லாம் ஒரு பாக்கெட்டுக்கு ஒரு சிரென்சா, அல்லது ஊசி உடையும் வரையா என்பது தான். அடுத்த பாக்கெட் காய்ச்சும்போது, வடிக்கட்டி குடிக்க வேண்டும். ஊசி இருந்தாலும் இருக்கலாம்.
இன்னொரு செய்தி! மின் திருட்டைத் தடுக்க அண்ணா பல்கலைக் கழகத்தையோ ஐஐடியையோ அரசு கேட்டிருக்கிறதாம். ஆவினும் கேட்கலாம்.
எல்லாமே இருண்மையாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி. அண்டை மாநிலமான கர்னாடகாவில் பால் நம்மை விட சுத்தம் கம்மி. ஆந்திரா குஜராத்தை ஒட்டி வருகிறது.
டிடெர்ஜண்ட் விவகாரத்தைப் படித்தபின் என் மனைவி இப்போதெல்லாம், ஆவின் பால் நுரையை எடுத்து சிங்க்கில் போட்டு விடுகிறாள். சமீப காலமாக சின்க்கில் அடைப்பு ஏதும் இல்லை.
0

Series Navigationசிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘பழமொழிகளில் பழியும் பாவமும்