ஆஸ்கர்

This entry is part 4 of 15 in the series 25 செப்டம்பர் 2016

வளவ. துரையன்

உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றிய விருதாகும். தொடக்கத்தில் இதன் பெயர் “அகாடமி அவார்டு” என்பதுதான். 1929—ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திரைத் துறையைச் சார்ந்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸ்” எனும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். அதன் முதல் தலைவராக டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் என்பவர் இருந்தார். 1927-1928 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு முதன் முதல் 1929-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.
ஆஸ்கர் பெயர்க் காரணம்: அகாடமி தொடங்கி விருதுகள் வழங்கப்படத் திட்டமிட்டபோது இதுவரையில் இல்லாத புதுமாதிரியானதான மாடலில் விருதுக்கான சிலை இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்டேன்லி என்னும் நிபுணர் ஒருவர் ஒரு சிலை வடித்தார் எல்லாரும் அதனை ஏற்றுக்கொண்டனர். அப்போது கூட அச்சிலை அகாடமி அவார்டு எனும்பெயரில்தான் வழங்கப்பட்டது. 1934–இல் விருது வாங்கிய வால்ட் டிஸ்னி அதை ‘ஆஸ்கர்’ என்று குறிப்பிட்டார். 1937-இல் விருது பெற்ற பெட்டி டேவிஸ் எனும் நடிகை ”இது என் கணவர் ஆஸ்கர் போலவே இருந்த்து. எனவே நான்தான் அதை முதலில் “ஆஸ்கர்” என்று குறிப்பிட்டேன் என்கிறார். எல்லாருமே அகாடமி அவார்டு விருதை ஆஸ்கார் விருது என வழங்க ஆரம்பித்து விட்டனர்.
எத்தனை துறைகள்: இன்று ஆஸ்கர் விருது பதினேழு துறையைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவையாவன : நடிப்பு, திரைப்படம், இயக்கம், ஒளிப்பதிவு, கலை, திரைக்கதை, ஒலிப்பதிவு, குறும்படம், படத் தொகுப்பு, இசை, ஆவணப்படம் [அ] செய்திப்படம், அந்நிய மொழிப்படம், உடை அலங்காரம், தந்திரக் காட்சிகள், ஒலித் தொகுப்பு, ஒப்பனை, அனிமேஷன். இந்த அக்காடமி பல்வேறு சிறப்பு விருதுகளும் வழங்கி வருகிறது. அவற்றில் குறிப்பானது மாணவ அகாடமி விருதாகும். இது திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
தலைமையிடம் : ஆஸ்கரின் தற்போதைய தலைமையகம் “8949, வில்ஷயர் பவுல்வார்டு பிவர்லி ஹில்ஸ்” எனும் முகவரியில் உள்ளது. இது ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். இது சொந்தக்கட்டிடம்தான் என்றாலும் அகாடமி வளரும் வேகத்துக்கு இக்கட்டிடம் போத வில்லை. எனவே அப்பகுதியிலேயே 55 ஆண்டுகள் குத்தகைக்கு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். “சவுத்லா சினிகா பார்க்” என்னுமிடத்தில் உள்ள வாட்டர் ஒர்க்ஸ் கட்டிடத்தில் இப்போது தம் தேவைக்கு ஏற்ப மாறுதலகள் செய்து வருகிறார்கள்.
நிர்வாகம் ; அகாடமியின் எல்லாப் பணிகளையும் மேற்கொள்வது அதன் இயக்குனர் குழுதான். அது மொத்தம் 42 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் கவர்னர்கள் எனும் பெயரால் குறிப்படப்படுகிறார்கள். மேலும் 14 துறைகளுக்கான துணைக்குழுக்களும் உண்டு. ஒவ்வொரு குழுவிலிருந்தும் மூவர் என இயக்குனர் குழு அமைக்கப்படுகிறது. அவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். ஒருவர் தொடர்ந்து முன்று முறைகள்தாம் இயக்குனர் பதவிக்கு வரலாம். அகாடமி அதிகாரிகளும் தொடர்ந்து 4 முறைகள் பதவி வகிக்கலாம்.
உறுப்பினர் : ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர் ஆக எந்தத்துறை சார்பாக உறுப்பினராக விரும்புகிறாரோ அத்துறையைச் சார்ந்த இருவரின் பரிந்துரை அவசியம். அத்துடன் அவர்கள் ஏற்கனவே அகாடமியில் அத்துறை சார்பாக இருக்க வேண்டும். அத்துறையின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டு அது நிர்வாகக் குழுவிற்குப் பரிந்துரைக்கும். நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டால்தான் உறுப்பினராக முடியும். அகாடமி உறுப்பினர்க்கான ஆண்டு சந்தா 100 அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது சுமார் 6000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆயுள் உறுப்பினர்களும் உண்டு. இந்த உறுப்பினர்கள் அளிக்கும் சந்தா, மற்றும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒலிபரப்ப அனுமதிப்பதால் கிடக்கும் தொகை ஆகியவையே அகாதமியின் மொத்த வருவாய் ஆகும்.
தேர்வு எப்படி : ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரி முதல் நவம்பர் வரை வெளியாகும் படங்கள்தாம் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. படங்களை அனுப்ப டிசம்பர் முதல் தேதியே கடைசி நாளாகும். ஜனவரியில் தேர்வு முறை தொடங்கும். ஒவ்வொரு துறையிலும் 5 படங்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அவை வாக்களிக்கும் உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படும். பிறகு தகுதியான ஆயுள் உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அளிக்கப்படும். அவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்த படங்களிலிருந்து எந்தெந்தப் படங்களுக்கு எந்த இடம் தரலாம் என்பதை மட்டும் குறித்து வாக்களிக்க வேண்டும். சிபாரிசுகளைத் தவிர்க்க வேண்டி வாக்குகளை எண்ணும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்” எனும் அந்நிறுவனமே ரகசியத்தைக் காத்து மேடையில் விருதினை அறிவிக்கவும் ஏற்பாடு செய்கிறது. 1941–ஆம் ஆண்டு முதல்தான் முடிவுகள் சீலிடப்பட்டுள்ள உறையிலிருந்து நேயர்கள் முன்னிலையில் பிரித்து அறிவிக்கும் நடைமுறை வந்தது. பெரும்பாலும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில்தான் ஆஸ்கர் விருது அளிக்கும் விழா நடைபெறுகிறது.
ஆவணக் காப்பகம் : ஆஸ்கர் விருதுக்கு இறுதிப் போட்டிக்கு வரும் படங்கள், 15 ஆயிரம் வீடியோக்கள், 2000 ஆவணப் படங்கள், திரைப்படம் தொடர்பான 20000 நூல்கள் ஆகியன சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரக்கணக்கான வார, மாத, பருவ இதழ்களும் அங்கே உள்ளன. 60 ஆயிரத்துக்கும் அதிகமான திரைக்கதைகள், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் தகவல் கோப்புகள், 60 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் லட்சக்கணக்கான திரைச் சுறுள்கள், திரை இசைப்பாடல்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அங்கேயே பிரதி எடுத்துக் கொள்ள வசதிகள் உள்ளன.
ஆஸ்கர் சிலை : ஒவ்வொரு ஆஸ்கர் சிலையும் 13.5 அங்குலம் உயரம் உடையது. சிலைக்குக் கீழ் 3 அங்குல உயர கருப்பு அடித்தளம் இருக்கும். அதன் மொத்த எடை 8.5 பவுண்ட் ஆகும். முதலில் வெண்கலத்தால் சிலை செய்யப்படுகிறது. அதன் பிறகு தாமிரப் பூச்சும், அடர் தாமிரப் பூச்சும் நடக்கிறது. பிறகு நிக்கலும் வெள்ளியும் பூசப்படுகின்றன. இறுதியாக 24 கேரட் தங்கத்தினால் கனமான பூச்சு தரப்பட்டு சிலை தயாராகிறது. தங்கம் பூசப்பட்ட பிறகு அதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சமாகும். ஒவ்வொரு சிலையையும் பத்து பேர் உழைத்துச் செய்ய தலா ஐந்தரை மணி நேரம் ஆகிறதாம். அதன் பிறகு பாலீஷ் செய்ய நேரம் தனி. சிகாகோ நகரில் உள்ள ‘ஆர்.எஸ்.ஓவன்ஸ்’ எனும் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 70 சிலைகள் செய்து வருகிறது.
விழா தள்ளிவைப்பு ; ஆஸ்கர் விருது தொடங்கப்பட்டதிலிருந்து திட்டமிட்ட விழா இதுவரை 3 முறைகள்தாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1937-இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெருமழையில் சிக்கித் தவித்தபோது ஒரு வாரம் தள்ளி வைத்தார்கள். 1968-இல் விழாவிற்கு முதல்நாள் மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டதால் அவருக்கு மரியாதை செலுத்த இரண்டு நாள்கள் கழித்து நடந்தது. நடிகராக இருந்து அமெரிக்க அதிபரான ரொனால்டு ரீகன் மீது கொலை முயற்சி நடந்ததால் விழா அடுத்த நாள் நட்த்தப் பட்ட்து மூன்றாவது முறையாகும்
இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் ஆஸ்கர் விருது பெறவில்லை. மூன்று இந்தியப் படங்கள்தாம் இறுதிப் போட்டி வரை வந்திருக்கின்றன. மதர் இந்தியா [1957], சலாம் பாம்பே [1987], லகான் [2001], ஆகியனவே அவை. உலகிலேயே அதிகமாகத் தயாராகும் இந்தியத் திரைப்படங்கள் ஆஸ்கர் விருது பெற வேண்டும் எனும் நம் கனவு விரைவில் நிறைவேற வேண்டும்.

[ கட்டுரைக்கு உதவி ] சந்திரன் எழுதிய “ஆஸ்கர் —’அ’ முதல்……….” எனும் நூல்

வளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர் , கூத்தப்பாக்கம், கடலூர். 6007 002
பேச ; 93676 31228. valavaduraiyan@gmail.com

Series Navigationஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழாதொல்காப்பியத்தில் மகப்பேறு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *