இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

MINOLTA DIGITAL CAMERAஆதிவாசி

பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”.

இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது 6ஐச் ( 5 BCE or 6 BCE)ஐச் சேர்ந்தவர். அதாவது சற்றொப்ப 2554 ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய மூதாதையர்.

செம்மொழி இலக்கணவாதியான யாஸ்க, செம்மொழிக்கு ஒரு நிகண்டு எழுதியிருக்கிறார். (நிகண்டு என்பது டிக்‌ஷனரி போன்ற ஒரு மொழி அகராதி. அதில் உள்ள வார்த்தைகளின் பொருள் பற்றி விளக்கம் அளித்து அவர் எழுதிய நூல் “நிருக்தம்”.  அதில் செம்மொழி சார்ந்த அனைத்து வார்த்தைகளும், ஒவ்வொரு வார்த்தையின் பொருளும், அந்தப் பொருள் காலம்தோறும் எங்கனம் வேறுபட்டது என்கிற தகவல்களும் இருக்கும். Etymology என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.) அப்படிப்பட்ட ஒன்றை எழுதி அதற்கு “நிருக்தம்” என்று பெயரிட்டார் யாஸ்க.

செம்மொழி வார்த்தைகளுக்கு அவர் காலம்வரை வழங்கப்பட்ட பொருள் பற்றி சரியாக அறிய வேண்டுமானால், நிருக்தம் படிக்க வேண்டும். அந்த நிருக்தத்தில், மற்ற வார்த்தைகளைப் போலவே “ஸிஶ்ன தேவாஹ்” (शीक्षनदेव) என்கிற செம்மொழி பதத்துக்கும் பொருள் விளக்கம் தருகிறார் அவர்.

அந்தப் பதத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?

“கிறுத்துவர் அல்லாத மற்றவர்கள் பல்வேறு உருவங்களில் சாத்தானை வழிபடுகிறவர்கள். இருப்பதிலேயே கொடிய பாவமான காமம் நிறைந்தது சாத்தான் வழிபாடு. எனவே, கிறுத்துவர் அல்லாதவரின் வழிபாட்டுச் சடங்குகளின் அடிப்படையில் இருப்பது காமவெறி மட்டுமே.”

இப்படிப்பட்ட கிறுத்துவப் பார்வையே மற்ற மதங்களைப் பற்றி ஆய்ந்த ஆளும்வர்க்க வரலாற்றறிஞர்களின் புரிதலாக இருந்தது. முக்கியமாக இந்தியாவை ஒட்டுண்ணியாகப் பற்றிச் சுரண்டிப் பிழைத்த காலனியப்பார்வை இப்படித்தான் இருந்தது. அப்படிப்பட்ட புரிதலோடு விளங்கிய அவர்கள் இந்தியர்களின் ஆன்மீகத் தொகுப்புகளைப் பற்றியும் ஆய்ந்தார்கள் (?).

பேகன் (pagan)களான இந்தியர்களின் ஆன்மீகம் சாத்தானிய வழிபாடுதான் என்கிற ‘உண்மையை’ உலகுக்குச் சொல்ல அவர்கள் விழைந்தார்கள். மானுடத்தின் ஆதி மரபுக் கருவூலங்களான வேதங்களிலும், புராணங்களிலும் உள்ள வார்த்தைகளைத் திரித்து, வெட்டி எப்படியேனும் காமத்தைத் திணித்துவிடுவார்கள். செரிமானம் ஆகாத புரிதல்களோடு விளங்கியதால் இந்த ஆய்வுகளில் ஆய்கள் அதிகம்.

அப்படி அவர்களால் திரிக்கப்பட்ட பதங்களில் ஒன்று “ஸிஶ்ன தேவாஹ்”. ரிக் வேதத்தில் இந்திரனால் வெல்லப்பட்டவர்கள் பற்றி விவரிக்கும்போது இந்தப் பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் பதத்திற்குக் ஐரோப்பியர் கொடுக்கும் பொருள் “ஆண்குறியை வழிபடுபவர்கள்”.

நீங்கள் ஆங்கிலேய வார்த்தை ஒன்றின் பொருள் பற்றி அறிய வேண்டுமானால், அந்த ஆங்கிலேயர்கள் எழுதிய மொழி அகராதியைத்தான் பார்ப்பீர்கள். அதேபோல செம்மொழி வார்த்தைகளை எழுதிய இந்தியர்கள் கொடுத்த பொருள் என்ன என அறியவேண்டுமென்றால், இந்தியர்களுடைய அகராதியைத்தான் பார்க்க வேண்டும். அதாவது, யாஸ்க படைத்த நிருக்தம் போன்றவற்றை. ஆனால், அவை எழுதப்பட்டுப் பல பத்தாயிரம் வருடங்கள் ஓடிவிட்டன. புரிவது கடினம்.

அவை நமக்குப் புரியாது என்பதால், அவ்வப்போது மிகப் பழைய படைப்புகளை யாரேனும் விளக்குவார்கள். உதாரணமாக, பரிமேலழகர், மு. வரதராசனார், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி போன்றோரின் அருமையான விளக்க உரைகள் திருக்குறளுக்கு உண்டல்லவா ? அதுபோல யாஸ்கவின் நிருக்தத்திற்கு 14ம் நூற்றாண்டில், விஜயநகர அரசைச் சார்ந்த ஸாயனா என்பவர் விளக்க உரை தந்திருக்கிறார்.

அவரது உரைப்படி, நிருக்தத்தில் யாஸ்க தரும் பொருளைப் பார்ப்போம்.

ஸிஶ்ன-தேவாஹ் ஸிஸ்னேன திவ்யந்தி க்ரிதந்தி இதி
ஸிஶ்ன-தேவாஹ் அப்ரஹ்மச்சர்யா இதியர்த்தஹ் ததா ச யாஸ்கஹ்

Yaska in his Nirukta (IV. 19)

“….. ஸிஶ்ன-தேவாஹ் அப்ரஹ்மச்சர்யாஹ்” — இதன் பொருளைச் சுருக்கமாகச் சொன்னால், “புலன்களுக்கு அடிமையானவர்கள்”, “புலன்களைத் துர் உபயோகம் செய்பவர்கள்”.

பிரம்மச்சாரி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதன் உண்மையான பொருள் “இறைசக்தியோடு வாழ்பவர்”, “சரியான நடத்தை” உள்ளவர். அங்கனம் இறைசக்தி–ஆன்ம வலிமை இல்லாமல் புலன்களுக்கு அடிமையாகி துன்பப்படுகிறவர்கள் ஸிஶ்ன தேவர்கள்.

இந்தப் பொருளில்தான் யாஸ்க அந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறார் என்று 14ம் நூற்றாண்டில் ஸாயனா எனும் ஒரு இந்தியரும் சொல்லி இருக்கிறார். அதன் பொருளை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மீண்டும் 20ம் நூற்றாண்டில் (1880-1972), பேராசிரியர் டாக்டர். பாண்டுரங்க வாமன் கானே எனும் மாபெரும் படைப்பாளியும் அந்தப் பதத்துக்கு “வேறு எந்த இன்பங்களையும் அறிய முடியாதவர்கள்” என்று பொருள் சொல்லுகிறார். அவரும் அதே பொருளை உறுதி செய்கிறார்.

இந்தியத் தத்துவங்களைப் பற்றி அறிமுகக் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஜனாதிபதி பேராசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணனும் யாஸ்க சொன்ன பொருள்தான் சரி என்று சொல்லுகிறார். டாக்டர். ராதாகிருஷ்ணன் மார்க்ஸியப் பார்வை கொண்டவர். ஆனால், அவரும் அதே பொருளைத்தான் உறுதி செய்கிறார்.

அதாவது, இந்தியத்துவத்தில் ஊறிய இந்தியர்கள், அவர்களுடைய சொந்த மரபுக்கு இப்படிப் பொருள் தருகிறார்கள். ஒரு சில காலனியம் போற்றும் யூரோப்பியர்கள் மட்டும் வழக்கம்போல ஆண்குறி பெண்குறி தேடுகிறார்கள்.

அவர்களின் அந்தத் தேடுதலுக்குப் பின் இருந்தது அக்காலத்தில் அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஐரோப்பிய இனவெறி.

<h>இனவெறியின் கதை</h>

தங்களை ஒரு உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், மற்ற இனங்களை அடக்கி ஆண்டவர்களாகவும் காட்ட யூரோப்பியர்கள் விரும்பினார்கள்.

ஏனெனில், உலகம் முழுவதும் மற்ற நாடுகளையும், கலாச்சாரத்தையும் கொள்ளையடித்து, கொலைகள் செய்து, வியாதிகள் பரப்பி, அழித்து ஒழித்து மட்டுமே பிழைத்து வந்த அவர்களுக்கு அந்தக் கேவலமான வேலைகளை நியாயப்படுத்த, பிறப்பு அடிப்படையில் அச்செயல்களைச் செய்யும் பிறப்புரிமையைத் தர ஒரு சாக்கு தேவைப்பட்டது.

அந்தப் போலிக்காரணத்தை உயர்ந்த நோக்கம் கொண்டதாகவும், பிறப்பு அடிப்படையில் உரிமை தரக்கூடியதாகவும் காட்ட வேண்டிய அவசியமும் இருந்தது.

அச்சமயத்தில் எழுந்த தொழில்மய சூழலானது, மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. கிறுத்துவத்துடன் இணைந்துகொண்டு ஐரோப்பாவில் அப்போது பிறப்பு அடிப்படையில் நிலவிவந்த கேஸ்ட்களை (ஐரோப்பிய சாதியமைப்பை) அழித்தது. சாதி அமைப்பு அழிந்தால், அங்கே இனவெறி தலைதூக்கும். இது இயற்கை நியதி. இனவெறியானது சாதியமைப்பை அழிக்க முயலும். இதுவும் இயற்கை நியதி. பல ஐரோப்பிய கேஸ்ட்கள் அழிந்தன. அதற்குப் பதிலாக பிறப்பு அடிப்படையில் இனங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

சாதியமைப்பு அழிந்து இனங்களாகப் பிரிந்தனர் ஐரோப்பியர். அந்த இனங்களையும் இணைத்து ஒரு பிறப்பு அடிப்படை ஒற்றை இன அடையாளத்தைக் கண்டடையத் துடித்த அவர்களுக்கு இந்திய ஆதிஞானமான வேத இலக்கியங்களில் பயன்படுத்தப்படும்“ஆரிய” என்கிற வார்த்தை பலியானது.

பிறப்பு அடிப்படை இல்லாமல் “பண்படைந்த” என்கிற பொருளில் மட்டுமே இந்தியாவில் அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அந்த வார்த்தையின் பொருளை ஐரோப்பியர்கள் திரித்தார்கள். “பண்படைந்தவர்” என்கிற அவ்வார்த்தையை பிறப்பு அடிப்படையில் அமைந்த  “இனம்” என்று உருவகித்தார்கள்.

ஏனெனில், அவர்களது இனவெறிப் போக்கின்படி ஐரோப்பியர்கள் மட்டுமே “பண்படைந்தவர்கள்”. ஐரோப்பியர் எல்லாம் “ஆரிய” இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பண்படைந்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் எல்லாம் ஆரியர்களாக மட்டுமே இருக்க முடியும். எனவே, ஆரியர்கள் என்பது ஒரு இனம் என்று ஒரு பொய்யுரையை உருவாக்கினார்கள்.

இந்த துர்உபயோகத்தை மாக்ஸ் ம்யூலர் போன்ற ஐரோப்பிய அறிஞர்களே கண்டித்தார்கள். இருப்பினும், இனவெறிக்கு எப்போதுமே புரியாதது ஞானம். புரிந்தது கபடமும், திருட்டும், துரோகமும் மட்டுமே.

காலைக்கடன்களை முறையாகச் செய்தல், டூத் ப்ரஷ் உபயோகித்துப் பல் தேய்த்தல், குளியல் பழக்கம் உட்படப் பல வழக்கங்களை ஆசிய நாடுகளிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள் ஐரோப்பியர்கள். கைமாறாக அவர்களிடம் இருந்த பல தீய மரபுகளை அந்த நாடுகளின்மேல் கழிந்துவிட்டுப் போனார்கள்.

சேரிகள், டௌரி எனும் வரதட்சணை முறை, கேஸ்டிஸம் எனும் சாதீய உயர்வு தாழ்வு, தீண்டாமை, மனிதர் மலத்தை மனிதர் சுமந்து தூய்மை செய்யும் வழக்கம் என்பன அந்த ஐரோப்பியக் கழிவுகளில் ஒரு சில துளிகள் மட்டுமே. (காதல் மணம், களவு மனம், சுயம்வரம் போன்ற தமிழர் முறை அழிந்து பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமண முறைகூடக் காலனியக்காலத்தில்தான் இந்தியர்மேல் திணிக்கப்பட்டது.)

ஆசிய, ஆஃப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற காலனியத்துக்கு உட்பட்ட நாடுகளில் இருந்து பெற்ற நல்ல வழக்கங்களைத் தங்கள் வழக்கங்களாகக் காட்டவும், தங்களுடைய வழக்கங்களை அடிமைப்பட்டவர்களின் வழக்கங்களாகக் காட்டவும் அவர்களுக்கு இந்த இனவெறி உதவியது.

அந்த இனவெறிக்குக் இறையியலளவில் (theology) கிறுத்துவ மதம் உதவியது. அடிமைப்படுத்தப்பட்ட நாட்டு மக்கள் சாத்தானை வழிபடுகிறக் கீழ்த்தரக் காமப் பழக்கங்கள் கொண்டவர்களாகக் கிறுத்துவம் உருவகித்தது. அவ்வகையில் “ஸிஶ்ன தேவாஹ்” போன்ற பதங்கள் திரிக்கப்பட்டன.

அப்படித் திரித்ததையும் ஐரோப்பியர்கள் ஓரளவு அறிவோடுதான் செய்தார்கள். ஆனால், அந்த விஷம அறிவுகூடத் தேவையில்லை என்று நிறுவி அவர்களையே மிஞ்சி விட்டார்கள் அவர்களது அடிமைகள்.

<h>கிறுத்துவரையும் விஞ்சும் கிறுத்துவப் பிரச்சாரகர்கள்</h>

உடலால் இந்தியராகவும், உடையால் சிந்தனையால் கலாச்சாரத்தால் வாழ்க்கை முறையால் சமூக அமைப்பால் முற்றிலும் ஐரோப்பிய அடிமைகளாகத் திகழும் மெக்காலேவின் புத்திர புத்திரர்கள்தான் அந்த கிறுத்துவப் பிரச்சாரகர்கள். அறிந்தும், அறியாமலும் கிறுத்துவத்தின் இனவெறுப்புப் பிரச்சாரத்தையே அவர்கள் செய்கிறார்கள்.

எந்தவித மொழி, அறிவியல், புத்திசாலித்தனத்தையும் கைக்கொள்ளாமல் கழிவறைச் சுவர்களில் எழுதப்படும் ஒருவரி கதைகளே இந்த ஐரோப்பிய அடிமைகளின் சுயவரலாறாகிப் போனது. ஆனால், அந்த ஐரோப்பிய சுயவரலாறை மற்ற தமிழர்களின்மேலும் திணிப்பது ஏற்க முடியாது.

ஏனெனில், அந்த இனவெறி வரலாற்றுக் கதைகளுக்கும், பிரச்சாரம் செய்பவருக்கும் தருக்க அறிவோ, இலக்கிய ரசனையோ தேவையே இல்லை. அவர்களுக்குக் கிடைத்தவை அடக்குமுறை ஐரோப்பியர் தந்துவிட்டுப் போன இனவெறியும், பொய்ப் புரட்டுகளும்.

விஷம அறிவு கொண்ட ஐரோப்பியர்கள் ஸிஶ்ன தேவாஹ் எனும் பதத்தை இரண்டாகப் பிளந்து ‘ஸிஶ்னம்” “தேவாஹ்” என்று ஆக்கிக் கொண்டார்கள். அதன்படிச் செய்தால் ஆண்குறி தெய்வங்கள் என்கிற பொருள் வரும். அதை வைத்து, ஆண்குறியை வணங்குகிற ஒரு ‘இனம்’ இருந்ததாக அவர்கள் கதை கட்டி விட்டார்கள். அந்தக் கீழ்த்தரமான ஒரு ‘இனத்தை’, ஐரோப்பிய ‘ஆரிய’ இனத்தினர் வென்றதாகச் சொன்னார்கள். அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள்.

இந்த விஷமப் பிரச்சாரம் மேலும் பரவி, ஒரு புதிய திரிபை அடைந்தது. அதன்படி, அப்படி வெற்றிகொள்ளப்பட்ட ஆண்குறி வணங்குகிறவர்கள்தான் திராவிடர்களாம். இந்தக் கீழ்த்தரப் பிரச்சாரம் ஐரோப்பிய இண்டாலஜிஸ்ட்டுகளுடையதல்ல. அவர்களது விஷம அறிவுகூட இல்லாமல், விஷம் மட்டுமே அறிந்த காலனியத்தின் அடிமைகளுடையது.

இந்திய அகராதிகள் வேறு ஒரு பொருள்தர, தங்களுடைய கிறுத்துவ முதலாளிகள் தந்த பொருளை மட்டும்தான் நன்றியுடைய இந்த மெக்காலே இந்தியர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதாவது “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்கிற பொருளை.

ஆனால், அந்தப் பொருளைத் தந்த அடக்கும்வர்க்க ஐரோப்பியரின் அறிவு இவர்களுக்கு இல்லை. ஸிஶ்னம்+தேவாஹ் என்றெல்லாம் பிரித்துத் திரிக்கும் அறிவு இவர்களுக்கு இல்லை. எனவே, தங்களுக்குச் சொல்லித்தரப்பட்ட இனவெறியையும், பொய்ப்புரட்டுகளையும் அறிவற்ற வழிகளில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

அவ்வகையில் “ஸிஶ்ன தேவாஹ்” எனும் பதத்தைத் தங்களுக்கு சுத்தமாகப் புரியாத வார்த்தைகளின்மேலும் திணித்தார்கள். அப்படித் திணிக்கப்பட்ட வார்த்தைதான் “சிசு” எனும் வார்த்தை.

இந்தியர்களான உங்களுக்கு “சிசு” என்றால் “குழந்தை” என்பது தெரியும். ஆனால், அடக்குமுறை ஐரொப்பியர்களின் அடிமைகளுக்கு “சிசு” என்பதன் பொருள் “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்பது.

அதாவது குழந்தையை போய் ஆண்குறி என்கிறார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை, அந்த சந்தோஷப் பூங்கொத்தைப் போய் ஆண்குறி என்று அருவருப்புடன் வசவு வார்த்தையாக அழைப்பீர்களா ? உங்கள் குழந்தை என்றில்லை, வேறு எந்தக் குழந்தையையும் அப்படி அழைக்க மனம் வருமா ?

இனவெறி இருந்தால் அத்தகைய மனமும் வரும். தமிழர்கள் கேவலமானவர்கள், தமிழ்க் குழந்தைகள் எல்லாம் வெறும் ஆண்குறி என்கிற ஐரோப்பிய கிறுத்துவ இனவெறிப் பார்வை இருந்தால் இந்த வசவு உண்மையானதாகக் கூடத் தெரியலாம்.

செம்மொழியில் குழந்தை என்பதைக் குறிக்கும் வார்த்தை  शीशु (ஸிஸு). ஆனால், ஆண்குறிக்கான வார்த்தையில் பயன்படுத்தப்படும் எழுத்து முற்றிலும் வேறு எழுத்து. முற்றிலும் வேறு ஒரு பொருள். ஆண்குறிக்கான வார்த்தை शीक्षन (ஸிஶ்ன). இங்கு வேறுபடும் எழுத்து क्ष.

இங்கனம் வேறுபட்ட வார்த்தையினைத் திரித்து பொய் உரைக்கக் காரணம் என்ன?

கிறுத்துவ இனவெறிப் போதனைகளின் காரணமாகத் தமிழர்கள் மேல் இருக்கும் மட்டமான கருத்து.

பேகன் (pagan) இந்துக்களான தமிழர்கள் ஆண்குறியை வணங்குகிறவர்கள், காமத்தைத் தவிர வேறு இன்பங்கள் அறியாதவர்கள். மட்டுமல்ல, அவர்கள் முட்டாள்கள், மடையர்கள். அவர்களை மிக எளிதாக ஏமாற்றிவிடலாம் என்கிற இனவெறி மனப்பான்மைதான் காரணம்.
தமிழர்களிடம் போய் “தமிழ் வாழ்க” என்று சொல்லிவிட்டுத் தமிழின் முதுகில் குத்தித் துரோகம் செய்யலாம். பொய்யான உணர்ச்சி மிக்க கோஷங்களை எழுப்பியே தமிழை அழித்துவிடலாம் என்கிற ஆரிய-திராவிட இனவாதக் கிறுத்துவ வெறி.

இந்த இனவெறியின் பின் இருக்கும் கிறுத்துவப் பார்வைக்கு, கிறுத்துவம் தவிர மற்ற அனைத்து மதங்களும், கலாச்சாரங்களும் சாத்தானின் வழிபாட்டு முறையான காம முறைகள் மட்டுமே. அவர்களுக்கு அனைத்தும் காமம். காமம் மட்டுமே.

அதனால் நீங்கள் எந்த வார்த்தையைச் சொன்னாலும் அந்த வார்த்தைக்குப் பொருள் “ஆண்குறி” என்று சொல்லிவிடுவார்கள்.

“வாழைப்பழம்?”

“ஆண்குறி!”

“ஆப்பிள்?”

“ஆண்குறி!”

“பேனா?”

“ஆண்குறி!”

“மோதிரம்?”

“ஆண்குறி!”

“பஸ் டிக்கெட்?”

“நீயே எடு.”

அவர்களது நூலகம் கழிவறைச் சுவர்களைத் தாண்டவில்லை. அதனால், தமிழர்களான எங்களை “ஆண்குறி வழிபாட்டாளர்கள்” என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.

<h>தமிழர்கள் சாத்தானை கும்பிடுகிறவர்களா ?</h>

நாங்கள் தமிழர்கள். ஆதிமரபான வேதமரபு எங்கள் மரபு. நாங்கள் ஆண்குறியையும், உருவங்களையும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வழிபடுபவர்கள் இல்லை. இயற்கையை வணங்குகிறோம். இயற்கையாக இருக்கும் இறைசக்தியையே வணங்குகிறோம். கல்லை அல்ல. கல்லாகவும் இருக்கும் கடவுளை. கடந்தும் உள்ளும் இருக்கும் கட – வுளை.

ஆனால், பழ. கருப்பையா அதை மறுக்கிறார். தமிழர்கள் ஆண் குறியைத்தான் வணங்கினார்கள் என்கிறார். ஆனந்த விகடன் எனும் ஒரு பிரபலப் பத்திரிக்கையில் அப்படிச் சொல்லும் அவரது இந்தப் பேட்டி வெளியாகி உள்ளது.

அப்பேட்டியில் மதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்கள் இப்படிச் சொல்லுகிறார்:

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=100184

//“திராவிடர்கள் ஆவிடைக்குள் இருக்கும் லிங்கத்தை வழிபடுபவர்கள். உலகிலுள்ள எல்லாத் தொன்மையான நாகரிகத்தினரும் குறி வழிபாட்டினர்தாம்.

ஆயினும் திராவிட சமயத்தினரை ஆண்குறியை (சிசுனத்தை) வழிபடுபவர்கள் எனப் பழித்த வைதிக மரபில் வந்த ஆதிசங்கரர், அந்தச் சமயத்தை உயர்த்திப் பிடித்த ஞானசம்பந்தரை ‘திராவிடச் சிசு’ என்றும் பழித்தார்.

பிறப்பில் ஆரியராயினும், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டுத் திராவிடச் சிசு ஆக்கப்பட்டார்.

அவ்வளவு சினம் ஆதிசங்கரருக்கு.

ஞானசம்பந்தருக்கு மிகவும் பின்னால் வந்தவர் ஆதிசங்கரர். செத்துப் போனவரைக்கூடத் தன் சாதியில் இருக்கவிட ஆதிசங்கரருக்கு மனம் இல்லை.”//

தமிழரான நாங்கள் ஆண்குறியை வணங்கினோமா? என்ன ஒரு அவச் சொல் ? நாங்கள் தமிழர் என்றால் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாகப் பேசி அவமதிப்பதா ?

அதிலும், குழந்தைகள் எல்லாம் ஆண்குறிகள் என்கிற பொருளில் இவர் பேசுகிறார். அவர் பின்பற்றும் வெள்ளையர்கள் கூடப் பேச அஞ்சுகிற பிறழ்தலைகளை இந்த மதிப்பிற்குரியவர் பேசலாமா ?

எங்கள் சைவ சித்தாந்தத்தின் மதிப்புக்கு உரிய தலைவர்களில் ஒருவர் ஞானசம்பந்தர். அவரைச் சாதி விலக்கம் செய்தார்கள் என்று பழ. கருப்பையா சொல்லுகிறார். சாதி விலக்கம் செய்ய மற்ற சாதிக்காரர்களின் அனுமதி வேண்டும் என்கிற அடிப்படையான இந்திய மரபுகூட இந்த அறிஞருக்குத் தெரியாமல் போனது வேதனை தருகிறது.

<h>ஆதிவாசிகளின் சாதியமைப்பு முறை </h>

இந்தத் தமிழ் மண்ணில் ஒரு சாதியானது மற்ற சாதிகளோடு இணைந்துதான் செயல்படும். ஆதிவாசிகளின் இயற்கை சார்ந்த ஆன்மிகப் புரிதலின்படி சாதிகள் ஒன்றிணைந்து குலங்களாக மட்டுமே “ஒத்திசைவுடன்” செயல்படும். மார்க்ஸியவாந்திகள் சொல்லுவதுபோல “முரணியக்கத்துடன்” அல்ல.

ஒரு குலத்தில் பல சாதிகள் உண்டு. ஒரு குலத்தில் உள்ள ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவரை சாதிவிலக்கம் செய்ய வேண்டுமானால், அந்தக் குலத்தில் உள்ள மற்ற சாதியினரின் அனுமதி வேண்டும். அப்படியல்லாமல், தனிப்பட்ட அரசனோ, சமூகத் தலைவரோ, மதத் தலைவரோ உத்தரவு போட்டு யாரையும் சாதியில் இருந்து விலக்கிவிட முடியாது.
சமூகத்தில் இருக்கிற தலைவர்களாலேயே முடியாது. சமூகத்திற்கு வெளியே இருக்கிற துறவியால் முடியுமா?

எல்லாவித சமூக முறைகளுக்கும் வெளியே இருக்கிற ஆதி சங்கரர் போன்ற ஒரு துறவிக்கு சாதிவிலக்கம் செய்யும் அதிகாரம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையான உண்மைகள் அறிஞரான பழ. கருப்பையாவிற்குத் தெரியாமல் போனது வருந்தத்தக்க நிலை.

அப்படிப் பல சாதியினர் ஒன்று சேர்ந்து நிர்வகித்துக் கொண்ட பஞ்சாயத்து முறையைத்தான் மகாத்மா காந்திஜியும் போற்றினார். முழுமையான காந்தியவாதி தரம்பால் அவர்கள். அவர் இந்திய சாதி அமைப்பு பற்றி இப்படிச் சொல்லுகிறார்:

// “இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும் இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது உண்மைதான்.

ஆனால், அதற்கு முன்பிருந்தே பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.

பல்வேறு ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும் வந்திருக்கின்றன.

பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு ஸ்மிருதி பற்றிச் சொல்லப்படும் பொய்களுக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக இருந்திருக்கிறது.

ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன் இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.

பிரிட்டிஷார் இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு) அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ காரணமல்ல.

இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.” //

காந்தி சொன்னவையோ காந்தியவாதிகளின் ஆய்வோ காங்கிரஸ்க்காரர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அதைப் பெரிது படுத்த வேண்டாம்.

ஆனால், தமிழர்கள் ஆண்குறி வழிபட்டவர்கள் என்று சொன்னதன் மூலம், தமிழர்கள் எல்லாம் சாத்தானைக் கும்பிடுகிறவர்கள் என்கிற அவப் பெயருக்கு இட்டுச் செல்ல முயல்கிறார் பழ.கருப்பையா அவர்கள். அறிந்தோ. அறியாமலோ.

<h>ஆதித்தமிழர் மனம் கதறுகிறது</h>

இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆதித்தமிழர் மனம் கதறுகிறது. தமிழர்களின் தாய்மதமான சனாதன தர்ம மரபில் சாத்தான் என்கிற கருத்தே கிடையாது. எம் தமிழ் ஆதி மரபின்படி “கடவுள் உண்டு. கடவுள் மட்டுமே உண்டு. சாத்தான் கிடையாது.”

இதைச் சொல்லும் தைரியம் தூய தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. தைரியம் இருந்தால், பழ. கருப்பையா அவர்கள் “சாத்தான் என்பது கிடையாது. அது பொய். சாத்தான் இல்லை. சாத்தான் இல்லை. சாத்தான் இல்லை. சாத்தானை நம்புகிறவன் முட்டாள்.” என்று சொல்லட்டுமே.

அவர் தமிழன் என்றால், அவர் உடலில் தமிழர்களின் ரத்தம் இன்னும் ஓடுகிறது என்றால், அவர் சொல்லுவார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

<h>யார் திராவிட சிசு?</h>

திராவிட சிசு என்று ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரரால் கொண்டாடப்படுகிறவர் யார் என்பது குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

திராவிட தேச மொழிகளான தெலுங்கிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் ஸௌந்தர்ய லஹரிக்கு உரை எழுதியவர்கள் திராவிட சிசு என்று குறிப்பிடப்படுகிறவர் ஆதி சங்கரர் என்று சொல்லுகிறார். அதாவது, அப்படிப் பெருமிதமாகத் தன்னையே ஆதி சங்கரர் குறிப்பிடுகிறார் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

அப்படி அவர்கள் சொல்லுவதற்குப் பொருந்தும்விதமாக ஆதி சங்கரரின் வரலாற்றிலேயே ஒரு நிகழ்வு வருகிறது. தனது செயல்த்திட்டத்தின் கடைசித் தலமாகக் கஷ்மீரில் உள்ள, இப்போது பாகிஸ்தானில் இருக்கும் சாரதா பீடத்துக்குப் போகிறார் ஆதி சங்கரர்.

அங்கே இந்தியாவின் ஒவ்வொரு திசையைச் சேர்ந்த மாபெரும் ஞானிகளும் அவரவருக்கான திசை சார்ந்த வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும் என்பது விதி. அப்போது, ஆதி சங்கரர் எந்த வாசலைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

ஆதிதிராவிடர்களான நாங்கள் வாழும் தென் திசையையே அந்த ஆதி திராவிட சிசு தேர்ந்தெடுத்தார்.

தென்னாடுடைய சிவன் காலடிக்கு அருகில் உள்ள மாணிக்க மங்கலம் எனும் கிராமத்திலும் இருக்கிறார். அங்கே அவரது காதல் மனைவியான காத்யாயினி ஆதி சங்கரருக்கு ஞானப் பால் தந்ததாக ஆதி சங்கரர் வரலாறு சொல்லுகிறது. அந்த நாட்டார் கதையும்கூட மற்ற திராவிட உரையாசிரியர்களின் கருத்துடன் பொருந்துகிறது.  ஆதி சங்கரர் தன்னைத்தானே திராவிட சிசு என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால், ஆதித்தமிழரான எங்களுக்கு இக்கருத்து ஏற்புடையதல்ல.

<h>வேதங்களைக் காக்கும் ஆதித்தமிழ் மரபு</h>

வேதங்கள் காக்கும் தமிழ் மரபானது, “திராவிட சிசு” என்று குறிப்பிடப்படுபவர் ஆதி சங்கரர் என ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்படி, ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரரால் திராவிட சிசு எனப் பாராட்டப்படுகிறவர் திருஞான சம்பந்தர்.

எங்கள் தமிழ்த் தெய்வமான சிவனும் பார்வதியும் பாலூட்டிய திருஞானசம்பந்தரையே ஆதி சங்கரர் போற்றிப் பாடுகிறார் என்று தமிழர்கள் சொல்லுகிறோம்.

அதாவது, மற்ற திராவிட தேச தெலுங்கு, மலையாள, கன்னட, குஜராத்தி மொழிபெயர்ப்புகளில் திராவிட சிசுவாகப் போற்றப்படுகிறவர் ஆதி சங்கரர் என்று சொல்லுவதை எங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மறுக்கிறார்.

ஆம். தமிழர்கள் அறிஞர்கள். ஆண்குறி தவிர வேறு இன்பங்கள் அறிய முடியாத அலிகள் இல்லை. ஸௌந்தர்ய லஹரியை ஆதிதிராவிடத் தமிழர் ஒருவரும் மொழிபெயர்த்துள்ளார். 14 அல்லது 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிராஜ பண்டிதரே அந்த அம்மொழிபெயர்ப்பைச் செய்தவர். அவர் வீரை எனும் வீரவநல்லூரைச் சேர்ந்தவர்.

தமிழ்நாட்டை ஐந்து தேசங்களாகப் பிரிப்பார்கள். அவற்றில் பாண்டிய தேசத்தைச் சேர்ந்தவர் அவர். அவரது அந்த மொழிபெயர்ப்புக்கு 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ எல்லப்ப நாவலர் எனும் தமிழர் உரை எழுதி இருக்கிறார்.

1800களில் முதன் முதலில் அச்சுப் பதிப்பு இந்தியாவுக்கு வந்தது. அப்போது அச்சு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நூல்களில் மிகவும் பிரபலமானதாக இருந்தது இந்த சைவ எல்லப்ப நாவலர், சௌந்தர்ய லஹரிக்கு எழுதிய உரைதானாம்.

அந்த உரையின்படி புஷ்பதண்டர் என்பவர்தான் சௌந்தர்ய லஹரியின் முதல் பாகமான ஆனந்த லஹரியை எழுதியவர். அவர் கௌடபாதருக்குச் சொல்லித் தர, அவர் ஆதிசங்கரருக்குச் சொல்லித் தந்திருக்கிறார். ஆதி சங்கரர் மேலும் 41 பாடல்களைப் புனைந்து சௌந்தர்ய லஹரியை உருவாக்கினாராம்.

அந்த மொழிபெயர்ப்பில் வீரை கவிராஜ பண்டிதர் கருத்துப்படி, சீர்காழியில் வாழ்ந்த கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த குழந்தைக்கு எங்கள் தமிழ்த்தாய் பார்வதி பாலூட்டினாளாம்.

<h>யார் அந்தக் குழந்தை?</h>

அது வேறு யாருமல்ல, சைவக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர்தான்.

இப்படித் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சொல்வதற்கும் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் சொல்வதற்கும் உள்ள முரண்பாட்டை விலக்கி உண்மையை ஒளியை அறிவது எப்படி ?

உண்மை ஒளியை உலகிற்குக் காட்டிய ரமண மகிரிஷியைத்தான் கேட்கவேண்டும். அவரும் மிகத் தெளிவாக, உறுதியாக ஆதி சங்கரரால் “திராவிட சிசு” என்று போற்றப்பட்டு இருப்பவர் திருஞானசம்பந்தரே என்று போட்டு உடைத்து விட்டார். அவர் இப்படி பொருள் விளக்கிய இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. தமிழ்க்கடவுளின் அவதாரமான அந்த ரமணரும் ஆதித்தமிழர்தானே.

அந்த ரமணரைப் போற்றிய மகத்தான் கவிஞரான நாயனார். அவர் ரமணரைப் போற்றிப் பாடிய பாடலில் ரமணருக்குப் பல பெயர்கள் தருகிறார். அந்தப் பலபெயர்களில் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும் ரமணரின் அருள் நமக்குக் கிடைக்கும் என்கிறார். அந்தப் பாடலில் ரமணரின் பலபெயர்களில் ஒரு பெயர் என்ன தெரியுமா?

திராவிட சிசு.

<h>தமிழ்ப் பண்டிதர் யார்? </h>

இப்படியெல்லாம் தெளிவாகத் திராவிட சிசு எனப்படுவது திருஞானசம்பந்தர்தான் எனச் சொல்லுகிற வீரை கவிராஜ பண்டிதரும் ரமணரும் தமிழரா, இல்லை பழ. கருப்பையா அவர்களுக்கு வெள்ளையர்களின் போதனைப்படி பொய்யான தகவல் தந்த இன்னொருவர் பண்டிதரா?

யார் அந்த இன்னொரு பண்டிதர் என்று கேட்கிறீர்கள். அவர் என்ன செய்தார் என்று கேளுங்கள்.

தமிழர்கள் ஆண்குறியை வணங்கினார்கள் என்கிற வசவைத் தமிழர்கள் மேல் சுமத்துகிறார் பண்டித அப்பாத்துரை. அவர் சொல்லுகிறார்:

“இருக்குவேத ஆரியர் தங்கள் எதிரிகளை ஆரியர் அல்லாத வர்கள், தாசர்கள்
(கறுப்பர்கள்), புரியா மொழி பேசுபவர்கள், சப்பை மூக்கர், தமக்கென்று
வேறுமாதிரியான வழிபாடுகளையுடையவர்கள், சிசுன தேவர்கள் (இலிங்கத்தை
வணங்குபவர்கள்), மாயமந்திரம் வல்லவர்கள், கோட்டையால் பாதுகாக்கப்பட்ட பல
நகரங்களையுடைவர்கள், மிகுந்த செல்வமுடையவர்கள் என்றெல்லாம்
குறிப்பிட்டுள்ளனர். இவ்வர்ணனைகள் அனைத்தும் சிந்துவெளி நாகரிகத்துடன்
முற்றிலும் பொருந்துபவையே. இந்திரன் உதவியால் இம்மக்கள் நகரங்களைத் தாங்கள்
அழித்ததாக அவர்கள் பல தடவை கூறுகின்றனர்.”

அதாவது சிந்துச் சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் ஆண்குறியை வணங்கினார்கள். அவர்களை ஐரோப்பிய ஆரியர்கள் வென்றார்கள். அப்படி ஐரோப்பிய ஆரிய இனத்தால் வெல்லப்பட்ட தமிழர்கள் என்று அப்பாத்துரை அவர்கள் நம்மைக் கேவலப்படுத்துகிறார்.

அப்படி அப்பாத்துரை சொன்னதை அப்படியே உள்வாங்கி பழ.கருப்பையாவும் பேசுகிறார்.

தமிழர்கள் ஆண்குறியை வணங்குகிறவர்கள் என்று சொல்லி ஐரோப்பியர்களுக்கு சாமரம் வீசுகிற இந்த அப்பாத்துரை பண்டிதரா?

அல்லது, எங்கள் குரவர்களில் ஒருவரான ஞானசம்பந்தரைப் போற்றுகிற வீரை கவிராஜர் பண்டிதரா?

சுயமதிப்பு உள்ள தமிழர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.

<h>வியர்த்து விறுவிறுத்து அமர்ந்தது விவேகானந்தரா?</h>

எதுகை மோனையோடு பேசவேண்டும் என்பதற்காக விவேகானந்தர் எனும் ஞான தீபத்தைக் கேவலப்படுத்தி இருக்கிறார் பழ. கருப்பையா. ஒருவேளை விவேகானந்தர் அடிமைத்தன்மை இல்லாத சுதந்திரமானவர் என்பதால் அவருக்கு வயிற்றெரிச்சலா? தெரியவில்லை.

பழ. கருப்பையா அவர்கள் சொன்னது போல விவேகானந்தரிடம் மனோன்மனீயம் அருளிய சுந்தரம் பிள்ளை அவர்கள் உரத்த “ஆணித்தரமான குரலில்” குறுக்கிடவில்லை. சுந்தரம் பிள்ளை அவர்கள் வீட்டில் விவேகானந்தர் பல நாட்கள் தங்கி இருந்தார். அப்போது, சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அவருடைய கோத்திரம் என்ன எனக் கேட்டிருக்கிறார் விவேகானந்தர். அந்தக் கேள்விக்கு, “நாங்கள் திராவிடர்கள். எங்களுக்கு அதெல்லாம் கிடையாது” என்று கிறுத்துவ ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஒரு பொய்யான நம்பிக்கையை, கருத்தைச் சொல்லுகிறார் சுந்தரம் பிள்ளை.

அதைக் கேட்ட விவேகானந்தர் மிகவும் வேதனை அடைந்தார். “இப்படி எல்லாம் பொய்களை நம்பி வேதங்களின்மேல் உங்களுக்கு இருக்கும் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் வேதங்கள் ஓதிய தமிழர்கள். வேதம் ஓத அனைவருக்கும் உரிமை உண்டு. அதை முற்றிலும் மறந்துவிட்டு, பார்ப்பனர்களுக்கு மட்டுமே அதைக் கொடுத்துவிட்டீர்களே. உங்கள் கடமையை, உரிமையை விட்டுவிட்டீர்களே.” என்று வருத்தப்பட்டார்.

“இப்படி உங்கள் உரிமையை நீங்களே கைகழுவி விட்டு பார்ப்பனர்கள் அதில் ஆதிக்கம் செய்யும்படி செய்துவிட்டீர்கள்” என்றும் வருத்தப் பட்டு இருக்கிறார். இதுவும் பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்ச்சி.

விவேகானந்தரோடு பழகியவர்கள் அனைவரும் ஒன்று சொல்லுகிறார்கள். அவரோடு பழகும்போது உங்களுக்குள் மிகுந்த சக்தி ஒன்று புகுந்துகொண்டதை உணர்வீர்கள். விவேகானந்தரை ஒரு சக தோழராக, சமத்துவ உணர்வோடு மட்டுமே பழகுவீர்கள். அவரைவிட நான் தாழ்ந்தவள் என்பது போன்ற உணர்வு எனக்கு வரவில்லை. யாருக்கும் வரவில்லை என்கிறார்கள்.

மனோன்மணீயம் தந்த சுந்தரம் பிள்ளை அவர்களும் பக்குவமானவர். அங்கனம் நாகரீகம் மிகுந்த இருவர் உரையாடிய நிகழ்வை, சண்டை போலத் திரிக்கிறார் பழ. கருப்பையா. இரண்டு நல்ல நண்பர்களை எதிரியாக்கிப் பார்ப்பது சகுனிகள்கூடச் செய்யாத தவறு.

<h>வேதம் காக்கும் தமிழர் பற்றி விவேகானந்தர் </h>

பழ. கருப்பையாவால் வங்காளி என்று பிரித்துப் பேசப்படுகிற விவேகானந்தர் தமிழர்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

இந்தியாவின் உன்னத ஆன்மீக-சமூக எதிர்காலத்தைத் தமிழர்கள்தான் உயர்த்திப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களால்தான் இந்தியா உயரப்போகிறது என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.

அங்கனம் இந்தியர்களுக்குத் தலைமை ஏற்கப் போகிற தூய அத்துவித தமிழ்ச் சிங்கம் பழ. கருப்பையா அவர்கள் வீட்டில் இருந்தும் கூட வரலாம்.

அப்படித் தமிழர்கள்மேல் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த விவேகானந்தரைப் போற்றுவதா, அல்லது தமிழர்கள் எல்லாம் ஆண்குறியை வணங்கிய ஐரோப்பிய ஆரியர்களின் அடிமைகள் என்று சொல்லுகிற பழ. கருப்பையாவைப் பின்பற்றுவதா என்பதைக் கொஞ்சமேனும் சுயமதிப்பும் சுயசிந்தனையும் உடைய தமிழர்கள் அறிவார்கள்.

அவர்களிடம் ரேஸிஸமோ கேஸ்டிஸமோ கிடையாது.

__

Series Navigationஅழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா