இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா

Spread the love

( திருப்பூரில் “ தமிழ்ச்செடி” என்ற இணைய தள பதிவாளர்களின் கூட்டமைப்பு மாதந்தோறும் இணையதளம் சார்ந்த பகிர்விற்காக கூட்டம் நடத்துகிறது. மாதம் ஒரு இணையதள பதிவாளரை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குகிறது. இம்மாதம் பரிசு பெற்றவர். மதுரை மணிவண்ணன். அவ்விழாவில் சுப்ரபாரதிமணீயன் உரையின் ஒரு பகுதி இது. செண்பகம் மக்கள் சந்தையில் நடைபெற்ற டிசம்பர் மாதக்கூட்டதிற்கு மக்கள் சந்தை.காம் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இணைய தள பதிவாளர்கள் ஜோதியர் இல்லம் ஜோதிஜி, நிகழ்காலத்தில் சிவா, உலகசினிமா ரசிகன் பாஸ்கரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், தோத்தவண்டா, அரூர் மூனா செந்தில், ச்சிமோகன்குமார், வீடு சுரேஸ், இரவு வானம் சுரேஷ், கோவை மு.சரளா, தொழிற்களம் அருண் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.   )

இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா என்ற சர்ச்சை சின்மயி வழக்கில் திருப்பூரைச் சார்ந்த ராஜன்லீக்ஸ் கைது செய்யப்பட்டிருக்கும் இப்போது இன்னும் தீவிரப்பட்டிருக்கிறது.  இரு முனைக்கத்தியை ஞாபகப்படுத்துகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சுதந்திரக்குரலுக்கு மறுக்களிக்கப்படும் நிலை தொடர்கிறது.
எனக்குத் தெரிந்து தமிழின் முன்னோடியான இணையதளமான திண்ணை.காம் தொடர்ந்து கோ.ராஜாராம், சிவகுமார் போன்றோரால் திறமையாக  நட்த்தப்பட்டு ஜனநாயக மேடையாக அமைந்து வருகிறது. சுஜாதா, கோராஜாராம் முயற்சியால் வெளிவந்த கணிணி சார்ந்த நூல்கள் அப்போது தமிழுக்கு புது வரவாக அமைந்தன. என் “ அப்பா “ தொகுப்பிற்கு முன்னுரையை 30 பக்க அள்வில் கணிணி அச்சடிப்பில் பூச்சிபூச்சியான் எழுத்துக்களில் அனுப்பிய போது  என் வீட்டின் புதுக் குழந்தையை பார்ப்பது போல பார்த்திருக்கிறேன். சுஜாதா கணிணி சார்ந்த தொழில்நுட்பக்கலைஞராக இல்லாமல் பலருக்கு எழுத்தாளராகவே தெரிந்திருக்கிறார்.  15 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூரில் கோவிந்தசாமியைச் சந்தித்த போது அவரின் இலக்கியப் படைப்புகளை முன் வைத்து எழுத்தாளராகவே பார்த்தேன். ஆனால் கணிணி மென் பொருள் சார்ந்து அவரும் நிறைய அப்போது இயங்கினார். சென்றாண்டில் மலேசியா கோலாலம்பூரில் நான் சந்தித்த முத்து நெடுமாறன் தமிழ் மென்பொருள் சார்ந்தும் அதையொட்டி வெவ்வேறு மொழிகள் சார்ந்த மென்பொருட்கள் சார்ந்தும் நிறைய உழைத்திருக்கிறார். இவர்களைப் போல பல் நூற்றுக்கணக்காண புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் மென்பொருள் சார்ந்து உலகமெங்கும் உழைத்து இன்றைய இணைய் தள உபயோகத்தை சுலபமாக்கியிருக்கிறார்கள்.
அய்ந்து ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில்  தொடர்ந்து ஏதாவது கற்றுக்கொண்டிருப்பவர் என் இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு ப்ளாக் ஆரம்பித்த பின் அது மிகவும் தேவையானதாக உணர்ந்தேன்.
தமிழில் டைப் செய்ய ஈ கலப்ப்பை போன்றவற்றைக் கற்றுக் கொண்டு படைப்புகளை  மின் தளங்களுக்கு அனுப்பியபோது அவை மாற்றம் பெற சிரமம் இருந்த்தால், தமிழ் முரசு பின்பு கை கொடுத்தது. தமிழில் சிந்தித்து  ஆங்கிலத்தில் டைப் செய்வது இன்றும் பல மனத்தடைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.நான் இணைய தளத்திற்கென்று பெரும்பாலும் எழுதுவதில்லை. இதழ்களுக்கு எழுதுவதே இணைக்கப்படுகிறது.
தாளில் அச்சடிக்கப்படுவதை படிப்பதே சிறந்தது என்ற மூடநம்பிக்கையைக் கொண்டிருக்கிறவர்கள், இன்னும் தேங்கியபடியே இருக்கிறார்கள். அதை மீறின ஜனநாயக மேடையாக இணையதளங்கள் விளங்குகின்றன. அந்த மூட நம்பிக்கை தமிழகத்தில் இன்னும் இருக்கிறது.
பண்டிதர்களிடமிருந்து தமிழ்க்கவிதை விடுபட்டு புதுக்கவிதையின் எழுச்சியால் புதுக்கவிதை தொகுப்புகளின்  அபரிமிதமான வெளியிடலும் கோவை வானம்பாடி இயக்கத்தினரின் வெளிப்பாடும்  எழுப்துகளில் புதுக்கவிதையை தனித்துக் காட்டியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் குறும்படங்களின் தயாரிப்பு முயற்சிகள்  தொன்னூற்களில் இன்னொரு வகை சாதனையாக மிளிர்ந்தது. அதே தொழில் நுட்பம் இணையதளங்கள் மூலம் லட்சக்கணக்கான படைப்பாளிகளை இன்று உருவாகியுள்ளது.
தமிழ் படிக்காமலே பட்டம் வாங்கி விடும் அவலம் தமிழகத்தில் உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கம், ஆங்கில பயன்பாடு மீறி  புதிய தலைமுறையினரை இணைய தளத்தில் தமிழில் தங்கள் அனுபவங்களை எழுத வைத்திருப்பது நல்ல விசயம்,
பின்நவீனத்துவ காலகட்டம் எழுத்தாளன் என்ற பீட  பிம்பத்தை உடைத்து வாசகர்களின் பங்களிப்பையும், வாசகர்களை எழுத்தாளர்களாக  உயர்த்தியிருப்பதையும்  சுட்டிக் காட்டலாம்.  எழுத்தாளன், சிஷ்யப்பரம்பரை என்பது ஒழிந்து விளிம்பு நிலை மக்களே தங்கள் குரலில் பதிவு செய்யும் மேடையாக இணைய தளங்கள் இன்றைக்கு வளர்ந்துள்ளன.. எழுத்தாளன் இல்லாமல்  போக பிரதிகளின் குரல் தயவு தாட்சண்யமற்று பல்வேறு துறைகளிலும் ஒலிக்கிறது.
வட கிழக்கு இந்தியாவில் மலைப்பிரதேசவாசிகளுடன் வசித்து வந்த தமிழ நண்பர் ஒருவர்   அங்கு கண்ட ஒரு பழக்கத்தை இன்றும் இங்கு வந்த் பின்பும் கடை பிடிக்கிறார். மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்கள் உட்கார்ந்து அவர்கள் ஒரு பெட்டியில் அந்த மாதம் எழுதிப்போட்டிடுருக்கும் பல செய்திகளை, சந்தோச விசயங்களை , புகார்களை, வருத்தங்களை பகிர்ந்து கொள்வதாகும் அது,. அது போல் பழங்குடி மரபுன் தொடர்ச்ச்சியாய் இணைய தளங்களின் மூலமான பகிர்வு வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை பல்வேறு பரிணாமங்களுடன் இன்றைக்கு காட்டும் ஜனநாயக வெளியை உருவாக்கி யிருக்கிறது. இதில் தமிழ் இளைஞர்கள் அக்கறையுடன் தமிழில் எழுதி ஈடுபடுகிறார்கள் என்பது பெரிய சாத்னைதான்.

(சுப்ரபாரதிமணியன்  , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 )   ,

Series Navigationஇரு கவரிமான்கள் – 1வாழ்வே தவமாய்!