இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த “இசமாக” இருந்தாலும் – எடுபடாது என்பதையே இது காட்டுவதாய்க் கொள்ளலாம். எந்த “இச”த்தின் மீதும் தனிப்பட்ட பற்று இல்லாமல் ஆராயத் தொடங்கினால் எல்லா “இசம்”களுமே சிறந்தவையே என்பது புலப்படும்.

      முதலாளித்துவமும் சிறந்த ஒன்றே என்று சொன்னால் கம்யூனிஸ்டுகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்தான்.  ஆனால் முதலாளிகளில் அனைவருமோ அல்லது பெரும்பாலோரோ நாணயமானவர்களாக இருந்தால் அதுவும் மிகச் சிறந்த “இசம்” ஆகத்தான் இருக்கும். ஆனால் அப்படி இருப்பதில்லை என்பதுதான் துர்ப்பாக்கியம். கம்யூனிசம் எனும் பொது உடைமைக் கோட்பாட்டை எடுத்துக்கொண்டால், அலுவலர்களும் தொழிலாளிகளும் பிற ஊழியர்களும் நாணயமற்றவர்களாய்ப் பெரும்பாலும் இருப்பதாலேயே அரசுடைமை நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இழப்பில் தள்ளாட நேர்கின்றன என்பதில் ஐயமே இல்லை.  “சுரண்டலில் சோஷலிசம்” எனும் தத்துவமே இங்கே கொடிகட்டிப் பறக்கிறது என்பதே கண்கூடானதும் கசப்பானதுமான உண்மை. இல்லாவிட்டால் தனியார் நடத்தும் நிறுவனங்கள் மட்டும் பெரும் ஆதாயத்தில் நடப்பானேன்? பல ஆண்டுகளுக்கும் முன்னால் மைய  அரசு அலுவலகம் ஒன்றில் பணியில் அமர்ந்த புதிதில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக என்னுள்ளத்தில் இருந்துவந்த கருத்துகள் மனச்சாட்சி என்பதே இல்லாமல்  அவர்கள் வேலை செய்துவந்த லட்சணத்தைப் பார்த்தன் பின்னர் சிறிது சிறிதாய் மாறலாயின. வேலையைக் கற்றுக் கொள்ளுவதற்கும் முன்னால்   அவர்களில் பெரும்பாலோர் “வேலை நிறுத்தத்தில்” ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. வேலையைச் செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கும் மனப்பான்மை நம்மில் பெரும்பாலோரிடம் பிறவித் தன்மையாக  இருந்துவருவதைத் தெரிந்துகொள்ள வாய்த்த்து. இதே பிறவிக்குணம்   படைத்த நம்மை      ஆள்பவர்களும் மக்களுக்குச் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்யாமல், அவர்களுக்கு விலையில்லாப் பொருள்களை லஞ்சமாக வழங்கி அவர்களின் வாக்குகளைப் பெற முயல்கிறார்கள்.

            எந்த மைய அரசு அலுவலகத்தையோ, தொழிற்சாலையையோ எடுத்துக் கொண்டாலும், (அதன் முடிவு இதோ அதோ என்று ஏதோ)

2

ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றுவது அதில் பணிபுரியும் மிகச் சில நேர்மையான அலுவலர்களாலும் ஊழியர்களாலும்  தான் என்பதே உண்மை நிலை.

ஒரு முறை குடியரசுத் தலைவர் அமரர் ராதாகிருஷ்ணன் அவர்கள் “டிசானெஸ்டி ஈஸ் த ட்ரெய்ட் அவ் இண்டியன்ஸ்” – நேர்மையின்மை இந்தியர்களின் பிறவித்தன்மை – என்று மனம் கசந்து கூறியபோது அவர் மீது எரிச்சல் வந்தது. பின்னரோ, அவர் சொன்னது உண்மைதான் என்று அரசுடைமையான நிறுவனங்களில் நம்மவர்கள் “வேலை செய்(யா)த  அழகைப் பார்த்த பிறகுதானே புரியலாயிற்று?

இந்த அழகில், இழப்பில் ஓடிக்கொண்டிருக்கும் (தர்ம சத்திரங்கள் போன்ற) அரசு சார் நிறுவனங்களைத் தனியார் வசமாக்குவதை எதிர்ப்பதற்குக் கம்யூனிஸ்டுகளுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அமரர் ராஜீவ் காந்தி கணினியை நம் நாட்டில் அறிமுகப் படுத்த முற்பட்டபோது அவர் என்ன சொல்லியும் புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்துகொள்ள மறுத்து) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தானே நம் தோழர்கள்? இதை மட்டுமின்றி இன்னும் எத்தனையோ சொல்லலாம். உதாரணத்துக்கு – அஞ்சல்துறையின் பின் கோட் (போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர்), ஒரு ரூபாய்க்கு நூறு காசுகள் எனும் மாற்றம், வீசையைக் கிலோவாக மாற்றியது, மைலைக் கிலோ மீட்டராக்கியது போன்றவை.

எதற்கெடுத்தாலும் கூச்சல் எழுப்பிக் கொடி தூக்கும் இந்தக் குறைபாடு ஒரு புறமிருக்க, கட்டுரையின் தலைப்புக்கு வருவோம்.  

மறைந்தவர்களில் உண்மையான கம்யூனிஸ்டுகள் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, ஜீவா, கக்கன் போன்றவர்களே. மகாத்மா காந்தியின் எளிமையோ உலகறிந்த உண்மைதானே? மதுரையில் அரைகுறை ஆடை யணிந்திருந்த ஓர் ஏழைக் குடியானவரைப் பார்த்து மனம் கலங்கிய மகாத்மா அதன் பிறகு தாமும் மேலங்கியைத் துறந்து இடுப்பில் மட்டுமே ஆடை யணிந்தது நமக்குத் தெரியும். காமராஜரோ தன் அம்மாவை உடன் வைத்துக்கொண்டால் உறவினர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் விருதுநகரிலேயே அவரைத் தங்க வைத்து அவரது செலவுக்கு மட்டுமே சிறு தொகையை அனுப்பியவர். பணம் பற்றவில்லை எனக் கூறி அவர் தாயார் கூடுதல் தொகை கேட்ட போது, அதைவிடவும் குறைந்த தொகையில் நம் நாட்டில் லட்சோப லட்சம் பேர் வாழ்வதைச் சுட்டிக்கட்டி அதற்கு மேல் அனுப்ப மறுத்தவர். ராஜாஜியும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்தான். தொடக்கத்தில் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டிருந்தாலும் பின்னாளில் அது சரிப்பட்டு வராது என்றுணர்ந்து தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டவர்.  ராஜாஜி அரிசனங்களுக்குச் செய்த சேவை மகத்தானது. .ஜீவா என்று அழைக்கப்பட்ட ஜீவானந்தத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உடுத்துக்கொள்ள மாற்று வேட்டி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தவர்.

3

அவர் நினைத்திருந்தால் கட்சிப்பணத்தில் வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. ஒரு முறை கட்சிக்காக வசூலான எரரளமான ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் கனத்த மூட்டையாய்ச் சுமந்து கொண்டு தம் இருப்பிடத்திலிருந்து கூட்டம் நடந்த இடத்துக்கு வேர்க்க விறுவிறுக்க லொங்கு லொங்கென்று ஓடி வந்தவர் ஜீவா. பேருந்தில் வந்திருக்கலாமே என்று கேட்கப்பட்ட போது, தம்மிடம் அதற்குக் காசில்லை என்று கூறியவர். கையில் கனமான பண மூட்டையை வைத்துக்கொண்டுள்ளது பற்றி வினவிய போது, “அய்யோ ! அது கட்சிப் பணம் ஆயிற்றே?” என்று பதிலிறுத்தவர்.

      கக்கனோ பதவியை விட்டு விலக நேர்ந்ததும், அரசுக் காரைப் பயன்படுத்தாமல், நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று பேருந்து பிடித்து வீட்டுக்குப் போனவர். ‘இப்படி யெல்லாம் கூட இருந்திருக்கிறார்களே!’ என்று வியக்கத் தோன்றுகிறதல்லவா!

      இன்றும் கூட அப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி – 64 வயதானவர் – இன்று மைய அரசில் ஒரு மாநில அமைச்சர் – சைக்கிளில்தான் பயணம்  செய்துவருகிறார். ஒரு களிமண் குடிசையில் வசித்து வருகிறார். இவர் கம்யூனிஸ்ட் அல்லர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர். எனினும் இவரும் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா !

இன்று நம்மிடையே உள்ள பெரியவர் நல்லகண்ணுவை விடவும் சிறந்த கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களா? தெரியவில்லை. கம்யூனிஸ்ட் தோழர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த அவருக்கு வசூல் செய்து அளித்த ஒரு கோடிப் பண முடிப்பைக் கட்சியின் வளர்ச்சிக்காகவே திருப்பிக் கொடுத்துவிட்டு வழக்கம் போல் எளிய வாழ்க்கை வாழும் பெரியவர்.

உண்மையிலேயே சமுதாயத்தின்  மீது நல்ல பார்வை உள்ளவர்தான். அதனால்தான் அவருக்குப் பொருத்தமான நல்லகண்ணு என்பது அவரது பெயராகவே அமைந்துவிட்டது போலும் !

கொஞ்ச நாள்களுக்கு முன்னால், பெட்ரோல் தட்டுப்பாட்டால் அதன் விலை எக்கச்சக்கமாக எகிறியது. எல்லாப் பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல் இல்லை என்றே சொல்லப்பட்டது. இல்லாவிட்டால், மிக அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. அப்போது ஒரு பங்க்கில் அதன் உரிமையாளர் நியாயமான விலைக்கே அதை விற்றார். இதனால் வியப்புற்ற ஒரு கார்க்காரர் அது பற்றிய தம் பாராட்டை அவருக்குத் தெரிவித்த போது, “எப்போதும் நாம் நியாயமாகவே நடக்கவேண்டும் என்று எங்கள் தாத்தா சொல்லியிருக்கிறார்,” என்று  அவர் பதில் சொன்னாராம். “யார் உங்கள்

4

தாத்தா?” என்று அவர் வினவியதற்கு, “காமராஜரின் நண்பர் கக்கன்” என்று பதில் வந்ததாம் !

      எங்கோ அத்தி பூத்தது மாதிரி விதி விலக்காய் ஒரு சில நேர்மையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைச் சூழ்ந்துள்ள மோசமான பெரும்பான்மையினர் அவர்களை நேர்மையான வழியில் நடக்க விடுவதில்லை என்பதே உண்மை.

      நம் நாட்டுக் கம்யூனிஸ்ட் தலைவர்கள், தொழிலாளிகளைப் பார்த்து, “உண்மையாக உழையுங்கள். நீங்கள் நேர்மையாக நடந்தால், அரசு நிறுவனங்கள் இழப்பில் தள்ளாடும் நிலை ஒருபோதும் வராது. அரசுப் பணியாளர்கள் ஒழுங்கீனமாக இருப்பதால்தான் அவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்க மைய அரசு முடிவெடுக்கும்படி ஆகிறது !” என்று என்றேனும் எச்சரித்தது உண்டா ? இப்படி நேர்மையற்று நடந்துகொள்ளும் தலைவர்கள் உண்மையில் தலைமைப் பதவிக்குத் தகுந்தவர்கள்தானா ?

               தகவல்-தொழில்நுட்ப மையங்களில் இரண்டு பேருக்கான சம்பளத்தை ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து மூன்று-நான்கு பேர்களின் வேலையை வாங்கி அவர்களை அரைப் பைத்தியங்களாகவும் உடல்நலமிழந்தவர்களாகவும் ஆக்கிவருவது குறித்துக் கம்யூனிஸ்டுகள் கவலையாவது தெரிவித்ததுண்டா? அந்த ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதிக்காத நிர்வாகத்துக்கு எதிராய்க் குரல் எழுப்பியதுண்டா ?

      அன்றைய காந்தி, காமராஜ், கக்கன், ஜீவா, இன்றைய நல்லகண்ணு   போன்றவர்களுக்குத் திருஷ்டிப் பரிகாரமாய் இன்று விமானங்களில் “எக்சிக்யூடிவ் க்ளாஸ்” எனப்படும் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் இருக்கைகளில் பயணித்து – அரசுக்குச் செலவு வைக்கும் – சில கம்யூனிஸ்ட் நாடளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி என்ன சொல்ல ! 

                                                                                    ………

Series Navigationகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.குறுங்கவிதைகள்