இனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.

லதா ராமகிருஷ்ணன்

சென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள்.

அதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் தாக்கம் ஏறிக்கொண்டே போகும்.
இந்த நாட்களில்மனிதர்களிடையே நிறைய சண்டை-சச்சரவுகள், கைகலப்புகள் எழுவது வழக்கம். அரசுப் பேருந்துகளில் பயணமாகும்போது இதைப் பார்த்தி ருக்கிறேன். பங்கெடுத்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன்.

உலகப்புகழ் பெற்ற ஓவியர் VAN GAUG இன் வாழ்க்கை யைப் பேசும் புனைவான THE LUST FOR LIFE நூலில் பஸிஃபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தாஹிதி என்ற தீவில் வாழ்வோருக்கு வெயிலால் மனச்சிதைவே ஏற்படுவதுண்டு என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்த வெயிலும் கண்ணுக்குத் தெரியாத கொரா னாவால் நம் மனதில் ஏற்படும் பீதியும் நம் தனிமைப் படுத்தலுமாக நமக்கு கோபம் அதிகமாகவும், மனநிலை மாற்றங்கள் நேரவும் வாய்ப்புண்டு. அது நேராமலிருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தெளிவோடு நாம் செயல்பட வேண்டும்.

உதாரணமாக, மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும் போது தடித்த, எகத்தாளமான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்தாமலிருக்கலாம். உலகிலுள்ள அத்தனை அரசாங்கங்களுக்கும் இல்லாத அறிவு தனக்கிருப்பதாக சிலர் ஒரேயடியாக குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். உலகிலுள்ள மற்றவர்களெல்லாம் முட்டாள்கள், சுயநலவாதிகள் என்பதாக ஏசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் நினைத்தால் தவிர்க்க முடியும்.

ஒருவருடைய கடவுள் நம்பிக்கை என்பது மற்ற வர்களை ஏமாற்றுவதாக, அதிகாரம் செய்வதாக, மதிப்பழிப்பதாக இல்லாதவரை அது மோசமான விஷயமல்ல. கடவுள் நம்பிக்கை, கடவுளிடம் பிரார்த்தித்துக்கொள்ளுதல் ஒருவருக்கு மன நிம்மதியும் தைரியமும் அளிக்குமென்றால் அதைச் செய்வதில் என்ன தவறு? அதைப் பழித்து பரிகசிக்கத் தான் வேண்டுமா?.

இங்கே கோயில்களுக்கு தினசரி போய் ஒன்றிரண்டு மணிநேரம் அங்கே அமர்ந்து தெரிந்தவர்களோடு கொஞ்சம் பேசி, நடைப்பயிற்சியாய் பிராகாரத்தைச் சுற்றி வந்து, மாலைவேளைகளைக் கழிக்கும் எத்தனையோ பேர், குறிப்பாக முதியவர்கள் இப்போது கோயிலை ஏக்கத்தோடு பார்ப்பதைக் காண அவலமாக உணர்கிறது மனம்.

ஒவ்வொரு பேரழிவிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். இன்று வெளியே சென்றபோது வீதியின் இருமருங்கும் நிறைந்திருக்கும் குப்பை கூளங்களெல்லாம் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. தெருவோரம் பிச்சை யெடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இனி இருபது நாட்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கிடைக்கும். இத்தகைய செயல்பாடுகளெல்லாம் எப்போதுமே இதே முனைப்போடு மேற்கொள்ளப்பட்டால் எத்தனை நன்றாயிருக்கும்!

அதேபோல் ஐந்து நிமிடங்கள் முழுப்பிரக்ஞையோடு நாம் கைதட்டியிருந்தால் அந்தத் தூய்மைப் பணியாளர்களை அவர்களுடைய அத்தியாவசியப் பணியின் மேன்மையை உணர்ந்து அவர்களை எல்லா நாட்களிலும் உரிய மரியாதை யோடு நடத்துவோம்;

பெரியவர்களின் கவலை, கலவரம் கோபம், குழப்பம் எல்லாம் எப்போதுமே குழந்தைகளைத்தான் பெருமளவு பாதிக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. முன்பு கேள்விப்பட்ட ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. குழந்தை பிறந்த பின் விரைவிலேயே கணவனைப் பறிகொடுக்க நேர்ந்த ஓர் இளம்பெண்ணின் குழந்தை உரிய வயது வந்தும் பேசாமல், சரியான இயக்கங்கள் அற்று இருந்ததால் அந்தப் பெண் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவரிடம் எல்லா விவரங்களை யும் கேட்டறிந்த மருத்துவர் “உங்கள் துக்கத்தில் நீங்கள் குழந்தையோடு பேசாமலேயே அழுதுகொண்டிருந்திருக்கிறீர்கள். அதனால்தான் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. இனி தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் சிறிதுநேரம் குழந்தையோடு பேசுங்கள். எல்லாம் சரியாகிவிடும்”, என்றாராம். அதேபோல் செய்ததில் இரண்டே மாதங்களில் குழந்தை நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டதாம்!

சாதாரண நாட்களிலேயே ”சாப்பிடு, ஸ்கூலுக்குக் கிளம்பு, ஹோம்வர்க் பண்ணு என்பதைத் தாண்டி நிறைய பெற்றோர்கள் வேறெதுவும் குழந்தைக ளிடம் பேசாமலிருப்பதைப் பார்க்கும்போது வருத்த மாக இருக்கும். சாலையில் வாகனங்கள் வரும் பக்கமாய் குழந்தையின் கையை ஏனோதானோ வென்று பிடித்தபடி அலைபேசியில் அதையும் இதையும் பேசியபடி போய்க்கொண் டிருக்கும் பெற்றோர்களைப் பார்த்தால் பயமாக இருக்கும். அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகளுக்காக நாளும் கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பவர்கள். ஆனாலும், குழந்தைக்கு என்ன தேவை என்று இன்னும் கொஞ்சம் கவனமாக, நிதானமாக அவர்கள் யோசித்துப்பார்த்தால் எத்தனை நன்றாயிருக்கும்!

நம் குழந்தைகள் என்றில்லை. இத்தகைய இக்கட் டான காலகட்டத்தில் பொதுவாகவே குழந்தை களைப் பற்றிய கூடுதல் அக்கறையோடு நாம் இருக்கவேண்டியது அவசியம்.

அதேபோல், முதியவர்கள் ஒருகாலத்தில் தங்கள் குடும்பங்களுக்காகவும், சமூகத்திற்காகவும் கணிசமாக உழைத்தவர்கள். அவர்களை இப்போது சமூகத்திற்குத் தேவையற்றவர்களாக, குடும்பத்தின் அநாவசிய உறுப்பினர்களாக உணரச்செய்துவிடலாகாது.

ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் மூன்று பெரும் கொள்ளைநோய்கள் சமூகத்தைப் பீடித்தன என்று கூகுளில் விவரம் கிடைக்கிறது. 1563-64இல் வந்த கொள்ளைநோய் அவர் வாழ்ந்த ஸ்ட்ராட் ஃபோர்ட் பகுதியின் மக்கள்தொகையில் கால்பங்கை அழித்து விட்டது. பின்னால், கொள்ளைநோய் அரங்குகளை யெல்லாம் மூடும்படி செய்து அவரு டைய தொழிலையும் பாதித்தது. மாக்பெத், கிங்லியர் ஆகிய நாடகங்களை அவர் கொள்ளை நோயால் தனிமைப்படுத்தப் பட்ட காலங்களில் எழுதியதாகக் சில விவரக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன . பால்வினை நோய் வேறு அப்போது பரவியதாம்.

பால்வினை நோய் ஊசி மூலமும் பரவும், உதிரமேற் றுதல் மூலமும் பரவும் என்பதை நினையாத வர்களாய் பால்வினை நோய் பாதித்தவர்களை ஆரம்பத்தில் மிகவும் புறமொதுக்கிப் புண்படுத்தியது சமூகம். கொரோனா பாதிப்போ முற்றிலும் நம்மை மீறிய செயலாக நம்மை பாதிப்பது. இதில், கொரானோ தொற்று ஏற்பட்டிருப்பவரோடு உடல்ரீதியாக விலகி யிருக்க வேண்டுமே தவிர மனரீதியாக அவர்களிடமிருந்து விலகுவதும் அவர்களை அவமானப்படுத்துவதும் மனிதநேயமற்ற செயல்.

முந்தைய நூற்றாண்டுகளில் இல்லாத தகவல் தொடர்பு வசதிகள் இன்று நமக்கு இருக்கின்றன.
அதை நினைத்து ஆறுதலடைந்து இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தை முடிந்தவரை நமக்கும் பிறர்க்கும் தீங்கு செய்யாமல் மனதால் பயணங்கள் மேற்கொண்டபடி, கழித்துவிடலாம் என்று உறுதியெடுத்துக்கொள்வோம். மனம் பலவீனமடையாமல் பார்த்துக்கொள்வோம்.

  •  
Series Navigationஸிந்துஜா கவிதைகள்‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்