இயந்திரப் பொம்மை

 

பாட்டி இடித்த வெத்தல உரலும்

பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும்

வேட்டை என்று ஓணான் அடித்ததும்

வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும்

மதிய வெயிலில் அஞ்சி டாமல்

மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும்

குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும்

குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும்

விடிய விடிய கூத்துப் பார்த்து

விரலில் பள்ளியில் அடி வாங்கியதும்

அடுத்த வீட்டுக் கோழி முட்டையை

அறியாமல் போய் எடுத்து வந்ததும்

கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும்

கபடி ஆடிக் கையும் ஒடிந்ததும்

திண்ணைத் தாத்தா கதைகள் சொன்னதும்

தின்பண் டங்கள் கடித்துக் கொடுத்ததும்

என்றன் பேரன் கணினியின் முன்னே

எழுந்தி ருக்காமல் ஆடும் போதில்

இன்றென் மனத்தில் வந்து மோதின

இவனும் இங்கே இயந்திரப் பொம்மைதான்

Series Navigationராதையின் தென்றல் விடு தூதுநித்ய சைதன்யா – கவிதைகள்